Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கருப்பரான மோசே ✠(St. Moses the Black)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 28)
✠ புனிதர் கருப்பரான மோசே ✠(St. Moses the Black)

 துறவி, குரு, துறவு தந்தை :
(Monk, Priest and Monastic Father)

பிறப்பு : 330
எத்தியோப்பியா
(Ethiopia)

இறப்பு : 405
ஸ்கேடீஸ், எகிப்து
(Scetes, Egypt)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Catholic Churches)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஒரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

முக்கிய திருத்தலம் :
பரோமேயோஸ் மடம், ஸ்கேடீஸ், எகிப்து
(Paromeos Monastery, Scetes, Egypt)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 28

பாதுகாவல் : ஆப்பிரிக்கா, அறப் போராட்டம்

"கருப்பரான புனிதர் மோசே" (Saint Moses the Black) அல்லது, "கொள்ளைக்காரான மோசே" (Abba Moses the Robber) என்று அழைக்கப்படும் இவர், நான்காவது நூற்றாண்டில், எகிப்து நாட்டில் வாழ்ந்து, கடும் தவம் செய்த துறவியும், கத்தோலிக்க குருவும், குறிப்பிடத்தக்க பாலைவனத் தந்தையருள் (Desert Father) ஒருவரும் ஆவார். இவர் "அறப் போராட்ட திருத்தூதர்" (Apostle of Non-Violence) எனவும் அழைக்கப்படுகின்றார்.

மோசே, ஒரு எகிப்திய (Egypt) அரசு அதிகாரியின் பணியாளாக இருந்தவர் ஆவார். திருடியதாகவும், கொலை செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டு, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இவர் கொள்ளைக்காரர்கள் (Bandits) கும்பல் ஒன்றின் தலைவர் ஆனார். நைல் பள்ளத்தாக்கில் (Nile Valley) பயங்கரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் வடிவில் மிகவும் பெரியதாயும் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருந்தார்.

ஒரு சமயம், கொள்ளை நடத்த சென்ற இடத்தில் ஒரு நாய் குரைத்ததால் மோசே தனது திட்டத்தினை நிரைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் அதன் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கோடு அவரது வீட்டினை கொள்ளை இட மீண்டும் முயன்றார். நாய் மீண்டும் தடுக்கவே, தனது கோபத்தை தணிக்க அவரது ஆடுகளில் சிலவற்றை கொன்றார். ஒருமுறை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாக அலெக்சாந்திரியாவுக்கருகே (Alexandria) இருந்த "ஸ்கேடீஸ்" (Scetes) என்னும் பாலைவனத்தில் வாழ்ந்துவந்த துறவிகளிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு இருந்த துறவியரின் அர்ப்பண வாழ்வு, அவர்களின் அமைதி மற்றும் மனநிறைவு ஆகியவை மோசேவிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அவர் விரைவில் தனது பழைய வாழ்க்கையினை கைவிட்டு, ஒரு கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்று, அத்துறவியர்களின் குழுவில் ஒரு துறவியாக இணைந்தார்.

துறவு வாழ்வு இவருக்கு முதலில் கடினமாகவே அமைந்தது. இவரின் முரட்டு குணம் இவரை அடிக்கடி மனம் தளர வைத்தது. எனினும் தொடர்ந்து தனது ஆன்மீக வாழ்வில் முன்னேறி பல கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். பின்னாட்களில் இவர் வட ஆபிரிக்காவின் மேற்கு பாலைவனத்தில் (Western Desert) இருந்த வனவாசிகளுக்கு ஆன்மீக தலைவரானார். அப்போது இவர் ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவருக்கு 75 வயதானபோது, கி.பி. 405ம் ஆண்டு, "பெர்பர்களின்" (Berbers) ஒரு குழு மடத்தினை தாக்கி அதனை சூறையாட திட்டமிட்டிருப்பதாக இவருக்கு செய்தி வந்தது. இம்மடத்தில் இருந்த பிற துறவிகள் அவர்களை எதிர்த்து போராட விரும்பினாலும், இவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அம்மடத்தில் இருந்த ஏழு துறவிகளைத்தவிர மற்ற எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு படையெடுப்பாளர்களை கைவிரித்து வரவேற்றார். இவரும் இவருடன் மடத்தில் இருந்த எழுவரும் அப்படையெடுப்பாளர்களால் ஜூலை மாதம், 1ம் தேதியன்று, கொல்லப்பட்டனர். இவர் ஒரு மறைசாட்சியாக கருதப்படுகின்றார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா