Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மரிய க்ரெசென்ஷியா ஹொஸ் ✠(St. Maria Crescentia Hoess)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 06)
✠ புனிதர் மரிய க்ரெசென்ஷியா ஹொஸ் ✠(St. Maria Crescentia Hoess)

* புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபை அருட்சகோதரி :
(Nun of the Third Order Regular of St. Francis)

*பிறப்பு : அக்டோபர் 20, 1682
கௌஃபெரேன், பவரியா
(Kaufbeuren, Bavaria)

*இறப்பு : ஏப்ரல் 5, 1744
கௌஃபெரேன்
(Kaufbeuren)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : 1900
திருத்தந்தை 13ம் லியோ
(Pope Leo XIII)

*புனிதர் பட்டம் : நவம்பர் 25, 2001
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

*முக்கிய திருத்தலம் :
க்ரெசென்ஷியாக்லொஸ்ட்டர், கௌஃபெரேன், ஜெர்மனி
(Crescentiakloster, Kaufbeuren, Germany)

*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 6

"அன்னா ஹொஸ்" (Anna Höss) என்ற இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய க்ரெசென்ஷியா ஹொஸ், ஒரு புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபை அருட்சகோதரி (Nun of the Third Order Regular of St. Francis) ஆவார்.

அன்னா ஹொஸ், ஜெர்மனியின் பவரியா நகரில் ஏழை நெசவாளர் தம்பதியினரின் எட்டு குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்தவர். இவரது தந்தையாரின் பெயர், "மத்தியாஸ் ஹொஸ்" (Matthias Höss) ஆகும். தாயாரின் பெயர், "லூசியா ஹோர்மன்" (Lucia Hoermann) ஆகும். அன்னா ஹொஸ், ஏழை நெசவுத் தொழிலாளியான தமது தந்தையைப் போலவே, தாமும் நெசவு பணியையே செய்தார். ஆனால் இவரது இலட்சியம் உள்ளூரிலுள்ள ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையின் பள்ளியில் சேருவதாக இருந்தது.

தமது சிறு வயதில் தாம் விளையாடும் நேரத்தை உள்ளூர் பங்கு ஆலயத்தில் செபம் செய்வதில் கழித்தார். தம்மைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவினார். இவரது தாழ்ச்சி நிலை கண்ட பங்குத் தந்தை இவரது ஏழு வயதிலேயே புதுநன்மை கொடுத்தார். சிறு வயதிலேயே முதல் நற்கருணை கொடுப்பது அக்காலத்தில் வழக்கத்தில் இல்லாதிருந்தது.

வளர்ந்த அவர், உள்ளூரிலுள்ள ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையின் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். அந்த பள்ளியும் ஏழ்மை நிலையில் இருந்தது. அவரிடம் பணம் ஏதும் இல்லாததால் அந்த பள்ளியின் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண் துறவி (Superior) அவரை பள்ளியில் அனுமதிக்க மறுத்துவிட்டார். அவரது நிலை கண்ட எதிர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த நகர மேயர், க்ரெசென்ஷியா'வை பள்ளியில் சேர வலியுறுத்தினார்.

க்ரெசென்ஷியா'வை சேர்த்துக்கொள்ள வற்புருத்தப்பட்டதாக அந்த பள்ளியின் பெண் துறவியரிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பள்ளியில் க்ரெசென்ஷியா'வின் புதிய வாழ்க்கை பரிதாபகரமானதாக அமைந்தது. அங்கே அவர் ஒரு சுமையாக கருதப்பட்டார். கேவலமான பணிகளைத் தவிர வேறு ஏதும் அவருக்கு தரப்படவில்லை. அவரது மகிழ்ச்சியான உற்சாகமான இயல்புகூட வெறும் மாய்மாலம் அல்லது பாசாங்கு என்று தவறாக கருதப்பட்டது.

நான்கு வருடங்களின் பின்னர் புதிய தலைமை துறவி (Superior) தேர்வு செய்யப்பட்டார். அவர் க்ரெசென்ஷியாவின் நல்லொழுக்கங்களை புரிந்துகொண்டார். க்ரெசென்ஷியா, புதுமுக பயிற்சித் துறவியரின் தலைவராக (mistress of novices) நியமிக்கப்பட்டார். அவர் தமது தாழ்ச்சியாலும் அன்பினாலும் அங்குள்ள அருட்சகோதரியரின் நன்மதிப்பை பெற்றார். பின்னர், தலைமை துறவியின் (Superior) மரணத்தின் பின்னர், அவர் போட்டியின்றி அப்பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையின் கீழே, அப்பள்ளியின் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆன்மீகப் பணிகளில் அவரது புகழ் பரவியது. விரைவிலேயே அரசவையின் இளவரசர்களும் இளவரசிகளும் மற்றும் ஆயர்களும் கர்தினால்களும்கூட அவரிடம் ஆலோசனை பெற்றனர். இருப்பினும், இன்றளவும் அவர் புனிதர் ஃபிரான்ஸிசின் தாழ்ச்சியுள்ள உண்மையான மகளாகக் கருதப்படுகின்றார்.

அவருக்கு உடல் வேதனைகளும் துனபங்களும் எப்போதுமே இருந்தன. தலைவலி, பல்வலி ஆகியவற்றால் முதலில் கஷ்டப்பட்டார். பின்னர் அவரால் நடக்க இயலவில்லை. அவரது கைகளும் கால்களும் முடமாகத் தொடங்கின. அவர் புனிதர் ஃபிரான்சிசை நோக்கி அழத் தொடங்கினார். என்னுடைய இவ்வேதனைகளை தாங்கும் வல்லமையை தந்ததற்காக இறைவனைப் புகழுங்கள் என்றார்.

நோய்களின் வேதனைகளிலும் அவர் சமாதானத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப்பட்டிருந்தார். 1744ம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறன்று அவர் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா