Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஃபிடேலிஸ் ✠(St. Fidelis of Sigmaringen)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 24)
✠ புனிதர் ஃபிடேலிஸ் ✠(St. Fidelis of Sigmaringen)
* மறைப்பணியாளர், குரு, மறைசாட்சி :
(Religious, Priest and Martyr)

* பிறப்பு : அக்டோபர் 1577
சிக்மரிங்ஞன் (Sigmaringen)

* இறப்பு : ஏப்ரல் 24, 1622
க்ருஸ்ச், சீவிஸ் இம் ப்ரட்டிகவ் (தற்போதைய ஸ்விட்சர்லாந்து)
(Grüsch, Seewis im Prättigau (Now part of Switzerland)

* ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

* முக்திபேறு பட்டம் : மார்ச் 24, 1729
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

புனிதர் பட்டம் : ஜூன் 29, 1746
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

* முக்கிய திருத்தலம் :
வெல்ட்கிர்ச்சேன் கபுச்சின் துறவு மடம், ஃபெல்ட்கிர்ச், ஆஸ்திரியா
(Capuchin friary of Weltkirchen (Feldkirch), Austria)

* பாதுகாவல் : மறைபரப்பு பேராயம்

புனிதர் ஃபிடேலிஸ், கப்புச்சின் (Capuchin friar) சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளரும், கல்வியில் சிறந்த பேரறிஞரும், மறைசாட்சியும் ஆவார். இப்புனிதர் தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாட்டின் "சீவிஸ் இம் ப்ரட்டிகவ்" (Seewis im Prättigau) எனுமிடத்தில் தமது எதிர்ப்பாளர்களால் கொலை செய்யப்பட்டார்.

"மார்க் ராய்" (Mark Roy) என்ற இயற்பெயர் கொண்ட ஃபிடேலிஸ், தற்போதைய ஜெர்மனி நாட்டின் சிக்மரிங்கன் என்ற நகரில் 1577ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் "ஜான் ரே" (John Rey) ஆகும். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஃபிடேலிஸ், "பிரைபெர்க்" (University of Freiburg) பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் தத்துவம் ஆகியன கற்றார். தாம் பயின்ற பல்கலையிலேயே தத்துவம் கற்பித்த இவர், சட்ட கல்வியில் முனைவர் பட்டம் வென்றார். தமது மூன்று ஆசிரியர் நண்பர்களுடன் இணைந்து இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு புதிய மொழிகளை கற்று ஆழ்ந்த அறிவை பெற்றார்.

ஏழைகளின் வழக்கறிஞர் :
மார்க் ராய், தனது வழக்கறிஞர் பணியை 'என்சிசீம்' நகரில் "ஏழைகளுக்கு நீதி" என்ற இலட்சியத்துடன் தொடங்கினார். செல்வந்தர்களால் ஏமாற்றப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட ஏழை மக்களின் வழக்குகளை எடுத்து நடத்தி நீதியை நிலைநாட்டினார். எவ்வித இலாபத்தையும் எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தியதால் சக வழக்கறிஞர்களின் இன்னல்களுக்கு உள்ளாகி மனமுடைந்தார்.

கப்புச்சின் துறவி :
பணம், பொருள், பதவி என்ற உலகத்தின் போக்கும், நீதிமன்றங்களில் நீதிக்கு தண்டனை கிடைப்பதையும், ஏழைகள் அநியாயமாக நசுக்கப்படுவதையும் கண்டு மனம் நொந்து, தனக்கு உகந்த பணி இதுவன்று என உதறித் தள்ளி, செபத்திலும், தபத்திலும், தனது பாதையை செலுத்தினார். ஏழைகளுக்கு பணி செய்ய கப்புச்சின் சபையை நாடினார், ஆனால், இவரது செல்வ செழிப்புடைய குடும்பப் பின்னணி, மிகப்பெரிய படிப்பு ஆகியவை தடையாக இருந்தாலும் தொடர்ந்து போராடி கப்புச்சின் சபையில் 4 அக்டோபர் 1612ல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

மறைபரப்பு பேராயத்தின் முதல் மறைச்சாட்சி :
பிரிவினை சபையினருக்கு சுவிஸ், பிரிகாளியா, பிரட்டிக்காவு, மேயன்பெல்ட் மற்றும் சுவபேயா பகுதிகளில் நற்செய்தியை முழங்கி பலரை மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்திற்கு மனம் திருப்பினார். இதனால் பிரிவினை சபையினரின் கடும் கோபத்துக்கு உள்ளானார்.

1622ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 24ம் நாளன்று, சீவிஸ் என்ற ஊரில் உள்ள ஆலயத்தில் சில ஆஸ்திரிய அரசு சிப்பாய்களின் பாதுகாவலுடன் மறையுரையாற்றுகையில் கால்வினிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் (Calvinist agitators) தாக்குதலுக்கு ஆளானார். அவரை நோக்கி வெடித்த துப்பாக்கி குண்டிலிருந்து அதிசயமாக தப்பினார். உடனே அவர் அங்கிருந்த ஆஸ்திரிய சிப்பாய்களாலும் சில கத்தோலிக்க மக்களாலும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். எதிர் சபை நண்பர் ஒருவர் அவருக்கு தங்க இடம் தர முன்வந்தார். ஆனால், தமது வாழ்க்கை கடவுள் கைகளில் உள்ளது என்று கூறி மறுத்த ஃபிடேலிஸ், தமது இருப்பிடத்துக்கு திரும்பும் வழியில், ஆயுதம் தாங்கிய சுமார் இருபது கால்வினிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் (Calvinist agitators) வழி மரிக்கப்பட்டார். அவர்கள் அவரை கத்தோலிக்க விசுவாசத்தை கைவிட வற்புறுத்தினர். ஆனால், ஃபிடேலிஸ் தமது விசுவாசத்தை கைவிட மறுத்ததால் இரக்கமற்று கொலை செய்யப்பட்டார்.

1746ம் ஆண்டு, புனிதர் பட்டமளிக்கப்பட்ட இப்புனிதர், ஆறு மாதங்களின் பின்னர் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.

===============================================================================
தூய பிதேலிஸ்

நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் (மத் 5: 6)

வாழ்க்கை வரலாறு

தூய பிதேலிஸ், 1577 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சிக்மரின்ஞன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து ரேபர்க் நகரில் இருந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னாளில் தான் எங்கு கல்வி பயின்றாரோ அங்கேயே அவர் பேராசிரியராகப் பணிசெய்தார். ஒருசில ஆண்டுகளில் இவர் சட்டம் பயின்று வழக்குரைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலத்தில் நிறைய ஏழைகள் வழக்குகளைத் தீர்த்து வைக்க போதிய பணமில்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிதேலிஸ் அவர்களுக்கு இலவசமாகவே வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இப்படி அவர் பணம் வாங்காமலே, ஏழைகளின் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைத்ததால், ஏழைகளின் வழக்குரைஞர் என அழைக்கப்படவும் தொடங்கினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் பணியை செவ்வனே செய்துவந்த பிதேலிஸ், ஒரு கட்டத்தில் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் 1617 ஆம் ஆண்டு, எல்லாவற்றையும் துறந்து, கப்புசியன் சபையில் துறவியாக வாழத் தொடங்கினார். வழக்குரைஞர் பணியைவிட்டு துறவியாக வாழத் தொடங்கிய காலகட்டங்களில் தான் பெரிய பதவியில் இருந்தோம் என்ற மமதையில் எல்லாம் அவர் இருக்காமல், மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்தார். இதனால் சபையில் இருந்த எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார்.

இவருடைய காலத்தில் கால்வினியன், ஸ்விங்கிளியன் போன்ற தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. பிதேலிஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தார். கால்வினியனிசமோ முன்விதிப்படியே எல்லாமும் நடக்கும், அதாவது யார் யார் விண்ணகம் செல்வார், யார் யார் நரகம் செல்வார் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுப்விட்டது என்று சொல்லி வந்தது. அதோடு திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டு மட்டும் திருவருட்சாதனங்கள் என்று போதித்து வந்தது. இதனை பிதேலிஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். எனவே அந்த தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தவர்கள் பிதேலிசுக்கு எதிரான சதி வேளையில் இறங்கினார்கள். அந்த அடிப்படையில் 1622 ஆம் ஆண்டு, அவரைக் கொலை செய்தார்கள். பிதேலிசுக்கு 1746 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிதேலிசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நேர்மையுடன் பணிசெய்வோம்

தூய பிதேலிசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, அவருடைய நேர்மையான வாழ்வும், அதன்மூலம் அவர் ஏழைகளுக்கு இயன்ற உதவியைச் செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. ஒரு வழக்குரைஞராக இருந்துகொண்டு நேர்மையாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் நேர்மையாக இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. தூய பிதேலிசைப் போன்று நாம் நேர்மையாக வாழ முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஆப்ரிக்காவில் நீதியரசராகப் பணி செய்து வந்த ஹம்மாஸ் என்பவருடைய வாழ்க்கையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும் என்று தோன்றது. ஹம்மாஸ் தான் செய்துவந்த பணிக்காக ஊதியம் வாங்குவதில்லை, மாறாக அதனை ஒரு சமூகப் பணியைப் போன்று செய்து வந்தார். பிழைப்புக்காக இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதி, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

அவர் ஒவ்வொருநாளும் ஆற்றுக்குச் சென்று, குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் அவ்வாறு ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்ட வந்தபோது, அவரை இடைமறித்த இருவர், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நடைபாதையில் குடிசை அமைப்பது நல்லதா? என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், "நாம் இப்போது நின்றுகொண்டிருப்பது நடைபாதையில். இங்கே இருந்துகொண்டு வழக்கினை விசாரித்தால் அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். அதனால் ஒரு ஓரமாகப் போய் பேசுவோம்" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவர்கள் இவரும், "ஐயா எங்களுடைய வழக்குக்கான நல்லதொரு தீர்வு உங்களுடைய பேச்சிலிருந்தே கிடைத்துவிட்டது. அதனால் போகிறோம்" என்று விடைபெற்றுச் சென்றார்கள்.

நடைபாதையில் நின்றுகொண்டு பேசுவதே குற்றம் என்று நினைப்பவர், நடைபாதையில் குடிசை அமைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வார் என்பதாலேயே அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள். நீதியரசர் ஹம்மாஸ் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வு அவருடைய நேர்மையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் நேர்மையோடு நடப்பதே ஆகச் சிறந்த ஒரு செயலாகும்.

ஆகவே, தூய பிதேலிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நேர்மையோடும் இரக்கத்தோடும் பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா