தொடக்க நூலில் படைப்பு சம்மந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகளை எடுத்துக்
கொள்வோம். படைப்பைப் பற்றிய செய்தியை விவிலியத்தில் வாசிக்கும்போது
ஒன்றை நாம் மனதில் கொள்ளவேண்டும். உலகைப் படைக்கும்போது, கடவுள்
தனக்கென்று எந்த செயலரையும் நியமிக்கவுமில்லை, எந்த நிருபரும்
அருகேயிருந்து குறிப்பு எடுக்கவுமில்லை. அப்படியானால், எதை அடிப்படையாக
வைத்து படைப்பின் செய்தி விவிலியத்தில் பதிவு
செய்யப்பட்டது?
இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்திய விடுதலைப்பயணம் (பாஸ்கா) மறக்கமுடியாத,
மறக்கக் கூடாத ஓர் அனுபவமாகும். ஆண்டுதோறும் அதனை நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டும், அதனைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல
வேண்டும் (விப 12:2-27). கானான் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது,
யாக்கோபின் புதல்வர்கள் உணவு வாங்குவதற்காக
எகிப்துக்குச் செல்கின்றனர். பின்னர் எகிப்தில் ஆளுநராக இருந்த தங்கள்
சகோதரன் யோசேப்பின் தயவினாலும் அன்பினாலும் எகிப்திலேயே
குடியமர்கின்றனர் (தொநூ 42-50). இவர்கள் எண்ணிக்கையில் பலுகிப் பெருகவே,
யோசேப்பை முன்பின் அறிந்திராத எகிப்தில் தோன்றிய புதிய மன்னன் இஸ்ரயேல்
மக்களின் எண்ணிக்கையைக் கண்டு கலங்குகிறான். போர் ஏற்படும் சமயத்தில்
தங்கள் எதிரிகளுடன் அவர்கள் சேர்ந்துவிடக் கூடும் என்ற பயத்தில்
அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மூன்று விதங்களில் முயற்சி
செய்கிறான்.
முதலாவதாக, கடுமையான வேலைப்பளுவைச்
சுமத்தி அவர்களை அடக்குகிறான். ஒருவேளை, அதிக களைப்போடு வீடு
திரும்புவதால், வாழ்க்கையே கசந்து போகலாம். அது குடும்ப உறவைப்
பாதிக்கும். அதனால் குழந்தைகளைக் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள்
குறையலாம் என்றுகூட அரசன் எண்ணியிருக்கலாம். ஆனால், இத்திட்டம்
பயனளிக்கவில்லை. "எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை (இஸ்ரயேலரை)
ஒடுக்கினார்களோ அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர், பலுகிப்
பெருகினர்" (விப 1:12).
இரண்டாவதாக, கருவுருவதைத் தடுக்க
முடியவில்லை என்பதை உணர்ந்த அரசன், இப்பொழுது பேறுகாலத்தின் போது, ஆண்
குழந்தைகளை மட்டும் கொன்றுவிடும்படி எபிரேயரின் (இஸ்ரயேலர் அல்லது
யுதர்களைக் குறிக்கும் மற்றொரு சொல்) மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா
ஆகியோருக்கு கட்டளையிடுகிறான். அதுவும் பயனளிக்கவில்லை. அப்பெண்கள்
கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அரச கட்டளையை மீறுகிறார்கள் (விப
1:15-19).
மூன்றாவதாக, இதுவரை இரகசியமாவும்,
தந்திரமாகவும் இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நினைத்த
அரசன், இப்பொழுது பகிரங்கமாக வன்முறையைக் கையிலெடுக்கிறான்.
கருத்தரிப்பதையும் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆண் குழந்தை
பிறப்பதையும் தடுக்க முடியவில்லை. எனவே, பிறக்கும் எபிரேய ஆண்மகவு
அனைத்தையும் நைல் நதியில் எறிந்துவிடக் கட்டளை பிறக்கிறான். அதில்
தப்பிப் பிழைக்கிறார் மோசே.
தன் இனத்தைச் சார்ந்த ஒருவனை எகிப்தியன் தாக்கியபோது, அந்த எகிப்தியனை
மோசே கொன்று இரகசியமாகப் புதைக்கிறார். அச்செயல் வெளியே தெரிய வரவே,
தன் உயிருக்குப் பயந்து, அவர் எகிப்திலிருந்து தப்பி ஓடுகிறார். ஆனால்,
எரியும் முட்செடியில் காட்சி கொடுத்து கடவுள் அவரை அழைக்கிறார்.
மீண்டும் எகிப்துக்கு திருப்பி அனுப்புகிறார். மோசே வழியாகக் கடவுள்
மாபெரும் அற்புதங்களைச் செய்து, செங்கடலைப் பிரித்து, இஸ்ரயேல் மக்களை
எகிப்தியரின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். இது இஸ்ரயேல் மக்களின்
மனதில் நீங்காத நினைவாக நின்றது. அவர்களை சிந்திக்க வைத்தது. எப்படி
இந்த விடுதலை சாத்தியமானது? ஒருபுறம், எகிப்து நாடு, வல்லரசு, அதன்
அரசன், பயிற்சி பெற்ற இராணுவம். மறுபுறம், அடிமைகளான இஸ்ரயேல் மக்கள்,
நிராயுதபாணிகள். இருப்பினும், அடிமைகளாகிய தாங்கள் ஒன்றும்
செய்யாதிருந்தும், வல்லரசு அழிக்கப்படுகிறது. தங்களின் எந்தப்
பங்களிப்பும் இல்லாமல் விடுதலை கிடைக்கிறது. பாலைவனத்திலும் உணவு
கிடைக்கிறது, பாறையிலிருந்தும் தண்ணீர் சுரக்கிறது. அப்படியானால்,
நம்மை மீட்ட கடவுள் எத்துணை நல்லவர்! எத்துணை வல்லவர்! இந்த உலகையும்
இவர்தான் படைத்திருக்க வேண்டும். இதை மக்களுக்கு எப்படி எடுத்துச்
சொல்வது? அக்காலத்தில் நிலவிய மெசபத்தோமிய, பாபிலோனிய புராணக்கதைகளை
ஒரு மாதிரியாகக் கொண்டு, தங்களது விடுதலைப் பயண அனுபவம் மற்றும்
விசுவாசத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் உலகப்படைப்பு. அவர்களின்
விடுதலைப் பயணத்தில் செங்கடலைப் பிரித்ததும் அதனைக் கடந்ததும்
விடுதலையின் அடையாளமாகக் காணப்பட்டது. பிரித்தலும் கடத்தலும்தான்
அவர்களுக்கு வாழ்வின் அடையாளங்களாகத் தோன்றின. கசந்த எகிப்திய
வாழ்விலிருந்து இனிமையான பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு,
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு, சாவிலிருந்து வாழ்வுக்கு,
இருளிலிருந்து ஒளிக்கு செங்கடலைப் பிரித்ததன் மூலமாகக் கடந்து
வருகிறார்கள்.
எனவேதான், உலகப் படைப்பிலும் பிரித்தல் கடவுளின் முக்கிய செயலாகச்
சொல்லப்படுகிறது. உருவமற்ற, வெறுமையான, இருள் பரவியிருந்த தொடக்க நிலை
எகிப்தின் அடிமைத்தனத்தைக் குறிக்கிறது. செங்கடலைப் பிரித்து வாழ்வு
கொடுத்தது போல, கடவுள் ஒளியைப் படைத்து இருளிலிருந்து அதைப்
பிரிக்கிறார். ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் இந்தப் பிரிக்கும் செயலைக்
கடவுள் ஆற்றுகிறார். ஒரு நாளைக் கூட மாலை காலை என்று இரண்டாகப்
பிரிக்கிறார். எகிப்திய விடுதலை அனுபவத்திலிருந்து உலகப் படைப்பை
அவர்கள் பார்த்தார்கள். ஒன்றுமில்லாத நம்மை மீட்டதுபோல, கடவுள்
ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகைப் படைக்கிறார். அவரால் முடியாதது
எதுவுமில்லை. அவரது வல்லமைக்கு எல்லையில்லை. வெறுமனே வார்த்தையால்
படைக்கிறார். திட்டமிட்டு படைக்கிறார். அவரது ஒவ்வொரு படைப்பும்
நன்றாயிருந்தன. நன்றாக இருப்பதை அறிந்த பிறகே அடுத்த படைப்பை கடவுள்
உண்டாக்குகிறார். மனிதன் படைப்பின் சிகரம். மனிதனைப் படைத்த பிறகு,
அதுவரை நல்லதாகத் தோன்றிய உலகம் மிகவும் நல்லதாகக் காட்சி தருகிறது (தொநூ
1:31). எனவே, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள படைப்புப் பற்றிய செய்திகளை
அது எழுதப்பட்ட பின்னனி தெரியவில்லை என்றால், கேள்விகளும்
குழப்பங்களும்தான் மிஞ்சும். இஸ்ரயேல் மக்களுக்கு உலகப் படைப்பு என்பது
உலக மீட்பு. அது கடவுளின் நன்மைத்தனத்தாலும் வல்லமையாலும் நடந்தது.
தொடக்கநூல் 1:2ல் சொல்லப்பட்டுள்ள 'ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது"
என்னும் செய்தி ஒளியல்லாத நிலையைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது.
மாறாக, 'இருள் பரவியிருந்தது" என்பதைத் 'தீய சக்திகளால் இவ்வுலகம்
நிறைந்திருந்தது" என்று புரிந்து கொள்ள வேண்டும். முதல் நாளில் கடவுள்
ஒளியைப் படைத்தார் என்றால் படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் தீய
சக்திகளை அழித்துவிட்டார் என்று பொருள். அதுவே இவ்வுலகிற்கு ஒளியாக
அமைந்தது என்று உருவகப் பொருளில் புரிந்துகொள்வதே சிறப்பானதாக அமையும்.
சாதாரணமாகவே நமது நடைமுறை வாழ்க்கையில் நல்லதொரு தொடக்கத்தை 'விடியல்"
என்று சொல்லுகிறோம் '...இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம்
கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல்
நம்மைத் தேடிவருகிறது" (லூக்கா 1:78-79) என்னும் சக்கரியாவின் பாடல்
இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. 'நானே உலகின் ஒளி" (யோவான் 9:5)
என்று இயேசு தன்னைக் குறித்துச் சொல்வதையும், 'நீங்கள் உலகிற்கு
ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத் 5:14) என்று தனது சீடர்களைக் குறித்து
சொல்வதையும் இந்தப் பொருளில்தான் புரிந்து கொள்ள முடியும். எனவே,
படைப்பின் வரலாற்றின் முதல் நாளில் உயிர்கள், குறிப்பாக, மனிதர்கள்
வாழ்வதற்கான நல்ல சூழலைக் கடவுள் உருவாக்குகிறார். 'ஒளி தோன்றியது"
என்பது நல்லதொரு தொடக்கத்தை, மீட்பின் ஆரம்பத்தைக் குறிப்பதாகக்
தொடக்கநூலில் அமைந்துள்ளது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
தேடக்கூடாது. இல்லையெனில், கடவுள் முதல் நாளில் 'ஒளி தோன்றுக" என்று
ஒரு வாக்கியத்தைத்தான் சொன்னாரா? என்ற அடுத்த கேள்வி உதயமாகும். இப்படி
ஆறு நாட்களில் ஒவ்வொரு வாக்கியத்தையும் சொன்ன கடவுளுக்கு ஒரு நாள்
ஓய்வு வேறு தேவையா? என்று தொடர்கேள்விகள் எழும். மேலும், கடவுள் 'ஒளி
தோன்றுக" என்ற ஒரு கட்டளையின் மூலமாகத் தீமையை அழித்தார் என்றால், அது
கடவுள் எவ்வளவு வல்லமை உள்ளவர் என்பதை நம்மால்
எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இப்படி எல்லாம் வல்ல கடவுளால் படைக்கப்பட்ட நல்ல உலகத்தில் எப்படி
துன்பம் நுழைந்தது? பேராசையும் பொறாமையும் எப்படி வளர்ந்தது? பகைமையும்
பிரிவினையும் எதனால் ஏற்பட்டது? பல்வேறு மொழிகளும் குழப்பங்களும்
எதனால் வந்தன? இவை போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் தொநூ 3
லிருந்து 11 வரையிலான அதிகாரங்கள். எந்தத் தீமையும் கடவுளிடமிருந்து
வந்திருக்க முடியாது. கடவுளின் கட்டளைகளுக்கு மனிதன் கீழப்படியாதது
மட்டுமே காரணமாக இருக்க முடியும். பாவம் பாவத்தைப் பெற்றெடுக்கிறது.
முதலில் கடவுளுக்கு எதிராக, பின்னர் சகோதரன் சகோதரனுக்கு எதிராக...
முதலில் தனிப்பட்ட மனிதர்கள் கடவுளுக்கு எதிராகத் தவறு செய்கிறார்கள்.
பின்னர் ஒட்டு மொத்த மனித சமுதாயமே (நோவா காலம், பாபேல் கோபுர நிகழ்வு
) கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்கிறது. எனவே, விவிலியத்தை அதுவும்
குறிப்பாக, தொடக்க நூலைப் படிக்கும் போது, அதில் உள்ள செய்திகளை
ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டுமே தவிர, வார்த்தைக்கு வார்த்தை
அர்த்தம் தேடக்கூடாது. ஆறுநாள் படைப்புகளிலும் ஒரே பாணி
கடைபிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம்: கடவுள் கட்டளையிடுகிறார் (உதாரணமாக,
ஓளி தோன்றுக!). அது அப்படியே உடனே நடக்கிறது. கடவுள் அதை நல்லதெனக்
காணுகிறார். மாலையும் காலையும் சேர்ந்து ஒரு நாள் ஆகிறது. எனவே
திருவிவிலியத்தில் நாம் படைப்பின் வரலாற்றைப் படிக்கும் போது, அதற்கு
ஒட்டுமொத்தமாகப் பொருள் காணவேண்டும். உலகம் எவ்வாறு தோன்றியது என்பதைக்
குறித்த அறிவியல் செய்தியைத் தருவதற்காக அது எழுதப்படவில்லை. மாறாக,
உலக வரலாற்றில் கடவுள் எவ்வாறு செயலாற்றினார், அவரது வல்லமை எவ்வாறு
வெளிப்பட்டது என்பதைக் குறித்த விசுவாச ஆவனம்தான் படைப்பின் வரலாறு.
எனவே, நான்காம் நாளில் படைக்கப்பட்ட சூரியன் மற்றும் சந்திரனிலிருந்து
கிடைக்கும் ஒளியையும், முதல் நாளில் தோற்றுவிக்கப்பட்ட ஒளியையும்
ஒன்றுபோல் புரிந்து கொள்ளக் கூடாது. முதல் நாள் 'ஒளி"யை உருவகமாகவும்,
நான்காம் நாளில் தோன்றிய சூரிய, சந்திர ஒளியை நேரடிப் பொருளிலும்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த கேள்விக்கு நகர்வோம். உலகப் படைப்பு, குறிப்பாக மனிதப் படைப்பு
ஏன் இரண்டு முறை தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ளது? பழைய ஏற்பாட்டின்
முதல் ஐந்து நூல்களும் (ஆங்கிலத்தில்
Pentateuch என்றும், யுதர்களா
Torah தோரா என்றும் அழைக்கப்படுகிறது) மோசேவால் எழுதப்பட்டது
என்ற ஒரு பொதுவான கருத்து 18ஆம் நூற்றாண்டுவரை நிலவிவந்தது. ஆனால்,
அக்கருத்து சரியானதல்ல என்பது அப்புத்தங்களைக் கூர்ந்து வாசிக்கும்போது
புலப்படுகிறது.
மோசே மட்டுமே அவைகளுக்கு ஆசிரியராக இருந்திருந்தால் ஒரே நிகழ்ச்சியைப்
பலமுறை பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை (உதாரணம்
- மனித படைப்பு. மோசேவின் அழைப்பு: விப 3, 6. நெகேபில் சாரா குறித்த
ஆபிரகாமின் பயம்: தொநூ 12:9-13:1. 20:1-18. 26:1-17). நிகழ்ச்சிகளைச்
சொல்லும் விதமும் ஒரே விதமாக அமைந்திருக்கும் (உதாரணம் - மனிதப்
படைப்பைக் குறித்து தொடக்க நூல் முதல் அதிகாரம் சொல்லும் விதத்திற்கும்
இரண்டாம் அதிகாரம் சொல்லும் விதத்திற்கும் பாரதூர வேறுபாடு உண்டு.)
ஒருசில தகவல்களைப் பொறுத்தவரையில் வேறுபாடு உள்ளது (உதாரணம் - நோவா
காலத்து வெள்ள நாட்களைக் குறித்து இருவேறு தகவல்கள் உள்ளன. தொநூ 7:4ல்
கடவுள் நாற்பது இரவும் பகலும் மழை பெய்விக்கப்போவதாகச் சொல்கிறார்.
அவ்வாறு நடப்பதாக வசனம் 12, 17ல் வாசிக்கிறோம் நாற்பது நாள் பெய்த
மழையால் 150 நாட்கள் மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகியதாக வசனம் 24
சொல்கிறது. எப்பொழுது மழை பெய்ய ஆரம்பித்தது என்றும், எப்பொழுது
வெள்ளம் முழுமையாக வடிந்தது என்றும் மிகவும் நுணுக்கமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. 'நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின்
இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுக்கள் எல்லாம்
பீறிட்டெழுந்தன. வானங்களில் மதகுகள் திறக்கப்பட்டன. நாற்பது பகலும்
நாற்பது இரவும் மண்ணுலகில் பெருமழை பெய்தது" (தொநூ 7:11-12). எப்பொழுது
வெள்ளம் வற்றியது என்று பாருங்கள். 'அவருக்கு (நோவாவுக்கு)
அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப்
பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின்
மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது" (தொநூ
8:13). நோவாவின் அறுநூறாவது வயதின் இரண்டாம் மாதத்தில் தொடங்கிய
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது அவரது அறுநூற்றொன்றாவது வயதின்
முதல் மாதத்தில் வற்றுகிறது. இத்தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது,
மண்ணுலகில் ஏறக்குறைய 11 மாதங்கள் வெள்ளம் இருந்துள்ளது. வெள்ளத்தின்
காலம் 5 மாதங்களா (150 நாட்கள்)? அல்லது 11 மாதங்களா? ஒரே நபர் (மோசே)
எழுதியிருந்தால், இவ்வளவு நுணுக்கமாக வெள்ளம்
பற்றிய ஆண்டு, மாதம், நாள் பற்றிய குறிப்புகளைத் தந்துவிட்டு, இந்த
வேறுபட்ட தகவல்களைத் (5 மாதங்கள் என்று ஓரிடத்திலும், 11 மாதங்கள்
என்று மற்றொரு இடத்திலும்) பதிவு செய்திருக்க
வாய்ப்பில்லை அல்லவா!
அனைத்திற்கும் மேலாக, இச 34:5-6 ல் மோசேவின் இறப்பு, அடக்கம் பற்றிய
குறிப்புகள் உள்ளன. தான் எழுதிய நூலில் தனது இறப்பு,அடக்கம் குறித்து
எப்படி மோசே எழுதியிருக்க முடியும்? அவர் இந்நூல்களை எழுதியிருக்க
வாய்ப்பில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறு இந்நூல்களில் காணப்படும் மாறுபடும் மொழிநடை மற்றும் சொல்லும்
விதம், இரட்டைப் பதிவுகள், வேறுபாடுள்ள தகவல்கள் போன்றவை இவைகள் ஒரு
தனிப்பட்ட நபரால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க
வாய்ப்பில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. தற்போதைய விவிலிய
ஆய்வுகளின்படி, விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்களும் நான்கு
மரபுகளின்
(Four
Tradditions or Sources)
கலவையாகவே கருதப்படுகிறது: யாவே மரபு (Yahwist
Tradition = J
என்று பொதுவாக குறிக்கப்படும்), எல்லோஹிம் மரபு (Elohist
Tradition = E), குருக்கள் மரபு (Priestly
Tradition = P) மற்றும் இணைச்சட்ட மரபு ((Deuteronomic
Tradition = D). ஓவ்வொரு மரபுக்கும் அதற்கே உரிய
தனிப்பட்ட தன்மைகள் உண்டு.
யாவே மரபு (J) ஒருங்கிணைந்த இஸ்ரயேலில் கிமு 10ம் நூற்றாண்டில்
தோன்றியிருக்கலாம். இம்மரபு கடவுளை 'யாவே" என்று அழைக்கிறது. எனவேதான்
இம்மரபுக்கு இப்பெயர் தரப்பட்டுள்ளது. இம்மரபில் கடவுளின் பிரசன்னம்
முக்கிய இடத்தைப் பெறுகிறது. செய்திகளைச் சொல்லும் முறையில் உயிரோட்டம்
இருக்கும். கதை சொல்வது போல்; மொழி நடை அமைந்திருக்கும். இம்மரபு
கடவுளின் செயல்களை மனித முறையில் எடுத்துரைக்கும் (Anthropomorphism).
காட்சிகளை அழகுபட வர்ணிப்பது, உளவியல் கருத்துகள், ஆழ்ந்த இறையியல்
சிந்தனைகள், உரையாடல்கள் போன்றவை இம்மரபின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
தொநூ 2:2-25ல் காணப்படும் மனித படைப்பைக் குறித்த பதிவு
இம்மரபைச் சேர்ந்தது.
கிமு 922ல் சாலமோனுக்குப் பிறகு, அவரது மகன் ரெகபெயாம் காலத்தில்
ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடு வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிகிறது (1அர
12). வடக்கு பகுதி இஸ்ரயேல் என்றும் (தலைநகர் சமாரியா. பல அரச
வம்சங்களால் ஆளப்படுகிறது), தெற்குப் பகுதி யுதேயா என்றும் (தலைநகர்
எருசலேம். தாவீதின் தலைமுறையினரால் மட்டுமே ஆளப்படுகிறது)
அழைக்கப்பட்டது.
E மரபு வட பகுதியில் அதாவது, இஸ்ரயேல் அரசில் கிமு 922க்குப்
பிறகு தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இம்மரபு கடவுளை
எலோஹிம் (Elohim)
என்று அழைக்கிறது. எனவேதான் இம்மரபுக்கு இப்பெயர் தரப்பட்டுள்ளது. இது
கடவுளை மனிதராகச் சித்தரிப்பதைத் தவிர்க்கிறது. கடவுளின்
வல்லமைக்கு இம்மரபு முக்கியத்துவம் அளிக்கிறது. இஸ்ரயேல் மக்களின்
அறநெறியையும் (Morality)
சமய வாழ்வையும், அதாவது அவர்களின் விசுவாசம் மற்றும் இறையச்சத்தை
வலியுறுத்துகிறது. கிமு 722ல் வட அரசான இஸ்ரயேல் அசீரியர்களால்
வீழ்த்தப்பட்ட பின்னர் இந்த இரண்டு மரபுகளும் (J
மற்றும்
E) ஒன்றாக கலக்கின்றன.
இணைச்சட்ட மரபு (D) மரபு இறையன்பையும் இறையச்சத்தையும் கடவுளின்
கட்டளைகளுக்குக் கீழ்படிவதன் மூலம் இஸ்ரயேல் மக்கள் வெளிப்படுத்த
வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்க
தவறினால் தண்டனையைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை
முன்வைக்கிறது. அறிவுரை சொல்வதைப் போல (Exhortatory
Style) அனைத்தையும் எடுத்துரைப்பது இம்மரபின் பாணியாகும்.
இம்மரபானது கிமு 7ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்காலம் என்பது பொதுவான
கருத்து. இணைச்சட்ட நூல் இம்மரபிற்கு ஓர் எடுத்துக்காட்டு.
குருக்கள் மரபு (P) ஆலய வழிபாடு மற்றும் சமயச் சடங்குகளுக்கு
முக்கியத்துவம் தருகிறது. மூதாதையர் பட்டியல் மற்றும் அவர்களின்
மரபுகள் போன்றவற்றில் தனி ஆர்வம் காட்டுகிறது. இறைபிரசன்னத்தை
மேகத்தில் வெளிப்படும் கடவுளின் மாட்சிமையிலும்; கூடாரத்தில் அவரது
உடனிருப்பிலும் அடையாளம் காணுகிறது. சமயச் சடங்குகளைக் கடைபிடிப்பதன்
மூலமே கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ முடியும் என்ற படிப்பினையைத்
தருகிறது. கடவுளை மனித முறையில் சித்தரிப்பதைத் (anthropomorphism)
தவிர்க்கிறது. கடவுளை எல்லாம் வல்லவராகவும் (Omnipotent),
அனைத்தையும் கடந்தவராகவும் (Transcendent)
சித்தரிக்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது (கிமு 587-538) இம்மரபு
தோன்றியிருக்கலாம். தொநூ 1:1-2:4 குருக்கள் மரபைப் பிரதிபலிக்கிறது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, இம்மரபில் வழிபாட்டுக்கும் கடவுளின்
வல்லமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. எனவேதான், முதல்
அதிகாரம் சித்தரிக்கும் உலகப் படைப்பில் ஓய்வு
நாள் சிறப்பிடம் பெறுகின்றது. கடவுளே அந்நாளில் ஓய்ந்திருந்தார்,
அந்நாளை ஆசீர்வதித்தார் என்று சொல்லி, ஓய்வு நாளை
அனுசரிக்க வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் வலியுறுத்துகிறது.
பாபிலோனிய அடிமைத்தனத்துக்குப் பிறகு (கிமு 538-537), இந்நான்கு
மரபுகளும் (JEDP)
ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு யுகமே (Hypothesis).
விவிலித்தைப் பொறுத்தவரையில், எவரும் எதையும் எக்காலத்திலும் 'விவிலியம்
இதைத்தான் சொல்லுகிறது" என்று வரையறுத்துக் கூறமுடியாது. காரணம், அதை
எழுதியவர்கள் யாரும் இப்பொழுது நம்மிடையே இல்லை. எழுதப்பட்ட காலம் மிக
மிகப் பழமையானது. யாராக இருந்தாலும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில்
தங்களது கருத்துக்களையும், அதற்கான சாத்தியக் கூறுகளையும்,
யுகங்களையும் மட்டுமே முன்வைக்க முடியும். விவிலியத்தில் எப்படிப்பட்ட
ஆய்வுகளைச் மேற்கொண்டாலும். கடைசியில் இதன் அடிப்படையில்
இப்படியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று மட்டுமே ஒருவரால்
சொல்ல முடியும். ஏனெனில், அது மனித மொழியில் எழுதப்பட்ட இறைவார்த்தை.
மனிதரால் ஒருபோதும் அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவே முடியாது.
நான்கு மரபுகளின் தொகுப்பாக தோராவைப் பார்க்கும்போது, அங்கே காணப்படும்
இரட்டைப் பதிவுகள். வேறுபட்ட மொழி நடை, வேறுபட்ட தகவல்கள் போன்றவை
இருப்பது மிகவும் சாதாரணமானது, அவைகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள
முடிகிறது.
மேலும், இந்நூல்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டவை அல்ல. மாறாக, அவை
தொகுக்கப்பட்டவை. அவ்வாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுப்பாக
உருவாக்கும் போது, ஒரு சில பகுதிகள் விடுபட்டுப் போவதற்கான வாய்ப்புகள்
அதிகம். இதனால் ஒரு சில இடங்களில் தொடர்ச்சியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று
தொடர்பற்றதாகத் தோன்றலாம். (எகிப்துக்குச் செல்லும் வழியில் கடவுள்
மோசேவைக் கொல்லப் பார்த்தார் என்பது இதற்கு ஒரு சான்றாக அமையலாம்).
அக்காலத்தில் எழுதப்பட்ட முறையும், பயன்படுத்தப்பட்ட
எழுதுபொருட்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், இவ்வாறு சில இடங்களில்
தொடர்பற்றதாகக் காணப்படும் விவிலியப் பகுதிகள் எவ்விதமான சலனத்தையும்
சஞ்சலத்தையும் ஏற்படுத்தாது. மேலும், நமது கேள்விகளுக்குப் பதில்
சொல்வதற்காககோ, அல்லது நவீன ஆய்வுகளுக்குத் தீனி போடுவதற்காககோ
எழுதப்பட்டது அல்ல விவிலியம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது
நல்லது.
|