✠ புனிதர் பீட்டர் ஜூலியன் ஈமார்ட் ✠(St.
Peter Julian Eymard) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug 03) |
✠
புனிதர் பீட்டர்
ஜூலியன் ஈமார்ட் ✠(St. Peter Julian Eymard)
✠நற்கருணையின் திருத்தூதர் :
(Apostle of the Eucharist)
✠பிறப்பு : ஃபெப்ரவரி 4, 1811
லா மூர், க்ரெனோபுல், ஃபிரெஞ்ச் பேரரசு
(La Mure, Grenoble, French Empire)
✠இறப்பு : ஆகஸ்ட் 1, 1868 (வயது 57)
லா மூர், க்ரெனோபுல், ஃபிரெஞ்ச் பேரரசு
(La Mure, Grenoble, French Empire)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : ஜூலை 12, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
✠புனிதர் பட்டம் : டிசம்பர் 9, 1962
திருத்தந்தை 23ம் ஜான்
(Pope John XXIII)
✠முக்கிய திருத்தலம் :
சேன்டி கிளாடியோ ஈ ஏன்ட்ரியா டேய் போர்கொக்நோனி
(Santi Claudio e Andrea dei Borgognoni)
✠நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 3
✠பாதுகாவல் :
நற்கருணை (Eucharist), நற்கருணைப் பாத்திரம் (Monstrance),
நற்கருணை ஆராதனை (Eucharistic Adoration), நற்கருணை மகாசபை
(Eucharistic Congress), ஆன்மீக ஆடை (Cope), ரோமன்
கத்தோலிக்கம் மற்றும் சில லூதரன் மற்றும் ஆங்கிலிக்க
திருச்சபைகளில் நற்கருணை ஆராதனையின்போது குருவால் அணியப்படும்
ஆடை (Humeral Veil), ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை
(Congregation of the Blessed Sacrament)
புனிதர் பீட்டர் ஜூலியன் ஈமார்ட், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க
குருவும், புனிதரும் ஆவார். இவர், "ஆசீர்வதிக்கப்பட்ட
நற்கருணையின் சபை" (Congregation of the Blessed Sacrament)
என்ற ஆண்களுக்கான ஆன்மீக சபையையும், "ஆசீர்வதிக்கப்பட்ட
நற்கருணையின் ஊழியர்கள்" (Servants of the Blessed Sacrament)
என்ற பெண்களுக்கான ஆன்மீக சபையையும் நிறுவியவர் ஆவார்.
"நற்கருணையின் திருத்தூதர்" (Apostle of the Eucharist) என்ற
சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவரது நினைவுத் திருவிழா ஆகஸ்ட்
மாதம், 3ம் தேதி ஆகும்.
தொடக்க காலம் :
பீட்டர் ஜூலியன் ஃபிரான்ஸ் நாட்டின் "லா மூர்" (La Mure) என்ற
பகுதியில் 1811ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 4ம் நாள்,
பிறந்தார். இவர் சிறு வயது முதலே, இறைவனின் அதி தூய அன்னை
மரியாளின் மீது பக்தி கொண்டிருந்தார். இவர் புதுநன்மை
வாங்குவதற்கு முன்னமேயே, 1823ம் ஆண்டு, மார்ச் மாதம், 16ம்
நாளன்று, "நோட்ர-டேம் டு லாஸ்" (Notre-Dame du Laus)
எனுமிடத்திலுள்ள அன்னை மரியாள் முதன்முதலாய் காட்சி தந்த புனித
ஸ்தலமான "லாஸ் அன்னை அல்லது "பாவிகளின் அடைக்கலம்" (Our Lady
of Laus or Refuge of Sinners) திருத்தலத்திற்கு நடைபயணமாகவே
சென்றார். அதன் பின்னரே, "அன்னை லா சலேத்" (Notre-Dame de La
Salette) திருத்தலத்தில் காட்சியளித்த சரிதம் பற்றி அறிந்தார்.
ஆன்ம புளகாங்கிதமடைந்த ஈமார்ட், ஃபிரான்ஸ் நாடு முழுதுமுள்ள
அன்னை மரியாளின் பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.
கி.பி. 1828ம் ஆண்டு, இவரது தாயார் மரித்ததும், இவர் "மாசற்ற
மரியாளின் துறவற சபையின்" (Oblates of Mary Immaculate)
புகுமுக துறவற நிலையில் இணைந்தார். ஆனால், உடல் நலம்
ஒத்துழைக்காததால் சபையில் இருந்து விலகினார். ஜூலியன் நலிவுற்ற
உடல்நலம் கொண்டவராயிருந்தார். குறிப்பாக, சுவாசப்பைகளின்
பலவீனமானமும், கடுமையான ஒற்றைத்தலைவலியும் அவருக்கு இருந்தது.
பின்னர், அவரது தந்தை மரித்ததன் பின்னர், 1831ம் ஆண்டு,
"க்ரெனோபுல்" மறைமாவட்டத்திலுள்ள (Diocese of Grenoble)
குருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்று 1834ம் ஆண்டு, ஜூலை
மாதம், 20ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். "ச்சாட்"
(Chatte) எனும் நகரின் உதவி பங்குத் தந்தையாக மூன்று வருடங்கள்
பணியாற்றினார். பின்னர், "மவுன்ட் செயின்ட் ஈனார்ட்" (Mount
Saint-Eynard) பங்கின் பங்குத் தந்தையாக பணியாற்றினார். சில
ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 1837ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20ம்
தேதியன்று, "லியோன்" (Lyon) எனுமிடத்திலுள்ள "மரியாளின் துறவற
சபையில்" (Marists (the Society of Mary) இணைந்தார். புனித
மரியாளின் பக்தியையும், திவ்விய நற்கருணை நாதரின் பக்தியையும்
பரப்பினார்.
சபை நிறுவனர் :
1857ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதியன்று, பீட்டர் ஜூலியன்,
"ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் சபை" (Congregation of the
Blessed Sacrament) என்ற ஆண்களுக்கான ஆன்மீக சபையைத்
தொடங்கினார். இந்த சபையைச் சார்ந்த துறவிகள், முதல்முறை
நற்கருணை பெறத் தயார் செய்யும் சிறுவர்களுக்கு மறைக்கல்வி
கற்பிப்பதில் ஆர்வமாக உழைத்தார்கள்.
மேலும் 1858ம் ஆண்டு, அருட்சகோதரி "மார்கரெட் குய்லோட்"
(Marguerite Guillot) என்பவருடன் இணைந்து "ஆசீர்வதிக்கப்பட்ட
நற்கருணையின் ஊழியர்கள்" (Servants of the Blessed Sacrament)
என்ற பெண்களுக்கான ஆன்மீக சபையையை நிறுவினார்.
ஜூலியன் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் வழக்கத்தை
கிறிஸ்தவர்கள் நடுவில் ஏற்படுத்த உழைத்தார்; திவ்விய நற்கருணை
நாதரை அன்பு செய்ய மக்களுக்கு அறிவுரை வழங்கினார். வாரம்
ஒருமுறையாவது நற்கருணை ஆராதனை செய்யும் பக்தி முயற்சியையும்
இவர் மக்களிடையே பரப்பினார்.
அற்புதமான முறையில் திவ்விய நற்கருணையில் எழுந்தருளி இருக்கும்
இயேசு கிறிஸ்துவுக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த பீட்டர் ஜூலியன்
ஈமார்ட், கி.பி. 1868ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 1ம் தேதியன்று,
தமது ஐம்பத்தி ஏழு வயதில், பக்கவாதம் நோயின் சிக்கல்களின்
காரணமாக, "லா மியூர்" (La Mure) நகரில் மரணம் அடைந்தார்.
இவர், 1908ம் ஆண்டு, வணக்கத்திற்குரியவராகவும், 1925ம் ஆண்டு
அருளாளராகவும் உயர்த்தப்பட்டார். 1962ம் ஆண்டு, டிசம்பர்
மாதம், 9ம் நாள், திருத்தந்தை "23ம் ஜான்" (Pope John XXIII)
இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். |
|
|