Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இரண்டாம் சிக்ஸ்டஸ் ✠(St. Sixtus II)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 06)
 ✠ புனிதர் இரண்டாம் சிக்ஸ்டஸ் ✠(St. Sixtus II)

 24ம் திருத்தந்தை/ மறைசாட்சி :
(24th Pope/ Martyr)

பிறப்பு : தெரியவில்லை
கிரேக்க நாடு
(Greece)

இறப்பு : ஆகஸ்ட் 6, 258
ரோம்; ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 6

பாதுகாவல் : நம்பிக்கையுள்ள பெண்களுக்கு, திராட்சை மற்றும் பீன்ஸ் விளைச்சலுக்கு

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus II) ரோம் ஆயராகவும், 24ம் திருத்தந்தையாகவும், கி.பி. 257ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 31ம் நாளிலிருந்து, கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6ம் நாள் வரை ஆட்சி செய்தார். ரோமப் பேரரசன் "வலேரியனின்" (Emperor Valerian) ஆட்சி காலத்தில், கி.பி. 258ம் ஆண்டு நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது "புனிதர் லாரன்ஸ்" (Lawrence of Rome) உள்ளிட்ட ஏழு திருத்தொண்டர்களுடன் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

இவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை "முதலாம் ஸ்தேவான்" (Pope Stephen I) ஆவார். திருத்தந்தை "டையோனிசியஸ்" (Pope Dionysius) இவருக்குப் பிறகு பதவி வகித்தவர் ஆவார். திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 24ம் திருத்தந்தை ஆவார்.

பணிகள் :
திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ் கிரேக்க நாட்டவர் என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு கூறுகிறது.

இரண்டாம் சிக்ஸ்டஸ் தமக்குமுன் பதவியிலிருந்த திருத்தந்தை "முதலாம் ஸ்தேவானின்" (Pope Stephen I) அணுகு முறையிலிருந்து வேறுபட்ட விதத்தில் செயல்பட்டு, திருச்சபைக்கு உள்ளே நிலவிய பூசல்களுக்குத் தீர்வுகள் கண்டார். குறிப்பாக, ரோம மன்னர்கள் கிறிஸ்தவ மறையைத் துன்புறுத்தியபோது தம் உயிரைக் காத்துக் கொள்வதற்காக சில கிறிஸ்தவர்கள் தம் மத நம்பிக்கையைக் கைவிட்டு, ரோம தெய்வங்களுக்குப் பலி செலுத்தியதால் அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்றுக்கொள்வது பற்றி கருத்து வேறுபாடு நிலவியது. அத்தகைய கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று ரோமத் திருச்சபை கருதியது. ஆனால், வட ஆப்பிரிக்கா, சிறு ஆசியா ஆகிய பகுதிகளின் ஆயர்கள், குறிப்பாக கார்த்தேஜ் நகர் ஆயர் சிப்பிரியான், அக்கருத்தோடு உடன்படவில்லை. இதனால் திருச்சபைக்குள் குழப்பம் நிலவியது.

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸ், புனித சிப்பிரியானோடும் பிற ஆயர்களோடும் தொடர்பு கொண்டு நல்லுறவு ஏற்படுத்தினார். இத்தகைய நல்லுறவு ஏற்படுவதற்கு அலெக்சாந்திரிய நகர் ஆயர் தியோனீசிஸ் (இறப்பு: 264/5) என்பவரும் பெரிதும் துணைநின்றார்.

மறைச்சாட்சியாக உயிர்துறத்தல் :
ரோம மன்னன் வலேரியன் முதலில் கிறிஸ்தவ சமயத்தின்பேரில் சகிப்புத்தன்மை காட்டினார். அதன் பின் அதனை மிகவும் கடுமையாகத் துன்புறுத்தலானார். பல ஆயர்களும் குருக்களும் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகக் கல்லறைத் தோட்டங்களில் வழிபாடு நிகழ்த்துவது தடைசெய்யப்பட்டது. அரசு ஏற்பாடு செய்த வழிபாடுகளில் பங்கேற்று, ரோம தெய்வங்களுக்குப் பலிசெலுத்த கிறிஸ்தவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். வலேரியனின் துன்புறுத்தல்களினால் எண்ணற்ற குருக்களும் ஆயர்களும் திருத்தொண்டர்களும் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.

கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள், கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தியபோது சிக்ஸ்டஸ் ஓர் இருக்கையில் அமர்ந்து மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அப்போது அரச இராணுவத்தினர் திடீரென அங்கு நுழைந்து, திருத்தந்தை சிக்ஸ்டசையும் அவரோடு நான்கு திருத்தொண்டர்களையும் கழுத்தை வெட்டிக் கொன்றார்கள். ஒருசில நாட்களுக்குப் பின், மற்றும் மூன்று திருத்தொண்டர்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டார்கள். "ஜானுவரியஸ்" (Januarius), "வின்சென்ஷியஸ்" (Vincentius), "மேக்னஸ்" (Magnus), "ஸ்டீஃபன்" (Stephanus), "ஃபெலிசிஸ்ஸிமஸ்" (Felicissimus) "அகபிடஸ்" (Agapitus) மற்றும் "லாரன்ஸ்" (Lawrence of Rome) ஆகியோர் மறைசாட்சியாக கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்கள் ஆவர்.

அடக்கம் :
மறைச்சாட்சியாக உயிர்துறந்த இரண்டாம் சிக்ஸ்டசின் உடல் ரோம் கலிஸ்டஸ் (Catacomb of Callixtus) கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் கொல்லப்பட்டபோது அமர்ந்திருந்த, இரத்தம் தோய்ந்த இருக்கை அவருடைய கல்லறையின் பின்புறம் அமைக்கப்பட்ட சிறுகோவிலில் வைக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்குப் பின், திருத்தந்தை "முதலாம் டாமசஸ்" (Pope Damasus I) என்பவர் (ஆட்சி: 366-384) இரண்டாம் சிக்ஸ்டசின் கல்லறைமீது ஒரு கல்வெட்டு பதித்தார்.

திருவிழா :
புனிதர் இரண்டாம் சிக்ஸ்டசின் நினைவுத் திருவிழா, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய பெயர் ரோம திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் சேர்க்கப்பட்டது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா