எல்லாக் கிறிஸ்தவர்களும் விவிலியம்
படிக்கவேண்டும், அதன்படி
வாழவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. "விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்" என்கிறார் புனித எரோனிமுஸ் (புனித
ஜெரோம்). விவிலியத்தை வாசிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இதைவிடச்
சிறப்பாக எவராலும் சொல்லிவிட முடியாது. எனவே விவிலியத்தைப் படிப்பதா?
வேண்டாமா? என்பதல்ல இங்கு பிரச்சனை. ஆனால் நாங்கள் மட்டும்தான்
விவிலியத்தைப்
படிக்கிறோம், அதன்படி
வாழ்கிறோம், என்று மார்தட்டிக்
கொண்டு கத்தோலிக்கர்களாகிய நம்மைப் பார்த்து குறை கூறுபவர்களிடம்
பின்வரும் நான்கு கேள்விகளைத் துணிவுடன் கேளுங்கள்.
1) உங்களிடம் வங்கிக் கணக்கு (Bank
Account) இருக்கிறதா?
உங்கள்
வீட்டில் குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) இருக்கிறதா? இன்றைய
காலகட்டத்தில் இக்கேள்விகளுக்குப் பொதுவாக
"ஆம்" என்ற பதில்தான் வரும்.
தொடர்ந்து அவர்களைப் பார்த்து கேளுங்கள்:
"உங்களிடம் எத்தனை உடைகள்
இருக்கின்றன?"என்று. நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட உடைகள்
வைத்திருப்பார்கள். இப்பொழுது அவர்களைப் பார்த்து பணிவோடு சொல்லுங்கள்:
"நீங்கள் எங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையானதாகவே
இருக்கட்டும். நாங்கள் கத்தோலிக்கர்கள் விவிலியத்தைப் படிப்பதுமில்லை,
அதன்படி வாழ்வதுமில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள்தான்
விவிலியம் படிப்பவர்கள் ஆயிற்றே. அதன்படி வாழ்பவர்கள் ஆயிற்றே.
எங்களைவிட உங்களுக்கு விவிலிய வசனங்கள் நன்றாகத் தெரியுமே.
விவிலியத்தில் இயேசு சொல்கிறார்,
"நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.
ஏனெனில், நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு
அன்றன்றுள்ள தொல்லையே போதும்" (மத் 6:34) என்று. நாளைய
தினத்தைப்பற்றிக் கவலைப்பட்டால்தானே பணம் சேர்த்து வைக்க வேண்டும். உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும். மாற்றிக் கொள்ள உடைகளை
வைத்திருக்க வேண்டும். விவிலியத்தை அறியாத நாங்கள் இவைகளை எல்லாம்
வைத்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம், சகித்துக் கொள்ளலாம். ஆனால்,
விவிலியத்தின்படிதான்
வாழ்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நீங்கள்,
ஏன் வங்கியில் பணம் சேர்த்து வைக்கிறீர்கள்? உணவுப் பொருட்களை ஏன்
குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைக்கிறீர்கள்? ஏன் ஆடைகளுக்கு
மேல் ஆடைகளை அடுக்கி வைக்கிறீர்கள்? விவிலியத்தைப் படிக்கும் நீங்கள்,
உங்களது வங்கிக் கணக்கை எனது பெயருக்கு மாற்றி எழுதிவிடுங்கள். இதற்கு
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.
2) வீடு மாறிச் செல்வோருக்கு ஓர் ஆலோசனை. வாடகை வீட்டில் இருப்பவர்கள்
அடிக்கடி வீடு மாற வேண்டிய தர்மசங்கடம் ஏற்படுவதுண்டு. வீடு மாறிப்
போகும்போது, பொருட்களை எடுத்துச் செல்வது
எவ்வளவு கடினமானது என்பது
அனைவருக்கும்
தெரியும். கஷ்டப்படாமல் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான
எளிய வழி ஒன்றிருக்கிறது. விவிலியம் வாசிக்கிறோம், அதன்படி வாழ்கிறோம்,
விவிலியத்தில் இருந்தால் மட்டுமே செய்வோம் என்று சொல்பவர்களை அழைத்து,
பின்வரும் பகுதியைச் சுட்டிக்காட்டுங்கள்:
"கடவுள்மீது நம்பிக்கை
கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப்
பார்த்து, "பெயர்ந்து கடலில் விழு" எனத் தம் உள்ளத்தில் ஐயம்
எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்"(மாற்கு:
11:22-23). இப்பொழுது அவர்களைப் பார்த்துக் கேளுங்கள்,
"நீங்கள் கடவுளை
நம்புகிறீர்கள் அல்லவா! நீங்கள் மலையை எல்லாம் கடலில் விழச் செய்ய
வேண்டாம். உங்களது நம்பிக்கையை வைத்து இந்த வீட்டில் உள்ள பொருட்கள்
அனைத்தும் நாங்கள் புதிதாகக் குடியேறவிருக்கும் வீட்டில் போய்
இருக்குமாறு ஆணையிடுங்கள்" என்று. அதை அவர்கள் எப்படி
நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். அதைச் செய்ய
அவர்களால் முடியுமா?
3) அவர்களிடம் நீங்கள் தொடர்ந்து கேட்க வேண்டிய அடுத்த கேள்வி:
ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளை எப்படி படிக்கிறீர்கள், பேசுகிறீர்கள்?
நோய் நொடி என்று வந்தால் என்ன செய்கிறீர்கள்? நிச்சயமாகப்
பள்ளிகளுக்குச் சென்றோ, அல்லது நாளடைவில் பழக்கத்தின்
அடிப்படையிலும்தான் அந்நிய மொழிகளை அறிய முடியும், பேச முடியும்.
நோய்க்கு வைத்தியம் பார்க்க மருத்துவரைத்தான் தேடிச் செல்ல வேண்டும்.
இப்பொழுது அவர்களுக்குப் பின்வரும் விவிலியப் பகுதியைப் படித்துக்
காட்டுங்கள்:
"நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச்
செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப்
பேசுவர், பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக்
குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல்
நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" (மாற்கு 16:17-18). விவிலியத்தின்படி வாழ்கிறேன் என்று சொல்லும் எவராவது, மேலே கூறப்பட்ட
எக்காரியங்களையாவது செய்வாரா? அப்படி செய்யவில்லையெனில்,
செய்யமுடியவில்லை யெனில், விவிலியத்தின் அடிப்படையில் பார்த்தால்,
அவர்களுக்கு நம்பிக்கை இல்லையென்று தானே பொருள்? சபையினர் பரவசப் பேச்சு
பேசுவதாகச் சொல்லிக் கொள்வார்கள். ஏனென்றால் அது யாருக்கும் புரியாது.
ஏன் இவர்கள் புதிய மொழிகளைத் திடீரென்று தாமாகப் பேசுவதில்லை?
பெந்தகோஸ்து நாளின்போது கலிலேயராகிய திருத்தூர்கள் எருசலேமில்
கூடியிருந்த அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில், கூடியிருந்தவர்கள்
அனைவரும் தங்களது தாய் மொழியில் புரிந்து கொள்ளும் விதத்தில்
பேசியதாகத்தான்
வாசிக்கிறோம் (திப 2:6). அப்படி நீங்கள் ஏன்
செய்வதில்லை என்று அவர்களிடம் கேளுங்கள். என்ன பதில் சொல்கிறார்கள்
என்று பாருங்கள். விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதற்காகப் பாம்பை
இவர்கள் தங்கள் கைகளால் பிடிப்பார்களா? அல்லது கொல்லும் நஞ்சைத்தான்
குடிப்பார்களா?
4) வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில்
சேர்த்து வைப்பதுமில்லை. அவைகளுக்குக் கடவுளே உணவு ட்டுகிறார் என்று
விவிலியம் சொல்வதால் (மத் 6:26), சபைகளைச் சார்ந்தவர்கள் உழைக்காமலும்,
சேர்த்து வைக்காமலும் இருக்கிறார்களா? காட்டு மலர்ச் செடிகள்
உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. கடவுளே அவைகளை அணிசெய்கிறார் என்று
விவிலியம் கூறுவதால் (மத் 6:28-31), இவர்களில் யாராவது உடுத்தாமலும்,
அலங்காரம் செய்யாமலும் இருக்கிறார்களா? அல்லது
"மனிதன் அப்பத்தினால்
மட்டுமல்ல, மாறாக, கடவு ளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்"(மத்
4:4) என்று சொல்லப்பட்டிருப்பதால் இவர்கள் சாப்பிடாமல், வெறுமனே பைபிள்
படித்துக்கொண்டு இருப்பார்களா?
ஒன்று மட்டும்
தெளிவாகப் புரிகிறது. இவர்கள் விவிலியத்திலிருந்து
தங்களுக்குத் தேவையானவைகளையும், சாதகமானவைகளையும் மட்டும் தனியாகப்
பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். விவிலியத்தின் எந்தப் பகுதி
அவர்களின் வாழ்வில் சங்கடத்தையும், சவாலையும், இழப்பையும் ஏற்படுத்துமோ
அதை நேர்த்தியாகத் தவிர்த்து விடுகிறார்கள். வெறுமனே, விவிலியத்தின்
ஒருசில பக்கங்களை மனப்பாடம் செய்வதால் மட்டுமே, அதன் வசனங்களை
அதிகாரங்களோடும் எண்களோடும் குறிப்பிடுவதால் மட்டுமே, ஒருவர்
விவிலியத்தை அறிந்தவராகவோ, அதனைச் சரிவரப் புரிந்து கொண்டவராகவோ
மாறிவிட முடியாது. இவ்வாறு விவிலியப் பகுதிகளை அதன் அதிகாரம் மற்றும்
வசன எண்களோடு மேற்கோள் காட்டிப் பேசுவது, வேண்டுமானால் ஒருவரது ஞாபக
சக்தியையும் மேதாவித்தனத்தையும் வெளிக்காட்ட உதவுமே தவிர, அதனால்
மட்டுமே அவர் விவிலியப் போதனைகளின்படி வாழ்கிறார், அவர் நேர்மையாளர்
அல்லது உத்தமர் என்று சொல்லிவிட முடியாது.
(ஒருவேளை இதைப் படிக்கிறபோது, நம்மில் ஒரு சிலருக்கு என்மீது கோபம்
வரலாம். இப்படி எழுதுவது பைபிளை வைத்து நையாண்டி பண்ணுவதைப் போல்
உள்ளது. பைபிள் வார்த்தைகளை அதிகாரம், வசனங்களோடு சேர்த்து மனப்பாடம்
செய்யக் கூடாதா? நீங்கள் கோபப்பட்டால் நான் சொல்லுவதைச் சரிவரப்
புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள். விவிலியத்தை வாசிக்க வேண்டும்.
பிறரையும் வாசிக்கத் தூண்ட வேண்டும். அது நமது கிறிஸ்தவக் கடமை.
மறைபரப்புப் பணிகளில் அதுவே அடிப்படையானது. மேலும், விவிலியத்தில்
சொல்லப்பட்டிருப்பதை சோதித்துப் பார்ப்பது சாத்தானின் வேலை.
விவிலியத்தை மேற்கோள் காட்டி சாத்தான் சோதித்த போது, 'உன் கடவுளாகிய
ஆண்டவரைச் சோதியாதே" (மத் 4:7) என்று இயேசு பதிலளித்தார். எனவே,
விவிலிய வாக்குறுதிகளை, அவை நடக்குமா, நடக்காதா என்று சோதிப்பது
கடவுளையே சோதிப்பதாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். நாம் சோதனைக்கு
உட்படுத்துவது விவிலியத்தை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு
சிலப் பகுதிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, கத்தோலிக்கர்களைக் குறை
கூறும் பிற சபைக் கிறிஸ்தவர்கள், ஏன் பிற பகுதிகளைக் கடைபிடிப்பதில்லை
என்பதுதான் நமது கேள்வி. விவிலியம் நம்மைச் சீராக்கி நிலைவாழ்விற்கு
அழைத்துச் செல்லும் அருள்சாதனம். இதை விட்டுவிட்டு கத்தோலிக்கர்களை
தீர்ப்பிடுவதுதான் இங்குள்ள பிரச்சனை. நம்மீது ஒரு குற்றச்சாட்டு
வைக்கிறபோது, குற்றச்சாட்டையும் அலசிப் பார்க்க வேண்டியுள்ளது. குற்றம்
சுமத்துபவரின் நோக்கத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
விவிலியத்தை எப்படி தங்களின் ஆதாயமாகவும் ஆயு தமாகவும் இவர்கள்
பயன்படுத்துகிறார்கள். தங்களின் தேவைக்கேற்றபடி எப்படி அதனை
இங்கொன்றும் அங்கொன்றுமாக மேற்கோள் காட்டி வலை விரிக்கிறார்கள் என்பதை
நம்மவர்களுக்குப் புரிய வைக்கவே இதனைச் சுட்டிக்
காட்டுகிறோம்.)
|