Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டி லா சால் ✠(St. John Baptist De La Salle)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 07)
✠ புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டி லா சால் ✠(St. John Baptist De La Salle)

 *குரு (Priest) :

 *லா சால் பள்ளிகளின் நிறுவனர் :
(Founder of La Salle Schools)

 *கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் அமைப்பின் நிறுவனர்:
(Founder of Brothers of the Christian Schools)

 *பிறப்பு : ஏப்ரல் 30, 1651
ரெய்ம்ஸ், சம்பக்ன், ஃபிரான்ஸ் அரசு
(Reims, Champagne, Kingdom of France)

 *இறப்பு : ஏப்ரல் 7, 1719 (வயது 67)
ரூவென், நோர்மண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Rouen, Normandy, Kingdom of France)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

 *முக்திபேறு பட்டம் : ஃபெப்ரவரி 19, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

 *புனிதர் பட்டம் : மே 24, 1900
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

 *நினைவுத் திருநாள் : ஏப்ரல் 7

 *பாதுகாவல் :
கல்வியாளர்கள் (Educators)
பள்ளி முதல்வர்கள் (School Principals)
ஆசிரியர்கள் (Teachers)
'லா சால்' பள்ளிகள் (La Salle Schools)
இளைஞர்களின் ஆசிரியர்கள் (Teachers of Youth)
'கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள்' அமைப்பு (Brothers of the Christian Schools)

புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டி லா சால், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குருவும், கல்வி சீர்திருத்தவாதியும் ஆவார். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை ஃபிரான்ஸ் நாட்டின் ஏழைச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் செலவிட்ட இவர், கத்தோலிக்க பள்ளிகளின் முதல் நிறுவனர் என்று கருதப்படுகிறார். இவர், ஏழைக் குழந்தைகள், இளைஞர்கள் பேரில் அக்கறை கொண்டு உதவிகள் பல செய்து வந்தார்.

இவர், பிரான்ஸ் நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் நகரில் 1651ம் ஆண்டில் பிறந்தவர். மிகவும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பெயர் "லூயிஸ் டி லா சால் (Louis de La Salle) ஆகும். இவரது தாயார் "நிக்கோல் டி மொயேட் டி ப்ரோயில்லெட் (Nicolle de Moet de Brouillet) ஆவார்.

1678ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 9ம் நாளன்று, தமது 26ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், இரண்டே வருடங்களில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர், 1679ம் ஆண்டு இளைஞர்களுக்கென்று பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் ஆசிரியராக தாமே பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1684ம் ஆண்டு தம்முடன் சேர்ந்து உழைத்த நண்பர்களை ஒன்று சேர்த்து ஓர் துறவற சபையை தோற்றுவிக்க எண்ணி, திட்டங்கள் தீட்டி, இதனால் பல துன்பங்களையும் அனுபவித்தார். இருப்பினும் தம் பணியில் இறைவனின் துணையோடு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். தாழ்ச்சியுடனும், ஏழைகளின் மீது கொண்ட பாசத்திலும் சிறந்து விளங்கிய இவர், தம் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார்.

அப்போது ஜான்சனிசம் (Johnsonism) என்ற நச்சுக் கலந்த கொள்கை ஃபிரான்ஸ் நாட்டை அதிர வைத்தபோது, அண்டை நாடுகளுடன் ஓயாத போரும் ஏற்பட்டது.

இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாட்டில் கடுமையான பஞ்சத்தையும், பல்வேறு இன்னல்களையும் கொண்டு வந்தது. இதனால் கல்வியறிவு முழுவதும் இல்லாமல் போகவே, மீண்டும் ஏழை மாணவர்களுக்கென்று இரு பள்ளிகள் நிறுவி, நாள்தோறும் தவறாமல் ஆசிரியர்களுக்கு கற்று கொடுத்து, தங்குவதற்கென்று இல்லமும், உணவையும் அளித்து, எல்லா வழிகளிலும் ஊக்கமூட்டினார்.

காலத்திற்கேற்ப தொடக்க, மேல்நிலை பள்ளிகளை தொடங்கியதோடு ஆசிரியர் பயிற்சி பெறும் பள்ளிகளையும் தொடங்கி, பல யுத்திகளை கற்றுக் கொடுத்தார்.

குருக்களுக்கு இவரின் நிறுவனத்தில் பணிபுரிய இடமளிக்கவில்லை. இவர் கல்விப்பணியின் மூலம் "நேர்மையான கிறிஸ்தவர்களை உருவாக்குதல்" என்பதனை குறிக்கோளாக முன்வைத்திருந்தார்.

இவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து, ஓர் முடிவுக்கு வந்தபோது, இச்சபையை தொடர்ந்து வழிநடத்த, சபை சகோதரர் ஒருவரிடம் தம் முழு பணியையும் ஒப்படைத்தார்.

தமது நெடிய உழைப்பினால் ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் இழந்த ஜான், ஆஸ்துமா மற்றும் கீழ்வாதம் போன்ற பலவித நோய்களால் உடல் வேதனைகளை அனுபவித்தார். 1719ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் நாள், பெரிய வெள்ளிக்கிழமையன்று ஃபிரான்ஸில் ரூவான் என்ற இடத்தில் இவர் மரித்தார்.
================================================================================

தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசால் (ஏப்ரல் 07)

 

நிகழ்வு

ஒரு நகரில் பிரபலமான பள்ளிக்கூடம் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் தானும் படிக்காமல், தனக்கு அடுத்திருப்பவனையும் படிக்கவிடாமல் அழும்பு செய்துகொண்டிருந்த அமைச்சரின் மகனை, அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அடிப்பதற்காக கையை ஓங்கியபோது அவன் அவரைப் பார்த்துச் சொன்னான், ஒரு இலட்சம் ரூபாய் டொனேசன் கொடுத்துச் சேர்ந்திருக்கும் என்னை நீங்கள் அடித்தால், நடப்பதே வேறு!.  நீ கொடுத்தது ஒரு இலட்சம் என்றால் நான் கொடுத்ததோ பத்து இலட்சம் என்று சொல்லியபடியே ஆசிரியர் அவனைப் பின்னியெடுத்து விட்டார்.

கல்விக்கூடங்கள் இன்றைக்கு காசு கொழிக்கும் நிறுவனங்களாக மாறிப்போய்விட்டதை இந்த நிகழ்வானது வேடிக்கையாகவும் வேதனையோடு பதிவு செய்கிறது.

வாழ்க்கை வரலாறு 

இன்று நாம் கல்வித் தந்தை என அழைக்கப்படும் ஜான் பாப்டிஸ்ட் தெலசால் என்பவருடைய விழாவைக் கொண்டாடுகின்றோம். இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரிம்ஸ் என்ற நகரில் 1651 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். இருந்தாலும் இவர் சிறுவயதிலிருந்து எளிமையாய் பக்தியாய் விளங்கினார். எந்தளவுக்கு என்றால் ஒருமுறை இவருக்கு பிறந்தநாள் வந்தபோது, இவருடைய வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் விழா ஏற்பாடுகளை ஆடம்பரமாகவும் தடபுடலாகவும் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் இவரோ யாருக்கும் தெரியாமல் தன்னுடைய பாட்டியின் அறைக்குச் சென்று புனிதர்களைப் பற்றி தனக்கு சொல்லித் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அந்தளவுக்கு ஆடம்பரத்தை நாடாமால் ஆன்மீக காரியங்களில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆலயத்திற்கு சென்று குருவானவருக்கு திருப்பலியில் உதவி செய்வதில் இவர் பெரிதும் மகிழ்ந்திருந்தார்.  இதனால் இவருடைய உள்ளத்தில் தானும் ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் பதினோறாவது வயதிலே தோன்றியது. இந்த எண்ணம் அவருடைய இருபத்தி ஏழாவது வயதில் நிறைவேறியது. தெலசால் குருவாக மாறிய சமயம் ஜான்சனிசம் என்ற தப்பறைக் கொள்ளை பிரான்சு நாடு முழுவதும் பரவியிருந்தது. (ஆண்டவர் இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் கடவுளில்லை, ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே அவர் கடவுள் என்பதுதான் இக்கொள்கையின் அடிப்படை வாதம்). இது ஒருபுறமிருக்க எப்போது வேண்டுமானாலும் நாட்டில் போர் ஏற்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் அதிகமாக நிலவியது. மக்கள் வறுமையிலும் அடிப்படைக் கல்வியைக் கூட பெறாமல் வாழ்ந்துகொண்டிருந்தார்கள. இதைப் பார்த்த தெலசால் மக்களுக்கு நல்ல கல்வியறிவை புகட்டவேண்டும், ஏனென்றால் நல்ல கல்விதான் நேர்மையான, நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கும் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஏழை எளியவர் கல்வி பெற பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அவர்களுக்கு நல்ல கல்வியைப் புகட்டினார்.

தெலசால் இப்படிப்பட்ட ஒரு பணியைத் தொடங்கியதும், அவருக்கு நிறைய மனிதர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றையெல்லாம் துணிவோடு எதிர்கொண்டார். மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் ஆசிரியர்கள் நல்லறிவைப் பெறவேண்டும் என்று சொல்லி, ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். அதன்வழியாக அவர்களுக்கு பயிற்சியையும் கொடுத்தார். இப்படி உருவான ஆசிரியர்களைக் கொண்டே கிறிஸ்தவப் பள்ளிகளின் சகோதரர்கள் என்றதொரு புதிய சபையைத் தொடங்கினார்.

தெலசால் மேற்கொண்ட முயற்சிகளில் மிகவும் சிறப்பானது மாணவர்கள் தாய்மொழியில் பாடங்களைக் கற்கச் செய்தது ஆகும். இதற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். இன்றைக்கு தாய்மொழியில் பாடங்களை கற்றால்தான் குழந்தைகள் அறிவிலும் சிந்திக்கும்திறனிலும் சிறப்பாக வளர்வார்கள் என்றதொரு கருத்து வலியுறுத்தப்படுகிறது. இதனை அன்றைக்கே செய்தவர் தெலசால். இப்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தெலசால் தான் செய்த பணிகள் தனக்கு நிறைவைத் தந்திருக்கிறது உணர்ந்த பிறகு, இப்பொறுப்புகளை தலைமைச் சகோதரரான பர்த்திலேமேயு என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய அறுபத்தி எட்டாவது வயதில் இறையடி சேர்ந்தார்.

திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் இவரை 1900 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். 1950 ஆம் ஆண்டில் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் இவரை பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர் என்று அறிவித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்  

காலத்திற்கு ஏற்ற கல்விமுறைத் தந்தை என அழைக்கப்படும் தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசாலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அனைவருக்கும் கல்வி

தூய தெலசால் கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பணக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் மட்டும் கல்வியைப் பெற முடியும் என்ற நிலையை மாற்றி எல்லா மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்களும் நல்ல கல்வியை பெற்றுக்கொள்ள பெரிதும் பாடுபட்டார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், எல்லா மக்களும் நல்லதொரு கல்வியைப் பெற நாம் முயற்சிசெய்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம் ஆண்டவராகிய இயேசு குருவும் ஆசிரியரும் அரசரும் ஆவார். அவர் மக்களுக்கு போதிக்கும் பணியை சிறப்பாக செய்தார். அவருடைய போதனையைக் கேட்டு நிறைய பேர் ஆறுதலையும் மனமாற்றத்தையும் அடைந்தார்கள் என்று நற்செய்தியில் படிக்கின்றோம். அவர் வழியில் நடக்கும் நாம் போதிக்கும் பணியை சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே நமக்கு முன்பாக உள்ள சவாலாக உள்ளது. இன்றைக்கு உள்ள கல்விமுறை முற்றிலுமாக மாறிப்போனது. அது அறிவைப் பெருக்குவதே நல்ல கல்வி என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான ஒரு சான்றிதழ் மட்டுமல்ல. மாறாக ஒருவரை முழு மனிதனாக மாற்றி தன்னம்பிக்கையையும் சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் அவருள் வளர்ப்பதே உண்மையான கல்வி என்பார் டாக்டர் ராதா கிருஷ்ணன். எவ்வளவு ஆழமான வார்த்தைகள் இவை. ஆகவே கல்விதான் விடுதலைக்கான ஆயுதம். அத்தகைய கல்வி நம்மில் சமூக அக்கறையையும் மனித நேயத்தையும் வளர்க்கவேண்டும் என்பதை உணர்த்து வாழ்வோம்.

மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் செயல்பட்டு வந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (NSS) ஒரு வார முகாமாக அருகே இருந்த சேரி மக்களோடு தங்கிப் பணிசெய்தார்கள். அப்போது அவர்கள் அங்கே இருந்த மக்களின் வாழ்வாதாரம், சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்விநிலை எப்படி இருக்கின்றது என்ற ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடியில், அம்மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள், அதனால் அவர்களுடைய வளர்ச்சி ஐம்பது வருடங்களுக்கு பின்னோக்கி இருக்கிறது என்ற உண்மையையைக் கண்டறிந்தார்கள்.

இது நடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். மீண்டுமாக அந்தக் கல்லூரியிலிருந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முன்பு சென்ற அதே சேரிப் பகுதிக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கு சென்றபோது முன்னாள் மாணவர்கள் அந்த சேரிப்பகுதினைக் குறித்து தயாரித்து வைத்திருந்த ஆய்வினையும் தங்களோடு எடுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்கள் நினைத்தார்கள் இம்மக்கள் வளர்ச்சியடைய இன்னும் இருபது முப்பது வருடங்கள் பிடிக்கும் என்று. ஆனால் அங்கு போய் பார்த்தபோது மக்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக அங்கு மாறியிருந்தது. மக்கள் எல்லா நிலைகளிலும் குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கியிருந்தார்கள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன அந்த கல்லூரி மாணவர்கள், இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்  சொன்ன ஒரே பதில், இந்த ஊருக்கு புதிதாக வந்த ஆசிரியர்தான் எங்களுடைய இந்த முன்னேற்றத்திற்குக் காரணம். அவர் எங்களுக்கு நல்ல கல்வியறிவு புகட்டி எங்களை எல்லா நிலைகளிலும் வளர்த்தெடுத்தார். ஆனால் அவர் இன்றைக்கு உயிரோடு இல்லை. இதைக் கேட்ட அந்த மாணவர்கள் மலைத்துப் பொய் நின்றார்கள்.

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு சமூகத்தை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே கல்வியால் - ஆசிரியரால் - உண்டாகும் மாற்றம் எத்தகையது என உணர்வோம். இன்று நாம் கொண்டாடும் தூய தெலசாலைப் போன்று ஏழை எளியவர் மீது இரங்குவோம், அவர்களுக்கு நல்ல போதனையை சொல்லித் தருவோம். அதன்வழியாக நிறைவாய் பெறுவோம்.

========================================================================
இன்றைய புனிதர் ஏப்ரல் 7
புனித. ஜான் பாப்டிஸ்ட் டெலாசால்(மறைப்பணியாளர்)
St.John Baptist De lasalle
நினைவுத்திருநாள் : ஏப்ரல் 7

பிறப்பு : 1651 ரெய்ம்ஸ், (Reims), பிரான்ஸ்
இறப்பு : 07 ஏப்ரல் 1719, ரூவான்(Rouen), பிரான்ஸ்
புனிதர் பட்டம்: 24 மே 1900, பதிமூன்றாம் லியோ
(பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலராக 1950ஆம் ஆண்டு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.)

இவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் நகரில் 1651 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தை ஓர் நகர்மன்ற உறுப்பினர். இவர் சமூக பணியாளர். சமூகத்தில் துன்பப்படுகின்றவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வந்தார். தன் மகனையும் சமூக செயல்களில் ஈடுபடுத்தினார். அப்போதிலிருந்தே ஏழைக் குழந்தைகள், இளைஞர்கள்போல் அக்கறை கொண்டு உதவி செய்து வந்தார். மிகவும் பக்தியான இவர் தம் 16 ஆம் வயதில் ரீம்ஸ் நகரின் பேராலயத்தில் மிக முக்கியப்பொறுப்புகளை ஏற்றுகொண்டு, 1678 ஆம் ஆண்டு, தம் 27வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 1679 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கென்று பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் ஆசிரியராக தாமே பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1684 ஆம் ஆண்டு தம்முடன் சேர்ந்து உழைத்த நண்பர்களை ஒன்று சேர்த்து ஓர் துறவற சபையை தோற்றுவிக்க எண்ணி, திட்டங்கள் தீட்டி, இதனால் பல துன்பங்களையும் அனுபவித்தார். இருப்பினும் தம் பணியில் இறைவனின் துணையோடு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். தாழ்ச்சியுடனும், ஏழைகளின் மீது கொண்ட பாசத்திலும் சிறந்து விளங்கிய இவர், தம் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். அப்போது ஜான்சனிசம் (Johnsonism) என்ற நச்சுக் கலந்த கொள்கை பிரான்ஸ் நாட்டை அதிர வைத்தபோது, அண்டை நாடுகளுடன் ஓயாத போரும் ஏற்பட்டது. இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாட்டில் கடுமையான பஞ்சத்தையும், பல்வேறு இன்னல்களையும் கொண்டுவந்தது. இதனால் கல்வியறிவு முழுவதும் இல்லாமல் போகவே, மீண்டும் ஏழை மாணவர்களுக்கென்று இரு பள்ளிகள் நிறுவி, நாள்தோறும் தவறாமல் ஆசிரியர்களுக்கு கற்று கொடுத்து, தங்குவதற்கென்று இல்லமும், உணவையும் அளித்து, எல்லா வழிகளிலும் ஊக்கமூட்டினார். காலத்திற்கேற்ப தொடக்க, மேல்நிலை பள்ளிகளை தொடங்கியதோடு ஆசிரியர் பயிற்சிப்பெரும் பள்ளிகளையும் தொடங்கி, பல யுத்திகளை கற்றுக்கொடுத்தார்.

குருக்களுக்கு இவரின் நிறுவனத்தில் பணிபுரிய இடமளிக்கவில்லை. இவர் கல்விப்பணியின் மூலம் "நேர்மையான கிறிஸ்துவர்களை உருவாக்குதல்" என்பதை குறிக்கோளாக வைத்தார். இவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து, ஓர் முடிவுக்கு வந்தபோது, இச்சபையை தொடர்ந்து வழிநடத்த, சபை சகோதரர் ஒருவரிடம் தம் முழுபணியையும் ஒப்படைத்தார். பின்னர் 1719 ஆம் ஆண்டு ஆஸ்துமா நோயால் தாக்கப்பட்டு, மூட்டுவலியால் பாதிக்கப்பட்டு பலவித உடல் வேதனைகளை அனுபவித்து ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று பிரான்ஸில் ரூவான் என்ற இடத்தில் இறைவனால் வான்வீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இறக்கும் வரை மிக கடுமையான தவமுயற்சிகளை கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு 1900 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டெலசால் ஓர் பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார்

செபம்:
அன்பான ஆண்டவரே! கல்வி பணியின் மூலம் நேர்மையான, பக்தியுள்ள கிறித்தவர்களை உருவாக்கிய புனித ஜான் பாப்டிஸ்டைப் போல இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, உமது இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நீர் உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா