✠ புனிதர் கேதரின் ✠(St. Catherine of
Siena) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஏப்ரல்/ April
29) |
✠ புனிதர் கேதரின் ✠(St. Catherine of Siena)
*கன்னியர், மறைவல்லுநர் :
(Virgin, Doctor of Church)
*பிறப்பு : மார்ச் 25, 1347
சியென்னா, சியென்னா குடியரசு
(Siena, Republic of Siena)
*இறப்பு : ஏப்ரல் 29, 1380 (வயது 33)
ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனிய திருச்சபை
(Lutheranism)
*புனிதர் பட்டம் : ஜூன் 29, 1461
திருத்தந்தை இரண்டாம் பயஸ்
(Pope Pius II)
*முக்கிய திருத்தலம் :
புனித மரியா சோப்ரா மினெர்வா, ரோம் மற்றும் புனித கேதரின் பேராலயம்,
சியென்னா
(Santa Maria sopra Minerva, Rome and Shrine of Saint
Catherine, Siena)
*நினைவுத் திருவிழா : ஏப்ரல் 29
*சித்தரிக்கப்படும் வகை :
டோமினிக்கன் சபையினரின் ஆடை, லில்லி மலர், புத்தகம், சிலுவை,
இதயம், முள் முடி, ஐந்து காயம், மோதிரம், புறா, ரோஜா, மண்டை
ஓடு
*பாதுகாவல் :
பென்சில்வேனியா (Pennsylvania), ஐக்கிய அமெரிக்கா (USA),
ஐரோப்பா (Europe), தீ விபத்துக்கெதிராக, இத்தாலி (Italy),
கருச்சிதைவுகள், "அல்லன்டவுன் மறைமாவட்டம் (Diocese of
Allentown), தம் நம்பிக்கைக்காக அவதியுறும் மக்கள், செவிலியர்,
பாலியல் சோதனையுறுவோர், நோயுற்றவர்களுக்கு.
சியன்னா நகர புனிதர் கேதரின் ஒரு டோமினிக்கன் மூன்றாம் சபையின்
உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர்
அவிஞ்ஞோன் (Avignon) நகரில் தங்கியிருந்த திருத்தந்தை
பதினொன்றாம் கிரகோரி (Pope Gregory XI) ரோம் நகருக்குத்
திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970ம்
ஆண்டு, இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக
அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் (St.
Francis of Assisi) அவர்களுடன் இணைந்து இவரும் இத்தாலியின்
பாதுகாவலராக கருதப்படுகின்றார்.
வாழ்க்கைக் குறிப்பு :
"கேதரீனா டி ஜியாகோமோ டி பெனின்கசா" (Caterina di Giacomo di
Benincasa) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலியில் உள்ள
சியென்னா என்னும் ஊரில், "கியாகோமோ டி பெனின்கசா" (Giacomo di
Benincasa) மற்றும் "லாப்பா பியகென்டி" (Lapa Piagenti) ஆகிய
பெற்றோருக்கு பிறந்தவர். இவர் பிறந்த வருடமான 1347ம் ஆண்டு,
கறுப்பு மரணங்களால் இத்தாலியின் சியென்னா மிகவும்
பாதிக்கப்பட்டிருந்தது.
கேதரினுடையகு ஐந்து அல்லது ஆறு வயதின்போது கிறிஸ்து இயேசுவின்
முதல் திருக்காட்சி கிடைக்கப்பெற்றார். அதில் இயேசு நாதருடன்
அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் மற்றும் யோவான் ஆகியோரும்
இருந்ததாகவும், இறைவன் தன்னை ஆசிர்வதித்தார் எனவும்,
இக்காட்சியின் முடிவில் தாம் பரவச நிலையை அடைந்ததாகவும்
கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாட்டை
அளித்தார்.
இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின்
கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரை கட்டாயப்படுத்தினர். இதனால்
தன் பெற்றோர் மனம் மாறும்வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது
தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். புனித
தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.
கேதரின், தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை
உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள்
மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.
1366ம் ஆண்டு, அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை
ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது
கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு
போக சொன்னதாக இவர் தன் ஆன்மீக வழிகாட்டியிடம் கூறியுள்ளார்.
இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக்
கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு
இணைந்தனர். இதனால் 1374ம் ஆண்டு, தொமினிக்கன் சபைத்
தலைவர்களால் ஃபிளாரன்ஸ் (Florence) நகரில் தப்பறைக்
கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக
அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய
இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சி படைக்க
மக்களை ஊக்குவித்தார்.
1370ம் ஆண்டின் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார்.
இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி
பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை பதினொன்றாம்
கிரகோரியுடன் மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில்
அவர் திருத்தந்தை நாடுகளின் மேலாளர்களையும், குருக்களையும்
கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.
ஜூன் 1376ல் இவர் தாமாகவே முன்வந்து திருத்தந்தை நாடுகளில்
அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை
பதினொன்றாம் கிரகோரியை மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து ரோமுக்கு
1377ம் ஆண்டு, ஜனவரி மாதம், திரும்பி வரச் செய்தார்.
இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக
ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது
("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர்
திருத்தந்தை ஆறாம் அர்பனுக்கு (Pope Urban VI) துணை புரிய ரோம்
நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார்.
இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும்
வரை வாடினார்.
புனித கேதரினின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின்
சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல்
300 கிடைத்துள்ளன. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர்
அடிக்கடி அவரை 'Papa' (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று
அன்பாக குறிப்பிடுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின்
ரேமண்ட், ஃபிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான
ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti)
குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள்
எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு
பெண்களுக்கு எழுதப்பட்டது.
இவரின் "The Dialogue of Divine Providence" என்னும் நூல்,
1377 - 1378 காலகட்டத்தில் இவர் சொல்லச் சொல்ல
எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக
கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும்
திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது
எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல
எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர்
கூறியுள்ளார்.
இறப்பு :
புனிதர் கேதரின் முப்பத்திமூன்று வயதில் ரோம் நகரின் வசந்த
காலத்தில், 1380ம் ஆண்டு மரித்தார். "தந்தையே, உம் கைகளில் என்
உயிரையும் ஆவியையும் ஒப்படைக்கிறேன் (Father, into Your Hands
I commend my soul and my spirit) என்பதே அவருடைய இறுதி
வார்த்தைகளாகும்.
கேதரின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி
நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை
சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின்
ஆன்ம குரு, ரேமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறுத்தியபோது,
தன்னால் உண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான
வயிற்று வலியால் அவதியுறுவதாகவும் கூறினார் என்பர்.
மினெர்வா மேல் புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில்
இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக
மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம்
செய்யப்பட்டது. இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து
எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
1940ம் ஆண்டு, மே மாதம், ஐந்தாம் நாளன்று, திருத்தந்தை
பன்னிரண்டாம் பயஸ், புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் அவர்களுடன்
சேர்த்து இவரையும் இத்தாலியின் பாதுகாவலராக அறிவித்தார்.
திருத்தந்தை ஆறாம் பவுல், 1970ம் ஆண்டு, இவரை மறைவல்லுநராக
அறிவித்தார். அவிலாவின் புனித தெரேசாவுக்கு அடுத்தபடியாக ஒரு
பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999ம் ஆண்டு,
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இவரை ஐரோப்பிய நாடுகளின்
பாதுகாவலராக அறிவித்தார்.
கேதரின் பசியற்ற நோயால் (Anorexia mirabilis) அவதிப்பட்டார்
என்பர். இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும்,
அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை
பேசியதற்காகவும் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவரின்
காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது
விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு
போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது. |
|
|