Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஸிட்டா ✠(St. Zita of Lucca)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 27)
✠ புனிதர் ஸிட்டா ✠(St. Zita of Lucca)

* கன்னியர் :(Virgin)

*பிறப்பு : கி.பி. 1212
லூக்கா நகரின் அருகேயுள்ள மொன்ஸக்ரட்டி, இத்தாலி
(Monsagrati, Near Lucca, Italy)

*இறப்பு : ஏப்ரல் 27, 1272 (வயது 59-60)
லூக்கா, இத்தாலி
(Lucca, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*புனிதர் பட்டம் : கி.பி. 1696

*முக்கிய திருத்தலம் :
சேன் ஃப்ரேடியானோ பேராலயம், லூக்கா
(Basilica di San Frediano, Lucca)

*பாதுகாவல் :
வீட்டுப் பணியாளர்கள், தொலைந்துபோன சாவி,
பாலியல் வன்முரைக்காளானவர்கள், தமது பக்திக்காக இழிவுபடுத்தப்பட்ட மக்கள்,
திருச்சபையின் திருமணமாகாத பொதுநிலைப் பெண்கள் (Single Laywomen), லூக்கா எனும் இத்தாலிய நகரம் (Italian City of Lucca)

புனிதர் ஸிட்டா ஒரு இத்தாலிய நாட்டு ரோமன் கத்தோலிக்க புனிதரும், அருட்சகோதரியும் ஆவார்.

இத்தாலியின் லூக்கா (Lucca) நகரின் அருகேயுள்ள "மோன்சக்ரட்டி" (Monsagrati) என்னும் கிராமத்தில் பிறந்த இவர், தமது பன்னிரெண்டாம் வயதிலேயே வீட்டுப் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார். நீண்ட காலமாக அவர் ஒரு பணிப்பெண்ணாக கொடுமைப்படுத்தப்பட்டார். கடினமான பணிகள் அவர்மேல் சுமத்தப்பட்டன. நியாயமற்ற முறையில் அவர் துன்புறுத்தப்பட்டார். அவருடைய அன்பான மற்றும் வெளிப்படையான தன்மைக்காக அவர் அவரது முதலாளிகளாலும், சக பணியாளர்களாலும் தாக்கப்பட்டார். இடைவிடாது தவறாகப் பயன்படுத்தப்பட்டார். அவருடைய பணிவும், சாந்த குணமும், அன்பும் அவரைக் கொடுமைப் படுத்திய முதலாளிகளையும், சக பணியாளர்களையும் அவரை விட்டு விலக வைத்தன. அவரது விடாமுயற்சியும், பண்பும் அவரை அவர்களிடமிருந்து மீட்டன. அவரது நிலையான பக்தி படிப்படியாக ஒரு மத எழுச்சியை குடியேற்றியது.

சோம்பேறித்தனமான பக்தி பொய்மையானது என்று அவர் அடிக்கடி பிறருக்கு எடுத்துரைத்தார். அவருக்கு தரப்பட்ட பணி, கடவுளால் அவருக்கு தரப்பட்டது என்று கூறினார். பிறரை இகழ்வதை விட்டு, தமது பணிகளை தாமே செவ்வன செய்தார். உறங்கும் நேரத்தைக் குறைத்து, செபத்தில் ஈடுபட்டார்.

1272ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 27ம் நாளன்று, அவர் உறக்கத்திலேய சமாதானமாக இறந்தார். அவர் படுத்திருந்த இடத்தின்மேலே ஒரு விண்மீன் தோன்றியதாக சொல்லப்பட்டது.

அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல், 1580ம் ஆண்டு தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. அவரது உடல் கெட்டு விடாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பதப்படுத்தப்பட்டதாக மாறிவிட்டது. புனிதர் ஸிட்டாவின் உடல் தற்போது லுக்காவிலுள்ள 'சேன் ஃப்ரேடியானோ பேராலயத்தில்' (Basilica di San Frediano in Lucca) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
================================================================================

தூய சிட்டா (ஏப்ரல் 27)

"உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களிடையே முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் (மத் 20: 26 28).

வாழ்க்கை வரலாறு

இத்தாலியில் உள்ள லூக்கா என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மொந்தேசக்ராத்தி என்னும் இடத்தில் 1218 ஆம் ஆண்டு, சிட்டா பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்து போனார். அதனால் இவர் தனது தாயின் அரவணைப்பிலே வளர்ந்து வந்தார்.

சிட்டாவிற்கு 12 வயது நடக்கும்போது இவர் பட்டிநெர்லி என்பவருடைய வீட்டில் வேலைக்காரப் பெண்ணாகச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த இடத்தில் சிட்டா மிகவும் பொறுப்புடனும் அதே நேரத்தில் கவனத்துடனும் வேலை பார்த்து வந்தார். தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்ட பக்தியையும் பொறுமையையும் சிட்டா தன்னுடைய பணியில் நடைமுறைப்படுத்தி எல்லாருக்கும் எடுத்துக்காட்டன ஒரு பெண்மணியாக வாழ்ந்து வந்தார். இவருடைய பணிகளைப் பார்த்த வீட்டுப் பொறுப்பாளருக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. அதே நேரத்தில் இவரோடு வேலை பார்த்து வந்த பணியாளர்களோ இவர்மீது எப்போதும் பகமையோடும் வெறுப்போடும் இருந்தார்கள்.

ஒருமுறை வீட்டு உரிமையாளர் கொடுத்த வேலையை சிட்டா சிறப்புடன் செய்ததால், அவர் அவரை முக்கியப் பொறுப்பில் அமர்த்தினார். இதைக் கண்டு சிட்டாவின் மீது வெறுப்போடு இருந்தவர்கள், எங்கே சீட்டா நம்மைப் பழிவாங்குவாளோ என்று பயந்துபோனார்கள். ஆனால் சிட்டா அப்படிச் செய்யவில்லை, தன்னை வெறுத்தவர்கள் மீது அன்புமழை பொழிந்தார். அவர்களைக் கருணையோடு நடத்தினார். இதனால் அவர்கள் சீட்டாவின்மீது நல்மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்கள். சீட்டா முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் அவர் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் நடந்துகொண்டார். இதனால் எல்லாருக்கும் அவரைப் பிடித்துப் போனது.

சிட்டா ஏழைகள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார். அது மட்டுமல்லாமல், அவர்களுக்காக எப்போதும் ஜெபித்து வந்தார். இப்படிப் பட்ட சிட்டா 1271 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பிறகு இவருடைய கல்லறைக்கு நிறையப் பேர் வந்து மன்றாடினார்கள். அவர்களுடைய மன்றாட்டுகள் அனைத்தும் கேட்கப் பட்டன. இதனால் இவருக்கு 1696 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.. 1933 ஆம் ஆண்டு இவர் 'வீட்டுவேலை பார்ப்பவர்களுடைய பாதுகாவலர்' என்று அறிவிக்கப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிட்டாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. தாழ்ச்சி

தூய சிட்டாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். இன்றைக்குப் பலர் தாங்கள் வந்த வழியை கடந்த கால வாழ்வை - மறப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் தூய சிட்டா மிகவும் தாழ்ச்சியோடும் பணிவோடும் பணிசெய்து வந்தார். தூய சிட்டாவைப் போன்று நாமும் தாழ்ச்சியோடு பணி செய்கின்றோமா? அல்லது தாழ்ச்சியோடு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருசமயம் சூழ்கொண்ட மேகமானது நீரை - மழையை - வார்த்தது. அப்போது அதிலிருந்த ஒரு மழைத்துளி மட்டும் பரந்த வானத்தையும் அகன்ற கடலையும் பார்த்து, "எவ்வளவு பெரிய வானம்! எவ்வளவு பெரிய கடல்! இவர்கள் முன்னால் நான் ஒரு துரும்புதானே! இருந்தாலும், இறைவன் என்னை ஒரு மழைத்துளியாய்ப் படைத்திருக்கின்றாரே, அதற்கு நன்றி" என்றது. மழைத் துளி இவ்வாறு பேசிக்கொண்டதைக் கேட்ட கடல் சிப்பி ஒன்று அதனை உயர்த்த நினைத்தது. எனவே அது தன் நாவைப் பிளந்து அதனை ஏற்றுக்கொண்டது. நாவில் போன மழைத்துளியும் பணிவு மாறாமல் பல வருடங்களாய் உள்ளேயே கிடந்தது. கனிந்த நாள் வந்தபோது அது விலையுயர்ந்த முத்தாக மாறி வெளியே வந்தது.

தாழ்ச்சியோடு வாழ்கின்ற ஒருவர் எப்படி உயர்த்தப்படுகின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. தூய சிட்டாவும் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான் அவரை ஒரு புனிதையாக இறைவன் உயர்த்தினார்.

ஆகவே, தூய சிட்டாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா