Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மாக்சிமிலியன் மேரி கோல்ப் ✠(St. Maximilian Kolbe)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 15)
 ✠ புனிதர் மாக்சிமிலியன் மேரி கோல்ப் ✠(St. Maximilian Kolbe)

 குரு, மறைசாட்சி, "அமலோற்பவ அன்னையின் படை" எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கத்தின் நிறுவனர்:
(Priest,Martyr and Founder of Militia Immaculatae, a Worldwide Catholic Evangelization Movement)

பிறப்பு : ஜனவரி 8, 1894
ஸுடுன்ஸ்கா வோலா, போலந்து அரசு, ரஷிய பேரரசு
(Zduńska Wola, Kingdom of Poland, Russian Empire)

இறப்பு : ஆகஸ்ட் 14, 1941 (வயது 47)
ஆஸ்விட்ஸ் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
(Auschwitz concentration camp, General Government)

ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

முத்திபேறு பட்டம் : அக்டோபர் 17, 1971
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 10, 1982
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 14

பாதுகாவல் :
போதை மருந்து அடிமைகளுக்கு எதிராக, போதை மருந்துப்பொருட்களின் அடிமைகள், குடும்பங்கள், சிறைவைக்கப்பட்ட மக்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கைதிகள், சிறைக்கைதிகள், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலைக்கு எதிரான இயக்கம், "அமலோற்பவ அன்னையின் படை" எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கம் (Militia Immaculatae)

புனிதர் மாக்சிமிலியன் கோல்ப், போலந்து நாட்டைச் சார்ந்த, ஃபிரான்சிஸ்கன் (Polish Conventual Franciscan Friar) துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், 1941ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதியன்று, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் நாட்டினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த போலந்து நாட்டிலுள்ள "ஆஸ்விட்ஸ் நாசி இருட்டறை சிறை முகாமில்" (Auschwitz Concentration Camp) அறிமுகமில்லாத இளைஞர் ஒருவருக்காய் தன் உயிரை கொடுத்தார். இவர், அமலோற்பவ அன்னை மரியாளின் பக்தியைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாய் இருந்தார். "வார்சாவ்" (Warsaw) எனும் இடத்திற்கருகே, "நியபோகலனோவ்" (Monastery of Niepokalanw) எனும் துறவு மடத்தை நிறுவி அதனை நிர்வாகம் செய்தார். ஒரு வானொலி நிலையத்தையும், இன்னபிற பதிப்பகங்களையும், நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வந்தார்.

1982ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 10ம் தேதியன்று, இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்கள், கோல்பேயை "தொண்டுப்பணிகளின் மறைசாட்சி" (Martyr of Charity) என்றும், "எமது கடினமான நூற்றாண்டின் பாதுகாவலர்" (The Patron Saint of Our Difficult Century) என்றும் அறிவித்தார்.

அன்றைய ரஷிய பேரரசின் (Russian Empire) பாகமான போலந்து அரசின் (Kingdom of Poland) "ஸ்டுன்ஸ்க வோலா" (Zduńska Wola) எனும் இடத்தில் 1894ம் ஆண்டு, ஜனவரி மாதம், 8ம் தேதியன்று, பிறந்த கோல்ப், "ஜூலியஸ் கோல்ப்" (Julius Kolbe) எனும் ஜெர்மன் இன நெசவுத் தொழிலாளியின் இரண்டாவது மகன் ஆவார். "போலிஷ்" (Polish) மருத்துவச்சியான (Midwife) "மரியா" (Maria Dąbrowska) இவரது தாயார் ஆவார். இவருக்கு நான்கு சகோதரர்கள் இருந்தனர். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவர்களது குடும்பம் மத்திய போலந்திலுள்ள "பபியானிஸ்" (Pabianice) எனும் நகருக்கு குடி பெயர்ந்து சென்றது.

1906ம் ஆண்டு, கோல்ப் சிறுவனாக இருந்தபோது இவருக்கு காணக்கிடைத்த அன்னை மரியாளின் திருக்காட்சி, இவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில், அவர் அதனை பின்வருமாறு வர்ணிக்கிறார்:
"அந்த இரவு, இறைவனின் தூய அன்னையிடம், எனக்கு என்ன ஆகும்; அல்லது நான் என்ன ஆவேன் என்று கேட்டேன். பின்னர், அன்னை இரண்டு கிரீடங்களை கைகளில் ஏந்தியபடி என்னிடம் வந்தார்கள். ஒரு கிரீடத்தின் நிறம் வெண்மை; மற்றொன்றின் நிறம் சிகப்பு. இந்த இரண்டு கிரீடங்களில் ஏதாவது ஒன்றினை ஏற்க தயாராக இருக்கிறாயா என்றார்கள். வெண்ணிற கிரீடத்தை ஏற்றுக்கொண்டால் நான் தூய்மையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், சிகப்பு நிற கிரீடத்தை ஏற்றுக்கொண்டால் நான் ஒரு மறைசாட்சியாக வேண்டும் என்றும் அன்னை சொன்னார்கள். நான், இரண்டையும் ஏற்றுக்கொள்வதாக சொன்னேன்."

1907ம் ஆண்டு, கோல்பும், அவரது மூத்த சகோதரரான ஃபிரான்சிசும் ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் (Conventual Franciscans) பள்ளியில் இணைந்தனர். 1910ம் ஆண்டு, கோல்ப் புகுமுக துறவறத்தில் (Novitiate) இணைய அனுமதிக்கப்பட்டார். அங்கே, "மாக்சிமிலியன்" (Maximilian) எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது முதல் உறுதிப்பாடுகளை 1911ம் ஆண்டிலும், இறுதி உறுதிப்பாடுகளை 1914ம் ஆண்டிலும் ஏற்றார். "மரியா" (Maria) என்ற கூடுதல் பெயரையும் ஏற்றுக்கொண்டார்.

1912ம் ஆண்டு ரோம் (Rome) அனுப்பப்பட்ட கோல்ப், "திருத்தந்தையர் கிரகோரியன் பல்கலைகழகத்தில்" (Pontifical Gregorian University) கல்வி கற்று, 1915ம் ஆண்டு தத்துவ பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1919ம் ஆண்டு, "புனிதர் பொனவென்சூர் திருத்தந்தையர் பல்கலைகழகத்தில்" (Pontifical University of St. Bonaventure) இறையியலில் முனைவர் (Doctorate in Theology) பட்டம் வென்றார்.

1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாளன்று, பாவிகளையும், கத்தோலிக்க திருச்சபையின் எதிரிகளையும் அன்னை மரியாளின் பரிந்துரை மூலம் மனமாற்றம் செய்விப்பதற்கான "அமலோற்பவ அன்னையின் படை" (Militia Immaculatae) எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கத்தினை நிறுவினார்.

கோல்ப் 1918ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 1919ம் ஆண்டு, ஜூலை மாதம், புதிதாய் சுதந்திரம் பெற்ற போலந்து (Newly Independent Poland) நாட்டுக்கு திரும்பிச் சென்றார். அங்கே, அமலோற்பவ அன்னை கன்னி மரியாளின் பக்தி முயற்சிகளை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1919 முதல் 1922ம் ஆண்டு வரையான காலத்தில், "க்ரகோவ் குருத்துவ பள்ளியில்" (Krakw seminary) கற்பிக்கும் பணியாற்றினார். இக்கால கட்டத்தில், இவர் காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார். 1927ம் ஆண்டு, "நியபோகலனோவ்" (Niepokalanw) எனுமிடத்தில் புதியதொரு ஃபிரான்சிஸ்கன் துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

1930ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரையான காலத்தில், கோல்ப் கிழக்காசிய (East Asia) நாடுகளில் தொடர் மறைப்பணியாற்றினார். முதலில் சீன நாட்டிலுள்ள "ஷங்காய்" (Shanghai, China) சென்றார். அங்கே தமது மறைப்பணிகளில் வெற்றி காண இயலாத கோல்ப், ஜப்பான் (Japan) நாட்டுக்கு சென்றார். அங்கே, ஜப்பானின் "நாகசாகி" (Nagasaki) நகரின் புறநகர் பகுதியில், 1931ம் ஆண்டு ஒரு துறவு மடத்தை நிறுவினார். 1932ம் ஆண்டின் மத்தியில் இவர் இந்தியாவின் மலபார் (Malabar) பகுதிகளுக்கு பயணித்தார். அங்கேயும் அவர் ஒரு துறவு மடத்தை நிறுவினார். ஆனால், சிறிது காலத்தின் பின்னர், அது மூடப்பட்டது.

மிகவும் நலிந்த உடல் நலம் காரணமாக, கோல்ப் 1936ம் ஆண்டு போலந்து திரும்பினார். இரண்டு வருடங்களின் பின்னர், 1938ம் ஆண்டு, "நியபோகலனோவ்" (Niepokalanw) எனுமிடத்தில் ஒரு வானொலி நிலையம் தொடங்கினார்.

ஜெர்மனியின் போலந்து (The Invasion of Poland by Germany) படையெடுப்புடன் இரண்டாம் உலகப்போர் (World War II) தொடங்கியது. கோல்ப் தங்கியிருந்த துறவு மடத்தில் தம்முடன் இருந்த சில துறவியர் உதவியுடன் ஒரு தற்காலிக மருத்துவமனையை நிறுவினார். அவருடைய நகரம் ஜெர்மன் காரர்களால் பிடிபட்ட பிறகு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் தேதி, கோல்ப் கைது செய்யப்பட்டார். ஆனால், டிசம்பர் மாதம், 8ம் தேதி, விடுவிக்கப்பட்டார். அவர் ஜெர்மன் குடிமக்களைப் போலவே தனது ஜெர்மனிய வம்சாவளியை அங்கீகரிப்பதற்காக ஜெர்மன் குடிமக்களுக்கு ஒத்த உரிமைகள் வழங்கிய "டட்ச் வோல்க்ஸ்லிஸ்டில்" (Deutsche Volksliste) கையெழுத்திட மறுத்துவிட்டார். விடுவிக்கப்பட்ட கோல்ப், தமது சகா துறவியருடன் இணைந்து, பெரிய போலந்திலிருந்து (Greater Poland) வந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்து தங்கவைத்தனர். ஜெர்மானிய துன்புருத்தல்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்களையும் தமது துறவு மடத்தில் மறைத்து வைத்தனர். இவர்களது துறவு மடம், ஜெர்மானிய நாசிக்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அச்சிடும் அச்சுக்கூடமாகவும் செயல்பட்டது. இவர்களது துறவு மடம், 1941ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 17ம் தேதியன்று, ஜெர்மன் அதிகாரிகளால் மூடப்பட்டது. அன்றைய தினமே, கோல்பும் நான்கு துறவியரும் "கெஸ்டபோ" (German Gestapo) என்றழைக்கப்படும் ஜெர்மனிய நாஸி இரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு, "பவியாக்" (Pawiak Prison) சிறையில் அடைக்கப்பட்டனர். மே மாதம், 28ம் தேதி, அங்கிருந்து "ஆசுவிட்ஸ்" (Auschwitz) சித்திரவதை முகாமுக்கு (கைதி # 16670) மாற்றப்பட்டார். அங்கேயும் குருவாக தொடர்ந்து செயல்பட்டதால், கோல்ப் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

1941ம் ஆண்டு, ஜூலை மாத இறுதியில், மூன்று கைதிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனால் கடும் கோபமுற்ற சிறையின் தலைமை அதிகாரி, மேலும் தப்பிக்கும் முயற்சிகளை தடுப்பதற்காக, பத்து கைதிகளை தேர்ந்தெடுத்து, நிலத்தடி பதுங்கு குழிகளில் அடைத்து கொல்ல உத்தரவிட்டான். அவர்களுள் ஒருவரான "ஃபிரான்சிஸ்செக்" (Franciszek Gajowniczek) என்பவர், தமது குடும்பத்தினரை நினைத்து, "என் மனைவி, என் குழந்தைகள்" என்று கதறி அழுதார். இவருக்காக மனமிரங்கிய கோல்ப், அவருக்குப் பதிலாக தாம் செல்ல முன்வந்தார். நீரும் உணவுமின்றி பதுங்கு குழிகளில் அடைபட்டவர்களை கோல்ப் அன்னை மரியாளிடம் செபிக்க தூண்டினார். நீரும் உணவுமின்றி இரண்டு வாரங்கள் கழிந்தபின்னர், கோல்ப் மட்டுமே அங்கே உயிருடன் இருந்தார். மீதமுள்ள எட்டு பேரும் மரித்துப் போனார்கள். காவலர்கள் பதுங்கு குழியை காலி செய்ய எண்ணினார். ஆகவே, "கார்போலிக் அமிலம்" (carbolic acid) என்னும் விஷ ஊசி போட்டு கொல்ல முடிவெடுத்தனர். கோல்ப், அமைதியாக தமது இடது கையை உயர்த்தி விஷ ஊசியை வாங்கிக்கொண்டார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா