Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

ஒருசில கேள்விகள்: பழைய ஏற்பாட்டில்

    முதலில் பழைய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம். அதிலும் குறிப்பாகத் தொடக்க நூலை, அதிலும் சிறப்பாக முதல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். கடவுள் முதல் நாளில் ஒளியைப் படைக்கிறார் (தொநூ 1:3). ஆனால், நான்காம் நாள்தான் சூரியன், சந்திரனைப் படைக்கிறார் (தொநூ 1:14-19). சற்று கவனமாகவும் உன்னிப்பாகவும் வாசித்தால், பின்வரும் கேள்வி நமக்குள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஏற்கனவே, முதல் நாளிலிருந்தே ஒளி இருந்தது என்றால், நாளாம் நாளில் சூரியனைப் படைப்பதற்கான தேவை என்ன?

முதல் மூன்று நாட்களிலும் ஒளியைக் கொடுத்தது எது?

மேலும், சூரியன் மற்றும் பூமியின் தொடர்பை வைத்துதான் இரவு பகல் என்று கணக்கிடுகிறோம் நான்காம் நாள்தான் சூரியன் படைக்கப்பட்டதென்றால், முதல் மூன்று நாட்களும் எதன் அடிப்படையில் மாலை, காலை என்று பிரிக்கப்பட்டன?

மேலும், தொநூ 1:26-27ல் கடவுள் மனிதனை எவ்வாறு படைக்க விரும்புகிறார் என்பதையும், தொடர்ந்து அவ்விருப்பம் நிறைவேற்றப்படுவதையும் பார்க்கிறோம். மீண்டும் இரண்டாம் அதிகாரத்தில் கடவுள் களிமண்ணால் மனித உருவம் செய்து ஆதாமைப் படைப்பதாகவும், அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்குவதாகவும் பார்க்கிறோம்

அப்படியானால், முதல் அதிகாரத்தில் படைக்கப்பட்ட ஆண், பெண் யார்?

ஏற்கனவே ஆணையும் பெண்ணையும் தனது சாயலிலும் உருவிலும் படைத்தபின், ஏன் மீண்டும் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க வேண்டும்?

முதல் அதிகாரத்தில் ஆணும் பெண்ணும் சேர்த்தே படைக்கப்படுகிறார்கள். இங்கே சமத்துவம் நிலவுகிறது. ஆனால், இரண்டாம் அதிகாரத்தில் ஆண் முதலாவதாகவும் பெண் இரண்டாவதாகவும் படைக்கப்படுகின்றனர். மேலும் ஆணுக்காகவே பெண் படைக்கப்படுவது போல் ஒரு தோற்றமும் தெரிகிறது. இதை வைத்துக் கொண்டு ஆணுக்குப் பெண் அடிமை, ஆணுக்குப் பெண் என்றும் பணிந்திருக்க வேண்டும் என்னும் ஆணாதிக்க சிந்தனைகளும் பெண்ணடிமைத்தனமும் தோன்றுவதற்கு காரணமாக இப்பகுதியை ஆதாரமாகக் காட்டுபவர்களும் உண்டு (1கொரிந்தியர் 11:1-11. எபேசியர் 5:22-24)


மேலும், முதல் அதிகாரத்தில் தொடங்கிய விண்ணக மண்ணகப் படைப்பானது, 2ஆம் அதிகாரத்தில் மூன்றாம் வசனத்தில் நிறைவு பெறுவதைப் பார்க்கிறோம்.  "கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்." ஆனால், நான்காம் வசனத்தில் மீண்டும் விண்ணக மண்ணகப் படைப்பு ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது: "இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறையாம்.

" நிறைவு    பெற்ற ஒன்றை ஏன் மீண்டும் தொடங்க வேண்டும்?

மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஆபேலைக் கொன்ற காயினை நோக்கி கடவுள், "மண்ணுலகில் நீ நாடோடியாய் அலைந்து திரிவாய்" (தொநூ 4:12) என்று சபிக்கிறார். அப்பொழுது காயின் ஆண்டவரை நோக்கி, "மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே" (தொநூ 4:14) என்று முறையிடுகிறார். காயின் இவ்வாறு சொன்னபோது, விவிலியத்தின் அடிப்படையில் பார்த்தால், பூமியில் வாழ்ந்தது காயினையும் சேர்த்து, மொத்தமே மூன்று நபர்கள்தான்: ஆதாம், ஏவாள் மற்றும் காயின்.

அப்படியானால், காயின் யாரைக் குறித்து பயப்படுகிறார்? தனது பெற்றோர்களான ஆதாம் ஏவாளைக் குறித்தா? அல்லது பூமியில் மக்களினம் பெருகும் என்று அப்போதே அவருக்கு தெரியுமா?


மேலும், அடுத்த வசனத்திலேயே, (தொநூ 4:17) 'காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்" என்று வாசிக்கிறோம்.

இந்த மனைவி யார்? திடீரென்று எங்கிருந்து வந்தார்?

(தயவு    செய்து கோபப்படாமல் பொறுமையாகத் தொடர்ந்து வாசியுங்கள். இதென்ன விதண்டா வாதமாக உள்ளதே. இப்படி எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்டால் எப்படி? பைபிளில் உள்ளதைப் பற்றி எப்படி கேள்வி கேட்கலாம் என்று என்னிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள். கேள்விகளை எழுப்பினால்தான் அதற்குரிய பதில்களைத் தேட முடியும். நாமே கேள்வி எழுப்பி அதற்கானப் பதில்களைப் பெறும் போது, நமது விசுவாசம் இன்னும் வலுப்பெறும். பிறரையும் விசுவாசத்தில் வலுப்படுத்த முடியும். இல்லையேல், பின்னாளில் வேறு எவராவது இக்கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறபோது, நாம் பதில் தெரியாமல் குழம்பிப் போகலாம். அவர்கள் சொல்வதுதான் சரியென்று என்று நினைத்து அவர்கள் பின்னே போக நேரலாம். இதுதான் இப்பொழுது அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சந்தேகத்தினால் அல்ல, உறுதியான விசுவாசத்தின் அடிப்படையிலேயே கேள்விகளை எழுப்புகிறோம்.  நமது விசுவாசம் மற்றும் திருச்சபையின் போதனைகள் சரியானதே என்பதை எடுத்துரைக்கவே இம்முயற்சியில் நாம் இறங்குகிறோம். எனவே, இப்புத்தகத்தைப் படிப்பதால் உங்களது விசுவாசம் தளர்ச்சியடையும் என்று நீங்கள் நினைத்தால், தயவு    செய்து இத்தோடு இதனை வாசிப்பதை நிறுத்திவிடுங்கள். கடைசிப் பக்கம் வரை நீங்கள் வாசித்தால் மட்டுமே உங்களால் இப்புத்தகத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு பயன்பெற முடியும்.)

ஆண்டவரின் அழைப்பை ஏற்று, எகிப்திற்கு திரும்பும் வழியில், "ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப் பார்த்தார்" (விப 4:24) என்று வாசிக்கிறோம்.

 சும்மா இருந்த மோசேவை உசுப்பேத்தி, 'என்னை விட்டுவிடும்" என்று திரும்பத் திரும்பக் கெஞ்சிய அவரைக் கட்டாயப்படுத்தி, 'எகிப்திற்குப் போ" என்று சொல்லிவிட்டு, போகும் வழியிலேயே அவரைக் கொல்லப் பார்த்தால், என்ன நியாயம்?

எந்த ஊர் பஞ்சாயத்தில் போய் முறையிடுவது?

எவ்விதமான தொடர்பும் இல்லாமல் காணப்படும் இப்பகுதியை எவ்வாறு புரிந்து கொள்வது?

அனைவரையும் படைத்த கடவுள், இஸ்ரயேல் இனத்தை மட்டும் எப்படி தனது சொந்த மக்களெனக் கூறமுடியும்?

 அது கடவுளின் முழுசுதந்திரம் என்று சொன்னாலும், இஸ்ரயேல் மக்களுக்காகக் கடவுள் எப்படி பிற இனத்து மக்களை அழிக்க முடியும்?

அவர்களுக்கும் அவர்தானே கடவுள்?

அவர்களைப் படைத்ததும் அவர்தானே?

இல்லையேல், ஒரே கடவுள் என்று எப்படி விசுவசிக்க முடியும்?

அவரே எல்லோருக்கும் கடவுள் என்று எப்படி அறிக்கையிடவோ, அறிவிக்கவோ முடியும்?
 

தரணிக்கு தாயானாய் திருத் தாய்மையைப் பாடுகிறோம்
அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க