Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

 விவிலியத்தை எப்படி படிக்கக் கூடாது?

     
விவிலியத்தைத் தொடர்ச்சியாக அல்லது ஒரு பகுதியாகப் படித்து பொருள் காண முயலாமல், தனித்தனி வசனங்களாகப் பிரித்துப் படித்து, இங்கும் அங்குமாகப் பிரித்த அவ்வசனங்களை ஒன்று சேர்த்துப் படிப்பது எவ்வளவு   விபரீதமானது என்பதை, பின்வரும் நகைச்சுவை வெளிப்படுத்துகிறது.

ஓவ்வொரு நாளும் காலையில் வேலைக்குப் புறப்படும் போது? வீட்டைவிட்டு வெளியேறும்முன், விவிலியத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதியை வாசித்துவிட்டுச் செல்வதை ஒருவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றும் அப்படித்தான் செய்தார். விவிலியத்தைக் கையில் எடுத்தார். கண்களை மூடிக்கொண்டு, விவிலியத்தைத் திறந்து அதன் ஒரு பக்கத்தில் ஓர் இடத்தில் கையை வைத்தார். பின்னர் கண்களைத் திறந்து, கை வைத்திருந்த இடத்தைப் பார்த்து விவிலியம் என்ன சொல்கிறது? என்று வாசித்தார். பின்வரும் பகுதியின் மீது அவர் கை இருந்தது:" அதன் பின்பு யூதாஸ் வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்கு போட்டுக் கொண்டான்" (மத் 27:5). இது என்ன அபசகுணமாக இருக்கிறது. கண்டிப்பாகக் கடவுள் இதை எனக்குச் சொல்லமாட்டார் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் விவிலியத்தை மூடினார். பின்னர், கண்களை மூடியவாறு விவிலியத்தைத் திறந்து கொண்டு ஒரு பகுதியின் மீது கையை வைத்தார். பின்னர் கண்களைத் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியாக இருந்தது: "நீரும் போய் அப்படியே செய்யூம்" (லூக் 10:37). அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. மீண்டும் கண்களை மூடி, விவிலியத்தில் வேறு ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு, ஒரு பகுதியின் மீது கையை வைத்தார். இம்முறையோ, " நீ செய்யவிருப்பதை விரைவில் செய்" (யோவான் 13:27) என்ற பகுதி தென்பட்டது.


குருட்டாம் போக்கில் அன்று அவருக்குக் கிடைத்த செய்தியைச் சேர்த்துப் படித்துப் பாருங்கள்: யூதாஸ் நாண்டு கொண்டு செத்தான், நீரும் போய் அவ்வாறே செய்யூம், நீர் செய்யவிருப்பதை விரைவில் செய்யூம்;. எல்லாமே விவிலியப் பகுதிகள்தான். ஒவ்வொன்றுக்கும் அதனதன் தனிப்பட்ட இலக்கிய மற்றும் கருத்துச்
சூழலில் அர்த்தம் உண்டு. ஒரு பகுதியிலிருந்து ஒரு வசனத்தை மட்டும் பிரித்தெடுத்து, வெறுமனே துண்டாக்கப்பட்ட வசனங்களோடு சேர்த்து பொருள் காண்பது எவ்வளவு   அபத்தமானது என்பது புரிகிறதல்லவா! விவிலியத்தை கிளி ஜோஸியம் பார்ப்பதைப் போலப் பயன்படுத்தக் கூடாது.

மேலும் விவிலியம் ஒரு தனிப்பட்ட நபரால், குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டது அல்ல. அதற்குப் பல மனித ஆசிரியர்கள் உண்டு. அது பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டது. மிகவும் பழமையானது. எனவே, முழுக்க முழுக்க இன்றைய சமய, சமூக, அறிவியல் கண்ணோட்டத்தோடு விவிலியத்தைப் படிப்பதோ, அல்லது விமர்சிப்பதோ முறையாகாது. இது சாதாரண சமூக நியதிதான். இன்றைய நாகரீக வளர்ச்சியையும் கலாச்சார மேம்பாட்டை
யும் வைத்துக் கொண்டு நமது முன்னோர்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் விமர்சிப்பது எவ்வகையில் சரியானதாக இருக்கமுடியூம்? (உண்மையில் எது வளர்ச்சி? மேம்பாடு என்பது விவாதத்திற்குரிய விஷயம்). அதைவிட முக்கியமானது விவிலியத்தில் வார்த்தைக்கு வார்த்தை பொருள் காணக்கூடாது. அப்படிப் பார்த்தால் விவிலியத்தைக் குறித்த கேள்விகளும் குழப்பங்களும்தான் மேலோங்கி நிற்கும். அப்படி என்ன கேள்விகள்? குழப்பங்கள்? இதை புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் பார்ப்போம்.
 

கவலை மோதி வாட்டும் எமைக் காப்பதுன் கடமை
தபமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே