Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் யூட்ஸ் ✠(St. John Eudes)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 19)
✠ புனிதர் ஜான் யூட்ஸ் ✠(St. John Eudes)

 கத்தோலிக்க குரு/ சபை நிறுவனர் :
(Catholic Priest and Founder)

பிறப்பு : நவம்பர் 14, 1601
ரி, நார்மண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Ri, Normandy, Kingdom of France)

இறப்பு : ஆகஸ்டு 19, 1680 (அகவை 78)
சேன், ஃபிரான்ஸ் அரசு
(Caen, Normandy, Kingdom of France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 25, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)

புனிதர் பட்டம் : மே 31, 1925
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 19

பாதுகாவல் :
இயேசு மரியாள் (யூடிஸ்ட்) தொண்டு நிறுவனம் (Eudists)
கருணை அன்னை சபை (Order of Our Lady of Charity)
பே-கோமியு மறைமாவட்டம் (Diocese of Baie-Comeau)
மறைப்பணியாளர்கள் (Missionaries)

புனித ஜான் யூட்ஸ், ஓரு ஃபிரெஞ்ச் மறைப்பணியாளரும், கத்தோலிக்க குருவும், "இயேசு மற்றும் மரியாளின் தொண்டு நிறுவனம் - யூடிஸ்ட்" (Congregation of Jesus and Mary - Eudists) மற்றும் "கருணை அன்னை சபை" (Order of Our Lady of Charity) ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "நார்மண்டி" (Normandy) என்ற இடத்தினருகேயுள்ள "ரி" (Ri) எனும் கிராமத்தில், 1601ம் ஆண்டு பிறந்த இவருடைய பெற்றோர், "ஐசாக் யூட்ஸ்" மற்றும் "மார்த்தா கோர்பின்" (Isaac Eudes and Martha Corbin) ஆவர். ஃபிரான்ஸின் வடமேற்கு பிராந்தியமான "சேன்" (Caen) எனுமிடத்தில், இயேசு சபையினரிடம் (Jesuits) கல்வி கற்ற இவர், 1623ம் ஆண்டு, மார்ச் மாதம் 25ம் தேதி, "ஃபிரெஞ்ச் ஒரேடரி" (Oratorians) என்றழைக்கப்படும் "இயேசு மற்றும் மாசற்ற மரியாளின் ஒற்றுமை" (Congregation of the Oratory of Jesus and Mary Immaculate) எனும் சபையினருடன் இணைந்தார். இவர், "பிரெஞ்ச் ஆன்மீக பள்ளியின்" (French School of Spirituality) உறுப்பினர் ஆவார். பிரெஞ்ச் ஆன்மீக பள்ளி என்பது, ஒரு அமைப்பு அல்லது தத்துவம் மட்டுமேயல்ல. மாறாக, அது ஒரு ஆவிக்குரிய உயர்ந்த கிறிஸ்தவ அணுகுமுறையும், உணர்வுகள் மூலம் வகைப்படுத்தப்படும் ஆராதனையும், இயேசுவுடனான தனிப்பட்ட உறவும், தூய ஆவியின் மறு கண்டுபிடிப்புமாகும்.

யூட்ஸ், 1625ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2௦ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். குருத்துவம் பெற்றவுடனேயே நோயுற்ற இவர், கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை படுக்கையிலேயே இருந்தார். 1627 மற்றும் 1631 ஆகிய வருடங்களில் ஃபிரான்ஸ் முழுதும் பிளேக் எனும் கொள்ளை நோயால் தாக்குண்டபோது, தமது உடல்நிலையையும் பொருட்படுத்தாது பிளேக் நோயால் தாக்குண்டவர்களுக்கு சேவை புரிய நார்மண்டி (Normandy) சென்றார். நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நற்கருணை ஆராதனைகள் நிகழ்த்தினார். இறந்து போனவர்களை அடக்கம் செய்வதில் உதவிகள் செய்தார்.

தமது 32 வயதில் பங்கு மறைப்பணியாளராக பொறுப்பேற்ற இவர், "நார்மண்டி, ல்லெ-டே-ஃபிரான்ஸ், பர்கண்டி மற்றும் பிரிட்டனி" (Normandy, Ile-de-France, Burgundy and Brittany) ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசங்கங்கள் ஆற்றினார்.

தமது பங்கு மறைப்பணிகளின்போது, வாழ்வில் வழி தவறிப்போன விபச்சாரப் பெண்களால் மிகவும் கலங்கினார். தமது பாவ வாழ்க்கையிலிருந்து மீண்டு வாழ விரும்பிய விபச்சார பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக, 1641ம் ஆண்டு, "கருணையின் அடைக்கல அன்னை" (Order of Our Lady of Charity of the Refuge) எனும் சபையை நார்மண்டியிலுள்ள "சேன்" (Caen) நகரில் நிறுவினார். "அன்னை மரியாளின் திருவருகை" (Visitation) சபையைச் சேர்ந்த மூன்று அருட்சகோதரியர் இவரது உதவிக்காக வந்தனர். 1644ம் ஆண்டு, சேன் நகரில் "கருணையின் அன்னை" (Our Lady of Charity) என்ற பெயரில் ஒரு இல்லம் தொடங்கினார். இவர்களது சபை, கி.பி. 1666ம் ஆண்டு, ஜனவரி மாதம், 2ம் தேதியன்று, திருத்தந்தை "ஏழாம் அலெக்சாண்டர்" (Pope Alexander VII) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

கர்தினால் "ரிசெளியு" (Cardinal Richelieu) மற்றும் பல ஆயர்களின் ஆதரவுடன் "யூடிஸ்ட்ஸ்" என்றழைக்கப்படும் "இயேசு மற்றும் மரியாளின் தொண்டு நிறுவனத்தை" (Congregation of Jesus and Mary (Eudists) 1643ம் ஆண்டு, மார்ச் மாதம், 25ம் தேதியன்று, சேன் நகரில் நிறுவினார். இந்நிறுவனம், குருக்களின் கல்வி மற்றும் பங்கு மறைப்பணி ஆகியவற்றுக்கே அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

யூட்ஸ், இயேசுவின் திருஇருதய பக்தியையும், மரியாளின் மாசற்ற இருதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.

நற்கருணையாண்டவர் பக்தி:
ஃபிரெஞ்ச் பள்ளி மற்றும் "புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ்" (Saint Francis de Sales) ஆகியோரின் படிப்பினைகளின் செல்வாக்கினாலும் கடவுளின் அன்பினைப் பற்றிய உபதேசங்களாலும் ஈர்க்கப்பட்ட யூட்ஸ், நற்கருணையாண்டவரின் பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சேன் நகரிலுள்ள குருத்துவ சிற்றாலயங்களை இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணித்தார். யூட்ஸ், பல்வேறு செபங்களையும் செபமாலைகளையும் திருஇருதயத்திற்காக இயற்றினார். இவர் எழுதிய (Le Cur Admirable de la Trs Sainte Mre de Dieu) என்ற புத்தகம், திருஇருதயங்களின் பக்திக்காக எழுதப்பட்ட முதல் புத்தகமாகும். இயேசு மற்றும் மரியாளின் ஆத்மபலம் கொண்ட திருஇருதயங்களின் பக்தியை கற்பித்தார்.

அருட்தந்தை யூட்ஸ், பல்வேறு புத்தகங்களை எழுதினர். அவற்றுள் சில பின்வருமாறு:
1. இயேசுவின் வாழ்க்கை மற்றும் அரசு. (1637)
(The Life and Kingdom of Jesus, 1637)
2. திருமுழுக்கு மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான ஒப்பந்தம். (1654)
(Contract of Man with God Through Holy Baptism, 1654)
3. நல்ல பாவங்களை ஒப்புக்கொள்பவர் (1666)
(The Good Confessor, 1666)

அருட்தந்தை ஜான் யூட்ஸ், 1680ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 19ம் நாள், சேன் (Caen) நகரில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா