Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா ✠
(St. Teresa Benedicta of the Cross)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 09)
 ✠ புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா ✠(St. Teresa Benedicta of the Cross)
 
கார்மேல் சபை அருட்சகோதரி மற்றும் மறைசாட்சி :
(Discalced Carmelite nun and Martyr)

பிறப்பு : அக்டோபர் 12, 1891
ப்ரெஸ்லவ் (சிலேசியா), ஜெர்மனி (தற்போது வ்ரோக்ளோ, போலந்து)
(Breslau, German Empire (Now Wrocław, Poland)

இறப்பு : ஆகஸ்ட் 9, 1942 (வயது 50)
ஔஸ்விட்ஸ் - சித்திரவதை முகாம், பொது அரசு (நாஜி-ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து)
(Auschwitz concentration camp, General Government (German-occupied Poland)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : மே 1, 1987
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
கோலோன், ஜெர்மனி
(Cologne, Germany)

புனிதர் பட்டம் : அக்டோபர் 11, 1998
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 9

சித்தரிக்கப்படும் வகை :
ஒரு புத்தகம் (A book), தீ நாக்கு (Flames),
கார்மேல் பெண் துறவியின் ஆடையில் தாவீதின் மஞ்சள் நிற விண்மீன் (Yellow Star of David on a Discalced Carmelite nun's habit, Flames, a book)

பாதுகாவல் :
ஐரோப்பா (Europe), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), மனம் மாறிய யூதர்கள் (Converted Jews), மறைசாட்சியர் (Martyrs), உலக இளைஞர் தினம் (World Youth Day)

"புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா" (St. Teresa Benedicta of the Cross), ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மனம் மாறிய ஒரு ஜெர்மானிய - யூத தத்துவயியலாளர் (German Jewish Philosopher) ஆவார். 13 வயதில், யூத மதத்தின் மீது நம்பிக்கை இழந்ததாலும், கத்தோலிக்க திருச்சபையின் மீது கொண்ட உறுதியான விசுவாசத்தாலும், மறைகல்வி பயின்று 1 ஜனவரி 1922 அன்று கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார். 1934ம் ஆண்டு, "தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்ட கார்மேல் சபையில்" (Discalced Carmelite) இணைந்து துறவு வாழ்வினை மேற்கொண்டார்.

வரலாறு :
"எடித் ஸ்டைன்" (Edith Stein) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1891ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 12ம் நாள், அப்போதைய ஜெர்மனியின் "ப்ரெஸ்லவ்" (Breslau) நகரத்தில் யூதப் பெற்றோருக்கு 11வது குழந்தையாகப் பிறந்தார். இந்நகரம் தற்போது போலந்து நாட்டில் "வ்ரோக்ளோ" (Wrocław, Poland) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. யூதர்களின் முக்கிய விழாவான "பிராயச்சித்த நாள்" விழாவின்போது (Day of Atonement) இவர் பிறந்தார். இவருக்கு 2 வயது நடந்த போது இவரின் தந்தை இறந்தார்.

எடித், மெய்யியல் படிப்பில் சிறந்து விளங்கினார். உண்மையைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 14வது வயதில் கடவுள் நம்பிக்கையை கைவிட்டார். தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்தார். ஒரு சிறந்த கத்தோலிக்கப் பேராசிரியரின் விதவை மனைவிக்கு உதவிகள் செய்து வந்தார். இந்த விதவை, தனது அத்தனை துன்பங்களிலும் சிலுவையில் அறையுண்ட இயேசுவில் விசுவாசம் கொண்டிருந்தது இவருடைய வாழ்வை மாற்றியது.

ஒருசமயம் தனது நண்பரின் இல்லம் சென்றிருந்த சமயத்தில் "புனிதர் அவிலாவின் தெரேசாவின்" (St. Teresa of Avila) வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. அதையும் எடுத்து வாசித்தார் எடித். இது அவரது அகக் கண்களை திறந்தது. இதன் விளைவாக திருமறை விளக்க நூல் ஒன்றையும் திருப்பலி புத்தகம் ஒன்றையும் வாங்கி வாசித்தார். கத்தோலிக்க நம்பிக்கையினைத் தழுவினார். 1 ஜனவரி 1922 அன்று திருமுழுக்கு பெற்ற இவர், 1923 முதல் 1931 வரை "ஸ்பேயர்" (Speyer) எனுமிடத்திலுள்ள "டோமினிக்கன் அருட்சகோதரியர் பள்ளியில்" (Dominican nuns' school) கற்பிக்கும் பணி செய்தார்.

எடித் கற்பிக்கும் பணியை விட்டுவிடவேண்டுமென "நாசி அரசாங்கம்" (Nazi government) வற்புறுத்தியது. திருத்தந்தை "பதினோராம் பயஸ்" (Pope Pius XI) அவர்களுக்கு இவர் எழுதிய கடிதமொன்றில், நாஜி ஆட்சியை கண்டனம் செய்த இவர், கிறிஸ்துவின் பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துவதற்காக, நாஜி ஆட்சியை வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டினார். அவர் திருத்தந்தைக்கு எழுதிய இந்த நீண்ட கடிதத்திற்கு திருத்தந்தையிடமிருந்து பதிலேதும் வரவில்லை. கடிதத்தை திருத்தந்தை படித்தாரா என்பதே தெரியாது. (இருப்பினும், 1937ம் ஆண்டு, நாஜி ஆட்சியை கண்டித்து, ஜெர்மனி மொழியில் ஒரு சுற்றறிக்கையை திருத்தந்தை வெளியிட்டார்.)

இதனால் இவர் 1933ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கொலோன் (Cologne) நகரிலுள்ள "சமாதானத்தின் அன்னை" (St. Maria vom Frieden (Our Lady of Peace) கார்மேல் துறவற (Discalced Carmelite monastery) சபையில் சேர்ந்தார். "சிலுவையின் தெரெசா பெனடிக்ட்டா" என்ற ஆன்மீக பெயரை ஏற்றார். திருச்சிலுவையினால் ஆசீர்வதிக்கப்பட்ட தெரெசா என்பது இதன் பொருள்.

அச்சமயத்தில், 1937ம் ஆண்டில், ஹிட்லரின் நாசிப் படையினர் ஜெர்மனியில் யூதர்களை சித்திரவதை செய்வது தலைதூக்கியது. ஜெர்மனியில் யூதர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததையும் அவர்களது வளமான வாழ்வையும் ஹிட்லரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் அடையாளமாக முதலில் கொலோன் யூதமதத் தொழுகைக் கூடத்தைத் தீக்கிரையாக்கினான் ஹிட்லர்.

எனவே எடித்தின் பாதுகாப்புக்காகவும், கத்தோலிக்கத்துக்கு மாறியிருந்த எடித்தின் இன்னொரு சகோதரி ரோசாவின் (Rosa) பாதுகாப்பிற்காகவும், இவர்களிருவரையும் நெதர்லாந்து நாட்டிலிருந்த "எச்ட்" (Echt, Netherlands) எனும் இடத்திலிருந்த துறவு மடத்துக்கு இவர்களது சபையினர் அனுப்பி வைத்தனர். இறுதியில் நெதர்லாந்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை.

ஹிட்லரின் நாசிப் படைகள் 1940ம் ஆண்டில் நெதர்லாந்தை ஆக்கிரமித்தன. 2 ஆகஸ்ட் 1942 அன்று, தெரேசா, ரோசா மற்றும் பல யூதர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் அவர்கள் "அமெர்ஸ்ஃபூர்ட்" மற்றும் "வெஸ்டேர்பொர்க்" (Amersfoort and Westerbork) ஆகிய சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். "வெஸ்டேர்பொர்க்" முகாமில், எடித்தின் விசுவாசம் மற்றும் அமைதியால் ஈர்க்கப்பட்ட "டட்ச்" அதிகாரி (A Dutch official) ஒருவர், சகோதரியர் இருவரும் தப்பிச் செல்ல ஒரு திட்டம் வகுத்து தந்தார். ஆனால், அதனை எடித் தீர்க்கமாகவும் கடுமையாகவும் அவரது உதவியை மறுத்துவிட்டார். அத்துடன், "இந்த கட்டத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு, அவரது ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளின் தலைவிதியினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எடுத்துவிட்டால், அது முற்றிலும் நிர்மூலமான அழிவு ஆகும்" என்றார்.

1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, அதிகாலை, 987 யூதர்கள் "ஆஷ்விட்ஸ்" (Auschwitz) சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அம்முகாமில் 1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதியன்று, புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டாவும் அவரது சகோதரியும் இன்னும் பலரும் நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு இறந்தனர்.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II), இவரை ஐரோப்பாவின் ஆறு பாதுகாவலர்களுல் ஒருவராகவும் அறிவித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா