Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஒன்பதாம் லியோ ✠(St. Leo IX)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 19)
✠ புனிதர் ஒன்பதாம் லியோ ✠(St. Leo IX)
 *152ம் திருத்தந்தை : (152nd Pope)

*பிறப்பு : ஜூன் 21, 1002
எகிஷெய்ம், அல்சாஸ், ஸ்வாபியா, புனித ரோமப் பேரரசு
(Eguisheim, Alsace, Duchy of Swabia, Holy Roman Empire)

*இறப்பு : ஏப்ரல் 19, 1054 (வயது 51)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள், புனித ரோமப் பேரரசு
(Rome, Papal States, Holy Roman Empire)

*புனிதர் பட்டம் : கி.பி. 1082
திருத்தந்தை ஏழாம் கிரகோரி
(Pope Gregory VII)

திருத்தந்தை ஒன்பதாம் லியோ, ஜெர்மன் பிரபு குடும்பத்தில் பிறந்தவர். இவர் பெற்றோர் இவருக்கு "புரூனோ" (Bruno of Egisheim-Dagsburg) என்று பெயர் சூட்டினர். புரூனோ, ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள "டெளள்" (Toul) என்ற ஊரில் கல்வி பயின்றார்.

இவர் படிக்கும்போதிலிருந்தே இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். புரூனோ சிறு வயதிலிருந்தே பூசை உதவி செய்வதிலும், பாடல் குழுவோடு இணைந்து திருப்பலியில் பாடல் பாடுவதிலும், ஆடம்பர திருப்பலியில் பங்கெடுப்பதிலும், அதிக ஆர்வம் காட்டிவந்தார். இறைவன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தினமும் திருப்பலியில் பங்கெடுத்த புரூனோ, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டு குருவானார்.

புரூனோ குருவான பிறகு, ஜெர்மனியிலிருந்த அரசர் இரண்டாம் கோன்ராட் (Konrad II) அவர்களின் குடும்பத்திற்கு ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் திருச்சபையில் இருந்த அரசியலைப் பற்றியும் படித்தார். அதன்பிறகு ஃபிரான்சு நாட்டிற்கு இறையியல் படிப்பதற்காக அனுப்பப்பட்டார்.

அப்போது இவர் அப்போஸ்தலர் சீமோனின் வாழ்க்கை வரலாற்றை படித்து, அவரால் ஈர்க்கப்பட்டார். பின்னர் இறையியல் படிப்பை முடித்தபிறகு இத்தாலி நாட்டில் இருந்த அரசர் குடும்பத்திற்கு மீண்டும் ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் இத்தாலி நாட்டின் ஆயரின் உதவியாளராக பணியாற்றினார். அப்போது இத்தாலி மறைமாநிலத்திலிருந்த ஏழை எளியவர்க்கு ஆயரின் உதவியுடன் பலவிதமான உதவிகளை செய்தார்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அப்போது திருச்சபையில் இருந்த கத்தோலிக்க ஆலயங்களின் வழியாகவும், துறவற இல்லங்களின் வழியாகவும், நாள்தோறும் ஏழைகளுக்கு உணவு கொடுத்தும், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் வந்தார். இவரின் தாராள குணத்தை அறிந்த ஜெர்மனி மற்றும் பிரான்சிலுள்ள ஆயர்களும் புரூனோவுக்கு ஏழைகளை பராமரிக்க தேவையான உதவிகளை செய்தனர். பின்னர் இவர் ஃபிரான்சிலுள்ள லையன் (Lyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புரூனோ ஆயராக இருந்தபோது திருத்தந்தை "டமாசஸ்" (Damasus) திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
23 நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்தவர், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டு இறந்துப்போனார். அதனால் அவரைப் பின்பற்றி திருச்சபையை வழிநடத்த புரூனோ அவர்களை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர்.

1049ம் ஆண்டு புரூனோ "ஒன்பதாம் லியோ" என்று பெயர் மாற்றம் பெற்று திருத்தந்தையானார். திருத்தந்தை ஒன்பதாம் லியோ திருச்சபையின் மோசமான நிலையைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் திருத்தந்தையான சிறிது நாட்களிலேயே ஆயர்களின் மாநாட்டை கூட்டினார். இம்மாநாட்டிற்கு பொதுமக்களையும் வரவழைத்தார். இதில் பங்குபெற்ற ஒவ்வொருவருமே திருச்சபையில் இருக்கும் குறை, நிறைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள வலியுறுத்தப்பட்டது. அம்மாநாட்டின் இறுதியில் தனிப்பட்ட முறையில் ஐரோப்பாவிலிருந்த ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களையும், அரசர்களையும், மக்களையும் திருத்தந்தை சந்தித்து உரையாடினார். ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, அருமையான மறையுரை வழங்கினார். புதிய ஆலயங்களும், துறவற மடங்களும் கட்ட அடிக்கல் நாட்டினார்.

ஐரோப்பிய நாடுகளைப் பார்வையிட்டபோது, அரசர்களால் மக்கள் படும் வேதனையை, திருத்தந்தை கண்கூடாக பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் மக்களின் பசியையும், அவர்களின் அவல நிலையையும் போக்க தன் சொந்த வீட்டு பணத்தை எடுத்து உதவிசெய்தார். மக்களை வழிநடத்த நல்ல குருக்களை உருவாக்கினார். இதனால் ஐரோப்பிய அரசர்கள் மிகவும் ஆத்திரமடைந்து திருத்தந்தை ஒன்பதாம் லியோவை பிடித்து சிறையில் அடைத்தார்கள். ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் கழித்து சிறையிலிருந்து விடுவித்தனர். ஆனால் இவர் மேல் தொடர்ந்து பல பொய்க்குற்றங்கள் சாட்டப்பட்டன.

பின்னர் 1054ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாள், ரோம் சென்று திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார். 52 வயதான திருத்தந்தை ஒன்பதாம் லியோ வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே திருத்தந்தையாக பதவி வகித்தார். ஆனால் இவ்வைந்து ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபைக்கு இவர் ஆற்றிய பணி எண்ணிலடங்காது.

பின்னர் 1054ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 19ம் நாள், ரோமில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் இறந்தார்.

இவரது உடல், பேதுரு பேராலயத்திலுள்ள, திருத்தந்தையர்களை அடக்கம் செய்துள்ள கல்லறையில், புனித யோசேப்பு பலிபீடத்தின் வலதுபுறத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் இறந்தாலும் மக்களின் மனங்களில் புனிதராகவே வணங்கப்பட்டு வருகின்றார்.

========================================================================================


தூய ஒன்பதாம் சிங்கராயர் (ஏப்ரல் 19)

ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: "இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்" (எரே 1: 9 -10)

வாழ்க்கை வரலாறு

ஒன்பதாம் சிங்கராயர் என்ற அழைக்கப்படும் புருனோ 1002 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். புருனோக்கு ஐந்து வயது நடக்கும்போது, டோல் நகரில் ஆயராக இருந்த பெத்தோல்டு என்பவரின் கண்காணிப்பில் விடப்பாட்டார். அவர் புருனோவை பக்தி நெறியில் வளர்த்து வந்தார்.

ஒருசமயம் புருனோ ஆயர் பெத்தோல்டுவிடமிருந்து விடைபெற்று வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது கொடிய விலங்குகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கின. அதனால் அவருக்கு உயிர்பிழைப்போமோ என்று அச்சம் வந்துவிட்டது. உடனே அவர் இறைவனை நோக்கி, தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். அப்போது தூய ஆசிர்வாதப்பர் அவருக்கு முன்பாகத் தோன்றி, தன்னுடைய கையில் இருந்த சிலுவையினால் அவருடைய காயங்களில் வைத்தார். மறுகணம் அவருடைய காயங்களை அனைத்தும் மறைந்தன. அடுத்த சில நொடிகளிலே தூய ஆசிர்வாதப்பரும் அங்கிருந்து மறைந்தார்.

இதைத் தொடர்ந்து புருனோ தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு நன்றியாக அன்றே இறைப்பணி செய்யப் புறப்பட்டார். குருத்துவப் படிப்புப் படித்து, குருவாகிய மாறிய புருனோ 1025 ஆம் ஆண்டு டோல் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1049 ஆம் ஆண்டு அவர் உரோமைக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் இவரை திருத்தந்தையாக உயர்த்தினார்கள். அதனை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்ட அவர், ஒன்பதாம் சிங்கராயர் என்ற பெயரைத் தாங்கி இறைப்பணியை மிகத் துணிச்சலோடு செய்யத் தொடங்கினார்.

இவர் திருத்தந்தையாக இருந்தது வெறும் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சபையில் இவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். திருச்சபைப் பொறுப்புகள் பணத்திற்காக ஏலம் விடப்பட்டன. இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார். சிமினி எனப்படும் இத்தகைய வழக்கத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக பொராங்கர் என்பவர் நற்கருணையில் இயேசு இருக்கின்றா? என்ற கேள்வியைக் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார். அவரையும் திருத்தந்தை அவர்கள் தன்னுடைய நுட்பமான நடவடிக்கையால் பேசவிடாமலே செய்தார்.

ஒரு சமயம் நார்மன் வகுப்பைப் சார்ந்தோர் உரோமை நகரைச் சூழ்ந்துகொண்டு சூறையாட நினைத்தனர். இதனைக் கடுமையாக எதிர்த்த திருத்தந்தை அவர்களை, அவர் திருத்தந்தை என்றுகூடப் பாராமல் கைதுசெய்து ஒன்பது மாதங்கள் கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள். இதனால் அவருடைய உடல் நலம் குன்றியது. ஏற்கனவே பலவிதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்த திருத்தந்தைக்கு இந்த சித்தரவதை அவருடைய உடல் நலனை மேலும் குன்றச் செய்தது. இதனால் அவர் 1054 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1087 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஒன்பதாம் சிங்கராயரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அநீதியை எதிர்த்து உண்மையை நிலை நாட்டுவோம்.

தூய ஒன்பதாம் சிங்கராயரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய சிந்தனைக்கு தோன்றுவதெல்லாம் அவர் அநீதியை எதிர்த்து, உண்மையை நிலைநாட்டியதுதான். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம் உண்மையை இந்த உலகத்தில் நிலைநாட்ட முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கே ஒரு சிறு நிகழ்வு.

பதினைந்தாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டில் மெக்டொனால்ட் என்ற பெயர்கொண்ட கொள்ளைக் கூட்டத் தலைவன், தன் குழுவினரோடு ஓர் ஏழைப் பெண்ணின் பசுமாடுகளைத் திருடிப் போய்விட்டான். இதை அறிந்த அந்த ஏழைப் பெண்மணி, "நான் அரசனிடம் புகார் தரும்வரை என்னுடைய கால்களில் செருப்பணியப் போவதிலை" என்று சபதமிட்டாள். இதனால் கோபமடைந்த மெக்டோனால்ட், அவள் கால்களில் குதிரைக் குளம்புகளை வைத்து அடித்துவிட்டான். காயம் ஆறும்வரை காத்திருந்த பெண் அரசவையில் முறையிட்டாள். விஷயம் அறிந்த அரசன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடித்தான். மட்டுமல்லாமல் அவர்களுடைய கால்களில் குதிரை லாடமிட்டு மூன்று நாட்கள் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தான். பின்னர் மேக்டோனால்டின் தலையைத் துண்டிக்கவும், மற்றவர்களைத் தூக்கில் போடவும் செய்தான். இதனால் நாட்டில் திருட்டுத் தொழிலே நின்றுபோனது.

திருட்டை ஒழித்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்த பிரான்சு நாட்டு அரசன் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழலில், அநீதியை ஒழித்து, உண்மையை நிலைநாட்டுகின்ற போதுதான் இயேசுவின் சீடர்களாக முடியும்.

ஆகவே, தூய ஒன்பதாம் சிங்கராயரைப் போன்று உண்மையின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா