Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஆக்னெஸ் ✠(St. Agnes of Montepulciano)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 20)
✠ புனிதர் ஆக்னெஸ் ✠(St. Agnes of Montepulciano)
 *டொமினிக்கன் மட தலைவி : (Dominican Priores)

 *பிறப்பு : ஜனவரி 28, 1268
மான்ட்டெபல்சியனோ
(Montepulciano)

 *இறப்பு : ஏப்ரல் 20, 1317
மான்ட்டெபல்சியனோ
(Montepulciano)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *புனிதர் பட்டம் : கி.பி. 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

 *முக்கிய திருத்தலம் :
புனிதர் ஆக்னெஸ் தேவாலயம், மான்ட்டெபல்சியனோ, சியென்னா, இத்தாலி
(Church of St. Agnes, Montepulicano, Siena, Italy)

புனிதர் ஆக்னெஸ், டொமினிக்கன் துறவற சபையைச் சார்ந்த அருட்சகோதரியும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

ஆக்னெஸ், இத்தாலி நாட்டின் மான்டெபல்சியானோ அருகில் உள்ள "க்ராசியானோ"வைச் (Gracciano) சார்ந்த உயர் குடும்பத்தில் 1268ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இவர் சிறந்த கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருக்கு ஒன்பது வயது நடந்தபோதே நகரிலுள்ள "கோணிப்பையின் சகோதரிகள்" (Sisters of the Sack) என்று அறியப்படும் "பெண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்தில்" (Franciscan monastery of women) இணைய தமது பெற்றோரின் அனுமதி பெற்றார். ஒன்பது வயதில் துறவற மடத்தில் இணைய அக்காலத்தில் அனுமதி இல்லையாகையால், இவருக்கு திருத்தந்தையின் விசேட அனுமதி கிடைத்தது. இம்மடத்தின் கன்னியர், மிகவும் கரடுமுரடான சீருடைகளை அணிந்தனர். எளிய, தனிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.

அதன் பிறகு 1281ம் ஆண்டு, இவர் "ப்ரொசெனோ" (Proceno) நகரில் புதிதாக தொடங்கப்பட்ட துறவற மடத்திற்குச் சென்றார். 1288ம் ஆண்டு, தனது இருபதாம் வயதில் இவர் அந்த துறவற மடத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செப வாழ்வில் சிறந்து விளங்கினார். இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்; அவரது வார்த்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

"என் மேல் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் என்னைப் போன்று அதிசயங்களைச் செய்வர்" என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆக்னெசின் வாழ்க்கையில் சிறப்பான விதத்தில் உண்மையாகின. இவர் தனது வாழ்நாட்களிலேயே பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார்.

ஆக்னெஸ், இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்கள் பலரின் மன நோய்களையும், உடல் நோய்களையும் குணப்படுத்தினார். இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பெருகச் செய்தது போலவே, இவரும் அப்பங்களைப் பலமுறைப் பெருகச் செய்திருக்கிறார்.

1306ம் ஆண்டு, மான்டெபல்சியானோ (Montepulciano) நகரிலுள்ள துறவற மடத்தின் தலைமைப் பொறுப்பேற்க ஆக்னெஸுக்கு அழைப்பு வந்தது. திரும்பி வந்த ஆக்னெஸ், முன்னெப்போதும் விட, தீவிர செப வாழ்வில் ஈடுபட்டார். இக்கால கட்டத்தில், எண்ணற்ற திருக்காட்சிகள் காணும் பாக்கியம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர், "சாண்டா மரியா நொவெல்லா" (Santa Maria Novella) எனும் பெயரில், தேவ அன்னைக்கு ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்பினார்.

இவருக்கு, டொமினிக்கன் சபை நிறுவனரான புனிதர் டோமினிக்கின் (St. Dominic Guzman) திருக்காட்சி கிட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஈர்க்கப்பட்ட இவர், டொமினிக்கன் சபையினர் பின்பற்றும் "அகுஸ்தீனிய சட்டதிட்டங்களை" (Rule of St. Augustine) பின்பற்றுமாறு தமது மடத்தின் அருட்சகோதரியரையும் ஊக்கப்படுத்தினார். உள்ளூரிலுள்ள குடும்பங்களிடைய நடக்கும் சண்டை சச்சரவுகளை அமைதிப் படுத்தும் பணிக்கும் இவர் அடிக்கடி அழைக்கப்பட்டார்.

1316ம் ஆண்டு, ஆக்னஸின் உடல்நலம் மிகவும் குறைந்துவிட்டது. அண்டை நகரமான சியான்சியானோ டர்மில் உள்ள வெப்ப நீரூற்றுகளில் குணப்படுத்தி வைப்பதாக இவரது மருத்துவர் பரிந்துரைத்தார். இவரது சமூகத்தின் அருட்சகோதரியர், மருத்துவரின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தினர். மற்ற பலவகை நோயாளிகள் தங்கள் நோய்கள் குணப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஆக்னஸ் நீரூற்றுகளிலிருந்து எந்த ஆதாயத்தையும் பெறவில்லை. அவருடைய உடல்நிலை அத்தகைய அளவிற்கு தோல்வியுற்றது. அவர், தமது மடாலயத்திற்கு ஒரு நகரும் கட்டிலில் (stretcher) மீண்டும் செல்ல வேண்டியிருந்தது. இந்த மடத்திலேயே தாம் இறக்கும்வரை வாழ்ந்தார். 1317ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 20ம் நாளன்று, தமது நாற்பத்தொன்பது வயதில், இவர் மரித்தபோது, இவரது கைகளில் இருந்தும் கால்களில் இருந்தும் இனிமையான நறுமணம் வீசும் திரவம் ஒன்று கசிந்தது.

1726ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் (Pope Benedict XIII) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். மான்டெபல்சியானோ நகர புனிதர் ஆக்னெசின் அழியாத உடல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

===============================================================================
மொன்டே புல்சியானோ நகர தூய ஆக்னஸ்

என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர், நான் விண்ணகம் செல்வது பற்றி மகிழ்ச்சியுறுவார். -தூய ஆக்னஸ்

வாழ்க்கை வரலாறு

ஆக்னஸ் 1268 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள டாஸ்கனி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஆக்னசுக்கு ஐந்து வயது நடக்கும்போது துறவியாகப் போகப்போகிறேன் என்றார். இதைக் கேட்ட அவருடைய பெற்றோர், "இந்த வயதில் அது சாத்தியம் கிடையாது" என்று சொல்லி அவரை வீட்டிலே இருக்க வைத்தனர். ஆக்னசுக்கு ஒன்பது வயது ஆகும்போது மீண்டுமாக அவர், "நான் துறவியாகப் போகப்போகிறேன்" என்றார். உடனே ஆக்னசின் பெற்றோர் ஆக்னசிற்கு துறவற வாழ்வில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவரை துறவற வாழ்வினைத் தேர்ந்துகொள்ள அனுமதித்தனர்.

துறவுமடத்தில் சேர்ந்த பின்னர் ஆக்னஸ் மிகவும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். குறிப்பாக அவர் தூய்மைக்கும் பிறரன்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார். இவரிடத்தில் துலங்கிய தூய்மையான வாழ்வினைப் பார்த்துவிட்டு இவரை 15 வயதிலே துறவற மடத்தின் தலைவியாக ஏற்படுத்தினார்கள். அதன்பின்னரும்கூட இவர் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகவே இருந்து வந்தார்.

ஆக்னஸ், தன்னுடைய அதிகமான நேரத்தை காட்சி தியானத்திற்கு செலவழித்து வந்தார். ஒரு சமயம் இவர் தியானம் செய்துகொண்டிருக்கும்போது அன்னை மரியா குழந்தையோடு இவருக்குக் காட்சி தந்தார். இதைச் சிறிதும் எதிர்பாராத ஆக்னஸ் மிகவும் பரவசமடைந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அன்னை மரியா ஆக்னசிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது, அவர் குழந்தை இயேசுவின் காலை பிடித்துக்கொண்டு, "அன்னையே! குழந்தை இயேசுவை மட்டும் என்னோடு இருக்க அனுமதியும்" என்றார். அதற்கு அன்னை மரியா, "குழந்தை இயேசுவை உன்னிடம் விட்டுவிட்டுப் போகமுடியாது. அது சாத்தியமும் கிடையாது. வேண்டுமானால் நான் தரக்கூடிய இந்த மூன்று கற்களை வைத்துக்கொள், அது என்றைக்காவது தேவைப்படும்" என்று சொல்லிவிட்டு தன்னிடத்தில் இருந்த மூன்று கற்களை கொடுத்துவிட்டு, அன்னை மரியாவும் குழந்தை அங்கிருந்து மறைந்து போனார்கள்.

ஆக்னஸ், மடத்தின் தலைவியாகப் பொறுப்பெடுத்த இரண்டாம் ஆண்டில் ப்ரோசெனா என்ற இடத்தில் துறவற மடம் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்று உணர்ந்தார். அதன்படியே அவர் அங்கு சென்று, துறவற மடம் ஒன்றை அமைத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மொன்டே புல்சியனோ நகரில் சபை ஒன்றை அமைக்கவேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. உடனே அவர் அங்கு சென்று, முன்பு அன்னை மரியா அவருக்குக் கொடுத்த மூன்று கற்களை அடித்தளமாக வைத்து துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, அதில் சபை ஒன்று ஆரம்பித்தார். அங்கு ஏராளமான பேர் வந்து சேர்ந்தார்கள்.

ஆக்னஸ் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நற்கருணை மட்டுமே நீண்ட நாட்களாக உட்கொண்டு வந்தார். அதனால் அவருடைய உடல் பலவீனமடைந்தது. எனவே அவர், 1317 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஆக்னசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம்

தூய ஆக்னசிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் சபைத் தலைவியாக உயர்ந்த பிறகும்கூட குழந்தை மனம் மாறாது இருந்தார் என்பதுதான் உண்மை. ஆகவே, அவரை இன்று நினைவுக்கூருகின்ற நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்தேயு நற்செய்தி 18 வது அதிகாரத்தில் இயேசு, "இறையாட்சி குழந்தைகளுக்கே குழந்தை மனம் கொண்டவர்களுக்கே" என்பார். எனவே, நாம் குழந்தை மனம் கொண்டவர்களாய் இருக்கின்றபோது இறையாட்சிக்கு உரியவர்கள் ஆவோம் என்பது உண்மை.

கல்கத்தாவில் சர்க்கரை தட்டுப்பாடு நிலவிய நேரம். அப்போது ஒருநாள் அன்னைத் தெரசாவைப் பார்க்க இரண்டு சிறுவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய தாயும் வந்திருந்தார். வந்த சிறுவர்கள் இருவரும் அன்னைத் தெரசாவிடம் தங்களிடம் இருந்த சக்கரைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, "அன்னையே! நாங்கள் இருவரும் இனிமேல் காப்பியே அருந்துவதில்லை என முடிவெடுத்திருக்கின்றோம். அப்படிச் சேர்த்த பணம் இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள். இதைக் கேட்டு அன்னை நெகிந்து போனார். அதோடு அந்தக் குழந்தைகளிடம் இருந்த தியாக உள்ளத்திற்காக அவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

ஆம், குழந்தைகள் எப்போதும் அடுத்தவருக்காக இரங்குபவர்கள்; உண்மையான தியாக உள்ளத்தோடு இருப்பவர்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களாய் நாம் இருக்கின்றபோது இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

ஆகவே, தூய ஆக்னசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா