Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் ✠(St. Stanislaus of Szczepanów
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 11)
✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் ✠(St. Stanislaus of Szczepanów)
 *ஆயர், மறைசாட்சி : (Bishop and Martyr)

*பிறப்பு : ஜூலை 26, 1030
செபனோவ், போலந்து
(Szcepanow, Poland)

*இறப்பு : ஏப்ரல் 11, 1079 (வயது 48)
க்ரகோவ், போலந்து
(Kraków, Poland)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*புனிதர் பட்டம் : செப்டம்பர் 17, 1253
திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட்
(Pope Innocent IV)

*முக்கிய திருத்தலங்கள் :
"வாவெல்" பேராலயம்
(Wawel Cathedral)

*பாதுகாவல் :
க்ரகோவ், போலந்து
(Kraków, Poland)

புனிதர் ஸ்தனிஸ்லாஸ், "க்ரகோவ்" (Bishop of Kraków) மறை மாவட்டத்தின் ஆயரும், போலந்து நாட்டு அரசன் "இரண்டாம் போலேஸ்லாவ்" (Polish king Bolesław II the Bold) என்பவனால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட மறைசாட்சியுமாவார்.

பாரம்பரியப்படி, புனிதர் ஸ்தனிஸ்லாஸ் போலந்து நாட்டில் செபனோவ்'விலுள்ள (Szcepanow), போச்சினா (Bochina) என்ற ஊரில் 1030ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் நாள், ஓர் பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தார். "வியெலிஸ்லா" (Wielisław) மற்றும் "போக்னா" (Bogna) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அந்நாளைய போலந்து நாட்டின் தலைநகராக இருந்த "க்னியெஸ்னோ" (Gniezno) எனும் நகரின் பேராலய பள்ளியில் கல்வி கற்றார்.

அதன்பின், போலந்து நாட்டிற்கு திரும்பிய அவர், குருத்துவம் பெற்றார். "க்ரகோவ்" மறை மாவட்டத்தின் ஆயர் "இரண்டாம் லம்பேர்ட் சுலாவ்" அவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார்.

பின்பு 1072ம் ஆண்டு க்ரகோவ் மறைமாவட்ட ஆயர் மரித்த பின் ஸ்தனிஸ்லாஸ் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டரின் (Pope Alexander II) வெளிப்படையான கட்டளை வந்ததன் பின்னரே அவர் ஆயராக பொறுப்பேற்றார். ஆயர் ஸ்தனிஸ்லாஸ் அந்நாளைய போலிஷ் குடியுரிமை கொண்ட ஆயர்களுள் ஒருவராவார். இவர் போலந்து நாட்டின் அரசியலிலும் செல்வாக்கு கொண்டவராகவும் அரசுக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் இருந்தார். திருத்தந்தையின் பிரதிநிதித்துவத்தை போலந்து நாட்டில் கொண்டுவருவது அவரது முக்கிய சாதனையாக இருந்தது.

1076ல் போலந்தின் அரசனாக "இரண்டாம் போலேஸ்லாவ்" (Polish king Bolesław II the Bold) முடிசூடினான். போலந்து நாட்டை கிறிஸ்தவமயமாக்குவதில் உதவி புரியும் பொருட்டு, "பெனடிக்டைன்" துறவு மடங்களை (Benedictine monasteries) நிறுவ ஆயர் அரசனை ஊக்குவித்தார்.

ஒரு நிலத்தின் மேலுள்ள சர்ச்சையே ஆயருக்கும் அரசனுக்கும் இடையே பிரச்சினைகளும் பூசல்களும் தொடங்க காரணமானது. ஒருமுறை, "விஸ்டுலா" (Vistula river) நதியின் படுக்கையருகே ஒரு துண்டு நிலத்தை மறை மாவட்டத்திற்காக "ப்யோட்ர்" (Piotr) என்பவரிடமிருந்து வாங்கியிருந்தார். ஆனால், "ப்யோட்ர்" (Piotr) இறந்ததும் அவரது குடும்பத்தினர் அந்த நிலத்திற்கு உரிமை கோரினர். அரசனும் அந்த குடும்பத்தினருக்கு சாதகமாக தீர்ப்பளித்தான். தமது தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்காக, ஆயர் இறந்துபோன "ப்யோட்ர்" (Piotr) என்பவரை உயிருடன் எழுப்பினார். உயிர்த்தெழுந்த "ப்யோட்ர்" (Piotr) உண்மையாகவே தாமும் தமது மூன்று மகன்களும் சர்ச்சைக்குரிய நிலத்தை ஆயருக்கு விற்று பணம் பெற்றதாக அரசவையில் ஒப்புக்கொண்டார். வேறு வழியற்ற அரசன், ஆயருக்கேதிரான வழக்கை ரத்து செய்தான். உயிர்த்தெழுந்த "ப்யோட்ர்" (Piotr) மீண்டும் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்த போது, அவரைக் கொல்ல தமது வீரர்களை அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், படையாட்கள் அவரைக் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசன் தாமே நேரடியாக வந்து ஆயரை வெட்டிக் கொன்றான். இப்பெரும் பாவத்தை செய்ததால் அரசன் அரசாட்சியிழந்து போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, தஞ்சமடைந்தான்.

ஆயர் ஸ்தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயராக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவிகள் பல செய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார்.

================================================================================
தூய ஸ்தனிஸ்லாஸ்

நிகழ்வு

தூய ஸ்தனிஸ்லாசின் பெற்றோர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தையே இல்லை. அவர்கள் எவ்வளவு வைத்தியம் பார்த்தும், எவ்வளவோ மருத்துவர்களைப் பார்த்தும் அதனால் ஒரு பயனும் இல்லாமல் போனது. இந்த நேரத்தில்தான் அவர்கள் கிரேக்கோ எனப்படும் தங்களுடைய ஊரில் இருந்த ஆலயத்தில் போய் இறைவனிடம் மன்றாடினார்கள். "இறைவா நீர் மட்டும் எங்களுக்கு ஒரு குழந்தையைத் தந்தால், நாங்கள் அக்குழந்தையை உமது பணிக்காக அர்ப்பணிப்போம்" என்றார்கள். அவர்கள் ஜெபித்துவிட்டுப் போன ஓர் ஆண்டிற்குள் ஆண் குழந்தையைப் பெற்றார்கள். அவர்தான் இன்று நாம் விழா கொண்டாடும் தூய ஸ்தனிஸ்லாஸ். தூய ஸ்தனிஸ்லாசின் பெற்றோர்கள், கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்தது போன்று, தங்களுடைய குழந்தையை குருத்துவப் பணிக்காக அர்ப்பணித்தார்கள்.

வாழ்க்கை வரலாறு

கி.பி. 1030 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் உள்ள கிரேக்கோ என்னும் இடத்தில் ஸ்தனிஸ்லாஸ் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள், கடவுளுக்காக அஞ்சி வாழ்ந்தவர்கள். இதனால் இவர்கள் தங்களுடைய மகனாகிய ஸ்தனிஸ்லாசை கடவுளுக்கு அர்ப்பணித்தார்கள். ஸ்தனிஸ்லாஸ் இளைஞனாக இருத்தபோது தன்னுடைய அன்புப் பெற்றோரை இழந்தார். அதன்பிறகு தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, குருத்துவ வாழ்விற்கு தன்னை முழுதாய் அர்ப்பணித்தார்.

ஸ்தனிஸ்லாஸ் குருவாக உயர்ந்தபிறகு தன்னுடைய மறைபோதனையால் பல்வேறு மக்களை மனம்திரும்பினார். அவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்து சேர்த்தார். இவர் எப்போதும் உண்மையை நேர்படப் பேசக்கூடியவராய் விளங்கினார். ஒருசமயம் போலந்து நாட்டு அரசன் இரண்டாம் போலேஸ்லாஸ் என்பவன் இன்னொரு பிரபுவின் மனைவியோடு வாழ்ந்து வந்தான். ஸ்தனிஸ்லாஸ் அவனுடைய தவற்றைச் சுட்டுக்காட்டி, ஒரு கிறிஸ்தவனாக இருந்துகொண்டு இப்படி வாழ்வது முறையல்ல என்று எடுத்துரைத்தார். புனிதரின் வார்த்தைகளைக் கேட்டு அரசன் மனம்மாறி, அந்தப் பெண்மணியை அவளுடைய கணவரோடு விட்டுவிட்டு வந்தான். ஆனாலும் அரசனால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் மீண்டும் அதே தவற்றில் விழுந்தான். இதனை அறிந்த ஸ்தனிஸ்லாஸ் அவனை திருச்சபையிலிருந்து வெளியேற்றினர் (Excommunication),

இதற்கிடையில் திருத்தந்தை இரண்டாம் அலெக்ஸாண்டர் இவரை கிரேக்கோ நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். இவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டபிறகு இறைப்பணியை இன்னும் சிறப்பாகச் செய்தார். இறைமக்களை விசுவாசத்தில் கட்டி எழுப்பினார், மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றார். இந்த நேரத்தில் அடிபட்ட பாம்பானான அரசன் தன்னை திருச்சபையிலிருந்து வெளியேற்றிய ஆயர் ஸ்தனிஸ்லாசை எப்படியாவது கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தான்.

ஒருநாள் அவன் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, ஆயரைக் கொன்றுபோடக் கட்டளையிட்டான். அப்போது ஆயர் கிரேக்கோவில் உள்ள பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தார். ஆயரைக் கொல்வதற்காக அங்கு வந்த படைவீரர்கள் அவரைச் சுற்றி பிரகாசமான ஒளி இருப்பதைக் கண்டு, அவரைக் கொல்கின்ற முடிவிலிருந்து பின்வாங்கினார்கள். பின்னர் அரசன் தானே வந்து, திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த ஆயர் ஸ்தனிஸ்லாசை வாளால் வெட்டிக் கொன்றுபோட்டான். ஆயர் தன்னுடைய இன்னுயிரை திருப்பலி பீடத்திலேயே கொடுத்தார். அவர் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி.1079. ஆயர் கொல்லப்பட்ட செய்தி அப்போது திருத்தந்தையாக இருந்த ஏழாம் கிரகோரியின் காதுகளை எட்டியது. அவர் அரசனை அரச பொறுப்பிலிருந்து தூக்கி எறிந்தார். அதன்பிறகு அவன் ஹங்கேரி நாட்டிற்கு தப்பிச் சென்று, அங்கே உள்ள ஓர் ஆசிர்வாதப்பர் சபையில் தன்னுடைய பாவங்களுக்கு கழுவாய் தேடிக்கொண்டான். திருத்தந்தை நான்காம் இன்னொசென்ட் என்பவர் 1253 ஆம் ஆண்டு இவரை புனிதராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஸ்தனிஸ்லாஸ் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. உண்மையை உரக்கச் சொல்லுதல்

இறைப்பணி செய்யும் ஒவ்வொருவரும், ஏன் இறையடியார்கள் ஒவ்வொருவரும் உண்மையை உரக்கச் சொல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் அதிகாரத்திற்கோ, படைபலத்திற்கோ அஞ்சி நடுங்கக்கூடாது. அப்படிப்பட்டவர்கள்தான் இறையடியார்களாக இருக்கமுடியும். இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய ஸ்தனிஸ்லாஸ் அத்தகைய ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகாட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் அரசன் என்றெல்லாம் பாராது அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினார். அதற்காக தன்னுடைய உயிரையும் கொடுத்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் உண்மையை உரக்கச் சொல்பவர்களாக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சமூக சேவகர் ஒருவர் தான் வாழ்ந்து வந்த ஊரில் இருந்த பணக்காரன் ஒருவனின் தவறைச் சுட்டிக்காட்டி, அவனுக்கு அரசாங்கத்திடமிருந்து தண்டனை பெற்றுத் தந்தார். இதனால் சினங்கொண்ட பணக்காரன் ஒருசில கூலியாட்களை வைத்து அந்த சமூக சேவகரைக் கொன்று போட்டான். இக்கொடுஞ்செயல் யாருக்கும் தெரியாது என்று மகிழ்ந்திருந்தான். ஆனால் செய்தி எப்படியோ சமூக சேவகரது நண்பனின் காதுகளை எட்டியது. அவன் சமூக சேவகரின் நண்பரை அணுகிச் சென்று, "உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், தயவுசெய்து நீ இதை யாரிடமும் சொல்லவேண்டாம்" என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு சமூக சேவகரின் நண்பன், "நான் பணத்திற்கோ, பதவிக்கோ அடிபணிந்து வாழக்கூடியவன் அல்ல, என்னுடைய மனசாட்சிக்குப் பயந்து வாழக்கூடியவன்" என்று சொல்லி அந்தப் பணக்காரனுக்கு சட்டத்தின் முன்பாக சரியான தண்டனை வாங்கிக்கொடுத்தார்.

பணத்திற்கோ பதவிக்கோ அடிபணியாமல், மனசாட்சிக்கு மட்டுமே அடிபணிந்து உண்மையை உரக்கச் சொன்ன அந்த சமூக சேவகர் மற்றும் அவருடைய நண்பரிடமிருந்த துணிச்சல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும் என்று தெரியாது. ஆனால் தூய ஸ்தனிஸ்லாஸ் உண்மையை உரக்கச் சொன்னவராக இருந்தார். நாமும் அவரைப் போன்று இருக்க முயல்வோம்.

2. ஏழைகள் மீது இரக்கம்

தூய ஸ்தனிஸ்லாஸ் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஏழைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் இரக்கமும் கொண்டு வாழ்ந்தார் என்று சொன்னால் அது சொன்னால் அது மிகையாகாது. தான் இளைஞனாக இருந்தபோது தன்னடைய உடமைகள் அனைத்தையும் எழைகளுக்குக் கொடுத்துவிட்டு குருவாக மாறினார். அவர் ஆயராக உயர்ந்தபின்னும் அவர் ஏழைகள் மீது கொண்டிருந்த அன்பு மாறவில்லை. அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் ஏழைகள் மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் இரக்கமும் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்ற நினைத்த செல்வந்தரான இளைஞனைப் பார்த்துக்கூறுவார், "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" (மத் 19:21). ஆம், நிறைவுள்ளவராக இருக்கவேண்டும் என்றால் நம்மோடு வாழக்கூடிய ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். ஏழைகளுக்குச் உதவிசெய்ய நாம் பணக்காரர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஏழைகளாகவும் இருக்கலாம்.

ஒருமுறை அன்னைத் தெரசா நீயூயார்க் நகரத்திற்குச் சென்றபோது, அங்கே ஏழ்மை கோலத்தில் இருந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னிடம் இருந்த நூற்று அம்பது டாலர் பணத்தை அன்னையிடம் கொடுத்து, "இதை ஏழைகளுக்கு உணவுகொடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னார். அவர் தொடர்ந்து சொன்னார். "அன்னையே! எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு புகைபிடிக்க முடியாமல் போனது. ஆகையால், நான் புகைபிடிக்க செலவழிக்கும் பணத்தை சேமித்து வைத்து உங்களிடம் தருகிறேன்" என்றார். இதைக் கேட்டு அன்னையானவன் மிகவும் மகிழ்ந்து போனாள். பின்னர் அம்மனிதர் கொடுத்த பணத்தை அன்னை பத்திரமாகக் கொண்டுவந்து தன்னுடைய இல்லத்தில் இருந்த அனாதைக் குழந்தைகளின் பசிபோக்க பயன்படுத்தினார்.

ஏழைகளுக்கு உதவி செய்ய அவர்கள்மீது இரக்கம்காட்ட நாம் பணக்காரர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, நம்மோடு வாழக்கூடிய ஏழைகள் மீது தூய ஸ்தனிஸ்லாஸ் போன்று அன்பும் அக்கறையும் இரக்கமும் காட்டுவோம், அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்வோம். எதிர்வரும் தடைகளை துணிவோடு எதிர்த்து நிற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா