✠ புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் ✠(St.
Bernadette Soubirous) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஏப்ரல் 16 |
✠ புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் ✠(St.
Bernadette Soubirous)
*அருட்கன்னியர்/ மரியாள் திருக்காட்சியாளர் :
(Virgin/ Marian apparitions)
*பிறப்பு : ஜனவரி 7, 1844
லூர்தஸ், ஃபிரான்ஸ்
(Lourdes, France)
*இறப்பு : ஏப்ரல் 16, 1879 (வயது 35)
நிவேர்ஸ், ஃபிரான்ஸ்
(Nevers, France)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*முக்திபேறு பட்டம் : ஜூன் 14, 1925
திருத்தந்தை 11ம் பயஸ்
(Pope Pius XI)
*புனிதர் பட்டம் : டிசம்பர் 8, 1933
திருத்தந்தை 11ம் பயஸ்
(Pope Pius XI)
*பாதுகாவல் :
உடல் நோய்வாய்ப்படுதல், லூர்து நகர் (Lourdes), ஃபிரான்ஸ்,
மேய்ப்பர்கள், வறுமைக்கு எதிராக, தங்கள் விசுவாசத்திற்காக ஏளனம்
செய்யப்பட்ட மக்கள்
புனிதர் பெர்னதெத் சௌபிரஸ், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில்
1844ம் ஆண்டு, ஜனவரி மாதம், 7ம் தேதி பிறந்தார். சிறு வயதில்
இருந்தே இயேசு கிறிஸ்துவின் மீதும், அன்னை மரியாளின் மேலும் பக்தியுள்ள
கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு ஆலையில் வேலை
செய்து வந்தார். பெர்னதெத் தனது நேரத்தை பெற்றோருக்கு பயனுள்ள
விதத்தில் செலவழித்தார்.
மரியாளின் காட்சிகள் :
பெர்னதெத்துக்கு 14 வயது நடந்தபோது, ஒருநாள் தனது சகோதரி மற்றும்
தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் "மஸ்சபியேல்" (Massabielle)
என்ற குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், மரியன்னை ஒரு
இளம் பெண்ணாக இவருக்கு காட்சி அளித்தார்.
பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும், "அதோ பாருங்கள் மிகவும்
அழகான ஓர் இளம் பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும்
தோழிக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் மரியன்னை, பெர்னதத்தை
மீண்டும் அதே இடத்திற்கு வரச் சொன்னார். 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி
மாதம், 11ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை 18 முறை இவர் மரியன்னையின்
காட்சிகளைக் காணும் பேறுபெற்றார். இவர் பின்னே ஒரு கூட்டம் பக்தியுடனும்,
மற்றொரு கூட்டம் கேலியுடனும் பின் தொடர்ந்தன.
அந்த இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்று
மரியன்னை பெர்னதெத்திடம் கூறினார். அன்னையின் வேண்டுகோளை பங்குத்
தந்தையிடம் பெர்னதெத் சொன்னபோது, அவர் அந்த காட்சியை நம்ப மறுத்தார்.
காட்சி அளித்த பெண்ணின் பெயரை கேட்டு வருமாறு சொல்லி அனுப்பினார்.
மரியாள் இவரிடம், "நானே அமல உற்பவம்" (Immaculate Conception)
என்று தன்னைப் பற்றிக் கூறினார். இதற்கு பாவமின்றி பிறந்தவர்
என்பது பொருள்.
அதைத் தொடர்ந்து திருச்சபை அதிகாரிகள் காட்சியின் உண்மைத் தன்மையை
ஆய்வு செய்தனர். பெர்னதத் 16வது காட்சியைக் கண்டபோது, இவர்
கையில் இருந்த மெழுகுவர்த்தி தலைகீழாக எரிந்தது. சிலர் 15
நிமிட அளவாக, இவரது கையை தீயினால் சுட்டனர். அது இவரை ஒன்றுமே
செய்யவில்லை. ஒரு காட்சியின்போது, மரியாளின் கட்டளையை ஏற்று
பெர்னதத் தோண்டிய ஊற்று நீர், இக்காலத்தில் அதைப் பருகுபவர்களின்
நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபை இந்த காட்சிகளை முதலில் ஏற்க தயங்கினாலும்,
இவற்றை ஆய்வு செய்த நிபுணர் குழு இக்காட்சிகள் நம்பத் தகுந்தவை
என சான்றளித்தது. இக்காட்சிகளில் காணப்பட்டவர் இயேசுவின் தாய்
மரியாள் என்பதை ஏற்று, அவரை லூர்து அன்னை என்று கத்தோலிக்க
திருச்சபை அழைக்கிறது.
அருட்சகோதரியாக :
பெர்னதெத் தனது 22ம் வயதில், நெவர்ஸ் நகரில் இருந்த கருணையின்
சகோதரிகள் (Sisters of Charity of Nevers) மடத்தில் துறவற
வாழ்வைத் தொடங்கினார். அந்த மடத்தில்தான் இவர் எழுதவும் படிக்கவும்
கற்றுக்கொண்டார். இயேசுவிடமும் மரியன்னையிடமும் மிகுந்த பக்தி
கொண்டவராய் வாழ்ந்தார்.
மேலும் அங்கே தையற் கலைஞராகவும், ஆலய பராமரிப்பாளராகவும் பெர்னதெத்
சிறப்பாக பணி செய்தார். ஆலயத்தில் பயன்படுத்தப்படும் துணிகளில்
இவர் பலவித கைவேலைப்பாடுகள் செய்து அழகுபடுத்தியுள்ளார்.
நோயும் மரணமும் :
இவருக்கு வலது கால் முட்டியின் எலும்பில் காச நோய் வந்தது.
நீண்ட நாட்கள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த பெர்னதெத்,
1879ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதி தனது 35ம் வயதில் இறந்தார்.
புனிதர் பட்டம் :
1927ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் நாளன்று, திருத்தந்தை
பதினேராம் பயஸ் இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்கினார்.
1933ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, அமல உற்பவ அன்னை
திருவிழா அன்று திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம்
வழங்கினார்.
புனித பெர்னதத் சௌபிரசின் அழியாத உடல், இவர் வாழ்ந்த நெவர்ஸ்
நகர மடத்தின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
=================================================================================
தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)
"நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்
விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்
கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்" (மத் 18: 3-4)
வாழ்க்கை வரலாறு
பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அருகில் இருந்த
நெவர்ஸ் என்னும் இடத்தில், 1844 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 7
ஆம் நாள் பெர்னதெத் பிறந்தார். இவர்தான் குடும்பத்தில் மூத்த
பிள்ளை. பெர்னதெத்தின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும்
வசதியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சாப்பாட்டுக்கே
வழியில்லாமல் போனது. பெர்னதெத்துக்கு சிறுவயதிலே ஆஸ்மா நோய்
வந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்படிப்பட்ட சூழலுக்கு
மத்தியில் பெர்னதெத் தன்னுடைய நண்பர்களோடு அருகிலிருந்த மசபெல்
குகைக்கு ஆடு மேய்க்கச் சென்றார்.
1858 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் அவர் இப்படி ஆடு
மேய்த்துக்கொண்டிருந்தபோது, வானிலிருந்து ஒரு பெண் தோன்றினார்.
அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தார், இடையில் ஊதா நிறக் கச்சை
அணிந்திருந்தார். கையில் ஜெபமாலை வைத்திருந்தார். இக்காட்சி
பெர்னதெத்துக்கு மட்டுமே தெரிந்தது. அவருடைய நண்பர்களுக்குத்
தெரியவில்லை. இதை அவர் தன்னுடைய வீட்டிலும் அக்கம்
பக்கத்திலிருந்தவர்களிடமும் சொன்னபோது யாருமே அதை நம்பவில்லை.
மாறாக பெர்னதெத் பிதற்றுகிறார் என்றார்கள்.
தொடர்ந்து பெர்னதெத் மசபெல் குகைக்குச் சென்று, ஆடு
மேய்க்கும்போது, வானத்திலிருந்து தோன்றிய பெண்மணி தன்னை நாமே
அமல உற்பவம் என்றும், பாவ மன்னிப்புப் பெற மனமாறவேண்டும்
என்றும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்றும் அவரிடத்தில் எடுத்துச்
சொன்னார். அதையும் பெர்னதெத் அங்கிருந்த பங்குத்தந்தையிடமும்
அதிகாரிகளிடமும் எடுத்துச் சொன்னபோது அவர்கள், அதனை ஆய்வுக்கு
உட்படுத்திய பின்னே நம்பமுடியும் என்று சொல்லிவந்தார்கள்.
அதற்குள் மரியன்னை பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த செய்தி
மக்களுக்குத் தெரியவர பெருந்திரளான மக்கள் அங்கு வந்தார்கள்.
இதற்கிடையில் 1868 ஆம் ஆண்டு, பெர்னதெத் நெவர்ஸ் நகரில் இருந்த
துறவற சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெபத்திலும்
தவத்திலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து
வந்தார். அது மட்டுமல்லாமல், தாழ்ச்சிக்கு இலக்கணமாக வாழ்ந்து
வந்தார். ஏற்கனவே அவர் ஆஸ்மா நோய்க்கு உள்ளாகி இருந்ததால்
உடலளவில் பெரிதும் கஷ்டப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வந்த ஏப்ரல்
மாதத்தில் அவருடைய நோய் முற்றிப்போனது. இதனால் அவர் படுத்த
படுக்கையானார். ஏப்ரல் 16 ஆம் நாள், தனக்கு ஏற்பட்ட
நோயிலிருந்து மீளமுடியாமல் அப்படியே இறையடி சேர்ந்தார்.
இவருக்கு 1933 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பெர்னதெத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம்,
அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. தாழ்ச்சி
தூய பெர்னதெத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக
முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். அவர் அடிக்கடி
சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.
அவர் சொல்வார், "நான் ஒரு துடைப்பதற்குச் சமமானவள். துடைப்பம்
வீட்டைச் சுத்தமாக்குகிறது என்பதற்காக அதனை வீட்டின் நடுவே
யாரும் வைப்பதில்லை, அதுபோன்றுதான் மரியா தன்னுடைய திருநாமம்
விளங்க என்னைப் பயன்படுத்தினார். அவருடைய திருநாமம்
பரவிவிட்டது. இப்போது என்னுடைய தேவையும் முடிந்துவிட்டது.
இப்போது நான் ஒரு துடைப்பத்தைப் போன்றே கிடக்கிறேன்" என்று.
மரியன்னை தனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர் தலைக்கனத்தோடு
இருக்கவில்லை, தாழ்ச்சியோடுதான் இருந்தார். அவரிடமிருந்த
தாழ்ச்சி நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.
இன்றைக்கு நாம் அடுத்தவரால் உயர்வாக மதிக்கப்படவேண்டும்,
போற்றப்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தாழ்ச்சியோடு
வாழ்வதற்கு முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலைதான் தாழ்ச்சியோடு
வாழ்ந்த தூய பெர்னதெத் முக்கியத்துவம் பெறுகின்றார்.
ஒரு சமயம் மிகச் சிறந்த இசைக் கலைஞராகிய லியோனார்டு
பெர்ன்ஸ்டேன் என்பவரிடம் நிருபர் ஒருவர், "எந்த இசைக்கருவியை
வாசிப்பது மிகவும் கஷ்டம்?" என்று கேட்டார். அதற்கு அவர்,
இரண்டாம் வயலின்" என்றார். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
என்று நிருபர் கேட்டதற்கு அவர், "முதலாம் வயலின் வாசிப்பவர்
எல்லாருடைய கவனத்தையும் பெறுவார், இரண்டாம் வயலின் வாசிப்பவர்
அப்படிக் கிடையாது, அவர் யாருடைய கவனத்தையும் பெறமாட்டார்.
அதனாலேயே இரண்டாம் வயலின் வாசிப்பது மிகவும் கஷ்டம். அதனை
வாசிப்பதற்கு உள்ளத்தில் நிறையத் தாழ்ச்சி தேவை" என்றார்.
ஆமாம், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரால் மட்டுமே இரண்டாம்
வயலினை வாசிக்க முடியும். இன்று நாம் நினைவுகூரும்
பெர்னதெத்தும் தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்
என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
ஆகவே, தூய பெர்னதெத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம்,
அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
|