Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் முதலாம் ஜூலியஸ் ✠(St. Julius I)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 12)
✠ புனிதர் முதலாம் ஜூலியஸ் ✠(St. Julius I)
 *35ம் திருத்தந்தை : (35th Pope)

 *பிறப்பு : தெரியவில்லை
ரோம் நகரம், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

 *இறப்பு : ஏப்ரல் 12, 352
ரோம் நகரம், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் (Pope Julius I) கத்தோலிக்க திருச்சபையில் ரோம் நகர ஆயராகவும், திருத்தந்தையாகவும் 337ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 6ம் தேதி முதல் 352ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 12ம் நாள்வரை இறை பணி செய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 35ம் திருத்தந்தை ஆவார். ஆரியன் கிழக்கு ஆயர்கள் (Arian Eastern Bishops) மீது பாப்பரசருக்குள்ள அதிகாரத்தை உறுதிப்படுத்துவதில் இவர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது. ஆண்டவர் இயேசுவின் பிறந்த நாளை டிசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவு செய்தவரும் இவரே என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

ரோம் நகரில் பிறந்த இவர், திருத்தந்தை மாற்கு (Pope Mark) இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிறிஸ்து பற்றிய கொள்கையை விளக்குதல் :
இவரது பதவிக் காலத்தின்போது, இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மை பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325ல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (Arius) என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள் தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இவ்வாறு அடிப்படைக் கொள்கை பற்றி ஐயம் எழுப்பப்பட்டதால், திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

ஆரியுசின் ஆதரவாளர்கள் மேற்கு ரோம மன்னராக இருந்த காண்ஸ்டன்ஸ் என்பவருக்கும் திருத்தந்தை முதலாம் ஜூலியசுக்கும் தங்கள் நிலையை விளக்கி உரைக்க தூதுவர்களை அரசின் கீழைப்பகுதியாக இருந்த காண்ஸ்டாண்டிநோபுளில் இருந்து அனுப்பி வைத்தனர். ஆரியுசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் அத்தனாசியுசு ஏற்கெனவே நாடு கடத்தப்பட்டிருந்தார். அவரை நாடுகடத்தியது சரியே என்று ஆரியுசின் ஆதரவாளர்கள் வாதாடினர்.

திருத்தந்தை முதலாம் ஜூலியஸ், அத்தனாசியுசுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, இரு தரப்பினரும் ஒன்றுகூடிப் பேச வேண்டும் என்று முடிவு செய்து ஒரு சங்கத்தைக் கூட்ட முயன்றார். ஆனால், ஆரியுசின் ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் பங்கேற்க மறுத்து விட்டனர்.

இரண்டாம் முறையாக நாடு கடத்தப்பட்ட அத்தனாசியுசு உரோமைக்கு வந்தார். அவரே காண்ஸ்டாண்டிநோபுளின் முறையான ஆயர் என்று திருத்தந்தை ஜூலியஸ் தாம் கூட்டிய சங்கத்துக்குத் தலைமை தாங்கி அறிவித்தார். இந்த முடிவைக் கீழைச் சபையான காண்ஸ்டாண்டிநோபுள் பகுதியைச் சார்ந்த ஆயர்களுக்கு அறிவித்து, முதலாம் ஜூலியஸ் கடிதம் அனுப்பினார். அதில், திருச்சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தம்மோடு தொடர்பு கொள்ளத் தவறியதற்காக ஜூலியஸ் அந்த ஆயர்களைக் கடிந்து கொண்டார். (Epistle of Julius to Antioch, c. xxii).

அதன் பின் சார்திக்கா நகரில் ஒரு சங்கம் கூட முதலாம் ஜூலியஸ் ஏற்பாடு செய்தார். அச்சங்கமும் ஆரியுஸ் போதித்த கொள்கையைக் கண்டித்தது. முதலாம் ஜூலியஸ் எடுத்த முடிவுகள் சரியே என்று உறுதிப்படுத்தியது.

முதலாம் ஜூலியஸ் கட்டிய ஆலயங்கள் :
திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் உரோமையில் இரு பேராலயங்களைக் கட்டினார்.
ஒன்று, டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா கோவில் (Santa Maria in Trastevere).
மற்றொன்று, பன்னிரு திருத்தூதர்கள் கோவில்.

இறப்பும் திருவிழாவும் :
முதலாம் ஜூலியஸ் 352ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 12ம் நாள் உயிர் துறந்தார். அவருக்குப் பின் பதவி ஏற்றவர் திருத்தந்தை லிபேரியஸ் (Pope Liberius) ஆவார்.

கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார். அவருடைய நினைவுத் திருவிழா, அவர் இறந்த நாளாகிய ஏப்ரல் 12ம் நாள் கொண்டாடப்படுகிறது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா