✠ புனிதர் பத்தாம் பயஸ் ✠(St. Pius X) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug
21) |
✠ புனிதர் பத்தாம் பயஸ் ✠(St. Pius X)
✠257வது திருத்தந்தை :
(257th Pope)
✠இயற்பெயர் :
குயிசெப் மேல்ச்சியோர் ஸர்டோ
(Giuseppe Melchiorre Sarto)
✠பிறப்பு : ஜூன் 2, 1835
ரெய்சி, ட்ரேவிசோ, லம்பர்டி-வெனிஷியா, ஆஸ்திரிய பேரரசு
(Riese, Treviso, Lombardy-Venetia, Austrian Empire)
✠இறப்பு : ஆகஸ்ட் 20, 1914 (வயது 79)
அப்போஸ்தலர் மாளிகை, ரோம், இத்தாலி அரசு
(Apostolic Palace, Rome, Kingdom of Italy)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : ஜூன் 3, 1951
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்
(Pope Pius XII)
✠புனிதர் பட்டம் : மே 29, 1954
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்
(Pope Pius XII)
✠நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 21
✠பாதுகாவல் :
அட்லான்டா உயர் மறைமாநிலம்; தேஸ் மொயின்ஸ், ஐயோவா மறைமாநிலம்;
புது நன்மை வாங்குவோர்; கிரேட் பால்ஸ்-பில்லிங்ஸ் மறைமாநிலம்;
[கோட்டயம், இந்தியா மறைமாநிலம்; திருப்பயணிகள்; சான்டா லுசிஜா,
மால்டா; ஸ்பிரிங் பீல்டு, மிசூரி மறைமாநிலம்; சம்போஙா,
பிலிப்பைன்சு மறைமாநிலம்
திருத்தந்தை புனிதர் பத்தாம் பயஸ், கி.பி. 1903ம் ஆண்டு முதல்
1914ம் ஆண்டு வரை கத்தோலிக்க திருச்சபையின் 257-ஆவது
திருத்தந்தையாக ஆட்சி செய்தவர் ஆவார். இவர் ஐந்தாம் பயஸுக்கு
பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையாவார். இவர்
திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கங்கள் அளிப்பதை
எதிர்த்தார். பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின்
மிகமுக்கிய செயல்பாடாக கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபை
சட்ட தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்படுவது இதுவே முதல்
முறையாம். இவர் கிறிஸ்தவ ஒழுக்கங்களை தனிமனித வாழ்விலும்
கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவர் பிறந்த ஊரான ரெய்சி,
இவரின் பொருட்டு பின்நாளின் ரெய்சி பியோ X (இத்தாலிய ஒளி
பெயர்ப்பில் இவரின் பெயர்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இவர் மரியாளிடம் பக்தி கொண்டவராக விளங்கினார். இவர் "Ad Diem
Illum" என்னும் தனது சுற்றறிக்கையில், "மரியாளின் வழியாக
கிறிஸ்துவில் யாவற்றையும் புதுப்படைப்பாக்க" என்னும் தனது
விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையே தனது ஆட்சியின்
குறிக்கோளுரையாகக் கொண்டார். 20ம் நூற்றாண்டில் திருத்தந்தையாக
இருந்தவரில் பத்தாம் பயஸ் மட்டுமே அதிக தளப்பணி செய்தவராவார்.
இந்த அனுபவத்தாலேயே அவரவரின் சொந்த மொழியிலேயே மறைபரப்ப
தூண்டினார்.
இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908ல் நடந்த மெசினா
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி
புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து திருத்தூதரக
அரண்மனையில் தங்க வைத்தார். தம் குடும்பத்திற்கு எந்தவித
உதவியும் பெறவில்லை. இவரின் மிகவிருப்பமான உடன் பிறந்தவரின்
மகன் கடைசிவரை கிராமத்தில் பங்கு குருவாகவே இருந்தார். மற்ற
மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். 'நான்
ஏழையாக பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே சாக
விரும்புகிறேன்' என அடிக்கடி சொல்வார். பலர் இவரின் மரணத்தின்
பின்னர், இவரை புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம்
செலுத்தினர். இதனாலேயே இவரின் புனிதர் பட்ட நிகழ்வு விரைவில்
நடந்தேறியது.
1878ல் மறைமாவட்ட ஆயர் சனாலியின் மரணத்திற்குப் பின்,
மறைமாவட்டப் பேராலய உயர்நிலைக் குருக்கள் பேரவை இவரை (மற்றொரு
ஆயர் நியமிக்கப் படும் வரை) அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
1878 டிசம்பர் முதல் ஜூன் 1880 வரை இப்பொறுப்பில் அவர்
இருந்தார்.
1880-க்கு பின் திரிவிசோ குருமடத்தில் ஆசிரியராக
பணியாற்றினார்.
கர்தினாலாகவும் மூப்பராகவும் :
பதின்மூன்றாம் லியோ இவரை கத்தோலிக்க கர்தினாலாக 12 ஜூன் 1893ல்
உயர்த்தினார். சான் பெர்னாதோ அலே தெர்மியின் (பட்டம் சார்ந்த)
கர்தினால் குருவாகவும், மூன்று நாட்களுக்கு பின் வெனிசின்
மூப்பராகவும் திருத்தந்தை அறிவித்தார். இத்தாலிய அரசுடன்
திருச்சபைக்கு இருந்த மனக்கசப்பால் 1894ம் ஆண்டு வரை
பொறுப்பேற்க இயலவில்லை.
திருப்பீட தேர்வு :
20 ஜூலை 1903 அன்று பதின்மூன்றாம் லியோ காலமானார். அதன் பின்
கூடிய திருப்பீடத்தேர்வில் (en:Papal Election) கர்தினால்
சார்தோ 4 ஆகஸ்ட் 1903 அன்று திருத்தந்தையாக
தேர்த்தெடுக்கப்பட்டார். இவர் தன் ஆட்சிப்பெயராக பத்தாம் பயஸை
தெரிவு செய்தார். 9 ஆகஸ்ட் 1903 அன்று முடிசூட்டு விழா
நடந்தது.
திருப்பீட ஆட்சி :
இவர் கிறிஸ்தவத்தின் அடிப்படைவாத கொள்கையையுடையவர். இதனையே தம்
ஆட்சிக்காலத்திலேயும் கையாண்டார். இவர் முடி சூட்டப்பட்ட
தினத்தன்று இவரின் கழுத்தில் இருந்த சிலுவை முலாம் பூசப்பட்டது
என்பதை அறிந்த பணியாளர்கள் அதிர்ந்தனர். ஆனால் இவர் அமைதியாக
தன்னிடம் வேறு சிலுவை இல்லை எனக்கூறி அதனையே அணிந்து வந்தார்.
திருத்தந்தை எட்டாம் அர்பனால் கொண்டுவரப்பட்ட பழக்கமான,
திருத்தந்தை தனியாக உணவருந்துதலை இவர் அழித்தார். இவர் தன்
நண்பர்களைத் தன்னோடு உணவருந்த அழைப்பு விடுத்தார்.
இவர் சிறுவர்களிடம் தனிப்பட்ட அன்பு செலுத்தினார்.
சிறுவர்களைக் கவர எப்போதும் தன்னுடன் இனிப்புகளை எடுத்துச்
செல்வார். இவர் பங்குகளில் சிறுவர்களுக்கான மறைக்கல்வியின்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, சிறுவர்களை ஆன்மிக
இருளிலிருந்து வெளிக்கொணர முயன்றார்.
திருச்சபை சீர்திருத்தங்களும் இறையியலும் :
கிறிஸ்தியல் மற்றும் மரியாலியலில் :
பத்தாம் பயஸ் தினசரி நற்கருணை வாங்குவதை ஊக்குவித்தார். 1904ல்
வெளியிட்ட சுற்றுமடலில் (Encyclical Ad Diem Illum),
"கிறிஸ்துவில் எல்லாவற்றையும் புனிதமாக்குவதில்" மரியாளுக்கு
இருக்கும் பங்கினை எடுத்தியம்பினார். நாம் அனைவரும் மரியாளின்
ஆன்மிகப் பிள்ளைகளாயிருப்பதால் அவருக்கு அன்னைக்குரிய வணக்கம்
செலுத்தப்பட வேண்டும் என்றார். வாக்கு மனிதர் ஆனார் என
கிறிஸ்துவைப்பற்றி விவிலியம் கூறுகின்றது. ஆனால் மனு உருவான
அவ்வாக்கிற்கு உடல் கொடுத்ததால் அவர் கிறிஸ்துவின்
அன்னையாகிறார். கிறிஸ்துவின் மறைஉடலான திருச்சபை, கிறிஸ்துவின்
மனித உடலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாது, ஆகவே மரியாள்
திருச்சபையின் ஆன்மீக அன்னை மட்டுமல்ல, அவள் உண்மையான
அன்னையும் கூட என்றார்.
திருச்சபை சட்டங்களில் சீர்திருத்தம் :
19 மார்ச் 1904ல் திருச்சபையின் சட்டத்தொகுப்பை உலகம்
முழுமைக்கும் ஒரே சட்டத்தொகுப்பாக்கும்படி கர்தினால் குழாமின்
ஆணையம் ஒன்றை வடிவமைத்தார். இவருக்கு முன் உலகம் முழுமைக்கும்
ஒரே திருச்சபை சட்டத்தொகுப்பு இருந்ததில்லை. இவருக்குப் பின்
திருத்தந்தையானவர்களுள் இருவர் (பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும்
பன்னிரண்டாம் பயஸ்) இவ்வாணையத்தில் இருந்தனர். இவ்வாணையம் தன்
பணியை பதினைந்தாம் பெனடிக்டின் ஆட்சியில் 27 மே 1917 அன்று
நிறைவு செய்தது. அவை 19 மே 1918 அன்று துவங்கி 1983 ஆண்டின்
திருவருகை காலம் வரை நடைமுறையில் இருந்தது.
திருச்சபை சட்டத்தில் சீர்திருத்தம் :
பத்தாம் பயஸ் திருத்தந்தையின் திருப்பீடத்தின் கீழ் வரும்
ஆட்சித்துறைகளை (Roman Curia) சீரமைத்தார். குறிப்பாக
குருத்துவக் கல்லூரிகளை மேல்பார்வையிடும் ஆயர்களின் பணியைப்
புதிய சட்டங்களால் 'Pieni L'Animo' என்னும் சுற்றுமடலின்
மூலமாக திருத்தினார். பல சிறிய குருத்துவக் கல்லூரிகளை
ஒன்றிணைத்து பெரிய குருமடம் உருவாக செய்தார். புதிய குருத்துவ
கல்வி முறையை உருவாக்கினார். பொதுப்பணித்துறை நிறுவனங்களை
குருக்கள் தலைமை தாங்கி நடத்த தடை விதித்தார்.
வாழ்நாளில் செய்ததாக கூறப்படும் புதுமைகள் :
பத்தாம் பயஸ் தன் வாழ்நாளிலேயே பல புதுமைகளை செய்துள்ளார்
என்பர். முடக்கு வாதம் உற்ற குழந்தை இவர் தூக்கியதால் நலம்
பெற்றது என்பர். மூளைக் காய்ச்சல் உடைய இரண்டு வயது
குழந்தையின் பெற்றோர் இவரை செபிக்கும்படி கடிதம் எழுதினர்.
இரண்டு நாட்களில் குழந்தை குணமானது என்பர்.
காச நோயுற்றிருந்த எர்னஸ்தோ ருபின் (பின்நாளின் பலேர்மோவின்
பேராயர்) இவரைக்கண்ட போது, ருபின் குணமடைந்து விடப்போவதாகவும்,
அதனால் குருத்துவக் கல்வியை தொடர மீண்டும் குரு மடத்திற்கு
செல்ல அறிவுறுத்தியதாக குறியுள்ளார்.
பிற செயல்கள் :
பத்தாம் பயஸ் பத்து பேருக்கு முக்திபேறு பட்டமும், நான்கு
பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். பத்தாம் பயஸ் 16
திருத்தூது மடல்களை வரைந்துள்ளார்; அவற்றுள் "Vehementer nos"
என்னும் மடல் ஃபெப்ரவரி 11, 1906, அன்று வெளியிடப்பட்டதில்
1905ம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டின் அரசு சமயம் பிரிவினை
சட்டத்தைக் கண்டித்தார்.
இறப்பும் அடக்கமும் :
1913ல், புகைப்பழக்கம் உள்ள பத்தாம் பயஸ், மாரடைப்பால் உடல்
நலம் குன்றினார். 1914ல் வின்னேற்பு அன்னை திருவிழாவன்று (15
ஆகஸ்ட்) இவர் திரும்பவும் நோய்வாய்பட்டார். முதலாம் உலகப் போர்
துவங்கியதால் மனம் பாதிக்கப்பட அவர், 20 ஆகஸ்ட் 1914 அன்று
இயற்கை எய்தினார். பின்பு இவர் புனித பேதுரு பேராலயத்தில்
அடக்கம் செய்யப்பட்டார்.
இவருக்கு முன்பு வரை திருத்தந்தையரை அடக்கம் செய்யும் முன்,
உடல் பதனிடும்போது உள் உறுப்புகளை நீக்குவர். ஆனால் இவர் இதை
தடை செய்தார். இன்றுவரை இத்தடை அமலில் உள்ளது. |
|
|