Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கெம்மா கல்கனி✠ (St. Gemma Galgani)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல் / Avril- 11)

✠ புனிதர் கெம்மா கல்கனி✠ (St. Gemma Galgani)


லூக்காவின் மலர் (The Flower of Lucca): லூக்காவின் கன்னி (The Virgin of Lucca):

பிறப்பு:
மரியா கெம்மா உம்பர்ட்டா கல்கனி
(Maria Gemma Umberta Galgani)
மார்ச் 12, 1878
காமிக்லியானோ, கபன்னோரி, இத்தாலி
(Camigliano, Capannori, Italy)

இறப்பு: ஏப்ரல் 11, 1903 (வயது 25)
லூக்கா, இத்தாலி
(Lucca, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: மே 14, 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நியமனம்: மே 2, 1940
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
முக்கிய திருத்தலம்:
இத்தாலியின் லூக்காவில் உள்ள சிலுவைப்பாடுகளின் அருட்சகோதரியர் மடாலயம்
(Passionist Monastery in Lucca, Italy)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 11

பாதுகாவல்:
மாணவர்கள், மருந்தாளுநர்கள், பாராட்ரூப்பர்கள் (Paratroopers) மற்றும் பாராசூட்டிஸ்டுகள் (Parachutists), பெற்றோரின் இழப்பு, முதுகில் காயம் அல்லது முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்கள், தலைவலி / ஒற்றைத் தலைவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூய்மையற்றவர்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இதய தூய்மையை நாடுபவர்கள்.

மரியா கெம்மா உம்பெர்டா கல்கானி ஒரு இத்தாலிய ஆன்ம பலம் கொண்டவர் ஆவார். கி.பி. 1940ம் ஆண்டு முதல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு புனிதராக வணங்கப்படுகிறார். கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை ஆழமாக பின்பற்றியதால் அவர் "சிலுவைப்பாடுகளின் மகள்" (Daughter of the Passion) என்று அழைக்கப்படுகிறார். அவர் குறிப்பாக "சிலுவைப்பாடுகளின் அருட்சகோதரியர் சபையில்" (Passionists) வணங்கப்படுகிறார்.

கெம்மா உம்பெர்டா மரியா கல்கானி, கி.பி. 1878ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் தேதி, மாகாண நகரமான "கபன்னோரியில்" (Capannori) உள்ள "கேமிக்லியானோவின்" (Camigliano) குக்கிராமத்தில் பிறந்தார். கெம்மா, தமது பெற்றோரின் எட்டு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை ஆவார். அவரது தந்தை "என்ரிகோ கல்கானி" (Enrico Galgani) ஒரு வளமான மருந்தாளர் ஆவார்.

கல்கானி பிறந்த உடனேயே, குடும்பம் காமிக்லியானோவிலிருந்து (Camigliano) வடக்கே "டஸ்கன்" (Tuscan) நகரமான லூக்காவில் (Lucca) ஒரு பெரிய புதிய வீட்டிற்கு இடம் பெயர்ந்தது, இது குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. கெம்மாவின் தாயார் "அரேலியா கல்கானி" (Aurelia Galgani) காசநோயால் பாதிக்கப்பட்டார். இந்த கஷ்டத்தின் காரணமாக, கெம்மாவுக்கு இரண்டரை வயதாக இருந்தபோது எலெனா (Elena) மற்றும் எர்சிலியா வல்லினி (Ersilia Vallin) நடத்தும் ஒரு தனியார் நர்சரி பள்ளியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் கல்கனி குடும்பத்தைச் சேர்ந்த பலர் இறந்தனர். அவர்களின் முதல் குழந்தை கார்லோ (Carlo) மற்றும் ஜெம்மாவின் சிறிய சகோதரி கியுலியா (Giulia) ஆகியோர் சிறு வயதிலேயே இறந்தனர். கி.பி. 1885ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் தேதி, ஆரேலியா கல்கானி (Aurelia Galgani) காசநோயால் இறந்தார். அவர் ஐந்து ஆண்டுகளாக நோயால் அவதிப்பட்டார். கெம்மாவின் அன்பு சகோதரர் ஜினோ (Gino), குருத்துவம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அதே நோயால் இறந்தார்.

கல்கானி, "புனிதர் ஸிட்டா சகோதரிகளால்" (Sisters of St. Zita) நடத்தப்படும் லூக்காவில் (Lucca) உள்ள ஒரு கத்தோலிக்க அரை உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அவர் பிரஞ்சு, எண்கணிதம் மற்றும் இசையில் சிறந்து விளங்கினார். ஒன்பது வயதில், கல்கனி தனது முதல் நற்கருணை (First Holy Communion) பெற அனுமதிக்கப்பட்டார்.

தமது பதினாறு வயதில் முதுகெழும்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், அந்நோயிலிருந்து குணம் பெற்றார். தாம் அற்புதமான வகையில் குணமாவதற்கு, பின்னாளில் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட "வணக்கத்திற்குரிய வியாகுல அன்னையின் கேப்ரியேல்" (Venerable Gabriel of Our Lady of Sorrows) மற்றும் புனிதர் "மார்கரீட் மேரி அலக்கோக்" (Saint Marguerite Marie Alacoque) ஆகியோர் தமக்காக இயேசுவின் திருஇருதயத்திடம் (Sacred Heart of Jesus) வேண்டி பரிந்துரைத்ததே காரணம் என்றார்.

தமது 18 வயதை எட்டிய சிறிது காலத்திலேயே கல்கனி அனாதையானார். அதன்பிறகு தனது இளைய உடன்பிறப்புகளின் வளர்ப்பிற்கு அவர் பொறுப்பேற்றார். தனது அத்தை கரோலினாவுடன் (Carolina) இணைந்து, அவர் தமது இளைய சகோதரர்களை வளர்த்தார். இரண்டு தடவை தமக்காக செய்யப்பட்ட திருமண திட்டங்களை மறுத்த அவர், கியானினி (Giannini) குடும்பத்தின் வீட்டு வேலைக்காரியாக ஆனார்.

அவரது ஆன்மீக இயக்குனரான (Spiritual Director) ஜெர்மானஸ் ருப்போலோ (Germanus Ruoppolo) எழுதிய ஒரு சுயசரிதைபடி, கல்கனி கி.பி. 1899ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி, தனது இருபத்தியொரு வயதில், தமது உடலில் களங்கத்தின் அறிகுறிகளைக் காண்பிக்கத் தொடங்கினார். அவர் தனது பாதுகாவல் சம்மனசு, இயேசு, கன்னி மரியாள் மற்றும் பிற புனிதர்களுடன், குறிப்பாக எங்கள் புனிதர் வியாகுல அன்னையின் கேப்ரியல் (Gabriel of Our Lady of Sorrows) உடன் பேசியதாக அவர் கூறினார். அவரது சாட்சியங்களின்படி, நடப்பு அல்லது எதிர்கால நிகழ்வுகள் குறித்து சில சமயங்களில் அவர்களிடமிருந்து சிறப்பு செய்திகளையும் அவர் பெற்றார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாலும், தனது உடலிலுள்ள களங்க அறிகுறிகள் காணாமல் போக வேண்டி பிரார்த்தனை செய்யும்படி அவரது ஒப்புரவாளரான "கெர்மானோ ருப்போலோ" (Germano Ruoppolo) அவளை வழிநடத்தினார். அவரும் அவ்வாறு செய்ததால், அவரது உடலிலுள்ள களங்க அறிகுறிகள் மறைந்தன. பிசாசின் தாக்குதல்களை அடிக்கடி எதிர்ப்பதாகவும் அவர் சொன்னார்.

அடிக்கடி, தரையிலிருந்து சற்றே உயரத்தில் நிற்கும் நிலையில் இருக்கும் சக்தி கொண்டவராக புகழ் பெற்ற இவர், அடிக்கடி பரவச நிலையையும் அடைந்தார். ஒருமுறை, தமது சாப்பாட்டு அறையில், சிலுவைப்பாடு கிறிஸ்துவின் திருச்சொரூபத்தின் காயத்தை முத்தி செய்த வேளையில் இவர் தரையிலிருந்து உயர்ந்து நின்றார்.

கல்கனி இறப்பதற்கு முன்பு, லூக்கா நகரின் அருகிலேயே - குறிப்பாக வறுமையில் இருந்தவர்களுக்கு நன்கு அறியப்பட்டார்.

1903ன் முற்பகுதியில், கல்கானிக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பல மாய நிகழ்வுகளுடன் நீண்ட மற்றும் பெரும்பாலும் வலிமிகுந்த சரிவுக்கு அவரது உடல்நிலை சென்றது. அவரை கவனித்துக்கொண்ட அருட்சகோதரியான செவிலியர் ஒருவர், "நாங்கள் பல நல்ல நோயுற்றவர்களை இதுவரை கவனித்து வருகிறோம், ஆனால் இதுபோன்ற எவரையும் இதுவரை நாங்கள் பார்த்ததில்லை" என்றார். 1903ம் ஆண்டு புனித வாரத்தின் தொடக்கத்தில், அவரது உடல்நிலை விரைவில் மோசமடைந்தது. புனித வெள்ளிக்கிழமையன்று அவர் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். 1903ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 11ம் தேதி, புனித சனிக்கிழமையன்று கியானினி வீட்டிலிருந்த ஒரு சிறிய அறையில் இறந்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா