இயேசுவின் போதனைகளிலும் பல்வேறு மாற்றங்களைக் காணலாம். மத்தேயு
நற்செய்தியில் காணப்படும் மலைப்பொழிவு (மத் 5-7) லூக்கா நற்செய்தியில்
சமவெளிப்பொழிவாக (லூக்கா 6:20-26) தரப்படுகிறது. அதன் உள்ளடக்கத்திலும்
தான் எத்துனை வேறுபாடு!
மத்தேயு நற்செய்தியில் காணப்படும் பேறுபெற்ற "எளிய
மனத்தோர்" லூக்கா நற்செய்தியில் பேறுபெற்ற "ஏழைகளாகக்" காட்சி
தருகின்றனர். எளிமைக்கும் ஏழ்மைக்கும் தொடர்பு இருக்கலாம். ஆனால்
இரண்டும் ஒன்றல்ல. எளிமை மனது சம்மந்தப்பட்டது. ஏழ்மை பொருளாதாரத்தோடு
தொடர்புடையது.
மத்தேயு பேறுபெற்றவர்கள் யார் என்பதை மட்டும்தான் மலைப்பொழிவில்
சுட்டிக்காட்டுகிறார். லூக்காவோ, பேறுபெற்றவர்களை முதலில்
சுட்டிக் காட்டியபின், சபிக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் அடையாளம்
காட்டுகிறார். இவைகள் வேறுபாடுகளா அல்லது முரண்பாடுகளா? இந்த
மாறுபாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது?
இயேசுவின் மனித அவதாரத்தின் நோக்கத்தைப் பொறுத்தவரை, ஓரிடத்தில் இயேசு
உலகத்தைத் தீர்ப்பிட அல்ல, மீட்கவே வந்தேன் என்கிறார் (யோவான் 13:47.
3:17). மற்றொரு இடத்தில், "தீரப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்" என்கிறார் (யோவான் 9:39). இது சற்று முரண்பாடாகத் தோன்றுகிறதல்லவா?
ஓரிடத்தில் "நான் உலகிற்கு அமைதியைக் கொணர வந்தேன் என எண்ணவேண்டாம்.
அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" என்கிறார் (மத் 10:34). மற்றொரு
இடத்திலோ, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே
உங்களுக்கு அளிக்கிறேன்" (யோவான் 14:27) என்கிறார். சீடர்களையும் அமைதியின் தூதுவர்களாகவே அனுப்புகிறார்: "நீங்கள் எந்த வீட்டுக்குள்
சென்றாலும், " இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்" (லூக்கா 10:6). இதில் எதை எடுத்துக்கொள்வது?
முதலில், "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்லவேண்டாம். சமாரியாவின்
நகர் எதிலும் நுழையவேண்டாம். மாறாக, வழி தவறிப்போன இஸ்ரயேல் மக்களிடமே
செல்லுங்கள்" (மத் 10:5-6) என்று கட்டளையிட்டவர், இறுதியில் "நீங்கள்
போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்" (மத் 28:19)
என்று அறிவுறுத்துகிறார். காலப்போக்கில் தனது பார்வையையும் அணுகு முறையையும் இயேசு மாற்றுகிறாரா?
இயேசுவின் போதனைக்கும் செயலுக்கும்கூடச் சில வேறுபாடுகள் இருப்பதை
நற்செய்தியில் நாம் காணக்கூடும்.
உதாரணமாக "தம் சகோதர சகோதரிகளிடம்
சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ
சகோதரியையோ " முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்.
" அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்" (மத் 5:22) என்கிறார்.
ஆனால், சீடர்கள் அவருடைய போதனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை
என்பதற்காக அவர்கள் மீது கோபப்படுகிறார் (மாற்கு
8:17-21) பரிசேயர்களைச் சாடுகிறார், சபிக்கிறார் (மத் 23:13-36).
"வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும்
காட்டுங்கள்" (மத் 5:39) என அறிவுரை வழங்கியவர், காவலர் ஒருவர் தன்
கன்னத்தில் அறைந்தபோது, "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக்
காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்" (யோவான்
18:22-23) என்று எதிர்த்துக் கேட்கிறார்.
தனக்கு கோபம் வந்தபொழுது, சாட்டை
பின்னி வியாபாரிகளை அடித்து விரட்டிய
இயேசு (யோவான் 2:13-21), பேதுரு வாளை எடுத்து, தலைமைக் குருவின்
பணியாளரின் காதைத் துண்டித்தபோது, "உனது வாளை அதன் உறையினுள் திரும்பப்
போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத்
26:51-52) என்று கண்டிக்கிறார். அப்படியானால், தனக்கு ஒரு நியாயம்,
ஊருக்கு ஒரு நியாயமா?
ஓரிடத்தில், "நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை
அறிந்திருக்கிறார்" (மத் 6:8) என்கிறார். மற்றொரு இடத்திலோ,
"கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள்
கண்டடைவீர்கள் தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" (மத் 7:7)
என்கிறார். ஏற்கனவே நமது தேவைகள் கடவுளுக்குத் தெரியும்
என்றால், பின்னர் தேவையில்லாமல் ஏன் செபிக்க வேண்டும் என்கிற கேள்வி
எழுகிறதல்லவா?
ஓரிடத்தில் மறைவாகவும் தனியாகவும் இரகசியமாகவும் செபிக்கச் சொல்கிறார்
(மத்:6:6). மற்றொரு இடத்திலோ, கூடிச் செபிப்பதின் தேவையையும் அதன் ஆற்றலையும் பற்றிக் குறிப்பிடுகிறார்: "உங்களுள்
இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும்
மனமொத்தி ருந்தால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு
அருள்வார். ஏனெனில், இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு
எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான்
இருக்கிறேன் என உறுதியாகச் சொல்கிறேன்" (மத் 18:19-20). இடத்திற்கு
இடம் மாறுபடும் இயேசுவின் போதனைகளை எப்படி எடுத்துக் கொள்வது?
|