Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

ஒருசில கேள்விகள்:  புதிய ஏற்பாட்டில்...

       பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் ஒருசில குழப்பங்களும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன. தனிப்பட்ட நபர்களைக் குறித்த தகவல்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, யூதாஸ் மரணத்தைக் குறித்து இருவேறு தகவல்கள் உள்ளன. மத் 27:3-5ல், யூதாஸ் நாண்டு கொண்டு செத்தான் என்று உள்ளது. ஆனால், திப 1:16ன்படி, அவன் தலைகீழாய் விழுந்து, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறி இறந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் எது உண்மை? நாண்டு கொண்டு தொங்கும் போது, கீழே விழுந்தான். அப்பொழுது வயிறு வெடித்தது. எனவே சிதறி இறந்தான் என்று எளிதாகப் பொருள் கொள்ள முடியூமா?  யூதாஸ் தூக்கு போட்டு இறந்தானா? அல்லது கீழே விழுந்து இறந்தானா? இந்த இரண்டில் எது சரியான தகவல்?

       ஒருசில நிகழ்வுகளைக் குறித்தும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒத்தமை நற்செய்திகளின்படி (மத்தேயூ, மாற்கு, லூக்கா) முதல் நான்கு திருத்தூதர்களை (பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான்), கலிலேயாக் கடற்கரையில், அவர்கள் தங்கள் தொழிலைச் செய்து கொண்டிருந்தபோது, இயேசு அவர்களை அழைத்து மனிதரைப் பிடிப்பவர் களாக்குகிறார் (மத் 4:18-22. மாற்கு 1:15-20. லூக் 5:1-11). ஆனால், யோவான் நற்செய்தியின்படி, ஒருநாள் மாலைப் பொழுது, "இதோ! கடவுளின் ஆட்டுக் குட்டி" என்று இயேசுவை தனது சீடர்களுக்கு திருமுழுக்கு யோவான் அறிமுகம் செய்து வைக்கிறார். இதைக் கேட்டதும், அவருடைய சீடர்களில் இருவர் இயேசுவைப் பின்செல்கிறார்கள். இயேசுவோடு ஒரு மாலைப் பொழுதைக் கழிக்கிறார்கள். அவ்விரு சீடர்களில் ஒருவர் அந்திரேயா. மறு நாள், அந்திரேயா தன் சகோதரர் சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்று சொல்லி அவரை இயேசுவிடம் அழைத்து வருகிறார் (யோவான் 1:35-42).

மேலும், சீமோனைப் பார்த்த அந்த தருணத்திலேயே, இயேசு அவரது பெயரைப் "பாறை" எனப் பொருள்படும் "கேபா" என மாற்றுகிறார் (யோவான் 1:42). ஆனால், மத்தேயூ நற்செய்தியின்படி, தன் பொதுப்பணி வாழ்வின் மையப்பகுதியில், "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்ற சீமோனின் விசுவாச அறிக்கைக்குப் பிறகே, இயேசு அவரின் பெயரை "பேதுரு" என்று மாற்றுகிறார் (மத் 16:13-20). எது உண்மை? சீமோன் பேதுருவை உண்மையில் எங்கு, எப்பொழுது, எப்படி அழைத்தார்? எப்பொழுது அவரது பெயரை மாற்றினார்?

மேலும், ஒரு சிலரைத் தனியாகப் பெயர் சொல்லி அழைத்ததாகவும், பிறகு பன்னிரண்டு பேரையூம் மொத்தமாக ஒரே இடத்தில் அழைத்ததாகவும் வாசிக்கி
றோமே (மாற்கு 3:13-19. மத் 10:1-4. லூக்கா 6:12-16), அது எப்படி?

  இயேசு எதை, எப்பொழுது செய்தார் என்ற காலங்களைக் குறித்த வேறுபாடுகளும் உண்டு. உதாரணமாக, ஆலயத்தில் இயேசு சாட்டை பின்னி வியாபாரிகளை விரட்டும் நிகழ்ச்சி நான்கு நற்செய்திகளிலும் காணப்படுகிறது. ஆனால், ஒத்தமை நற்செய்திகளைப் பொறுத்தவரை, இயேசுவின் பொதுவாழ்வின் இறுதியில், பாடுகளுக்கு முன்னதாக இது நடைபெறுகிறது (மத் 21:12-17. மாற் 11:15-19. லூக் 19:45-48). ஆனால், யோவான் நற்செய்தியில், அவரது பணிவாழ்வின் தொடக்கத்திலேயே, இந்நிகழ்ச்சி இடம் பெறுகிறது (யோவான் 2:13-22). இது எப்பொழுது நடந்தது, இயேசுவின் பணிவாழ்வின் துவக்கத்திலா அல்லது இறுதியிலா?

கானாவூர் கல்யாண நிகழ்வில், இயேசு தண்ணீரை இரசமாக மாற்றியதுதான் அவரது முதல் புதுமை. இப்புதுமையின் முக்கியத்துவத்தைப் பற்றி யோவான் மிகத் தெளிவாக எழுதுகிறார். "இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரில் நம்பிக்கைக் கொண்டனர்" (யோவான் 2:11). இவ்வளவு   சிறப்பு வாய்ந்த முதல் புதுமையைப் பற்றி, யோவானைவிட (மொத்தம் ஏழு புதுமைகளைத்தான் யோவான் நற்செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்) அதிகமான புதுமைகளை விலாவாரியாக எடுத்துரைக்கும் ஒத்தமை நற்செய்தியாளர்கள் குறிப்பிடவில்லையே, ஏன்?
 

 தேவதாய் வந்தாள் நம்மைத் தேற்றவே! தாய்மரியின் கரங்களில் நம்மைத் தந்தால் துன்பமில்லை