tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் முதலாம் மார்ட்டின் ✠(St. Martin I)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 13)
✠ புனிதர் முதலாம் மார்ட்டின் ✠(St. Martin I)
 *
74வது திருத்தந்தை/ மறைசாட்சி : (74th Pope and Martyr)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

 *பிறப்பு : ஜூன் 21, 598
டோடி, உம்பிரியா, பைஸண்டைன் பேரரசு
(Todi, Umbria, Byzantine Empire)

 *இறப்பு : செப்டம்பர் 16, 655
செர்சொன், பைஸண்டைன் பேரரசு
(Cherson, Byzantine Empire)

திருத்தந்தை முதலாம் மார்ட்டின், கத்தோலிக்க திருச்சபையின் 74வது திருத்தந்தையாக 649ம் ஆண்டு, ஜூலை மாதம், 21ம் தேதிமுதல் 655ம் ஆண்டில் தனது இறப்புவரை ஆட்சி செய்தவர் ஆவார்.

இவர், "பைஸண்டைன் பேரரசின்" (Byzantine Empire) "ஊம்ப்ரியா" (Umbria) மாகாணத்திலுள்ள "டோடி" (Todi) எனும் நகரில் பிறந்தார். "திருத்தந்தை முதலாம் தியடோருக்குப்" (Pope Theodore I) பிறகு, 649ம் ஆண்டு, ஜூலை மாதம், ஐந்தாம் நாளன்று இவர் திருத்தந்தையானார். பைஸன்டைன் (Byzantine Papacy) திருத்தந்தை ஆட்சி காலத்தின்போது, அப்போதைய "காண்ஸ்டன்டினோபில்" (Constantinople) அரசரிடம் ஒப்புதல் பெறாமல் திருத்தந்தையானவர் இவர் ஒருவரே. இவரை "பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ்" (Emperor Constans II) நாடுகடத்தினார். இவர் "தென்கிரீமியா" (Southern Crimea) மாகாணத்திலுள்ள "செர்சொன்" (Cherson) எனுமிடத்தில் இறந்தார். இவரை மறைசாட்சியாகவும், புனிதராகவும் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் ஏற்கின்றன.

இவர் திருத்தந்தையான பின்பு, முதல் வேலையாக "மொனொதிலிடிசம்" (Monothelitism) என்னும் கொள்கையினைக் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, 649ம் ஆண்டு, "இலாத்தரன்" பொதுச் சங்கத்தினை (Lateran Council of 649) கூட்டினார். இலாத்தரன் யோவான் பேராலயத்தில் (Church of St. John Lateran) கூடிய இக்கூட்டத்தில் 105 ஆயர்கள் கலந்து கொண்டனர். இது ஐந்து அமர்வுகளில் 5 அக்டோபர் முதல் 31 அக்டோபர் 649ம் ஆண்டுவரை நடந்தது. இதில் 20 சட்டங்கள் வெளியிடப்பட்டன. அவை மொனொதிலிடிசம் கொள்கையினை திரிபுக்கொள்கை என அறிக்கையிட்டது.

மார்ட்டின் இச்சங்கத்தின் முடிவுகளை சுற்றுமடலாக வெளியிட்டார். இத்திரிபுக் கொள்கையினரான "பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ்" (Emperor Constans II), இவரை கைது செய்ய ஆணையிட்டார். 653ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் நாளன்று, கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் நாளன்று, காண்ஸ்டன்டினோபிளுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்து பைசாந்தியப் பேரரசின் செர்சனுக்கு (தற்போதைய கிரிமியா) நாடு கடத்தப்பட்ட்டார்.
655ம் ஆண்டு, மே மாதம், 15ம் நாளன்று, அங்கு வந்த அவர், அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று உயிர் நீத்தார்.

இவர் மறைசாட்சியாக மரித்த திருத்தந்தையர்களில் கடைசியானவர். காலங்காலமாக பின்பற்றி வரும் கத்தோலிக்க விசுவாசத்தை உயிரைக் கொடுத்து பாதுகாத்தவர்.

காண்ஸ்டன்டினோபிளுக்கு திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான பிறகு பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்தார். அந்நாட்களில், திருச்சபையில் ஒரு குழப்பம் உண்டானது.

"கிறிஸ்துவிடம் இரு தன்மையா - அல்லது ஒரு தன்மை உண்டா" - என்ற வாதம் எழுந்தது.
கிறிஸ்துவிடம் மனிதத் தன்மை மட்டுமே உண்டு என்ற தவறான கருத்துக்கு அடிமையாக இருந்த இரண்டாம் கான்ஸ்டான்ஸ் அரசன், இதையே அறிவிப்புச் செய்ய வேண்டுமென்று திருத்தந்தையைக் கேட்டுத் தொல்லை செய்தான். இதனால் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 649ல் ரோமில் விரைவாக லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கத்தின் முடிவில், கிறிஸ்துவில் இரண்டு தன்மைகள் உண்டு என்ற மிகத்தெளிவான முடிவை லாத்ரன் பொது சங்கம் அறிவித்தது.

இதன் விளைவாக, மார்ட்டின் கான்ஸ்டைன்ஸ் மன்னரால் 653ல் கைதியாக கெர்சோன் என்ற இடத்தில் சிறைப்படுத்தப்பட்டார். திருத்தந்தைக்குரிய அடையாளங்கள் அனைத்தையும் அரசன் வெளிப்படையாகவே பறித்துக் கொண்டான்.

திருத்தந்தை பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பட்டினியாக விடப்பட்டார்.
"எனக்கு அறிமுகமானவர்கள் கூட எனது இடுக்கண் வேளையில் என்னை மறந்துவிட்டனர். நான் இன்னும் உயிரோடிருக்கிறேனா, செத்து மடிந்துவிட்டேனா என்று பார்க்கக்கூட யாருமில்லை. இருப்பினும் எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்று விரும்பும் எல்லாம் வல்ல கடவுள், புனித பேதுருவின் வேண்டுதலால் அனைவரும் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க அருள்புரிவாராக" என்று திருத்தந்தை மார்ட்டின் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். இறுதியாக, கிரிமியாத் தீவில் உள்ள செர்சொனுக்கு நாடுகடத்தப்பட்ட இவர், 655ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று, இறந்தார்.

===============================================================================
தூய முதலாம் மார்டின்

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான் 12: 24)


வாழ்க்கை வரலாறு

மார்டின் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டோடி என்னும் நகரில் பிறந்தார். . இவர் வளரும்போதே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கியதால், திருத்தந்தை அவர்கள் இவரை கொன்ஸ்தாந்திநோபல் நகரின் தூதுவராக ஏற்படுத்தினார். ஒருசில ஆண்டுகளிலே இவர் திருத்தந்தையாகவும் உயர்ந்தார்.

திருத்தந்தையாக உயர்ந்த பின்பு மார்டின் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைக் கொள்கைகளிலிருந்தும் கட்டிக்காப்பாற்றி வந்தார்.. இவருடைய காலத்தில் மொனோதலிடிசம் எனப்படும் தப்பறை கொள்கை திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இத்தப்பறைக் கொள்கை இயேசுவுக்கு இறையியல்பு மனித இயல்பு என்ற இரு இயல்புகள் கிடையாது, ஒரு இயல்பு தான் இருக்கின்றது என்று சொல்லி வந்தது. இதனை திருத்தந்தை மார்டன் மிகக் கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாமல் லாத்தரன் சங்கத்தைக் கூட்டி, இத்தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த கொன்ஸ்தாந்திநோபலின் மன்னன் கொன்ஸ்டண்டீனை கடுமையாக எதிர்த்தார்.

இது அரசனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவன் வெகுண்டெழுந்தான். திருத்தந்தை மார்டினைப் பிடிக்க ஒலிம்பியம்ஸ் என்பவனை அனுப்பி வைத்தான். அவனால் திருத்தந்தையைப் பிடிக்க முடியவில்லை. காரணம் திருத்தந்தையிடமிருந்த ஏதோ ஓர் ஆற்றல், அவரை அவன் நெருங்க விடாமல் செய்தது. எனவே, அவன் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு ஓடிப்போனான். ஒலிம்பியசுக்குப் பிறகு மன்னன் தியோடர் என்பவனை அனுப்பி வைத்து, திருத்தந்தையை பிடிக்கச் செய்தான். அவன் உரோமை நகருக்கு வந்து திருத்தந்தையைப் பிடித்துக் கொண்டுபோய் கொன்ஸ்தாந்திநோபல் நகரில் போய் இறக்கினான். ஏற்கனவே உடல் வலுவற்று இருந்த திருத்தந்தை, கப்பல் பயணத்தின்போது சரியாக உணவு கொடுக்கப்படாததால் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

கொன்ஸ்தாந்திநோபல் நகருக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தந்தைக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். ஆனால், அங்கிருந்த மக்களோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனை சற்றும் எதிர்பார்த்திராத மன்னன் அவரை கெர்சோன் என்ற பகுதிக்கு நாடு கடத்தினான். அங்கு அவர் ஒன்றரை ஆண்டுகள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து போய், 655 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பின்பு, இவருடைய உடல் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில் நிறையப் புதுமைகள் நடந்தன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

- துணிவோடு இருத்தல்

தூய மார்டினின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரிடம் இருந்த துணிச்சல், யாருக்கும் அஞ்சாத மன உறுதிதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்றது துணிச்சலோடு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அவருக்குச் சான்று பகற்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கல்லூரி ஒன்றில் 'சுய முன்னேற்ற வகுப்பு' நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரிடம், மாணவன், "துணிச்சல் என்றால் என்ன?" என்று கேட்டான். அதற்கு ஆசிரியர் அவனிடம், "மனத்தளர்ச்சி கொள்ளாமல், தோல்விகளையும் அவமானங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்வதே மகத்தான துணிச்சல்" என்றார். இதை கேட்டு அந்த மாணவன், வாழ்வில் வரக்கூடிய தோல்விகளையும் கஷ்டங்களையும் துணிவோடு தாங்கிக்கொள்ளத் தயாரானான். ஆமாம், நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற கஷ்டங்கள், அவமானங்கள் போன்றவற்றை எல்லாம் உறுதியான மனநிலையோடு தாங்கிக் கொண்டு, தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி நடப்பதுதான் உண்மையான துணிச்சல் ஆகும்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய பணி வாழ்வில் பல்வேறு எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தார். திருமுழுக்கு யோவானும் அப்படித்தான். இவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்வில் எதிர்ப்புகளும் அவமானங்களும் வந்துவிட்டதே என்று தங்களுடைய முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. எப்போதும் அவர்கள் முன்னோக்கித்தான் சென்றார்கள். அதனால்தான் இன்றைக்கும் நம்மால் நினைவுகூரப் படுபடுகின்றார்கள்.

ஆகவே, தூய மார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, அஞ்சா நெஞ்சத்தோடும் துணிச்சலோடும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா