இப்பொழுது புதிய ஏற்பாட்டில் நான்கு நற்செய்திகளுக்கும் வருவோம்.
நான்கு நற்செய்திகளும் இயேசுவைப்பற்றித்தான் கூறுகின்றன. அவரது
போதனைகளையும் புதுமைகளையும்தான்
எடுத்துரைக்கின்றன. லூக்கா தன் நற்செய்தியின் தொடக்கத்தில் தனது
நோக்கத்தைத்
தெளிவுபடுத்துகிறார்: "மாண்புமிகு
தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு
வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர். தொடக்கமுதல் நேரில் கண்டும்
இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்தவாறே எழுத
முயன்றனர். அதுபோலவே நானும்
எல்லாவற்றையும்
தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை
எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு
எழுதுவது நலமெனக் கண்டேன்" (லூக் 1:1-4.
யோவான் தன் நற்செய்தியின்
இறுதியில் கூறுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள்
நம்புவதற்காகவும், நம்பி வாழ்வு
பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்
பெற்றுள்ளன" (யோவான் 20:31). முதல் மூன்று நற்செய்திகளும் நான்காம்
நற்செய்தியிலிருந்து
பெருமளவு வேறுபடுகிறது.
நான்கு நற்செய்திகளும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டவை: மாற்கு கிபி
65-70, மத்தேயு கிபி 70-80, லூக்கா கிபி 70-80,
யோவான் முதல் நூற்றாண்டின் இறுதியில். யோவான் அதுவரை உயிரோடு இருந்தாரா
என்று கேட்கலாம். அக்காலகட்டத்தில் ஆசிரியர்தான் நேரிடையாக எழுத
வேண்டும் என்ற கட்டாயம்; இல்லை. தங்கள் குரு இப்பொழுது உயிரோடு
இருந்தால், இந்த பிரச்சனையை எப்படி அனுகியிருப்பார், என்ன தீர்வைக் கொடுத்திருப்பார் என்னும் எண்ணத்தில், பின்னாளில் சீடர்கள்கூட தங்களின்
குருக்களின் பெயரில் புத்தங்களை எழுதும் மரபு இருந்தது.
நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு யார்
என்பதையும்,
அவரது பணி என்ன
என்பதையும் எடுத்துரைக்கின்றனர்.
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையோ, அவரது போதனைகளையோ, புதுமைகளையோ
பதிவு
செய்ய வேண்டும் என்பது நற்செய்தியாளர்களின் நோக்கம் அல்ல. மேலும்,
புதிய ஏற்பாடு என்பது எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே இயேசுவைப்
பற்றிய வாய்மொழி போதனை தொடக்கத் திருச்சபையிடம் நிலவி வந்தது.
விவிலியம் என்பது எழுத்து வடிவம் பெற்ற பாரம்பரியமே. எனவே, விவிலியம்
மட்டுமே போதும், பாரம்பரியம் தேவையில்லை என்று சொல்பவர்கள்
விவிலியத்தின் அடிப்படை உருவாக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான்
பொருள். சொந்த செலவில் தங்களுக்கு
சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.
"மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன்
எழுப்பப்பட்டார்" (1கொரி 15:3-4) என்பதுதான் அனைத்துப் போதனைகளின்
மையமாக இருந்தது. அவரது உயிர்ப்பை எடுத்துச் சொல்லித்தான் புனித பவுலடியாரும் ஏனைய திருத்தூதர்களும் இயேசுவில் நம்பிக்கை கொள்ள மக்களை
அழைத்தார்கள். பவுலடியாரைப் பொறுத்தவரையில் அதுவே
முதன்மையான போதனையாக அமைந்தது (1கொரி 15:3). இயேசு உயிர்த்தார் என்றால்
அவர் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்தார் என்றால் வாழ்ந்திருக்க
வேண்டும். வாழ்ந்தார் என்றால் பிறந்திருக்க வேண்டும். எனவேதான், நான்கு
நற்செய்திகளும் இயேசுவின் உயிர்ப்பு, பாடுகள், இறப்பு பற்றி விளக்கமாக
கூறுகின்றன. அவரது
உயிர்ப்பையும் இறப்பையும் பதிவு செய்வதுதான் நற்செய்தியாளர்களின்
நோக்கமாக அமைந்தது. இந்த இரண்டு
நிகழ்வுகளையும் புரிய வைப்பதற்கான ஒரு பகுதியாகத்தான் இயேசுவின்
போதனைகளையும் புதுமைகளையும் பற்றிப் பேசினார்கள்.
எனவேதான்,
புதிய ஏற்பாட்டில் நற்செய்திகளைத்தவிர, எந்த ஒரு திருமுகமும் இயேசுவின்
புதுமைகளைப்பற்றி எதுவும் பேசுவதில்லை. இதிலிருந்து
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நற்செய்திகள் இயேசுவின்
பிறப்பிலிருந்து உயிர்ப்புவரை என்று ஒரு கால அடிப்படையில் வரலாற்று
நூலாக எழுதப்பட்டவை அல்ல. மாறாக, இயேசுவின் உயிர்ப்பை ஆரம்பமாகவும்
அடிப்டையாகவும், வைத்து, அதற்கு வலுசேர்க்கும்
விதத்தில் அவரது
இறப்பையும், பாடுகளையும், புதுமைகளையும் போதனைகளையும்
அமைத்த விசுவாசப் பெட்டகம்தான் நற்செய்தி நூல்கள் என்பதை மறந்துவிடக்
கூடாது. எனவே, இயேசுவைக் குறித்த அனைத்து
செய்திகளையும் தருவதைக் காட்டிலும், இயேசுவில் விசுவாசம் கொள்வதற்குத்
தேவையானவைகளை மட்டும், கேட்பவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப,
அவர்களின் சமூக அமைப்பிற்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப, அவர்கள் ஏற்றுக்
கொள்ளும் விதத்தில் கூறுவதே நற்செய்திகளின் நோக்கமாக இருந்தது.
நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவை வெவ்வேறு கோணங்களில்
சித்தரிக்கின்றனர். அவைகளின் தொடக்கத்தை வைத்துப் பார்க்கும் பொழுது,
மத்தேயுவுக்கு இயேசு தாவீதின்
மகன், ஆபிரகாமின் மகன் (மத்
1:1). லூக்காவிற்கு இயேசு ஆதாமின் மகன் (லூக்கா
3:38). மாற்குவைப் பொறுத்தவரை, இயேசு கடவுளின் மகன்
(மாற்கு 1:1). யோவானுக்கு இயேசு கடவுள் (யோவான் 1:1). மத்தேயு
இயேசுவின் அரசத்தன்மையை வலியு றுத்துகிறார். மாற்கு
இயேசுவின் மனித முகத்தைச் சுட்டிக் காட்டுகிறார். லூக்கா இயேசுவின்
வறுமையை அடிக்கோடிடுகிறார். யோவானோ இயேசுவைக் குறித்த உயரிய இறையியல்
சிந்தனைகளை முன் வைக்கிறார். இந்த நான்கு வேறுபட்ட
சிந்தனைகளையும் திவெ 4:6-8 ல் காணப்படும் நான்கு உயிர்களும் குறிப்பதாக பொதுவாகக்
கருதப்படுகிறது. நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள்
காணப்பட்டன. முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன.
அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும் (மத்தேயு), இரண்டாவது இளங்காளை போலும் (லூக்கா: இயேசு மாட்டுத் தொழுவத்தில்
பிறக்கிறார்) தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது (மாற்கு:
இந்நற்செய்தியாளர் இயேசுவின் மனிதத் தன்மையைப்பற்றி குறிப்பாக,
இயலாமையைப்பற்றிப் பேசத் தயங்குவதில்லை.
உதாரணமாக, சொந்த ஊர்
மக்களுக்குத் தன்மீது நம்பிக்கையில்லாதால், இயேசுவால் அங்கே உடல்
நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல
செயல்கள் எதையும் செய்ய இயலவில்லை: மாற்கு 6:5. இதே
செய்தி மத் 13:58ல் வல்ல செயல்கள்
எதையும் இயேசு
செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவால் செய்ய இயலவில்லை
என்பதற்கும், அவர் செய்யவில்லை என்பதற்கும் உள்ள வேறுபாடு சொல்லாமலேயே
உங்களால் புரிந்து
கொள்ளமுடியும். மாற்கு இயேசுவின்
இயலாமையையும், மத்தேயு
இயேசுவின்
விருப்பமின்மை யையும் குறிப்பிடுகின்றனர்).
நான்காவது உயிர் பறக்கும் கழுகை (யோவான்: இயேசு தொடக்கத்திலிருந்த
வார்த்தை, வழி, ஒளி, உண்மை, உயிர், உயிர்ப்பு போன்ற உயரிய இறையியல்
சிந்தனைகள்) ஒத்திருந்தது.
நான்கு நற்செய்தியாளர்களின்
பார்வையும் சொல்லும்
விதமும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைக் காண்போம். இயேசுவின் குழந்தைப்
பருவ நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஏற்கனவே, மேலே
குறிப்பிட்டதைப்போல, மத்தேயு லூக்கா மட்டுமே
அவைகளைப் பதிவு செய்துள்ளனர். ஏன் வெவ்வேறு
கோணங்களில் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் படம் பிடிக்கின்றனர்?
இருவரும் ஒரே காலகட்டத்தில் எழுதினாலும், அவர்கள் வெவ்வேறு
சமூகத்தினருக்கு எழுதுகின்றனர். இருவரும் கிறிஸ்தவர்களுக்குத்தான்
எழுதுகின்றனர். ஆனால் அவர்களின்
பூர்வீகத்தையும்
காலங்காலமாக அவர்கள் கட்டிக்காத்து வந்த கலாச்சாரப்
பின்னணியையும் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றனர். இயேசுவைப்பற்றிச் சொல்லவேண்டும்.
அதே சமயத்தில், ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லவேண்டும். இந்த
இரண்டையும் மனதில் வைத்தே நற்செய்தியாளர்கள்
எழுதுகிறார்கள்.
மத்தேயு கிறிஸ்தவர்களாக மாறிய
யூதர்களுக்கு எழுதுகிறார்.
யூதர்கள் மெசியாவை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மெசியா தாவீதின் குலத்தில்
தோன்றுவார் (எரே 23:5), பெத்லகேமில் பிறப்பார் (மீக் 5:2) என்பது
அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. "மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு, "அவர் தாவீதின் மகன்"
என்று பரிசேயர்கள் பதிலளிப்பது (மத் 22:42) இக்கருத்தை எண்பிக்கிறது.
அவர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இந்த இயேசுதான் என்பதைத் தனது
நற்செய்தியின் முதல் வரியிலேயே மத்தேயு
சுட்டிக்காட்டுகிறார். இயேசு தாவீதின் வழிமுறையில் வந்தவர் என்பதைக்
காட்ட யோசேப்பை மையப்படுத்துகிறார்;. யோசேப்பு தாவீதின் குடும்பத்தைச்
சேர்ந்தவர் என்பதை வலியுறுத்துகிறார். வானதூதர்கூட
"யோசேப்பே, தாவீதின் மகனே" என்றுதான் அவரை அழைக்கிறார். மூதாதையர்
பட்டியலைக் கூட, தாவீதைத்
தொடக்கமாகவும், மையமாகவும், வைத்து எழுதுகிறார். "மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள்
பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச்
செல்லப்பட்டவர்கள்வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச்
சிறைபிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள்
பதினான்கு" (மத் 1:17). எபிரேய மொழியில் மெய் எழுத்துக்கள் மட்டுமே
உண்டு. மொத்தம் 23 எழுத்துக்கள். வலமிருந்து இடமாக எழுத வேண்டும்,
வாசிக்க வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பெயர் மற்றும் ஓர் எண்
மதிப்பீடும் உண்டு. எபிரேய மொழியில் தாவீது இவ்வாறு
எழுதப்பட்டிருக்கும்
(Dawid).
. (D
jyj; = dalat) நான்காவது
எழுத்து. அதன் மதிப்பு நான்கு. ((W
tht; = vav) ஆறாவது எழுத்து.
அதன் மதிப்பு ஆறு. 4+6+4=14. தாவீது என்னும் பெயரின் கூட்டு மதிப்பு
14. மத்தேயு வைப் பொறுத்தவரை, பிறக்கும் குழந்தை
தாவீதின் வழி வந்தவர்.
மத்தேயு யோசேப்பை முன்னிலைப்படுத்துவதற்கு
மற்றொரு விவிலியப்
பின்னணியும் உண்டு. கானான்
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பசியின் பிடியில் வாடிய யாக்கோபின்
புதல்வர்களுக்குத் தேவையான உணவைக் கொடுத்து பாதுகாத்தவர் பழைய
ஏற்பாட்டு யோசேப்பு. புதிய ஏற்பாட்டில் பாவத்தின் பிடியில் தவிக்கும்
மக்களை மீட்கப்போகும் மீட்பரைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமான்
யோசேப்பிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதுவும், எப்படி
பழைய ஏற்பாட்டில் உயிர் பிழைக்க யாக்கோபின் புதல்வர்கள் எகிப்துக்கு
சென்றார்களோ, அதைப்போலவே புதிய ஏற்பாட்டில் குழந்தையின் உயிரைக்
காப்பாற்ற யோசேப்பு அதன் தாய் மரியாளோடு எகிப்துக்குச்
செல்லவேண்டியிருந்தது. பழைய ஏற்பாட்டில், அடிமையாக விற்கப்பட்ட
யோசேப்பு எகிப்தில் ஆளுநராக உயரும்
அளவுக்குக்
காரணமாக இருந்தது
கனவு தான். புதிய ஏற்பாட்டில்
யோசேப்பின் வாழ்விலும்
கனவு முக்கிய இடத்தைப்
பெறுகிறது. ஒரு சிறிய வேறுபாடு. பழைய ஏற்பாட்டில் யோசேப்பு
கனவுகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். புதிய ஏற்பாட்டில் யோசேப்பு கனவில்
விளக்கங்களையும் குழப்பங்களுக்குத்
தெளிவையும் பெறுகிறார்.
அடுத்ததாக, மத்தேயுவின் பார்வையில் பிறக்கப்போகும்
குழந்தை யூதர் மட்டுமல்ல. அக்குழந்தையே காலம்
காலமாக யூதர்களால் எதிர்பார்க்கப்பட்ட,
இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா.
அதுவும், அரச மெசியா.
எனவேதான், கால அடிப்படையில் ஆபிரகாம் முன்னவராக
இருந்தாலும், "தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின்
மூதாதையர் பட்டியல்" என்று தாவீதை முதலில் குறிப்பிடுகிறார். ஞானிகள்
ஏன் அரசனிடம் சென்று வழி கேட்க வேண்டும்? காரணம், பிறந்திருக்கும்
குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல, அது அரச குழந்தை. அரசனிடம்
விசாரிக்கும் போது கூட,
"யூதர்களின் அரசராகப்
பிறந்திருக்கிறவர் எங்கே?" (மத் 2:2) என்றுதான் ஞானிகள் கேட்கிறார்கள்.
ஆனால், ஏரோது அரசன் தலைமைக் குருக்களைக் கலந்தாலோசிக்கும்போது, "மெசியா
எங்கே பிறப்பார்?" என்று கேட்கிறான் (மத் 2:4). ஏரோது ஒரு
யூதர் அல்ல. ஞானிகள் அரச குழந்தையைப்பற்றிக் கேட்கும்போது, அவன் ஏன்
மெசியாவின் பிறப்பைப்பற்றி விசாரிக்க வேண்டும்? மத்தேயுவின் பார்வையில் இயேசு மெசியா,
அதுவும், அரச மெசியா
என்பது இதிலிருந்தே
தெளிவாகப் புலப்படுகிறதல்லவா! மேலும், யோசேப்பும்
மரியாளும் பெத்லகேமில் இடம்தேடி அலைந்ததையோ,தொழுவத்தில் இயேசு
பிறந்ததையோ அவர் குறிப்பிடவில்லை. ஓர் அரச குழந்தை இப்படிப்பட்ட
வறுமையின் கோலத்தில் பிறந்ததைக் குறித்து எப்படி ஜீரணிக்க
முடியும்? ஞானிகள்கூடக் குழந்தையைத் தொழுவத்தில் அல்ல, வீட்டில்தான்
தரிசிக்கிறார்கள், விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாகக் கொடுக்கிறார்கள்
(மத் 2:11).
இயேசுவை அரசனாகக் காண்பிக்கும் மத்தேயுவின் பார்வை
நற்செய்தி முழுவதும் இழையோடி
இருப்பதையும்
அந்நற்செய்தியைச் சற்று கவனமாக வாசித்தால் நம்மால் உணர
முடியும். உதாரணமாக, மத்தேயு நற்செய்தியில் திருமண
விருந்தை ஓர் அரசன் ஏற்பாடு செய்கிறான் (மத் 22:1-14). ஆனால், லூக்கா
நற்செய்தியில் அரசர் அல்ல, ஏதோ ஒருவர் நடத்துகிறார் (லூக்கா 14:15-24).
மத்தேயு நற்செய்தியில் வரும்
பொதுத்தீர்வும், இயேசுவை அரசனாகவே சித்தரிக்கிறது (மத் 25:31-46).
அடுத்ததாக, மத்தேயு
யூதர்களுக்கு எழுதுவதால்,
இயேசுவையும் ஒரு யூத ராகக் காண்பிக்கிறார். இயேசுவை ஆபிரகாமின் மகனாக வெளிப்படுத்துகிறார்.
ஆபிரகாமிலிருந்துதான்
யூதகுலம் பிறக்கிறது.
மிகவும், அழுத்தமாகத் தன் நற்செய்தியின் தொடக்கத்திலேயே குறிப்பிடுகிறார்:
"யூதர்களே, இந்த இயேசு வேறு யாருமல்ல. அவர் நம்
இனத்தவர். நம் சாதிக்காரர். இவரைக் குறித்துதான் இறைவாக்கினர்கள்
முன்னறிவித்தனர் (130 முறை பழைய ஏற்பாடானது மத்தேயு
நற்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இயேசுவின் குழந்தைப் பருவ
நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் பழைய ஏற்பாட்டு
இறைவாக்குகள் நிறைவேறுவதாகக் குறிப்பிடுகிறார்). இவரைத்தான் நாம்
எதிர்பார்த்திருந்தோம். எனவே, இவரை ஏற்றுக் கொள்ளத் தயங்க வேண்டாம்"
என்று கிறிஸ்தவர்களான
யூதர்களுக்கு எடுத்துச்
சொல்கிறார்.
இந்த யூதப் பின்னணியில்தான் இயேசுவின் மலைப்
பொழிவையும் பார்க்க வேண்டும். அந்தக் காட்சியை
நினைக்கும்போதே ஓர் அரசவைக் காட்சி நம் கண்முன் வந்து நிற்கும்: "இயேசு
மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அதை அமரஅவருடைய சீடர் அவரருகே
வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை" (மத் 5:1-2). அரசர் (இயேசு)
அரியணை மீது (மலை) ஏறி அமர்கிறார். அமைச்சர்கள் (சீடர்கள்) அவரருகே
வருகின்றனர். மக்கள் கூட்டம் முன்னே அமர்ந்திருக்கிறது. மேலும்,
மலையின் மீது அமர்ந்து இயேசு போதிப்பது மத்தேயுவுக்கு முக்கியமானது. மோசே சீனாய் மலைமீது
கடவுளிடமிருந்து பத்துக் கட்டளைகளைப் பெறுகிறார். கீழே இறங்கியதும் மோசே
நேரிடையாக மக்களுக்கு பத்துக் கட்டளைகளை அறிவிக்கவில்லை. மாறாக,
மக்களின் தலைவர்களை அழைத்து அவர்களின் மூலமாகத்தான் மக்களுக்கு
கட்டளைகளைத் தெரியப்படுத்துகிறார் (விப 19:7). இப்பொழுது புரிகிறதா,
ஏன் சீடர்கள் மக்கள் கூட்டத்திலிருந்து இயேசு அருகே வந்தனர் என்று?
மத்தேயு இயேசுவை புதிய மோசேவாகச்
சித்தரிக்கிறார். எவ்வாறு பழைய ஏற்பாட்டில் மோசே சீனாய் மலை அருகில்
மக்கள் தலைவர்களை அழைத்து மக்கள் கூட்டத்திற்குப் பத்துக் கட்டளைகளைக்
கொடுத்தாரோ, அதைப் போலவே புதிய மோசேவாகிய இயேசு, தம் சீடர்கள் அருகில்
வர, மக்கள் கூட்டத்திற்குப் புதிய கட்டளைகளைக் கொடுக்கிறார். அதே
சமயத்தில், இயேசு மோசேவைவிட மேலானவர். பத்துக் கட்டளைகளை மோசே
கடவுளிடமிருந்து பெறுகிறாரே தவிர, அவைகள் அவருடையவை அல்ல. மோசே வெறுமனே
கடவுளின் கட்டளைகளைச் மக்களுக்கு எடுத்துச்
சொல்லும்
தூதுவராகவும், கடவுளுக்கும், மக்களுக்கும் இடையே அவர்களை இணைக்கும் ஒரு
பாலமாகவும், மட்டுமே திகழ்கிறார். ஆனால், இயேசு தாமாகவே புதிய கட்டளைகளைக்
கொடுக்கிறார்.
அதுமட்டுமல்ல, மோசே கொடுத்த கட்டளைகளை மாற்றியமைக்கிறார்.
புதிய, கடுமையான, கண்டிப்பான வழிமுறைகளைக் பறைசாற்றுகிறார். புதிய
கட்டளைகளைக் கொடுப்பதனால் அவர் பழைய கட்டளைகளுக்கோ இறைவாக்குகளுக்கோ
எதிரானவர் அல்ல என்பதை எடுத்துக் காட்ட, "திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம். அவற்றை
அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" (மத் 5:17) என்று இயேசுவே
தெளிவு படுத்துவதாக மத்தேயு
குறிப்பிடுகிறார்.
மோசேவுக்கும் இயேசுவுக்கு இடையே உள்ள ஒற்றுமை இன்னொரு விதத்திலும் வெளிப்படுகிறது.
குழந்தைகளாக இருந்தபோது, இருவரது உயிருக்கும் ஆபத்து இருந்தது.
இருவரும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள, தங்கள் சொந்த
நாட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. எகிப்து பற்றிய குறிப்பு
இருவரது வாழ்க்கையிலும் இடம் பெறுகிறது. மோசேவைப் பொறுத்தவரையில், அது
அவருக்குக் கொலைக்களம். பாரவோன் மோசேவைக் கொல்லத் தேடுகிறான். அதனால்,
மோசே எகிப்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. இயேசுவைப்
பொறுத்தவரையில், எகிப்து அவருக்குப் பாதுகாப்பு மண்டலம். ஏரோது அவரைக்
கொல்லத் தேடுகிறான். உயிர் பிழைக்க எகிப்துக்குத் தப்பியோட
வேண்டியிருந்தது. "எகிப்திற்குத் திரும்பிப் போ. ஏனெனில் உன் உயிரைப்
பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்;" (விப 4:19) என்று
மோசேவுக்கு சொல்லப்பட்டதைப் போலவே, இயேசுவைக்
குறித்தும் யோசேப்புக்குச் சொல்லப்படுகிறது: "நீர் எழுந்து
குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல்
நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத்
தேடியவர்கள் இறந்து போனார்கள்" (மத் 2:20).
லூக்காவின் பார்வையோ முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில், அவர்
கிறிஸ்தவர்களான
யூதரல்லாத பிற இனத்தவர்களுக்கு
எழுதுகிறார். அவர்களுக்கு, இயேசுவை தாவீதின் மகனாவோ, ஆபிரகாமின்
மகனாகவோ, ஒரு
யூதனாகவோ சித்திரித்தால் அது
இயேசுவின் மீது வெறுப்பை ஏற்படுத்துமே ஒழிய, அவர்பால் எந்தவிதமான
ஈர்ப்பையும் உருவாக்காது. அதே நேரத்தில், இயேசு
யூதர் என்பதையும் மறுக்க முடியாது. எனவே, மூதாதையர்
பட்டியலை ஆபிரகாமோடு நிறுத்தாமல், ஆதாம்வரை நீட்டுகிறார். இயேசுவை
ஆதாமின் மகனாகச் சித்தரிக்கிறார். "நீங்கள் ஏன் இயேசுவை ஒரு
யூதனாகப் பார்க்கிறீர்கள்? அவர் நம்மைப் போலவே ஆதாமின் வழிவந்தவர்"
என்று தன் வாசகர்களுக்குச் சொல்கிறார்.
யூதரல்லாத
கிறிஸ்தவர்களுக்கு எழுதுவதால், இயேசு தாவீதின் வழிவந்தவராகவே
இருந்தாலும், அவரை அவ்வாறு சித்தரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே,
யோசேப்புக்குப் பதிலாக மரியாவை முன்னிலைப்படுத்துகிறார்.
மேலும், இயேசுவை ஏழை மெசியாவாக அடையாளம் காட்டுகிறார். புனித
பவுலடியாரைப் பொறுத்தவரையில், இயேசுவின் வெறுமையே அவரது மகிமைக்கு
அடித்தளமாக அமைகிறது (பிலி 2:6-9). எனவே,
பவுலடியாரின் சீடர்
லூக்காவும், அதே நிலைப்பாட்டைத்
தனது நற்செய்தியில் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வெறுமை அவரது
பிறப்பிலேயே வறுமையில் பிரதிபலிப்பதாகக் காட்டுகிறார். இயேசுவின்
வறுமையின் கோரத்தை மூன்று நிலைகளில் வெளிப்படுத்துகிறார்.
பெத்லகேம் யோசேப்பின் சொந்த ஊர். எனவே அங்கு யோசேப்பின்
சொந்தக்காரர்கள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இருப்பினும்,
சொந்தக்காரர்கள் வீட்டில் அவர்களுக்கு இடம் இல்லை. அங்குதான் இடம்
இல்லை என்றால், வந்து போகிறவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்
விடுதியிலும் கூட அவர்களுக்கு இடம் இல்லை (லூக் 2:7). இயேசு
தொழுவத்தில் பிறக்கிறார். "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும்,
வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிடமகனுக்கோ
தலைசாய்க்கக்கூட இடம் இல்லை" (லூக்கா 9:58) என்ற இயேசுவின் போதனை அவரது
பிறப்பிலிருந்தே ஊற்றெடுக்கிறது.
மேலும், அவர் பிறந்த செய்தி ஞானிகளுக்கு அல்ல, இடையர்களுக்கு
அறிவிக்கப்படுகிறது.
அதுவும், இடையர்கள் வீட்டில்
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கையில் அல்ல. மாறாக, வயல்வெளியில் அவர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல்
காத்துக் கொண்டிருக்கும் போதுதான் வானதூதர் செய்தியை அறிவிக்கிறார்.
இரவு
நேரம், காடு. இருள், மிருகங்கள் இவைகளுக்கு மத்தியில் தங்களுக்காகத்,
தங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, தங்கள் உயிரை பணயம்
வைத்து உழைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்தான் இச்செய்தி
இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
அதுவும்,
அவர்களுக்காகவே குழந்தை பிறந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது: "இன்று
ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில்
பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11). இந்த இடையர்களைப்போல, தங்கள்
வறுமையின் காரணமாக யாரெல்லாம் வீட்டைவிட்டு, குடும்பத்தைத் துறந்து,
உயிரை பணயம் வைத்து, தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்களோ,
அவர்களுக்காகவே மெசியா என்னும் மீட்பர் பிறந்துள்ளார் என்னும்
செய்தியைப்
பதிவு செய்கிறார். தொழுவத்தில் ஆடு
மாடுகளுக்கிடையில் மீட்பர் பிறந்த செய்தி கிடைகளோடு இரவைக் கழித்துக்
கொண்டிருக்கும் இடையர்களுக்கு அறிவிக்கப்படுவது
எவ்வளவு
பொருத்தமானது!
மேலும், "குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில்
கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். அதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்
2:12) என்று சொல்லப்படுகிறது. பிறந்துள்ள குழந்தை சாதாரணமானது அல்ல.
தூய ஆவியார் மரியா மீது இறங்கி வந்ததால், உன்னத
கடவுளின் வல்லமை அவர்மீது நிழலிட்டதால் பிறந்த உன்னதக்
கடவுளின் மகன் அவர். யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி
செலுத்துவதற்காகப் பிறந்த குழந்தை (லூக்கா 1:32-35). இவரைக்
கிடத்துவதற்குப் பஞ்சு மெத்தை இல்லை. இவரைப் போர்த்துவதற்கு பட்டுத்
துணிகள் இல்லை. தீவனத் தொட்டியே இவருக்குக் கிடைத்த மெத்தை. சாதாரண
துணிதான் இவருக்குக் கிடைத்த போர்வை. இப்பரிதாப நிலை வேறு வழியில்லாமல்
நேர்ந்ததல்ல. இவர் விரும்பியிருந்தால் அரச மாளிகையில், அரசர்
அமைச்சர்கள் அலுவலர்கள்
புடைசூழ, பஞ்சு மெத்தையில் பட்டுத் துணி
போர்த்ப்பட்டு, வசதி வாய்ப்புகளோடு, ஆடம்பர அலங்காரத் தோரணைகளோடு
கிடத்தப்பட்டிருக்கலாம். ஏனெனில் அவருக்கு எல்லாம்
முடியும். வறுமை அவர் மீது திணிக்கப்பட்டதல்ல. அவரே விரும்பி தேர்ந்து
கொண்டது. வறியவர்களும் தன்னை அவர்களின் மீட்பராக அடையாளம் கண்டு அவரில்
அடைக்கலம் தேட வேண்டும்
என்பதற்காகவும்,
மனுக்குலத்தை மீட்பதற்காக
அனைத்தையும் இழப்பதின்
அடையாளம் இவ்வறுமைக் கோலம் அமைந்துள்ளது.
இவ்வாறு, லூக்கா காட்டும் மெசியா ஏழை,
அதுவும், பரம
ஏழை. 1) மெசியா ஏழையாகப் பிறக்கிறார்: விடுதியில் கூட இடம் இல்லை. 2) ஏழைகளுக்காகவே பிறக்கிறார்: (இடையர்களிடம்) உங்களுக்காகப்
பிறந்துள்ளார். 3) ஏழ்மைக் கோலம்தான் இயேசு மீடபர் என்பதற்கான அடையாளம்
(லூக்கா 2:12). ஏழைகளின் நற்செய்தி என்று பொதுவாக அழைக்கப்படும் லூக்கா
நற்செய்தியின்
முன்னுரையாகவும், அதன் சாராம்சமாகவும்,
சுருக்கமாகவுமே இயேசுவின் குழந்தைப் பருவ
நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. "எளிய மனத்தோர் பேறுபெற்றோர்" என்று
மத்தேயு ஒருவரின் மனநிலையைச்
சுட்டிக்காட்டும்போது,
"ஏழைகளே, பசித்திருப்போரே, அழுவோரே,
இகழப்படுவோரே நீங்கள் பேறுபெற்றவர்கள்" என்று பொருளாதார வறுமையை லூக்கா
கோடிட்டுக் காட்டுகிறார். அத்தோடு மட்டுமல்லாமல், 'செல்வர்களே, உண்டு
கொழுத்திருப்போரே, சிரிப்பவர்களே உங்களுக்கு ஐயோ கேடு" என்று
பொருளாதாரத்தில்
தன்னிறைவு பெற்றவர்கள்
சபிக்கப்படுகிறார்கள் (லூக்கா 6:20-26). இந்த சமவெளிப்பொழிவின்
விளக்கமாகவே லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் "ஏழை லாசரின்
உவமை" (லூக்கா 16:19-31) அமைந்துள்ளது.
யூதர்களின்
மரபுப்படி, இயேசுவின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்குரிய அனைத்து சமய
மற்றும் சமூகக்
கடமைகளையும் நிறைவேற்றுவதாகக்
கூறும் லூக்கா, பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள்
எதையும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வில் மேற்கோள் காட்டவில்லை என்பது
கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை மூடி மறைக்க வேண்டும்
என்பதல்ல லூக்காவின் நோக்கம்.
யூதப் பின்னணி
இல்லாத கிறிஸ்தவர்களுக்கு எழுதியதால் அவைகளை மேற்கோள் காட்ட வேண்டிய
தேவை இல்லை. அப்படியே அவைகளைக் குறிப்பிட்டாலும், பழைய ஏற்பாட்டை
அறிந்திராத பிற இனத்தாருக்கு அவைகளைப் புரிந்து
கொள்ளவும், முடியாது.
மேலும், மத்தேயு எடுத்துக்காட்டும்
யூத உணர்வை வெளிப்படுத்தும் பகுதிகள் லூக்கா நற்செய்தியில் கவனமாகத்
தவிர்க்கப்ட்டுள்ளன. உதாரணமாகத், திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்பும்
நிகழ்ச்சியை மத்தேயு (10:5-15), லூக்கா
(9:1-6) ஆகிய இருவருமே
பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், மத்தேயு நற்செய்தியில்
காணப்படும் பின்வரும் பகுதியை மட்டும் லூக்கா தவிர்த்துவிடுகிறார்:
"பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்லவேண்டாம். சமாரியாவின் நகர்
எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன இஸ்ரயேல் மக்களிடமே
செல்லுங்கள்" (மத் 10:5). மாற்கு (7:24-30), மத்தேயு
(15:21-28) ஆகிய இருவரும் குறிப்பிடும் கனானியப் பெண்ணைப்பற்றிய
நிகழ்வு லூக்காவில் இடம்பெறவில்லை. காரணம்,
அப்பகுதி யூதரல்லாத பிற இனத்தவரை
இழிவுபடுத்துவதுபோல அமைந்துள்ளது. நற்செய்திகள் யாருக்கு எழுதப்பட்டது
என்பது தெரியவில்லை என்றால், குழந்தைப் பருவ நிகழ்ச்சியில் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள
முடியும்?
அப்படியானால், நற்செய்தியாளர்கள் தங்கள் விருப்பம்போல் இயேசுவின்
போதனையை மாற்றி எழுதியிருக்கிறார்களா? என்ற கேள்வி ஒரு சிலருக்கு
எழக்கூடும். எக்காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்லக்கூடாது. அதே
நேரத்தில், தெரிந்த எல்லா
உண்மையையும் சொல்ல
வேண்டிய கட்டாயம் இல்லை.
எல்லாவற்றையும்
எல்லோரிடமும் சொல்லிவிட முடியாது. ஒரே செய்தியை அனைவரிடத்திலும் ஒரே
விதத்தில் சொல்வதும் ஏற்புடையதாக இருக்காது. "எப்படியாவது ஒரு
சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லோருக்கும் எல்லாமானேன்" (1கொரி 9:22)
என்னும் பவுலடியாரின் ஞானமும் தாகமும்
நற்செய்தியாளர்களுக்கும் பொருந்தும். தங்களுக்குத் தெரிந்த இயேசுவைக்
குறித்த எல்லா
செய்திகளையும் அவர்கள் எழுதவில்லை,
எழுதவும், முடியாது என்று புனித யோவான்
தெளிவுபடக் குறிப்பிடுகிறார்: "இயேசு செய்தவை வேறு
பலவும்,
உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால்,எழுதப்படும் நூல்களை உலகமே
கொள்ளாது எனக் கருதுகிறேன்" (யோவான் 21:25). "கருத்தாய் ஆய்ந்து"
எழுதுவதாக
லூக்காவும், குறிப்பிடுகிறார் (லூக்
1:3-4).
விவிலியம்
எவ்வளவு நுணுக்கமானது மற்றும்
ஆழமானது என்பது இப்பொழுது
ஒரளவுக்கு உங்களுக்குத்
புரிந்திருக்கும். புனித யோவான் கூறுவதுபோல, எப்படி இயேசுவைப் பற்றி
முழுமையாக எழுதினால் இந்த உலகமே கொள்ளாதோ, அதைப்போலவே, ஒருவர் நூறு
வயது வாழ்ந்து, தன் வாழ்நாள் முழுவதும் விவிலியத்தைப் படித்தாலும்,கடைசியில் அவர் இதைத்தான் சொல்லுவார்: விவிலியத்தில் 'கற்றது கைம்மண்
அளவ. கல்லாதது உலகளவு". எனவே,
விவிலியத்தை நாங்கள் படித்துவிட்டோம், விவிலியத்தில் எங்களுக்கு
அனைத்தும்
தெரியும் என்று யாராவது
மார்தட்டிக்கொண்டு உங்களை குறைசொல்லும்போது, முதலில் அவர்களைப்
பாராட்டுங்கள். காரணம், நம்மைத் தட்டி எழுப்புகிறார்கள், உசுப்பேற்றி
விடுகிறார்கள். விவிலியத்தைத் படிக்கவேண்டும் என்னும் நமது கிறிஸ்தவக்
கடமையை நினைவுபடுத்துகிறார்கள்.
அதே சமயத்தில்,
வெறுமனே விவிலியத்தை வைத்திருப்பதாலோ அல்லது வாசித்திருப்பதாலோ மட்டுமே
ஒருவர் விவிலியத்தை
அறிந்தவராகவும், அதனைச் சரிவரப்
புரிந்தவராகவும், ஆகிவிட முடியாது. விவிலியத்தை
மட்டும் படித்தால் போதாது. விவிலியத்தைப்
பற்றியும்
படிக்க வேண்டும். விவிலியத்திலுள்ள ஒவ்வொரு புத்தகத்தின் ஆசிரியர்
யார், அவரது பின்புலம் என்ன, யாருக்கு எழுதுகிறார், எதற்காக
எழுதுகிறார், எதை எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்பதக் குறித்து
அறிந்துகொள்வதே விவிலியத்தைப் பற்றி படிப்பதாகும். விவிலியத்தைப்
படிப்பது என்பது நிலத்தில் மறைந்திருக்கும் புதையலைத் தேடுவது போன்றது. விலை உயர்ந்த முத்தை வாங்குவதைப் போன்றது (மத் 13:44-46). அதற்காக
நேரத்தை ஒதுக்குவது, கால விரயம் அல்ல. அது நமது ஆன்மீக மற்றும் அறநெறி
வாழ்விற்காக நாம்
செய்யும் முதலீடு. எனவே,
இறைவார்த்தையை விசுவசிப்போம், அதை நேசிப்போம், நேசிப்பதை வாசிப்போம்,
வாசிப்பதை யோசிப்போம், யோசிப்பதைச் சுவாசிப்போம். உயிரளிக்கும்
வார்த்தையை, வார்த்தையானவரை நம் உயிருக்கு மேலாய் நேசிப்போம்.
வாழ்வு தரும் வார்த்தையை நமது வாழ்வாக்குவோம். வாழும் விவிலியமாக வலம் வருவோம்.
முனைவர் அருள்திரு. லெரின் டிரோஸ்
|