Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠(St. Joseph Calasanz)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 25)
✠ புனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠(St. Joseph Calasanz)
 மறைப்பணியாளர், குரு, நிறுவனர் :
(Religious, Priest and Founder)

பிறப்பு : செப்டம்பர் 11, 1557
பெரல்டா டி ல ஸல், அரகன் அரசு
(Peralta de la Sal, Kingdom of Aragon, Crown of Aragon)

இறப்பு : ஆகஸ்ட் 25, 1648 (வயது 90)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States).

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 7, 1748
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

புனிதர் பட்டம் : ஜூலை 16, 1767
திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமன்ட்
(Pope Clement XIII)

முக்கிய திருத்தலம் :
புனித பெண்டலோன், ரோம்
(San Pantaleone, Rome)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 25

பாதுகாவல் : கத்தோலிக்க பள்ளிகள்

புனிதர் ஜோசஃப் கலசன்ஸ், ஒரு ஸ்பேனிஷ் குருவும், கல்வியாளரும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியளிக்கும் ஆன்மீக பள்ளிகளின் நிறுவனரும், "பியரிஸ்ட்ஸ்" (Piarists) என்றழைக்கப்படும் (The Order of Poor Clerics Regular of the Mother of God of the Pious Schools) சபையின் நிறுவனருமாவார். "ஜோசஃப் கலசேன்க்ஷியஸ்" மற்றும் ஜோசஃபஸ் அ மாட்ரெடே" (Joseph Calasanctius and Josephus a Matre Dei) ஆகிய பெயர்களாலும் அறியப்படும் இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக போற்றப்படுகின்றார்.

ஸ்பெயின் நாட்டின் "அரகன்" (Kingdom of Aragon) அரசின் "பெரல்டா டி ல ஸல்" (Peralta de la Sal) எனுமிடத்தில், 1557ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ம் தேதி பிறந்த இவருடைய தந்தை ஒரு குறுநில பிரபுவும் நகர தலைவருமான "பெட்ரோ டி கலசன்ஸ்" (Pedro de Calasanz y de Mur) என்பவர் ஆவார். இவரது தாயார் பெயர், "மரிய கஸ்டன்" (Mara Gastn y de Sala) ஆகும்.

ஆரம்பக் கல்வியை வீட்டிலிருந்தும், பின்னர் "பெரல்டா" (Peralta) எனுமிடத்திலுள்ள பள்ளியிலும் கற்ற ஜோசஃப், 1569ம் ஆண்டு, "எஸ்டடில்லா" (Estadilla) எனுமிடத்தில், "திரித்துவ சபையின்" (Trinitarian Order) துறவியர் நடத்தும் கல்லூரியில், பண்டைய கிரேக்க இலத்தீன் கலைக்குரிய கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே கல்வி கற்கும் காலத்தில், தமது பதினான்கு வயதில், தாம் குருத்துவம் பெறவேண்டுமென முடிவெடுத்தார். எனினும், இந்த இறை அழைப்பு, அவரது பெற்றோரின் ஆதரவைப் பெறவில்லை.

"ல்லேய்டா" பல்கலையில் (University of Lleida) உயர் கல்வி கற்ற ஜோசஃப், அங்கே தத்துவம் மற்றும் சட்டம் பயின்றார். "வாலென்சியா பல்கலைக்கழகம்" மற்றும் "கோம்ப்லுடேன்ஸ் பல்கலைக்கழகத்தில்" (The University of Valencia and at Complutense University) இறையியல் கற்றார்.

இதற்கிடையே ஜோசஃபின் தாயாரும் சகோதரர் ஒருவரும் மரித்துப் போகவே, அவரது தந்தை ஜோசஃப் திருமணம் செய்துகொண்டு குடும்ப பொறுப்பை ஏற்கவேண்டும் என விரும்பினார். ஆனால், 1582ம் ஆண்டு இவரை தாக்கிய ஒரு நோய், ஜோசஃபை கல்லறையின் விளிம்பு வரை கொண்டுவந்தது. இது, அவரது தந்தையின் கண்டிப்பாய் தணித்தது. நோயிலிருந்து மீண்ட ஜோசஃப், 1583ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதி, "ஊர்ஜெல்" மறைமாவட்ட ஆயர் (Bishop of Urgel) "ஹுகோ அம்ப்ரோசியோ" (Hugo Ambrosio de Moncada) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டில் தமது ஆன்மிக பணிக்காலத்தில், ஜோசஃப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செய்தார். ஏழைகளுக்கு பல்வேறு சேவையாற்றிய இவர், ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் நிறுவனம் ஒன்றினையும் நிறுவி நடத்தினார்.

1592ம் ஆண்டு, தமது 35 வயதில், தமது ஆன்மிக வாழ்க்கையை மேம்படுத்தும் நம்பிக்கையிலும், சில வகையான நலன்களைப் பாதுகாக்கவும் ஜோசஃப் ரோம் பயணமானார். அவர் தமது வாழ்வின் மீதமுள்ள 56 வருடங்களை அங்கேயே வாழ்ந்தார். முக்கியமாக, பெற்றோர்களை இழந்த அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி உள்ளிட்ட தொண்டுப்பணிகளாற்றக்கூடிய அற்புதமான துறையை ரோம் நகரம் இவருக்கு வழங்கியது. ஜோசஃப் "கிறிஸ்தவக் கோட்பாடுகளின் தோழமைக் கூட்டுறவு" (Confraternity of Christian Doctrine) எனும் நிறுவனத்தில் இணைந்தார். தெருக்களில் சுற்றித்திரியும் அனாதைச் சிறார்களை ஒன்றிணைத்து அழைத்து வந்து பள்ளிகளில் சேர்த்தார்.

ரோம் நகரின் "ட்ரஸ்டேவேர்" (Trastevere) பகுதியிலுள்ள (Church of Santa Dorotea) ஆலயத்தின் பங்குத்தந்தையான "அந்தோனி" (Anthony Brendani) இடமும் தந்து, கற்பிக்கும் உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார். கூடுதலாக இரண்டு குருக்களும் உதவுவதாக வாக்குறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, 1597ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஐரோப்பாவிலேயே முதல் இலவச பள்ளியை ஜோசஃப் தொடங்கினார்.

1598ம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு பெருநாளன்று, இத்தாலியின் மூன்றாவது நீளமான நதியான "டிபேர்" (Tiber) நதியில் சரித்திரத்திலேயே அதிக அளவான இருபது மீட்டர் உயர (சுமார் 65 அடி) வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. பேரழிவு பரவலாக இருந்தது. நதியோரம் வசித்த, ஏற்கனவே ஏழைகளான நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்தன. உணவற்றுப் போயின. வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் மேலானது. ஜோசஃப், "ஆன்மீக சகோதரத்துவம்" (Religious fraternity) எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அதிவேகமாக செயலாற்றினார். ஏழை மக்களுக்கு உதவுவதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். நகரை சுத்தம் செய்வதிலும், மீட்பதிலும் உதவ தொடங்கினார். 1600ம் ஆண்டு, நகரின் மத்தியில் "தெய்வ பக்தியுள்ள" (Pious School) பள்ளியை தொடங்கினார். விரைவிலேயே, அந்த பள்ளி, பல கிளைகளுடன் விரிவடைந்தது.

1602ம் ஆண்டு, "தெய்வ பக்தியுள்ள பள்ளிகளின் சபை" (Order of the Pious Schools or Piarists) எனும் சபைக்கான அடித்தளமிட்டார். 1610ம் ஆண்டு, தமது சபையின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை ஒழுங்குகளை எழுதினர். ஜோசஃப், செப்டம்பர் 15, 1616 அன்று, "ஃப்ரஸ்கடி" (Frascati) நகரில் முதல் பொது இலவச பள்ளியை தொடங்கினார். சரியாக ஒரு வருடத்தின் பின்னர், கற்பித்தல் சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆன்மீக நிறுவனமான (Pauline Congregation of the Poor of the Mother of God of the Pious Schools) எனும் சபையை, திருத்தந்தை "ஐந்தாம் பவுல்" (Pope Paul V) அங்கீகரித்தார். மார்ச் 25, 1617 அன்று, அவரும் அவரது பதினான்கு உதவியாளர்களும் இவர்களது புதிய சபையின் முதல் உறுப்பினர்களாகி, சீருடையைப் பெற்றனர். ஆரம்பப்பள்ளியில் கற்பிப்பதை தமது முதன்மை ஊழியமாக செய்த முதல் குருக்கள் இவர்களேயாவர்.

ஆரம்ப காலங்களிலிருந்தே ஒரு குழந்தை ஆன்மீகத்தையும் கல்வியையும் சரியாக போதித்தால், அக்குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று நியாயமாக நம்பலாம் என்று எழுதி வைத்த ஜோசஃப், "பயத்தையல்ல அன்பையே வலியுறுத்துங்கள்" (Emphasizing love, not fear) என்றார்.

புனிதர் ஜோசஃப் கலசன்ஸின் வாழ்க்கையின் இறுதி பத்தாண்டு காலம், மிகவும் சோதனையானதாக இருந்தது. அவரது சபையில் நேர்ந்த சில அவல நிகழ்வுகள் அவருக்கு அவப்பெயரை தேடித்தந்தது. 1642ம் ஆண்டு, அவர் கைது செய்யப்பட்டு விசாரனைக்குள்ளாக்கப்பட்டார். "நேப்பிள்ஸ்" (Naples) நகரின் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த அருட்தந்தை "ஸ்டேஃபனோ செருபனி" (Father Stefano Cherubini) என்பவர் பள்ளியின் சிறுவர்களை பாலியல் ரீதியாக வல்லுறவு கொண்டதன் பின்விளைவுகள் இவரையும் பாதித்தன.

தமது மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், சக தோழர்கள் மற்றும் ரோம் நகர மக்கள் ஆகியோரால் அவரது தூய்மைக்காகவும், தைரியத்துக்காகவும் போற்றப்பட்ட புனிதர் ஜோசஃப் கலசன்ஸ், 1648ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமது 90 வயதில் மரித்தார். "தூய பன்டேலோ" (Church of San Pantale) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா