✠ புனிதர் ஜூலி பில்லியர்ட் ✠(St. Julie
Billiart) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஏப்ரல்/
April 08) |
✠ புனிதர் ஜூலி பில்லியர்ட் ✠(St. Julie
Billiart)
*சபை நிறுவனர் :(Founder of Congregation)
*பிறப்பு : ஜூலை 12, 1751
குவில்லி, பிகார்டி, ஃபிரான்ஸ்
(Cuvilly, Picardy, France)
*இறப்பு : ஏப்ரல் 8, 1816 (வயது 64)
நாமுர், பெல்ஜியம்
(Namur, Belgium)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*அருளாளர் பட்டம் : மே 13, 1906
திருத்தந்தை 10ம் பயஸ்
(Pope Pius X)
*புனிதர் பட்டம் : ஜூன் 22, 1969
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 8
*பாதுகாவல் : ஏழ்மை மற்றும் நோய்களுக்கெதிராக
புனிதர் ஜூலி பில்லியர்ட் ஒரு ஃபிரெஞ்ச் மத தலைவரும்,
"நோட்ரே டேம்" எனும் ஸ்தல கத்தோலிக்க சகோதரிகளின் சபையின்
(Congregation of the Sisters of Notre Dame de Namur)
நிறுவனரும் ஆவார். இவரே அச்சபையின் முதலாவது தலைவரும்
(Superior General) ஆவார்.
1751ம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் தமது பெற்றோரின் ஏழு
குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்த ஜூலியின் தந்தை
"ஜீன்-ஃபிரான்கொய்ஸ் பில்லியர்ட்" (Jean-Franois Billiart)
ஆவார். இவரது தாயார், "மேரி-லூயிஸ்-அன்டோய்நெட்"
(Marie-Louise-Antoinette) ஆவர்.
வசதி வாய்ப்புள்ள விவசாய குடும்பத்தில் பிறந்த இவர்
பிறந்ததிலிருந்தே மறைக்கல்வியை நன்கு கற்று தேர்ந்து, கனிவான
இதயத்துடனும், திறந்த மனதுடனும் சுற்றுப்புறமுள்ளவர்களுக்கும்
மறைக்கல்வியை கற்பிப்பதில் ஆர்வமாயிருந்தார்.
நோய்வாய்ப்பட்டோரையும் ஏழைகளையும் உதவுவதில் ஆர்வம்
காட்டினார்.
1774ம் ஆண்டு இவரின் தந்தை முடக்குவாத நோயால் தாக்கப்பட்டதால்,
தன் தந்தையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டார். சில
வருடங்களிலேயே அவரும் படுக்கையிலேயே கிடக்கும் நிலை வந்தது.
அடுத்து சுமார் இருபது வருடங்கள் அவர் தமது படுக்கையில்
இருந்தபடியே மறை கல்வி கற்பிப்பதிலும் ஆன்மீக ஆலோசனைகள்
வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தார். அவரது தூய்மையை கேள்விப்பட்ட
பலர் அவரை நாடி வந்து அவரது ஆன்மீக ஆலோசனைகளைப் பெற்றுச்
சென்றனர்.
இதற்கிடையே, 1789ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்தது.
தப்பியோடிய குருக்களுடன் இவர் கூட்டணியாக இருந்தது புரட்சி
படைகளுக்கு தெரிய வந்தபோது, இவர் சில நண்பர்களின் உதவியுடன்
ஊருக்கு வெளியே தலைமறைவாக இருந்தார். அப்போதிருந்து பல
வருடங்கள் தம்மால் நடக்க இயலாத நிலையிலும் வீடு வீடாக சென்று
மறை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு கால கட்டத்தில், அவர் தமது
பேச்சுத் திறனையும் இழந்தார்.
ஆனால் இக்காலகட்டம், ஜூலியின் ஆன்மீக வெற்றியின் காரணமாகவும்
அமைந்தது. ஒருமுறை அவர் கண்ட திருக்காட்சி ஒன்றில், துறவற
ஆடையணிந்த பெண்கள் குழாம் ஒன்று கல்வாரி மலையில் கூடி
நிற்பதையும், அசரீரி குரல் ஒன்று, "இதோ, சிலுவையை அடையாளமாக
கொண்ட அமைப்பின் மகள்கள்" என்றது.
இவ்வாறு தமது வாழ்க்கையை நகர்த்திய ஜூலி, "ஃபிரான்காய்ஸ்
ப்ளின் தி பௌர்டென்" (Franoise Blin de Bourdon) என்னும் ஒரு
உயர்குடி பெண்ணுடன் அறிமுகம் ஆனார். அவரும் ஜூலியின் விசுவாசம்
பரப்பும் ஆர்வத்தினை பகிர்ந்து கொண்டார். 1803ம் ஆண்டு,
இவ்விரு பெண்களும் "நோட்ரே டாம்" (Institute of Notre Dame)
என்ற அமைப்பினை தொடங்கினர். இவ்வமைப்பு, ஏழைப் பெண்களுக்கான
கல்வி மற்றும் மறைக் கல்வி பயிற்சி ஆகியனவற்றில் தம்மை
அர்ப்பணித்தது. அடுத்த வருடத்திலேயே அதன் முதல் அருட்சகோதரிகள்
தமது மத ஆன்மீக பிரமாணம் ஏற்றனர். அதிசயமாக, அதே வருடம், ஜூலி
தமது நோய்களிலிருந்து விடுபட்டார். சுமார் இருபத்திரெண்டு
வருடங்களின் பின்னர் அவரால் நன்கு நடக்கவும் பேசவும்
முடிந்தது.
ஏழைகளின் தேவைகளில் கவனமாக இருந்த ஜூலி, சமூகத்தின் பிற
வகுப்பு மக்களுக்கும் கிறிஸ்தவ கல்வியின் அவசியத்தை
உணர்ந்தார். "நோட்ரே டாம்" அமைப்பினை தொடங்கியது முதல் அவரது
மரணம் வரை ஓயாமல் பணியாற்றிய ஜூலி, ஃபிரான்ஸ் மற்றும்
பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பல்வேறு பள்ளிகளை நிறுவுவதில்
சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். ஏழை பணக்காரன் பாகுபாடின்றி
தொழில் முனையும் குழுக்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
சேவையாற்றுவதில் அவரது பள்ளிகள் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.
ஜூலியும் ஃஃபிரான்காய்ஸும் தமது தலைமை இல்லத்தை (motherhouse)
பெல்ஜியத்திலுள்ள "நாமுர்" (Namur, Belgium) என்ற இடத்திற்கு
கொண்டு சென்றனர்.
1816ம் ஆண்டு், "பெல்ஜியம்" (Belgium) நாட்டின் "நாமுர்"
(Namur) நகரிலுள்ள இவரது சபையின் தலைமை இல்லத்தில் 64 வயதான
ஜூலி மரணமடைந்தார்.
அமெரிக்க (America) நாடுகள் மற்றும் "ஐக்கிய அரசு" (United
Kingdom) நாடுகளிலுள்ள "நோட்ரே டாம் பள்ளிகள்" (Notre Dame"
schools) உள்ளிட்ட அநேக பள்ளிகள் மற்றும் "நோட்ரே டாம் தி
நாமுர் பலகலைகழகம்" (Notre Dame de Namur University) ஆகியணம்,
இவரை கௌரவிக்கும் விதமாக இவரது பெயரில் இயங்குகின்றன.
=======================================================================
தூய ஜூலி பில்லியர்ட் (ஏப்ரல் 08)
"நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்; எனவே என் நுகத்தை
உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். என்
நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாய் உள்ளது. (மத் 11: 29)
வாழ்க்கை வரலாறு
ஜூலி பில்லியர்ட், 1751 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 13 ஆம் நாள்,
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிக்கார்டி என்னும் இடத்தில்
பிறந்தார். ஜூலி, குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளை. சிறு வயது
முதலே இவர் மிகவும் பக்தியுள்ள குழந்தையாக வளர்ந்து வந்தார்.
அதனால் இவர் மிகக் குறைந்த வயதிலே நற்கருணை ஆண்டவரை
உட்கொள்ளும் வாய்ப்புப் பேறுபெற்றார்.
ஜூலிக்கு பதினான்கு வயது நடக்கும்போது கற்பு என்னும்
வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டு இறைவனுக்கு மிகவும்
பிரமாணிக்கமாய் வாழ்ந்து வந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில்
ஜூலியின் தந்தை செய்து வந்த வியாபாரம் பெரிய நஷ்டமடைந்தது.
இதனால் குடும்பம் மிகவும் நொடிந்துபோனது. இந்தக்
கஷ்டத்திலிருந்து மீண்டுவர ஜூலியின் குடும்பத்தாருக்கு வெகு
நாட்கள் ஆகிவிட்டது. இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க
ஜூலிக்கு 23 வயது நடந்து கொண்டிருக்கும்போது ஜூலியின்
தந்தைக்குப் பிடிக்காத ஒருவர் அவர்மீது துப்பாக்கியை வைத்துச்
சுட முயன்றார். அதிர்ஷ்டவசமாக ஜூலியின் தந்தை அதிலிருந்து
தப்பித்துக் கொண்டார். ஆனாலும் அது தந்த அதிர்ச்சி ஜூலியை
நடக்க முடியாமல் செய்தது. இதனால் அவர் படுக்கையிலே காலம்
தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலை உருவானாலும்கூட ஜூலி மனந்தளராமல்,
இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்து வந்தார். ஜூலிக்கு 50 வயது
நடக்கும்போது குருவானவர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் திரு
இருதய ஆண்டவருக்கு நவநாள் பக்தி முயற்சிகளை மேற்கொண்டார்.
நவநாளின் ஐந்தாம் நாளின்போது இவர் திரு இருதய ஆண்டவருக்கு
முன்பாக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது இவர் கால் நன்றாக மாறி
நடக்கத் தொடங்கினார். இதைக் கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப்
போனார்கள். இந்தன்பிறகு இவர் 1803 ஆம் ஆண்டு தனக்குக்
நெருக்கமாக இருந்த ஒருசில சகோதரிகளின் உதவியுடன் புதிதாக ஒரு
சபையை ஏற்படுத்தினார். இந்த சபையின்மூலம் இவர் பல ஏழை எளிய
குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்டி வந்தார். அது
மட்டுமல்லாமல் பல இடங்களில் துறவு மடங்களைத் துவங்கி
மக்களுக்கு மத்தியில் ஆன்மீக எழுச்சி உருவாகக் காரணமாக
இருந்தார்.
இந்தக் காலக் கட்டத்தில்தான் பிரஞ்சுப் புரட்சியானது
ஏற்பட்டது. இதனால் திருச்சபைக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை
ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையிலும் ஜூலி மனந்தளராமல்
ஆண்டவருடைய பணியைத் திறம்படச் செய்து வந்தார் இப்படிப் பல்வேறு
பணிகளை ஓய்வின்றிச் செய்துவந்த ஜூலி உடல்நலம் குன்றி 1816 ஆம்
ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை
ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜூலி பில்லியர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம்,
இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. மனந்தளராது இருத்தல்
தூய ஜூலி பில்லியர்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப்
பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை
மனந்தளராது விடாமுயற்சி உழைக்கவேண்டும் என்பதுதான். ஜூலியின்
கால்கள் முடமாகி, நடக்க முடியாமல் போனாலும் கூட அவர்
மனந்தளராமல் விடாமுயற்சியோடு உழைத்து வந்தார். அவருடைய அந்த
உழைப்புக்குப் பலன் கிடந்தது. நாமும் நம்முடைய வாழ்வில்
ஏற்படக்கூடிய துன்பங்கள், நெருக்கடிகளைக் கண்டு துவண்டு
விடாமல், விடர்முயற்சியோடு உழைத்தோம் என்றால், வாழ்வில்
வெற்றியைப் பெறுவது உறுதி.
1952 ஆம் ஆண்டு இமயமலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்க முயற்சி
செய்து தோல்வி அடைந்தவர் எட்மன்ட் ஹிலாரி என்பவர். அதற்கு
முன்னும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகளைச்
சந்தித்திருந்தார். இதற்கு மத்தியில் அவருடைய முயற்சிகளைப்
பாராட்டி ஊக்குவிக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அந்த விழா மேடையஈல் இமயமலைச் சிகரத்தைக்
கம்பீரமாக வரைந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஹிலாரி, "ஏய்
எவரஸ்ட் சிகரமே! என்னை நீ பலமுறை தோற்கடித்துள்ளாய்!
அடுத்தமுறை உன்னை நான் நிச்சயம் தோற்கடிப்பேன். ஏன் தெரியுமா?
உன் வளர்ச்சி என்றோ முடிந்து போய்விட்டது. ஆனால், என்
விடாமுயற்சியோ நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது" என்று
உரக்கச் சொன்னார்.
அவர் சொன்னது போன்றே மனந்தளராது விடாமுயற்சியோடு போராடி 1953
ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் சிகரத்தை அடைந்தார். அவருடைய
விடாமுயற்சி அவருக்கு வெற்றியைக் கொணர்ந்தது. ஜூலி
பில்லியர்ட்டும் மனந்தளராது உழைத்தார். அதனால் வாழ்வில்
வெற்றிகளை குவித்தார்.
ஆகவே, தூய ஜூலி பில்லியர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும்
நாமும் அவரைப் போன்று மனந்தளராது விடாமுயற்சியோடு உழைப்போம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
|