Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஐந்தாம் பயஸ் ✠(Saint Pius V)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 30)
✠ புனிதர் ஐந்தாம் பயஸ் ✠(Saint Pius V)

 *225வது திருத்தந்தை : (225th Pope)

*பிறப்பு : ஜனவரி 17, 1504
போஸ்கோ, மிலன்
(Bosco, Duchy of Milan)

*இறப்பு : மே 1, 1572 (வயது 68)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

*முக்திபேறு பட்டம் : மே 1, 1672
திருத்தந்தை 10ம் கிளமென்ட்
(Pope Clement X)

*புனிதர் பட்டம் : மே 22, 1712
திருத்தந்தை 11ம் கிளமென்ட்
(Pope Clement XI)

*நினைவுத் திருவிழா : ஏப்ரல் 30

*பாதுகாவல் :
வல்லெட்டா (Valletta), மால்டா (Malta), போஸ்கோ மரெங்கோ (Bosco Marengo), இத்தாலி (Italy), பியட்ரெல்சினா (Pietrelcina), ரோகாஃபோர்ட் மண்டோவி (Roccaforte Mondovi) , அலெஸ்ஸாண்ட்ரியா மறைமாவட்டம் (Diocese of Alessandria).

புனிதர் திருத்தந்தை ஐந்தாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவரது சீரியப் பணியால், திரெந்து பொதுச்சங்கத்தின் (Council of Trent) தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு, கத்தோலிக்க விசுவாசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவரது திருமுழுக்கு பெயர் ஆன்டனியோ கிஸ்லியரி (Antonio Ghislieri) ஆகும். 1518ம் ஆண்டு முதல், இவர் மைக்கேல் கிஸ்லியரி (Michele Ghislieri) என்று அழைக்கப்பட்டார்.

தொடக்க காலம் :
ஆன்டனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504ம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும், பக்தியிலும் வளர்ந்தார். 14 வயதில் டொமினிக்கன் துறவற சபையில் நுழைந்தபோது, மைக்கேல் கிஸ்லியரி என்ற பெயரைப் பெற்றார்.

1528ம் ஆண்டு, ஜெனோவா நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். 1550ம் ஆண்டு, ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1556ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 14ம் தேதி, மைக்கேல் கிஸ்லியரி ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சிறிது காலத்திலேயே, 1557ம் ஆண்டு, மார்ச் மாதம், 15ம் நாளன்று, திருத்தந்தை நான்காம் பவுல் (1555-59) இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.

திருத்தந்தையாக :
திருத்தந்தை நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது திருத்தந்தையாக 1566ம் ஆண்டு, ஜனவரி மாதம், 7ம் தேதி பொறுப்பேற்றார்.

திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்க திருச்சபையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.

செயல்பாடுகள் :
திருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார்.

திருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ம் ஆண்டு, ரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் பொது திருப்பலி நூலாக்கினார்.

இவர் நோயாளிகளுக்கென்று பல மருத்துவமனைகளை கட்டினார். உணவின்றி தவித்து, வறுமையில் வாடுவோரின் கண்ணீரைத் துடைத்தார்.

இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். ஃபிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.

துருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் செபமாலை பக்தி முயற்சியின் பலனாகவும், 1571ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் நாளன்று, லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, வெற்றியின் அன்னை விழாவை ஏற்படுத்தினார். இவ்விழா பின்னாளில் செபமாலை அன்னை விழாவாக பெயர்மாற்றப்பட்டு இன்றும் கொண்டாடப் படுகின்றது.

புனிதர் பட்டம் :
6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை ஐந்தாம் பயஸ், இறுதியாக 1572ம் ஆண்டு, மே மாதம், 1ம் தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார்.

1696ம் ஆண்டு, இவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1698ம் ஆண்டு, இவரது அழியாத உடல் புனித மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது.

1672ம் ஆண்டு, மே மாதம், முதல் நாளன்று, திருத்தந்தை 10ம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1712ம் ஆண்டு, மே மாதம், 24ம் தேதி, திருத்தந்தை 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 1969ம் ஆண்டு முதல், இவரது நினைவுத் திருவிழா ஏப்ரல் 30ம் தேதி நினைவுகூறப்படுகிறது.

======================================================================
தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)

"நாம் வெற்றியாளர்களாக மாற அல்ல, நம்பிக்கைக்குரியவர்களாக வாழவே இறைவன் நம்மைப் படைத்துள்ளார்" (அன்னை தெரசா)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஐந்தாம் பத்திநாதர் எனப்படும் அந்தோனி மைக்கேல் 1504 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 17 ஆம் நாள், இத்தாலியில் உள்ள போஸ்கோ என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே இவர் தன்னுடைய பதினான்கு வயதில் டொமினிக்கன் சபையில் சேர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் குருவாகவும், அதன்பின் வந்த ஆண்டுகளில் ஆயராகவும் கர்தினாலாகவும் 1566 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் நாள் திருத்தந்தையாகவும் மாறினார்.

அந்தோனி மைக்கேல் திருத்தந்தையாக உயர்ந்தபின் ஐந்தாம் பத்திநாதர் என்ற பெயரைத் தாங்கியவராய் திருச்சபைக்கு பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக 1545 லிருந்து 1563 வரை நடைபெற்ற திரிதெந்திய (Council of Trent) சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிகத் துணிச்சலாக நடைமுறைப் படுத்தினார். அது மட்டுமல்லாமல் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினை சபைகளின் கோட்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். இதனால் இவருக்குப் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றையெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல், மிகத் துணிச்சலாக திருச்சபைக்காக உழைத்து வந்தார்.

திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள் நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும் கடுமையாக உழைத்தார். குறிப்பாக இங்கிலாந்து அரசியான முதலாம் எலிசபெத்தை திருச்சபையோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பா கண்டத்தில் இருந்த ஏனைய நாடுகளையும் திருச்சபையோடு இணைப்பதற்கு பாடுபட்டார் அதுவும் தோல்வியிலேதான் முடிந்தது. இப்படி பல்வேறு தோல்விகளை அவர் சந்தித்தாலும் திருச்சபைக்காக எதையும் செய்யத் துணிந்து வந்தார்.

1571 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் நாள் துருக்கியப் படைகள் ஐரோப்பிய நாடுகள்மீது படையெடுத்து வந்தன. இதனை உணர்ந்த திருத்தந்தை அவர்கள் கிறிஸ்தவப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, கிறிஸ்தவ நாடுகளைக் காப்பாற்றினார். திருத்தந்தை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் டொமினிக்கன் சபையிலிருந்து கற்றுக்கொண்டு அனைத்துப் புண்ணியங்களையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். இரவில் நீண்டநேரம் முழந்தாள் படியிட்டு ஜெபித்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார்; ஏழை எளியவருக்கு தான தர்மங்களை நிறைய வழங்கினார்; நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் படுத்தினார்.

இப்படி திருச்சபைக்காக பல்வேறு பணிகளைச் செய்துவந்த திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1572 ஆம் ஆண்டு, மே திங்கள் 1 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தந்தை தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தோல்விகள் என்பவை வெறும் தோல்விகள் அல்ல, அவை வெற்றிக்கான படிக்கட்டுகள்

தூய ஐந்தாம் பத்திநாதருடைய வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்ற நம்முடைய மனதில் எழுகின்ற ஒரே சிந்தனை, வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தோல்விகளை வெறும் தோல்விகளாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

திருத்தந்தை அவர்கள் நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் அவர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் பல தோல்விகளைச் சந்தித்தார். அந்தத் தோல்விகளை எல்லாம் கண்டு மனமுடைந்து போகாமல், தொடர்ந்து இயேசுவுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைத்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் கடைசியில் துருக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சந்திக்கின்ற தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெறுவதுதான் சிறப்பான ஒரு காரியமாகும்.

இந்த இடத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தோல்வியைக் குறித்து சொல்கின்ற கருத்துகளையும் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது பொருத்தமானது என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்". தோல்வி என்பது ஒரு சம்பவம்தான், அதை நினைத்து வருந்துவதால் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியவை.

ஆகவே, தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தொடர்ந்து இறைவனுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைப்போம். தோல்விகளைக் கண்டு துவளாமல், அவற்றிலிருந்து பாடம் கற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா