Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் சீசர் டி பஸ் ✠(Blessed Caésar de Bus)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 15)
✠ அருளாளர் சீசர் டி பஸ் ✠(Blessed Caésar de Bus)
 *குரு, சபை நிறுவனர் : (Priest, Founder)

 *பிறப்பு : ஃபெப்ரவரி 3, 1544
கவைல்லன், காம்டட் வெனைஸ்ஸின் (தற்போது ஃபிரான்ஸ்)
(Cavaillon, Comtat Venaissin (now in France)

 *இறப்பு : ஏப்ரல் 15, 1607
அவிக்னான், ஃபிரான்ஸ்
(Avignon, France)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 27, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI)

ஃபிரெஞ்ச் கத்தோலிக்க மத குருவான அருளாளர் சீசர், இரண்டு சபைகளின் நிறுவனராவார்.

1544ம் ஆண்டு ஃபெப்ரவரி 3ம் தேதி, தற்போதைய "ஃபிரான்ஸ்" (France) நாட்டின் "கவைல்லன்" (Cavaillon) என்ற ஊரில் பிறந்த இவர், பதினெட்டு வயதினில் அரசனின் போர்ப் படையில் சேர்ந்தார். பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஃபிரெஞ்ச் எதிர் திருச்சபையை தோற்றுவித்தவர்களான "ஹியூகேநாட்ஸ்" (Huguenots) என்பவர்களுடன் போரில் ஈடுபட்டார். போர் முடிந்து வீடு திரும்பிய பிறகு, விடுமுறை நாட்களில், கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் தமது நேரத்தை செலவழித்தார்.

பின்னர் ஃபிரான்ஸ் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை முற்றுகையிட ஃபிரெஞ்சு கடற்படையினர் ஏற்பாடு செய்தனர். அப்போது சீசர் டி பஸ் தானும், கடற்படையில் சேர முடிவு செய்தார். ஆனால் இவர் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இம்முயற்சியை கைவிட்டார்.

மூன்று ஆண்டுகள் வரை, போரில் பங்கேற்க கூடாது என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் இராணுவ படையின் அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த மூன்று ஆண்டுகளில் போரில் மக்களை கொன்று குவித்ததை நினைத்த சீசர் டி பஸ், மிகவும் மன வேதனைப்பட்டார். இப்பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, பல பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்வின் பாதையை மாற்றி அமைத்தார். தான் வைத்திருந்த பணத்தைக் கொண்டு, ஏழைகள் பலருக்கு உதவினார். பலரின் நோய்களை குணமாக்க பணம் செலவழித்தார்.

பின்னர் தன் சொந்த ஊரான கவைலன்-க்கு திரும்பினார். அப்போது குருவாக பணியாற்றிய தன் உடன்பிறந்த சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீசர் டி பஸ், தான் குருவாக விரும்பி, தன் அண்ணன் ஆற்றிய இயேசுவின் சீடத்துவ பணியை தொடர விருப்பம் தெரிவித்து, உலக ஆசைகளை வெறுத்து, குருமடத்தில் சேர்ந்து 1582ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர், மறையுரை ஆற்றுவதிலும், மறைக்கல்வி போதிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

பிறகு 1592ல் குருமட மாணவர்கள் இறையியல் படிக்கவேண்டுமென்று, ஃபிரான்சிலுள்ள பாரீசில், இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதன் பிறகு அக்கல்லூரியில் படித்த சில மாணவர்களைக் கொண்டு "கிறிஸ்தவ கோட்பாடுகளின் தந்தையர்" (Fathers of Christian Doctrine) என்ற சபையை ஃபிரான்சிலுள்ள அவிக்நானிலும், சுவிட்சர்லாந்திலும் நிறுவினார். திருத்தந்தை "எட்டாம் கிளமெண்ட்" (Pope Clement VIII) அவர்கள் 1597ம் ஆண்டு டிசம்பர் 23ம் நாள், இச்சபைக்கு அங்கீகாரம் வழங்கினார்.

தொடக்கத்தில் ஆண்களுக்கு மட்டுமே இச்சபை நிறுவப்பட்டது. பின்னர் பெண்களுக்காகவும் "கிறிஸ்தவ கோட்பாடுகளின் மகள்கள்" (Daughters of Christian Doctrine) என்ற சபை நிறுவப்பட்டது. இச்சபையே சில வருடங்கள் கழித்து "உருசுலின்ஸ்" (Ursulines) என்று பெயர் மாற்றம் பெற்று, இன்றுவரை இயங்கிவருகிறது.

சீசர் டி பஸ் 1607ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 15ம் நாளன்று, ஃபிரான்சிலுள்ள "அவிக்நான்" (Avignon) என்ற ஊரில் மரித்தார்.

திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்கள் (Pope Pius VII), 1821ம் ஆண்டு, இவரை வணக்கத்துக்குரியவராக அறிவித்தார். 1975ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 27ம் நாளன்று, வத்திகானிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் திருத்தந்தை "ஆறாம் பவுல்" (Pope Paul VI) அவர்களால் இவருக்கு முக்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா