Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் வின்சென்ட் ஃபெர்ரர் ✠(St. Vincent Ferrer)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 05)
✠ புனிதர் வின்சென்ட் ஃபெர்ரர் ✠(St. Vincent Ferrer)

 *இறுதி நீதி வழங்கப்படுதலின் தேவ துாதர் :
(Angel of the Last Judgment)

 *பிறப்பு : ஜனவரி 23, 1350
வாலன்சியா, வாலன்சியா அரசு
(Valencia, Kingdom of Valencia)

 *இறப்பு : ஏப்ரல் 5, 1419 (வயது 69)
வேன்ஸ், பிரிட்டனி
(Vannes, Duchy of Brittany)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
அக்ளிபயன் திருச்சபை அல்லது சுதந்திர பிலிப்பைன்ஸ் திருச்சபை
(Aglipayan Church)

 *புனிதர் பட்டம் : ஜூன் 3, 1455
திருத்தந்தை மூன்றாம் காலிக்ஸ்டஸ்
(Pope Calixtus III)

பாதுகாவல் :
கட்டிடம் கட்டும் தொழிலாளர்,
குழாய் பணியாளர், பிரிட்டனின் மீனவர்,
ஸ்பெயினின் அநாதை இல்லங்கள்

 *நினைவுத் திருநாள் : ஏப்ரல் 5

புனிதர் வின்சென்ட் ஃபெரர், ஒரு வாலன்சியா (Valencian) நகர டொமினிகன் சபை (Dominican Friar) துறவியாவார். தலைசிறந்த தர்க்கவியலாளர் என்றும், மத போதகர் என்றும் பெயர் பெற்றவர். இவர், "இறுதி நீதி வழங்கப்படுதலின் தேவ துாதர்" (Angel of the Last Judgment) என்றும் இவர் பரவலாக அழைக்கப்பட்டார்.

ஓர் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தை ஒரு ஆங்கிலேயர் ஆவார். அவரது பெயர், "கில்லெம் ஃபெர்ரர்" (Guillem Ferrer) ஆகும். இவரது தாயார், "கான்ஸ்டான்கா மிக்கேல்" (Constana Miquel) ஒரு வாலன்சியா (Valencian) நகர பெண்மணி ஆவார்.

குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். இவரது பெற்றோர் இவரை, அன்னை மரியாளிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர்த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து, தான் பெறும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற்றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங்களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள்.

வின்சென்ட் எட்டு வயதில் பாரம்பரிய ஆய்வுக்கான படிப்பைத் தொடங்கினார். பதினான்கு வயதில் தத்துவயியலையும் (Philosophy), இறையியலையும் (Theology) கற்றார்.

தமது பதினெட்டாம் வயதில், இங்கிலாந்தில் "கருப்பு துறவிகள்" என பெயர் பெற்ற "டொமினிக்கன் சபையில்" மத போதகராக சேர்ந்து, தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். ஆனால் அவர் சாத்தானின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் வேதனை அடைந்து சபையைவிட்டு வெளியேறி தனியாக செயல்பட நினைத்தார். ஆனால் பெற்றோர் இவரை செபத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி துறவற மடத்திலேயே, அன்னை மரியாளின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு புதுமுக துறவு வரை (Novitiate) பயிற்சிகளை பெறவைத்தனர்.

அதன்பிறகு அவர் பார்சிலோனாவிற்கு (Barcelona) பிரபலமான தத்துவயியல் ஆசிரியராக பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு 1373ம் ஆண்டு, பார்சிலோனாவில் மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் மிகவும் பஞ்சத்தில் அடிப்பட்டு, மக்களால் ஒதுக்கப்பட்டார். ஆனாலும் அவர் இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச் சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.

பின்னர் 1376ம் ஆண்டு, மீண்டும் வின்சென்ட் தூலூஸ் (Toulouse) என்ற இடத்திற்கு ஓர் ஆண்டு கல்வியை தொடர அனுப்பப்பட்டார். அங்கு எபிரேய மொழியில் விவிலியத்தை ஆய்வுசெய்தார். அதன்பின்னர் 1379ம் ஆண்டு, பார்சிலோனாவில் குருவானார். பிறகு மீண்டும் 1385 1390ம் ஆண்டுகளில் வாலென்சியாவிற்கு வரவழைக்கப்பட்டு பேராலயத்தில் போதித்தார். அப்போது ஏறக்குறைய 30,000 யூதர்களை மனமாற்றினார். அங்கு இவரது போதனையை கண்ட சில கர்தினால்கள் இவரை பழிவாங்கும் நோக்குடன் இவர்மேல் சில பொய் குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அங்கு அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை "பீட்டர் டி லூனா/ பெனடிக்ட் XIII" (Peter De Luna/ Benedict XIII) என்ற "எதிர் திருத்தந்தை" (Antipope) விசாரித்தார். ஆனால் வின்சென்ட் கூறிய உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர் குருவாக இருக்கக்கூடாது என்றும், துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும் பேசப்பட்ட போது, வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன்வழியாக உண்மைகள் வெளிக் கொணரப்பட்டது. இதன்பிறகு இவர் தனது குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை இவ்வுலகில் வெளிப்படுத்தினார்.

21 ஆண்டுகள் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதி மூச்சு வரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, 1418ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 5ம் நாள் இறந்தார்.

இவரது வாழ்க்கை திருமறையை போதிக்கும் குருக்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மறையுரைகளில் எளிய நடைமுறையைப் பின்பற்றி, இயன்ற அளவிற்கு சான்றுகளை கொடுத்து, பாவம் செய்தவர்களை மனம்திருப்பி, பயனளிக்கும் வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வின் வழியாக நமக்கு விட்டுச்சென்றார்.

============================================================================

தூய வின்சென்ட் பெரெர் (ஏப்ரல் 05)

யோவான் கைது செய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாட்சிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்.

வாழ்க்கை வரலாறு

1350 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலன்சியாவில் வின்சென்ட் பெரர் பிறந்தார். இவருடைய பெற்றோர் கன்ஸ்டான்சியா, மிக்வெல் ஆவர். வின்சென்ட் பெரர் தன்னுடைய தொடக்கக் கல்வியை தனது சொந்த ஊரிலேயே கற்றார். அப்போதே அவர் இறையழைத்தலை உணர்ந்தார். எனவே அவர் அனைத்தையும் துறந்துவிட்டு 1367 ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்து மெய்யியலையும் இறையியலையும் கற்றுத் தேர்ந்து, குருவானவராகி, பின்னாளில் தான் கல்வி கற்ற அதே இடத்திலே பேராசிரியர் ஆனார்.

இதற்கிடையில் வின்சென்ட் பெரர் இருந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவுக்குப் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் இவர் மக்களுக்கு மத்தியில் இறங்கி, சிறப்பான முறையில் களப்பணி ஆற்றினார். மட்டுமல்லாமல், வின்சென்ட் பெரருக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனால் அவர் பஞ்சத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி, "இன்னும் ஒருசில நாட்களில் இங்கே ஒரு கப்பல் கோதுமையை ஏற்றுக்கொண்டு வரும் என்றார். அவர் சொன்னதுபோன்றே கப்பலொன்று கோதுமையை ஏற்றுக்கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்களெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் அந்தக் கப்பலிலிருந்த கோதுமையை அள்ளி, மக்களுக்கு அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுத்தார்.

இப்படி வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வின்சென்ட் பெரரை தானுஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர் இறையியலைக் கற்பித்து வந்தார். வின்சென்ட் பெரர் தன்னிடம் பாடம் கற்று வந்த மாணவர்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், "உனது படிப்பில் வெற்றி வேண்டுமா? அப்படியானால் ஜெபத்திற்குப் பிறகு படி என்பதுதான். இவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, மாணவர்கள் அப்படியே அதைப் பின்பற்றி வந்தார்கள். இவரிடமிருந்த திறமையைக் கண்டு யோலண்டா நாட்டு அரசி இவரை தன்னுடைய தன்னுடைய ஆலோசகராக்கிக் கொண்டார்.

இந்த சமயம் பார்த்து பீட்டர் தே லூனா என்பவர் அவிங்னோனில் இருந்துகொண்டு தன்னை 13 வது திருத்தந்தையாக அறிவித்து வின்சென்ட் பெரரும் அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். வின்சென்ட் பெரரோ அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் திருச்சபைக்கு என்றும் உண்மையாக இருந்து வந்தார். இவர் எப்போதும் இயேசுவிடமும் சாமிநாதரிடமும் பிரான்சிஸ் அசிசியாரிடமும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். ஒரு சமயம் இவர் செபித்துக் கொண்டிருந்தபோது மேலே சொன்ன மூவரும் அவருக்கு முன்பாகத் தோன்றி, "அன்பு மகனே வின்சென்ட் பெரர்! நீ கடினமான ஒறுத்தல் முயற்சிகள் இருந்து, மக்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி, மனம்திரும்பி வாழச் சொல் என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்கள். இவரும் அவ்வாறே செய்து மக்களை மனந்திருப்பினார். இப்படி ஆண்டவரின் வார்த்தையை எடுத்துச் சொல்லி, மக்களை மனம்திரும்பச் செய்த வின்சென்ட் பெரர் 1419 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1455 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வின்சென்ட் பெரரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மக்களை மனந்திருந்தி வாழ அழைத்தல்

தூய வின்சென்ட் பெரரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் மக்களை மனந்திருந்தி வாழ அழைத்ததுதான் நம் கண்முன்னால் வந்து போகின்றது. இவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இன்றைக்கு மக்கள் குற்ற உணர்வே இல்லாமல் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டச் சூழலில் நாம் அவர்களது குற்றத்தை உணரச் செய்து, அவர்களைப் புது வாழ்விற்கு அழைத்துச் சொல்வது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசத்தில் திருமுழுக்கு யோவான் தொடாங்கி, ஆண்டவர் இயேசு திருத்தூதர்கள் என அனைவருமே மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்கள். நாமும் அத்தகைய பணியைச் செய்கின்றபோது, இயேசுவின் உண்மையான சீடர்கள் என நம்மை உறுதியாகச் சொல்லலாம்.

ஆகவே, தூய வின்சென்ட் பெரரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று, மக்களை மனமாறச் செய்து, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா