Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜார்ஜ் ✠(St. George of Lydda)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 23)
✠ புனிதர் ஜார்ஜ் ✠(St. George of Lydda)
 *மறை சாட்சி : (Martyr)

 *பிறப்பு : கி.பி. 280
லிட்டா, சிரியா பாலஸ்தீனா, ரோம பேரரசு
(Lydda, Syria Palaestina, Roman Empire)

 *இறப்பு : ஏப்ரல் 23, 303
நிக்கோமீடியா, பெர்த்தினியா, ரோம பேரரசு
(Nicomedia, Birthynia, Roman Empire)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்குத் திருச்சபைகள்
(Church of the East)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ரோமன் கத்தோலிக்க திருச்சபையுடன் ஒத்திசைவுள்ள பிரேசிலிய மதம் அல்லது திருச்சபை
(Umbanda - Syncretic Brazilian Religion)

 *முக்கிய திருத்தலங்கள் :
புனித ஜார்ஜ் தேவாலயம், லிட்டா, இஸ்ரேல்
(Church of Saint George, Lydda, Israel)

 *சித்தரிக்கப்படும் வகை :
ஓர் படைவீரராக கவச உடை அணிந்து,
கையில் சிலுவை முனை கொண்ட ஈட்டியை ஏந்தி,
வெண்குதிரையில் அமர்ந்த வண்ணம் பறக்கும் நாகம் அல்லது இறக்கையுள்ள முதலையை (Dragon) கொல்பவராகச் சித்தரிக்கப்படுகிறார்.
மேற்கத்திய சபைகளில் கவசம் அல்லது கேடயம் அல்லது பட்டியில் புனித ஜார்ஜின் சிலுவை காட்டப்பட்டுள்ளது.

 *பாதுகாவல் :
உலகின் பல பகுதிகளைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.

புனிதர் ஜார்ஜ், ரோமன் படைத்துறையில் பணியாற்றிய ஓர் கிரேக்க வீரர் ஆவார். இவரது தந்தை ஆசிய மைனரைச் சேர்ந்த "கப்பாடோசியா" (Cappadocia) எனுமிடத்தில் இருந்த "கெரோன்ஷியஸ்" (Gerontius) என்பவராவார். இவரது அன்னையார் "லிட்டா" (Lydda) நகரைச் சேர்ந்த "பொலிக்ரோனியா" (Polychronia) ஆவார். தற்போது இசுரேலில் உள்ள இந்த நகரம் கி.மு. 333 முதலே அலெக்சாண்டர் கைப்பற்றிய பின்னர், கிரேக்கர்கள் வாழும் நகரமாக இருந்தது.

புனிதர் ஜார்ஜ் முதலில் ஒரு படைவீரராக பணியாற்றினார். பின்னர் ரோமன் படைத்துறையில் அதிகாரியாக பதவி ஏற்றம் பெற்றவர், பின்னர் கிறிஸ்தவ படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். கிறிஸ்தவர்களால் வேத சாட்சியாக வணங்கப்படுபவர்.

கத்தோலிக்க (மேற்கத்திய கிழக்கு ரைட்டுகள்), ஆங்கிலிக்க, கிழக்கு மரபுவழி, மற்றும் கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகளின் புனிதர்களின் வரலாற்றில் புனிதர் ஜார்ஜ் மிகவும் வணங்கப்படும் புனிதர்களில் ஒருவராக உள்ளார். புனிதர் ஜார்ஜும் டிராகனும் கதை மூலமாக இவர் நினைவு கூறப்படுகிறார்; பதினான்கு புனித உதவியாளர்களில் ஒருவராவார். இவரது திருவிழா ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. படைத்துறை புனிதர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.

புனிதர் ஜார்ஜ், பாலஸ்தீன நாட்டில், விட்டா என்ற ஊரில் கொனிஸ்டாட்டின் அரசன் காலத்திற்கு முன்பு மறைசாட்சியாக இறந்தார். இவர் எப்படி இறந்தார் என்பதைப்பற்றி தெளிவாக அறியமுடியவில்லை. இருப்பினும் சில வரலாறுகள் இவ்வாறு கூறுகின்றது.

அவர் முதலிலிருந்த படையில், தான் வகித்த பெரிய பதவியைக் கிறிஸ்துவுக்காக உதறி தள்ளிவிட்டு, தன் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு வந்துள்ளார். பின்பு தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல், உலக கவலைகளுக்கு இடம் கொடுக்காமல், விசுவாசம் என்ற மார்பு கேடயத்தை அணிந்து கொண்டார். பிறகு கிறிஸ்துவுக்காக தன் உயிரை தியாகம் செய்யவும் துணிந்தார்.

கிறிஸ்துவின் துணிச்சலான போர்வீரரான இவர், தூய ஆவியால் உந்தப்பட்டு, அன்பு என்னும் நெருப்பால் ஈர்க்கப்பட்டார். சிலுவையின் வெற்றிக்கொடியை ஏந்தி இறுதிவரை விசுவாசத்திற்காக போராடினார். தீமையின் இருப்பிடமாகிய அலகையை வெற்றி கொண்டார்.

தன்னுடன் இருந்த தோழர்களையும் பாடுகளை துணிவுடன் ஏற்று போரிட ஊக்குவித்தார், அவர் உடல் எதிரிகளிடம் ஒப்படைத்தபோது, அவரின் ஆன்மாவை மட்டும் இறைவன் பாதுகாத்தார் என்பதில்தான் இவர் கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த விசுவாசம் வெளிப்பட்டது.

இவரது உருவம் உலகின் பல்வேறு நாடுகளில் அஞ்சல் துறையினரால் பயன்படுத்தப்படுவதுபோல் மற்ற யாருடைய உருவமும் வெளிவருவதில்லை. இவ்வாறு அஞ்சல்தலை மூலமும் இவருக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. இந்த முத்திரைகளில் புனிதர் குதிரைமீது அமர்ந்து அலகையுடன் போரிடுவதை பார்க்கலாம். இதில் அவர் பொய்மைக்கு எதிராக பெற்ற வெற்றியை காணலாம். இவர் வாழும்போதே இறைவன் இவர் வழியாக ஏராளமான அற்புதங்களை செய்துள்ளார்.

இவர் பல நிலபகுதிகளையும் தொழில்களையும் அமைப்புக்களையும் நோயாளிகளையும் காப்பதாக நம்பப்படுகிறது. இவரது பாதுகாவலில் உள்ள நிலப்பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. மற்றும் - ஜார்ஜியா, இங்கிலாந்து, எகிப்து, பல்கேரியா, அரகொன், காத்தலோனியா, ரூமேனியா, எத்தியோப்பியா, கிரீசு, ஈராக், லித்துவேனியா, பாலஸ்தீனம், போர்ச்சுகல், செர்பியா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகியன முக்கிய நிலப்பகுதிகள் ஆகும்.

=========================================================================
தூய ஜார்ஜியார்

நிகழ்வு

ஜார்ஜியார் வாழ்ந்த நான்காம் நூற்றாண்டில் லிபியா என்ற நகரில் மனிதர்களை ஒவ்வொருநாளும் நரபலி கொடுக்கும் மந்திரவாதி ஒருவன் இருந்தான். ஒருநாள் ஜார்ஜியார் அந்நகர் வழியாகச் சென்றபோது மந்திரவாதி அந்நாட்டு இளவரசியைப் பிடித்து வைத்துக்கொண்டு, அவளை நரபலி கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஜார்ஜியார் அவனோடு போர்தொடுத்து அவனை வீழ்த்தினார். பின்னர் அவர் இளவரசியை அவளுடைய தோளில் போட்டிருந்த துணியால் மந்திரவாதியைக் கட்டி வழியெங்கும் இழுத்துவரச் சொல்லி அவனை தண்டிக்கச் சொன்னார். அதன்படியே இளவரசி செய்தாள். இறுதியில் அந்த கொடிய மந்திரவாதி வரும் வழியிலே இறந்துபோனான். பின்னர் ஜார்ஜியார் அந்த இளவரசியிடம், "கடவுள் உன்னை அற்புதமாகக் காப்பாற்றி இருக்கின்றார். ஆகையால் அவரைப் பற்றிய மெய்மறையை உன்னுடைய நாடு முழுவதும் பரப்பு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

ஜார்ஜியார் இஸ்ரயேலைச் சேர்ந்த கேரேன்தியேசு மற்றும் பாலிகிரோனி என்பவருடைய மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பெற்றோரை இளம் வயதிலேயே இழந்தார். இதனால் பெற்றோர் இல்லாமல் பெரிதும் கஷ்டப்பட்டார். இளைஞனாக மாறிய பிறகு அப்போது உரோமை நகரில் அரசனாக இருத்த தியோகிளேசியன் என்பவனுடைய படையில் படைவீரராகச் சேர்ந்தார். இவருடைய நற்பண்புகளையும் திறமையையும் பார்த்த அரசன் சிறிய படைப்பிரிவிற்கு தலைவனாக ஏற்படுத்தினார். அதன்பின்னர் இவரை பாதுகாப்புப் படையின் தலைவராக உயர்ந்தார். இவ்வாறு ஒவ்வொருநாளும் ஜார்ஜியார் அரசன் தனக்குக் கொடுத்த பொறுப்புகளை கண்ணும் கருத்துமாகச் செய்து, நாளும் நாளும் உயர்ந்துகொண்டிருந்தார்.

ஒருமுறை அரசன் தான் வணங்கி வந்த தெய்வத்தை எல்லாரும் வணங்க வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தான். அப்படி வணங்காதவர்களை கொன்றுபோடுவதாகவும் எச்சரித்தான். ஆனால் நிறைய கிறிஸ்தவர்கள் அரசன் சொன்னதற்கு அடிபணியாது, கிறிஸ்து ஒருவரையே வணங்கி வந்தார்கள். இதைக் கண்டு சினம்கொண்ட அரசன் தன்னுடைய கடவுளை வணங்காத மக்களை ஒன்றாக இழுத்துவந்து அவர்களை வதைக்கச் சொன்னான். அந்தப் பொறுப்பை அரசன் ஜார்ஜியாரிடம் ஒப்படைத்தான். ஆனால் ஜார்ஜியாரோ, "நான் யாரையும் வதைக்கமாட்டேன். நானும் ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவருக்கும் வணக்கம் செலுத்தமாட்டேன்" என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் அரசன் இன்னும் சினமுற்றான். தன்னிடம் பணிசெய்யும் ஒருவன் தன்னுடைய கட்டளைக்குப் பணிந்து வாழாமல் இருப்பதா? என்று அவன் மிகவும் சினமுற்றான். ஆனாலும் ஜார்ஜியாரைப் போன்று ஒரு வீரனை அவர் இழக்க விரும்பவில்லை. அதனால் அவரை எப்படியாவது சூழ்ச்சியால் மயக்கி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அரசன் நினைத்தான்.

ஒருநாள் அரசன் ஜார்ஜியாரை அழைத்து, "உனக்கு வேண்டிய மட்டும் நிலபுலன்கள், சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் தருகிறேன். ஆனால் நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு என்னுடைய தெய்வத்தை வணங்கவேண்டும்" என்று சொன்னான். அதற்கு ஜார்ஜியார், "நான் எக்காரணத்தைக் கொண்டும் ஆண்டவர் இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன்" என்று மிக உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் அரசனுக்குக் கோபம். இருந்தாலும் அவன் அதனை வெளியே காட்டி கொள்ளாமல், அவரை எப்படி சூழ்ச்சியால் ஒழிக்கலாம் என திட்டம் தீட்டினான். அதற்கு அவன் ஒரு மந்திரவாதியை அழைத்து, ஜார்ஜியாரை சூழ்ச்சியால் கொன்றுபோட சொன்னான். மந்திரவாதியும் அரசனுடைய கட்டளைக்குப் பணிந்து, ஜார்ஜியார் குடிக்கும் பாலில் விஷம் கலக்கிக்கொடுத்தான். ஆனால் ஜார்ஜியார் அந்த பாலின் மீது சிலுவை அடையாளம் வரைந்து, அதனைக் குடிக்க அது ஒன்றுமே செய்யவில்லை. இப்படியாக அரசன் வைக்கும் சூழ்சிகள் அனைத்தையும் ஜார்ஜியார் இறைவல்லமையால் வெற்றிக்கொண்டார்.

ஒருமுறை ஜார்ஜியாரைக் கொல்ல நினைத்த அத்தனேசியா என்ற மந்திரவாதியும் அந்நாட்டு அரசியும் ஜார்ஜியாரை அழைத்து, அவருக்கு முன்பாக ஒரு பிணத்தை கொண்டு வைத்து, "இந்த பிணத்தை உயிர் பெற்றெழச் செய்தால் நாங்கள் அனைவரும் நீ வணங்கும் கடவுள்மீது நம்பிக்கை கொள்வோம்" என்றார்கள். அதன்படி ஜார்ஜியார் தனக்கு முன்பாகக் கொண்டுவந்து வைக்கப்பட்ட பிணத்தின் மீது கைகளை வைத்து ஜெபித்தார். அவர் இறைவனிடம் ஜெபித்த சில மணித்துளிகளிலேயே இறந்த மனிதர் உயிர்பெற்று எழுந்தார். இதைக் கண்டு மந்திரவாதி, அரசி என அனைவருமே ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். மக்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள. இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகியது. எல்லாவற்றையும் பார்த்து கடுஞ்சினம் அரசன் அரசி மந்திரவாதி, ஜார்ஜியார் என மூவரையும் 303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் வாளுக்கு இரையாக்கினான். 449 ஆம் ஆண்டு திருத்தந்தை கலேசியஸ் இவரைப் புனிதராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜார்ஜியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்தல்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்" (லூக் 12:8) தூய ஜார்ஜியார் ஆண்டவர் இயேசுவை எல்லாருக்கும் முன்பாக, அதுவும் தன்னை கொல்ல நினைத்த கொடிய அரசனுக்கும் முன்பாக ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார். அவரிடமிருந்து விசுவாசம், கிறிஸ்துவுக்காக எதையும் செய்யக்கூடிய துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோது கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோம். அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோம். ஆனால் துன்பம், அச்சுறுத்தல் என்று ஏதாவது வந்தால் பின்வாங்குகின்றோம். ஆனால் தூய ஜார்ஜியார் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் கிறிஸ்துவை துணிவோடு அறிக்கையிட்டதற்கு முன்னோடி. அவருடைய விழாவைக் கொண்டாடும் நாமும் கிறிஸ்துவை நம்முடைய வாழ்வால், வார்த்தையால் எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா