✠ புனிதர் ஃபிரான்சிஸ் ✠ (St. Francis of
Paola) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஏப்ரல்/
April 02) |
✠ புனிதர்
ஃபிரான்சிஸ் ✠ (St. Francis of Paola)
*துறவி, நிறுவனர் : (Hermit,
Founder)
*பிறப்பு : மார்ச் 27,
1416
பவோலா, கொசென்ஸா, கலாப்ரியா, இத்தாலி
(Paola, Cosenza, Calabria, Italy)
*இறப்பு : ஏப்ரல் 2, 1507
(அகவை 91)
பிலெஸ்ஸிஸ், தூரெயின், ஃபிரான்ஸ் அரசு
(Plessis, Touraine, Kingdom of France)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*புனிதர் பட்டம் : 1529
திருத்தந்தை 10ம் லியோ
(Pope Leo X)
*நினைவுத் திருநாள் : ஏப்ரல்
2
*பாதுகாவல் :
கலாப்பிரியா (Calabria); அமாடோ (Amato);
லா சொறேரா (La Chorrera), பனாமா (Panama);
படகோட்டிகள் (Boatmen),
கப்பல் பணியாளர்கள் மற்றும் மற்றும் கடற்படை அதிகாரிகள் (Mariners,
and Naval Officers).
புனிதர் ஃபிரான்சிஸ், ஒரு இத்தாலிய "பிச்சைக்கார துறவி" (Mendicant
Friar) ஆவார். ரோமன் கத்தோலிக்க "மினிம்ஸ்" (Roman Catholic
Order of Minims) சபையின் நிறுவனரும் இவரே ஆவார். பெரும்பாலான
சபைகளை நிறுவிய துறவியரைப் போலல்லாது, இவர் குருத்துவ அருட்பொழிவு
பெறாத துறவி ஆவார்.
இத்தாலியில் கலாப்ரியா என்னும் பகுதியில் பவோலா என்னுமிடத்தில்
1416ம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது
பெற்றோருக்கு திருமணமாகி சில காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாது
போனதால் புனிதர் "அசிஸியின் ஃபிரான்சிஸ்" (St. Francis of
Assisi) நோக்கி அவரது பரிந்துரைக்காக செபித்தனர். அதன் காரணமாய்
பிறந்த முதல் குழந்தைக்கு புனிதரின் நினைவாக ஃபிரான்சிஸ் என்றே
பெயரிட்டனர். அதன் பிறகும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
ஃபிரான்சிஸ் தொட்டில் குழந்தையாக இருக்கையில், ஒருமுறை அவரது
கண்களில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, அவரது ஒரு கண்பார்வை அருகிப்போனது.
அவர்கள் மீண்டும் புனிதர் "அசிஸியின் ஃபிரான்சிஸ்" அவர்களை
நோக்கி வேண்டினர். இம்முறை, குழந்தையின் கண்கள் குணமானதும் அப்புனிதரின்
ஏதாவது ஒரு துறவு சபையில் வாழ்நாள் முழுதும் துறவு உடையில் வாழ
விடுவதாக பிரமாணம் செய்தனர். (அக்காலத்தில் இதுபோன்ற பிரமாணங்கள்
வழக்கிலில்லாதது). குழந்தைக்கு உடனேயே கண்கள் குணமாயின.
ஃபிரான்ஸிசின் ஆரம்ப காலத்திலேயே அவரிடம் புனிதரின் அசாதாரணமான
அடையாளங்கள் தென்பட்டன. தமது பதின்மூன்றாவது வயதிலே தமது
பெற்றோரின் பிரமாணத்திற்கேற்ப ஃபிரான்சிஸ்கன் சபையின் (Franciscan
Order) துறவு மடம் ஒன்றில் இணைந்தார். அங்கே செபம், தாழ்ச்சி,
எளிமை போன்ற நல்லொழுக்கங்களை வெளிப்படுத்தினார்.
துறவு மடத்தில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்த ஃபிரான்சிஸ்,
தமது பெற்றோருடன் ரோமிலுள்ள அசிஸி மற்றும் சில வெவ்வேறு நகரங்களுக்கு
புனித பயணம் மேற்கொண்டார்.
அங்கிருந்து பவோலா திரும்பிய அவர், தமது தந்தையின் தோட்டத்திலிருந்த
தனிமையான குகை ஒன்றில் வசிக்க தொடங்கினார். பின்னர், இத்தாலியின்
தெற்குக் கடற்கரைப் பகுதியில் மேலும் தனிமையான குகை ஒன்றினை கண்ட
அவர், அங்கே சென்று வாழ தொடங்கினார். அங்கே சுமார் ஆறு வருடங்கள்
இருந்தார்.
1435ல், அவரது இருபது வயதுக்கு முன்னேயே இரண்டு பேர் அவரை பின்பற்றுபவர்களாக
வந்து அவருடன் தியானத்தில் இணைந்தனர். ஃபிரான்சிஸ் அவர்கள் மூவருக்காகவும்
சிறு சிறு அறைகள் மற்றும் ஒரு சிற்றாலயம் ஆகியன கட்டினார். இங்ஙனமாக
இவர்களது தியான குழு தொடங்கியது. 1436ல் அவரும் அவரது சீடர்களான
இருவரும் இணைந்து ஆரம்பித்த தியான குழு, பின்னாளில் "புனிதர்
அசிஸியின் ஃபிரான்சிஸின் துறவிகள்" (Hermits of Saint Francis
of Assisi) என்றானது.
பதினேழு வருடங்களின் பின்னர், துறவியரின் எண்ணிக்கை கூடிப்போகவே,
ஃபிரான்சிஸ் தமது துறவியர் சபைக்கான கோட்பாடுகளை எழுதுவதற்கு
1474ல் திருத்தந்தை "நான்காம் சிக்ஸ்தூஸ்" (Pope Sixtus IV)
அவர்கள் அனுமதி வழங்கினார். பின்னர் இவர்கள் தமது சபையின் பெயரை
"மினிம்ஸ்" ("Minims") என்று மாற்றிக்கொண்டனர். இச்சபைக்கு
"திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர்" (Pope Alexander VI) அவர்களால்
ஒப்புதல் வழங்கப்பட்டதன் பிறகு, ஃபிரான்சிஸ் "கலாப்ரியா மற்றும்
சிசிலி" (Calabria and Sicily) ஆகிய நகரங்களில் சிறிய சிறிய துறவு
மடங்களை நிறுவினார். அவர் அருட்சகோதரியர்க்கான துறவு மடங்களையும்
நிறுவினார். புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் அவர்களை முன்னுதாரணமாகக்
கொண்டு வாழ்பவர்களுக்காக "மூன்றாம் நிலை சபை" (Third order) ஒன்றினையும்
நிறுவினார்.
ஃபிரான்சிஸ் தவத்தை நேசித்தார். கன்னெஞ்சரான பாவிகளை மனந்திருப்பினார்.
பிளேக் போன்ற கொள்ளை நோய்களைத் தடுத்தார். நோய்களைக் குணப்படுத்தினார்.
திருத்தந்தையின் கட்டளைக்குக் கீழ்படிந்து ஃபிரான்ஸ்
நாட்டுக்குச் சென்று அரசர் "பத்தாம் லூயிசை" (Louis XI of
France) நல்ல மரணத்திற்கு தயாரித்தார்.
மரித்த அரசர் பத்தாம் லூயிஸின் பின்னர் முடி சூடிய அரசர் "எட்டாம்
சார்லஸ்" (Charles VIII) ஃபிரான்சிசை பின்செல்பவராக இருந்தார்.
அவர் ஃபிரான்சிசை தம்முடன் வைத்துக்கொண்டார். ஆட்சியில் அவ்வப்போது
தோன்றும் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை இவரிடம் பெற்றார். இந்த
அரசர் "மினிம்ஸ்" (Minims) சபைக்காக "பிலெஸ்சிஸ்" (Plessis) என்ற
இடத்திலும் ரோம் நகரில் "பின்சியன்" (Pincian Hill) மலையிலும்
துறவு மடங்களை கட்டினார்.
ஃபிரான்சிஸ் ஃபிரான்ஸ் நாட்டிலும் அநேகரை திருச்சபையின்பால் ஈர்த்தார்.
அரசர் எட்டாம் சார்லசுக்கு பின்னர் 1498ல் ஃபிரான்ஸ்
நாட்டுக்கு முடி சூடிய அரசர் "பன்னிரெண்டாம் லூயிசும்" (Louis
XII) ஃபிரான்சிசை பின்செல்பவராக இருந்தார். ஃபிரான்சிஸ் இத்தாலிக்கு
திரும்பிச் செல்ல விரும்பினார். ஆனால், அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும்
இழக்க விரும்பாத அரசர் அவரை திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை.
தமது வாழ்வின் இறுதி மூன்று மாதங்களையும் தனிமையிலேயே கழித்த
ஃபிரான்சிஸ், 91 வயது நிரம்பிய ஒரு வாரகாலத்திலேயே தமது மரணத்துக்கான
தயாரிப்புகளை தாமே மேற்கொண்டார். 1507ம் ஆண்டின் பெரிய வியாழன்
அன்று, அவர் தமது துறவற சகாக்களை ஒன்று கூட்டினார். கடின
வாழ்விலும் சாசுவதமான நோன்புகளை கடைபிடிக்கும்படியும், பரஸ்பர
தொண்டாற்றவும் அறிவுறுத்தினார். மறுநாள், பெரிய வெள்ளியன்று,
மீண்டும் அவர்கள அனைவரையும் ஒன்றுகூட்டினார். அவர்களுக்கு
வேண்டிய அனைத்து ஆலோசனைகளையும் அறிவுறுத்தினார். தமது சபைக்கான
தலைவராகவும் ஒருவரை நியமித்தார். பின்னர் அவர் இறுதி சடங்குகளைப்
(Last Rites) பெற்றார். தூய யோவானின் (St. John) திருமுகத்திலிருந்து
திருப்பாடுகளை (Passion) வாசிக்கச் சொல்லிக் கேட்டார். அவர்கள்
அதனை வாசிக்கையிலேயே, 2 ஏப்ரல் 1507 பெரிய வெள்ளியன்று
"பிலெஸ்ஸிஸ்" (Plessis) என்ற இடத்தில் அவரது உயிர் பிரிந்தது. |
|
|