Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

 விவிலியத்தில் அனைத்தும் உண்டு

      விவிலியத்தை யார் வேண்டுமானாலும் தங்கள் வசதிக்கு ஏற்றபடி பயன்படுத்த முடியும். விவிலியத்தை அடிப்படையாக வைத்து எச்செயலையும் ஒருவரால் நியாயப்படுத்த முடியும். வேடிக்கையாகப் பின்வரும் நகைச்சுவையைச் சொல்வதுண்டு.

ஒரு சிறுவன் ஒவ்வொரு நாளும் காலையில் மிகவும் காலம் தாழ்த்திதான் எழுந்திருப்பான். அதே வேளையில் பைபிளை வாசிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தது. நல்ல சிறுவன். கடவுள் பக்தி எல்லாம் அவனிடம் நன்றாகவே இருந்தது. ஆனால் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க மட்டும் கொஞ்சும் கஷ்டமாக இருந்தது. அன்றும் அப்படித்தான். விடிந்து ரொம்ப நேரமாகி விட்டது. அம்மா பையனை எழுப்பி எழுப்பிப் பார்த்தார்கள். பையன் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. இறுதியில் இறைவார்த்தையைக் கேட்டாலாவது அவன் டக்கென்று எழுந்துவிடுவான் என்று நினைத்துக் கொண்டு, 'எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக் கொண்டு போ" (மாற்கு 5:24) என்று சொன்னார்கள். மகனோ சற்றும் பதட்டம் இல்லாமல், 'அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று சொல்லிவிட்டு, போர்வையை இன்னும் நன்றாக இழுத்து மூடிக்கொண்டு தூங்கினானாம். எப்படிப்பட்ட செயலுக்கும் விவிலியத்தில் ஆதாரம் உண்டு.

    பணத்தையும் நகையையும் வாங்கிக் கொண்டு ஓடி ஒளிபவர்களும், வாங்கிய கடனைத் திருப்பித் தர மறுப்பவர்களும் விவிலியத்தை மேற்கோள் காட்டமுடியும். இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரிடமிருந்து வெள்ளி மற்றும் தங்க அணிகலன்களை வாங்கிக்கொண்டு எகிப்திலிருந்து வெளியேறட்டும் என்று கடவுளே ஏமாற்றச் சொல்லிக் கொடுக்க வில்லையா என்று ஏமாற்றுகிறவர்கள் கேட்கக் கூடும் (விப 3:21-23 11:2 12:35-36).

அதேவேளையில், பிறர் பொருளுக்கோ, உடமைகளுக்கோ எத்தருணத்திலும் ஆசைப்படக் கூடாது என்பதற்கும் விவிலியத்தை ஆதாரமாகப் பயன்படுத்த முடியும் (பிறர் உடமையை விரும்பாதே: விப 20:17).

பழிக்குப்பழி வாங்கத் துடிப்பவர்களும் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்: விப 21:24), மன்னிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுப்பவர்களும் (ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுங்கள்: மத் 5:38-42)  விவிலியத்தை மேற்கோள் காட்டமுடியும்.

வன்முறையாளர்களும் (இயேசுவே சாட்டை பிண்ணி வியாபாரிகளை விரட்டியடிக்கிறார்: யோவான் 2:13-16), அஹிம்சைவாதிகளும் (வாளை எடுத்தவன் வாளால் மடிவான்: மத் 26:52) விவிலியத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும்.

அதிகார அமைப்பிற்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அடங்கிப்போ என்று கட்டுப்பாட்டை வலியுறுத்தும் சாத்வீகக் கீதங்களும் விவிலியத்தில் உண்டு (உரோ 13:1-7. 1திமோ 2:8-15. தீத்து 1:9) அடக்கும் வன்முறை சக்திகளுக்கு எதிராகப் பொங்கியெழ அழைக்கும் புரட்சிப் பாக்களும் விவிலியத்தில் உண்டு (திப 4:19-20. கலா 4:31. 5:1).
 
பெண்களை ஆண்களுக்கு அடுத்த நிலையில் வைத்து, ஆண்களுக்குப் பெண்கள் என்றும் பணிந்திருக்க வேண்டும் என்று போதிக்கும் பெண்ணடி மைத்தனத்துக்குச் சாதகமான கருத்துகளும் உண்டு (எபே 5:21-24).

பெண்ணைப் விடுதலைப் போராளியாகவும், மக்களை வழிநடத்தும் தலைவியாகவும் சித்தரிக்கும் முற்போக்குச் சிந்தனைகளும் விவிலியத்தில் உண்டு (நீதித்தலைவர் தெபோரா: நீதி 4-5, 9:51).

இன உணர்வுகளுக்கு ஆதரவான பகுதிகளும் உண்டு (மத் 10:5), மாற்கு 7:24-30) அனைத்து வேறுபாடுகளையும் களைந்து சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்தும் அம்சங்களும் விவலியத்தில் உண்டு (உரோ 10:12, கலா 3:28).

மதுவைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் பகுதிகளும் உண்டு (நீதி 13:4) மது உடல் நலத்திற்கு நல்லது என்ற ஆலோசனையும் விவிலியத்தில் உண்டு (1திமோ 5:23).

மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம் (மத் 6:19) இருக்கும் சொத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிர்வு   மனப்பான்மை மற்றும் பிறரன்புப் பணிகளை வலியுறுத்தும் பகுதிகளும் உண்டு (லூக் 10:21) அதே வேளையில், இருக்கும் பணத்தை இருமடங்காக விருத்தி செய்யவேண்டும் என்ற வியாபார யுத்திகளும் ஆலோசனைகளும் விவிலியத்தில் உண்டு (மத் 25:14-30).

சமயச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் தேவை என்று சொல்வதைப் போன்ற பகுதிகளும் விவிலியத்தில் உண்டு (இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது, கோயிலில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார், திருமுழுக்கும் பெறுகிறார், ஆண்டுதோறும் பாஸ்கா விழாவினைக் கொண்டாட எருசலேம் செல்கிறார், செபக்கூடத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்), சமயச் சடங்குகளையும் பாரம்பரிய மரபுகளையும் அவர் பொருட்படுத்துவதில்லை என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பகுதிகளும் உண்டு (ஓய்வு   நாளை மீறுகிறார், நோன்பு தேவையில்லை என்கிறார். பிறரன்புப் பணிகளின் அடிப்படையில் தான் இறையரசில் நுழையமுடியும் என்கிறார்: (மத் 25:31-46).

விவிலியத்தை வைத்து ஒருவரைச் சோதிக்கவும் முடியும்; அதே விவிலியத்தை வைத்து சோதனைகளை முறியடிக்கவும் முடியும். சாத்தான் கூட இயேசுவை விவிலியத்தை மேற்கோள் காட்டித்தான் சோதித்தது. இயேசுவும் விவிலிய வார்த்தையைப் பயன்படுத்திதான் சோதனைகளை முறியடித்தார் (மத் 4:1-11).

எனவே, ஒன்றைத் தௌவாகப் புரிந்து கொள்ள வேண்டும். விவிலியத்தைத் தெரிந்திருப்பதால் மட்டும் அல்லது அதை மேற்கோள் காட்டிப் பேசுவதால் மட்டும் ஒருவர் விவிலியப் போதனையின்படி வாழ்பவர் ஆகிவிட முடியாது. அதே சமயத்தில், விவிலியப் பகுதிகளைத் தனித்தனியாக பிரித்துப் படிக்கும்போது, அதன் உண்மையான பொருளையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
 

அம்மா நீ தந்த செபமாலை செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்