Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் தெரசா ✠(St. Teresa of Los Andes)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 12)
✠ புனிதர் தெரசா ✠(St. Teresa of Los Andes)
 *மறைப் பணியாளர் : (Religious)

*பிறப்பு : ஜூலை 13, 1900
சாண்டியாகோ, சிலி
(Santiago, Chile)

*இறப்பு : ஏப்ரல் 12, 1920 (வயது 19)
லாஸ் ஆண்டிஸ், வால்பரைசோ, சிலி
(Los Andes, Valparaíso, Chile)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருத்தலம்
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 3, 1987
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*புனிதர் பட்டம் : மார்ச் 21, 1993
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*முக்கிய திருத்தலம் :
லாஸ் ஆண்டிஸ் நகர தெரேசாவின் திருத்தலம்
(Shrine of Saint Teresa of Los Andes)

*பாதுகாவல் :
நோய்களுக்கெதிராக, நோயாளிகள், இளைஞர்கள், சாண்டியாகோ (Santiago), லாஸ் ஆண்டிஸ் (Los Andes)

"லாஸ் ஆண்டிஸ் நகர இயேசுவின் புனிதர் தெரேசா" (Saint Teresa of Jesus of Los Andes) என்றும், "லாஸ் ஆண்டிஸ் நகர புனிதர் தெரேசா" (Saint Teresa of Los Andes) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், தென் அமெரிக்க நாடான (South American country) சிலி குடியரசைச் (Republic of Chile) சார்ந்த, ஒரு கார்மேல் சபையின் அருட் கன்னியும், மறைப் பணியாளருமாவார்.

"ஜூவானா என்ரிகுவெட்டா ஜோசெஃபினா டி லாஸ் சக்ரேடோஸ் கொரஸோன்ஸ் ஃபெர்னாண்டஸ் சோலார்" (Juana Enriqueta Josefina de los Sagrados Corazones Fernández Solar) எனும் இயற்பெயர் கொண்ட இப்புனிதர், சுருக்கமாக "ஜுவானா ஃபெர்னாண்டஸ் சோலார்" (Juana Fernández Solar) என்றும் அழைக்கப்பட்டார்.

"சிலி" (Chile) நாட்டின் தலைநகரான "சாண்டியாகோ" (Santiago) நகரின் உயர்குடி குடும்பமொன்றில் 1900ம் ஆண்டு பிறந்த ஜுவானாவின் தந்தை, "மிகுவேல் ஃபெர்னாண்டஸ் ஜரா" (Miguel Fernández Jara) ஆவார். இவரது தாயாரின் பெயர், "லூசியா சோலார் டி ஃபெர்னாண்டஸ்" (Lucia Solar de Fernández) ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் நான்காவது குழந்தை ஆவார்.

1907ம் ஆண்டு முதலே, "திருஇருதய சபையின்" (Sacred Heart order) ஃபிரெஞ்ச் அருட்சகோதரியர் (French nuns) நிர்வகித்துவந்த பள்ளியில் கல்வி கற்ற ஜுவானா, தமது பதினெட்டு வயதுவரை அங்கேயே கல்வி கற்றார். 1914ம் ஆண்டு, தமது பதினான்கு வயதிலேயே தம்மை கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்காக கார்மேல் சபையில் இணைய முடிவு செய்தார். 1915ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எட்டாம் தேதி, தமது முதல் உறுதிப்பாடுகளை ஏற்றுக்கொண்ட இவர், தொடர்ந்து அதனை வழக்கமாக ஏற்றுக்கொண்டார். இயற்கையாகவே பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஜுவானா, தமது இயற்கைக்கு மாறாக, பிடிவாதமும் கோப குணமும் கொண்டிருந்தார். சில சமயங்களில் தன்னிலை மறக்குமளவுக்கு மனநிலையும் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், சுவானாவின் கோப குணத்தால் கோபம் கொண்டிருந்த அவளுடைய சகோதரி "ரெபெக்கா" (Rebeca) ஜுவானாவை கன்னத்தில் அறைந்துவிட்டார். முகம் சிவந்துபோன ஜுவானா, தமது சகோதரியை வேகமாக அருகே இழுத்து, பின்னர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் குழம்பிப்போன ரெபெக்கா, அவரை துரத்திப்போய், "இங்கிருந்து நீ வெளியேறிவிடு. நீ எனக்கு தந்தது யூதாவின் முத்தமாகும் (kiss of Judas)" என்றார்.

தமது பதின்மூன்று வயதில், "கடுமையான குடல்வாலழற்சி" (Acute Appendicitis) நோயால் பாதிக்கப்பட்டார். சிறுவயது முதலே பாடல், நடனம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு டென்னில் மற்றும் "croquet" எனப்படும் புல் வெளியில் விளையாடப்படும் மரப்பந்தாட்டம் ஆகியவையும் பிடித்திருந்தது. நீச்சல் அறிந்திருந்த அவரால், பியானோ மற்றும் ஹார்மோனியம் பயன்படுத்த முடிந்தது. 1916ம் ஆண்டில் அவர் ஆன்மீக பயிற்சிக்கான ஒரு தியானத்தில் ஈடுபட்டார்.

1919ம் ஆண்டு, மே மாதம், ஏழாம் தேதி, அவர் "லாஸ் ஆண்டிஸ்" (Los Andes) நகரிலுள்ள கார்மேல் (Discalced Carmelites) சபையில் புகுமுக துறவியர் பயிற்சியில் (novitiate) இணைந்தார். அச்சமயத்தில், அவருக்கு "இயேசுவின் தெரேசா" (Teresa of Jesus) எனும் ஆன்மீக பெயர் அளிக்கப்பட்டது. அதே வருடம் அக்டோபர் மாதம், 14ம் தேதி, அவர் கார்மேல் சபையின் சீருடைகளைப் பெற்றுக்கொண்டார்.

தமது குறுகிய வாழ்க்கையின் முடிவை நோக்கி பயணித்த இப்புதிய கன்னியாஸ்திரி, தமது திருத்தூதுப் பணியை கடிதங்கள் எழுதுவதன் மூலம் தொடங்கினார். அதில் அவர் தமது ஆன்மீக வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால், விரைவிலேயே "டைஃபஸ்" (Typhus) என அழைக்கப்படும் தீவிர அக்கி போன்ற தீப்பொறி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். 1920ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இரண்டாம் நாளன்று, பெரிய வெள்ளியன்று (Good Friday), அந்நோய் அபாயகரமானதாகக் கண்டறியப்பட்டது மற்றும் அது மோசமாகிவிட்டது.

ஜுவானாவுக்கு தமது இருபது வயது பூர்த்தியடைய இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. அத்துடன், அவரது துறவற பயிற்சி நிறைவேறி தமது முழு பிரமான உறுதிப்பாடுகளை ஏற்க இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. 1920ம் ஆண்டு, உயிர்த்தெழுந்த திருவிழாவின் (Easter) மறுதினம், ஏப்ரல் மாதம், ஐந்தாம் நாளன்று, ஜுவானா தமது இறுதி அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார். ஏப்ரல் மாதம், 12ம் நாளன்று, மாலை 7:15 மணியளவில், ஜுவானா மரித்தார்.

ஜெபம்:
இயேசுவின் புனிதர் தெரசாவே! இளம் பிராயத்திலேயே உமது மனம் இறைவன்பால் ஈர்த்ததே! இம்மண்ணுலகில் மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டிருந்தாலும், மிக நேரிய வாழ்வை வாழ்ந்தவரே! எங்கள் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சினம் என்னும் குணத்தை அறவே அகற்றவும், குறிப்பாக நோயுற்ற சிறுவர் சிறுமியர்களின் நோய் முற்றிலும் நீங்கி அவர்கள் பரிபூரண சுகம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுமாறு உம்மை வேண்டுகிறோம்.
ஆமென்!

============================================================================
தூய தெரசா தே லோஸ் அன்டெஸ்

"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை" (மத் 22: 37- 39)

வாழ்க்கை வரலாறு

தெரசா தே லோஸ் அன்டெஸ் என்ற அழைக்கப்படும் ஜுவனிட்டா பெர்னாண்டஸ் சோலார் (Juanita Fernandes Solar) 1990 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 13 ஆம் நாள், சிலி நாட்டில் பிறந்தார். இவர் மிகவும் அழகான பதுமையாய் விளங்கினார். ஆனாலும் அவர் தன் அழகை ஆண்டவருக்கென்றே ஒப்படைத்து வாழ்ந்து வந்தார்.

அன்டெஸின் குடும்பம் பக்தியில் சிறந்த குடும்பமாய் இருந்தது, அதனால் அவரும் பக்தி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். அன்டெசுக்கு பத்தொன்பது வயது நடக்கும்போது அதாவது 1919 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 14 ஆம் நாள், அவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் தன்னுடைய பெற்றோரின் அனுமதியுடன் கார்மேல் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் குழந்தைத் தெரசாவின் வாழ்க்கையால் மிகவும் ஈர்க்கப்பட்டு தன்னுடைய பெயரை தெரசா தே லோஸ் அன்டெஸ் என மாற்றிக்கொண்டார். அது மட்டுமல்லாமல், அவரைப் போன்றே வாழ்க்கை நடத்தத் திருவுளமானார்.

கார்மேல் சபையில் இருந்த நாட்களில் எல்லாம் அன்டெஸ் உண்மையான அன்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார். உண்மையான அன்பு தன்னை மட்டும் அன்பு செய்வது கிடையாது, பிறரையும் அன்பு செய்வது என்பதை உணர்ந்தவராய் தன் சபையில் இருந்த சகோதரிகள் அனைவரையும் முழுமையாக அன்பு செய்தார். அதனால் எல்லாருடைய அன்பிற்கும் அவர் உரியவரானார். இப்படி வாழ்க்கை மிகவும் மிகழ்ச்சியாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், திடிரென்று ஒரு நாள் நிமோனியாக் காய்ச்சலால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். அப்போது அன்டெசுக்கு வயது வெறும் இருபது தான். அவருடைய இறப்பின்போது அவரது சபையில் இருந்த சகோதரிகளில் அழாதவர் எவரும் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தெரசா தே லோஸ் அன்டெசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறையன்பு - பிறரன்பு

தூய அன்டெசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவருடைய அன்பு மயமான வாழ்வு, அதாவது அவர் இறைவனையும் தம்மோடு வாழ்ந்த சபை சகோதரிகளையும் முழுமையாக அன்பு செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், இறைவனையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதரையும் அன்பு செய்கின்றோமா? அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனை அன்பு செய்யக்கூடிய அளவுக்கு சக மனிதர்களை அன்பு செய்யாதது, அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யாதது மிகவும் வேதனையான விஷயம். இத்தகைய சூழ்நிலையில் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதும், அந்த அன்பிற்கு ஈடாக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக செயற்கைக் காலோடு ஒருவர், காது கேளாத இருவர், வலிப்பு நோயுள்ள இன்னொருவர், கண் தெரியாத ஐவர் ஆகிய ஒன்பது பேரும் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள மவுண்ட் ரானியர் என்ற சிகரத்தைத் தொட்டுவிட்டு வெற்றிகரமாய் திரும்பிய போது, பத்திரிக்கையாளர்கள் சிலர் அவர்களிடம், "குறையுள்ள உங்களால் இது எப்படி சாத்தியமானது?" என்று கேட்டதற்கு, அவர்கள், "பயணப் பாதை முழுவதும் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவியால்தான்" என்றார்கள். இதைக்கேட்டு பத்திரிக்கையாளர்கள் மட்டும் கிடையாது, அங்கிருந்த பொதுமக்களும் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஆம், குறைபாடு உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு உதவிசெய்துகொள்ளும் போது, நல்ல நிலையில் இருக்கும் நாம் ஏன் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யாமல் இருக்கின்றோம் என்பது கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய அன்டெசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இறைவனையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் ஒவ்வொருவரையும் முழுமையாக அன்பு செய்வோம். அந்த அன்பிற்கு இலக்கணமாக அவர்களுக்கு உதவிகள் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா