Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் இசிடோர் ✠(St. Isidore of Seville)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 04)
✠ புனிதர் இசிடோர் ✠(St. Isidore of Seville)

 *பேராயர், ஒப்புரவாளர் & மறைவல்லுநர் :
(Arch Bishop, Confessor & Doctor of the Church)

 *பிறப்பு : கி.பி. 560
கார்ட்டஜெனா, ஸ்பெயின்
(Cartagena, Spain)

 *இறப்பு : ஏப்ரல் 4, 636
செவில், ஸ்பெயின்
(Seville, Spain)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

 *புனிதர் பட்டம் : கி.பி. 1598
திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்
(Pope Clement VIII)

 *மறைவல்லுநர் பட்டம் : கி.பி. 1722
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

 *நினைவுத் திருநாள் : ஏப்ரல் 4

 *பாதுகாவல் :
இணையதளம் (The Internet),
கணினி உபயோகிப்போர் (Computer users),
கணினி தொழில்நுட்ப வல்லுநர் (Computer Technicians),
கணினி செயல்முறைத் திட்டம் வகுப்போர் (Programmers),
மாணவர்கள் (Students)

புனிதர் இசிடோர் ஒரு தலைசிறந்த அறிஞரும், முப்பது வருடங்களுக்கும் மேலாக "செவில்" (Seville) உயர்மறை மாவட்டத்தின் பேராயராக சேவையாற்றியவருமாவார். இவர் திருச்சபையின் கடைசித் தந்தையர் என பரவலாக போற்றப்படுபவர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் "மொண்டலேம்பர்ட்" (Montalembert) என்பவர், இவரை "பண்டைய உலகின் இறுதி அறிஞர்" என்று போற்றுகின்றார்.

இசிடோரின் வாழ்க்கையின் 76 வருட காலம் ஸ்பெயின் நாட்டின் திருச்சபையின் போராட்டங்களும் வளர்ச்சியும் மிகுந்த காலம் எனலாம். சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக காலூன்றியிருந்த "விஸிகோதிக்" இனத்தவர்கள் இசிடோர் பிறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்னேதான் தமது தலைநகரை அங்கே அமைத்திருந்தனர். அவர்கள் கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கிறிஸ்துதாம் கடவுள் எனும் கத்தோலிக்கர்கள் ஒருபுறமும் கிறிஸ்து கடவுள் அல்லர் எனும் ஆரிய விஸிகோதிக் இனத்தவர் ஒருபுறமுமாக நாடு இரண்டுபட்டது. இசிடோர் இரண்டுபட்ட ஸ்பெயின் நாட்டை ஒன்றுபடுத்தினார்.

பண்டைய கிரேக்க இலத்தீன் கலை மற்றும் கலாச்சாரத்தின் சிதைவு, கல்வியறிவின்மை மற்றும் உயர்குடியினரின் வன்முறை ஆகியன நிகழ்ந்த காலகட்டத்தில் இவர் "விஸிகோதிக் ஆரிய" (Visigothic Arians) அரசகுல வம்சத்தினரை கத்தோலிக்கத்திற்கு மனம் மாற்றுவதில் தமது சகோதரரான புனிதர் லியாண்டருக்கு (Leander of Seville) உதவுவதில் ஈடுபட்டார். பின்னர், தமது சகோதரரின் மரணத்தின் பின்னரும் அதனைத் தொடர்ந்தார்.

ஸ்பெயின் நாட்டின் "கார்ட்டஜெனா" (Cartagena) என்ற இடத்தில் "செவரியனஸ்" மற்றும் "தியோடரா" (Severianus and Theodora) ஆகிய பெற்றோருக்கு பிறந்த இசிடோர், குறிப்பிடத்தக்க ஹிஸ்பான-ரோமன் (Hispano-Roman) குடும்பங்களைச் சேர்ந்தவர் ஆவார். பெற்றோர் இவரை பக்தியிலும், ஆன்மீகத்திலும் சிறப்பாக வளர்த்தார்கள்.

இயற்கையிலேயே இவர் பிறந்தது ஒரு புனிதர்களின் குடும்பம் எனலாம். இவரது மூத்த சகோதரர் "லியாண்டர்" (Leander of Seville), இளைய சகோதரர் "ஃபல்ஜென்ஷியஸ்" (Fulgentius of Cartagena) மற்றும் சகோதரி "ஃப்ளோரென்டினா" (Florentina) ஆகிய மூவருமே ஸ்பெயின் நாட்டின் நன்கு அறியப்பட்ட புனிதர்கள் ஆவர். ஆனால், இவை யாவையுமே இவருக்கு வாழ்வை இலகுவாக்கிவிடவில்லை. மாறாக கடினமாக்கி விட்டது.

இசிடோர் தமது ஆரம்பக் கல்வியை "செவில்" நகரின் பேராலய பள்ளியில் (Cathedral school of Seville) கற்றார். தன்னிச்சையாகவே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், விரைவில் லத்தின், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு ஆகிய மொழிகளைக் கற்று தேர்ந்தார்.

லத்தின் மொழியின் வல்லுனர்களில் இவரும் ஒருவராக இருந்தார். "The Etymologies" (சொற்தோற்றங்கள்) எனும் புத்தகம், ஒன்பதாம் நூற்றாண்டின் அவரது தலை சிறந்த புத்தகமாகும். இலக்கணம், வானியல், புவியியல், வரலாறு, சுயசரிதை, இறையியல் ஆகியவற்றில் தலை சிறந்த புத்தகங்களை எழுதினர்.

இவர் பல புத்தகங்களை வாசிப்பதிலும், செபிப்பதிலும், தன் நேரங்களை செலவழித்து, தான் படித்தவைகளை வாழ்வாக வாழ்ந்தார். இதனால் இறைவனோடும், மக்களோடும் அதிக தொடர்பு கொண்டிருந்தார். மறைநூல் வாசிக்கும்போது, நாம் இதுவரை பெற்றுக்கொள்ளாத வரங்களையும், அறிவையும், உறவையும் பெறுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு போதித்தார்.

இவரால் பல காரியங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டது. 200 ஆண்டுகள் ஆரியபதிதத்தில் (Arianism) ஊறிக்கிடந்த ஸ்பெயின் நாட்டினை ஆட்டிப்படைத்த விசிகாத் என்ற மக்களை முற்றிலும் மனம்மாற்றினார்.

32 ஆண்டு காலம் செவில் நகர பேராயராக சேவை புரிந்த இவர் 636ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 4ம் நாளன்று இறந்தார்.

இவர் சிறந்த மறைவல்லுநராகவும், திருச்சபையின் ஒளி விளக்காகவும், கடவுளின் திட்டத்தை அன்பு செய்து நிறைவேற்றுபவராகவும் தம் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்தார். செபத்தின் வழியாக, நாம் கற்காததையெல்லாம் கற்றுக்கொள்கிறோம் என்பதனை இவ்வுலக மக்களுக்கு வலியுறுத்திச் சென்றார்.

தூய இசிதோர் (ஏப்ரல் 04)


இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2: 52)

வாழ்க்கை வரலாறு

இசிதோர், 560 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்தில் இவரோடு பிறந்த சகோதரர்கள் லியாண்டர், புல்ஜென்சியஸ் மற்றும் சகோதரி ப்ளோரென்டினா என யாவருமே பிற்காலத்தில் புனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.

இசிதோர் தன்னுடைய மூத்த சகோதரர் லியாண்டர் தந்த உற்சாகத்தினால் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார். இவருடைய எழுத்தாற்றலால் உருவான புத்தகங்கள் அதிகம். "History of the Goths, A history of the world, A Dictionary, Encyclopaedia" போன்றவை எல்லாம் இவருடைய எழுத்தாற்றலுக்கு மிகப்பெரிய சான்றுகள். இப்புத்தகங்கள் எல்லாம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

600 ஆம் ஆண்டு, செவில்லேவில் ஆயராக இருந்த இசிதோரின் மூத்த சகோதர் இறந்துவிடவே, அந்தப் பொறுப்பு இசிதோருக்குக் கொடுக்கப்பட்டது. இசிதோர் ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். இசிதோர் ஏழை எளிய மக்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய ஆயர் இல்லத்தை ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டி எழுப்பினார். மட்டுமல்லாமல் ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்த்து, தங்களுடைய குறைகளை தன்னிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று கூறி, அதன்படியே செய்தார்.

இசிதோர், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று அரும்பாடு பட்டார். அதோடு கூட ஒவ்வொரு பங்காலயத்திற்குப் பக்கத்திலும் குருமடம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குருமடத்தில் சேர்ந்து இளைஞர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வந்தார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, தங்களுடைய குழந்தைகளை குருமடங்களுக்கு அனுப்பி வைத்து ஆன்மீகக் கல்வியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள்.

இப்படி இடையறாது மக்களுக்கும் இறைவனுக்கும் பணி செய்து வந்ததால், இசிதோரின் உடல் நலம் குன்றியது. அதனால் அவர் 636 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறப்பதற்கு சிறு நேரத்திற்கு முன்பாக இறைமக்களிடம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொண்டு, அதன்பிறகே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1598 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் 1722 ஆம் ஆண்டு இறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழைகளுக்கு உதவி செய்தல்

தூய இசிதோரின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அதன்மூலம் அவர் அவர்களுக்குச் செய்த உதவியும் தான் நமது நினைவுக்கு வருகின்றது. இவருடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகளிடத்தில் அன்பும் அவர்களுக்கு உதவியும் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "மிகச் சிறியோராகிய ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்று (மத் 25: 40). ஆம், ஏழைகளுக்குச் செய்கின்ற உதவி இறைவனுக்கே சென்று சேருகின்றது. அது நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது என்பது உண்மை.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவ். அவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று ஒருநாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட அவர் வீல்சேரில் முடங்கிப் போனார். அப்போது பத்திரிக்கையாளர் சிலர் அவருடைய மனைவி டானாலியிடம், "உங்கள் கணவருடைய புனர்வாழ்வு முறை எப்படிப் போகிறது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், "எல்லாருக்கும் நிறைய உதவி செய்கின்றோம்" என்றார். சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு கிறிஸ்டோபர் ரீவ் அவர்களிடம், "எப்போதெல்லாம் எதையோ இழந்த தோல்வி வருகிறதோ அப்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு உதவுவோம். நமக்கு நாமே உதவிக் கொள்ள நல்ல வழி மற்றவருக்கு உதவுவதும் அதனால் வரும் மகிழ்ச்சியும் தான்" என்று கூறினார்.இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிகவும் வியந்துபோனார்.

ஆம், நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏழைகளுக்கு உதவி செய்வது. தூய இசிதோரும் ஏழைகளுக்கு அப்படித்தான் உதவி செய்தார்.

ஆகவே, தூய இசிதோரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா