✠ புனிதர் ஜீன் ஜூகன் ✠(St. Jeanne Jugan) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug 30) |
✠ புனிதர் ஜீன் ஜூகன் ✠(St. Jeanne Jugan)
✠மறைப்பணியாளர், சபை நிறுவனர் :
(Religious and Foundress)
✠பிறப்பு : அக்டோபர் 25, 1792
கன்கேல், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ்
(Cancale, Ille-et-Vilaine, France)
✠இறப்பு : ஆகஸ்ட் 29, 1879 (வயது 86)
செயின்ட்-பேர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ்
(Saint-Pern, Ille-et-Vilaine, France)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠அருளாளர் பட்டம் : அக்டோபர் 3, 1982
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
✠புனிதர் பட்டம் : அக்டோபர் 11, 2009
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)
✠முக்கிய திருத்தலம் :
ல டூர் புனிதர் ஜோசஃப், புனித பெர்ன், இல்-எட்-விலைன்,
ஃபிரான்ஸ்
(La Tour Saint-Joseph, Saint-Pern, Ille-et-Vilaine, France)
✠நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 30
✠பாதுகாவல் : ஆதரவற்ற முதியோர்
"சகோதரி சிலுவையின் மேரி" (Sister Mary of the Cross) என்ற
பெயரிலும் அறியப்படும் புனிதர் ஜீன் ஜூகன், தமது வாழ்நாள்
முழுவதையும் ஆதரவற்ற முதியோருக்கு சேவை செய்வதில்
அர்ப்பணிப்புடன் செலவிட்ட ஒரு ஃபிரெஞ்ச் பெண்மணியாவார். அவரது
அளப்பற்ற சேவையின் விளைவாக "எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்"
(Little Sisters of the Poor) எனும் அநாதரவான முதியோருக்கு
சேவையாற்றும் நோக்கில், ரோமன் கத்தோலிக்க ஆன்மீக சேவை நிறுவனம்
நிறுவப்பட்டது. இந்நிறுவனம், ஃபிரெஞ்ச் நகரங்களின் தெருக்களில்
அநாதரவாக விடப்பட்ட முதியோர்களுக்கு சேவை செய்யும்
நோக்கத்திற்காகவே நிறுவப்பட்டது.
இவர், 1792ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 25ம் தேதி, ஃபிரான்ஸ்
நாட்டின் வடமேற்கு பிராந்தியமான "பிரிட்டனி" (Brittany) எனும்
இடத்திலுள்ள "கன்கேல்" (Cancale) எனும் துறைமுக நகரில்
பிறந்தார். "ஜோசஃப்" மற்றும் "மேரி ஜுகன்" (Joseph and Marie
Jugan) தம்பதியரின் எட்டு குழந்தைகளில் ஆறாவது குழந்தையாக
பிறந்தவர் ஆவார். அரசியல் மற்றும் மத எழுச்சிகளின் ஃபிரெஞ்ச்
புரட்சி நடந்த காலத்தில் இவர் வளர்ந்தார். ஜீனுக்கு நான்கு
வயதானபோது, மீனவரான இவரது தந்தை கடலில் காணாமல் போனார்.
கத்தோலிக்க எதிர்ப்புத் துன்புறுத்தல்கள் பரவலாக இருந்த
அக்காலத்தில், பிள்ளைகளுக்கு உணவளிக்கவும், இரகசியமாக சமய
கல்வி அளிப்பதற்காகவும் ஜீனின் தாயார் போராடினார்.
சிறு வயதிலேயே கால்நடை மேய்க்கும் பணிகளை செய்த ஜீன் ஜுகன்,
ஆடைகள் நெய்யும் மற்றும் கம்பளி பின்னும் பணிகளைக்
கற்றுக்கொண்டார். எழுதவும் படிக்கவும் மட்டுமே அவரால் இயன்றது.
தமது 16 வயதில், (Viscountess de la Choue) எனும் பிரபுக்கள்
குடும்பத்தில் சமையலறைப் பணிப்பெண்ணாக சேர்ந்தார். அந்த
பிரபுக்கள் குடும்ப தலைவி, ஒரு பக்தியுள்ள கத்தோலிக்க
பெண்மணியாதலால், ஏழைகளுக்கும் நோயுற்றோர்க்கும் உதவ
போகும்போதெல்லாம் ஜுகனையும் உடன் அழைத்துச் செல்வார். 18
வயதிலும், மீண்டும் ஆறு வருடங்களின் பின்னரும், தமக்காக
திருமணத்துக்கு ஏற்பாடு செய்த தமது தாயாரிடம் மறுத்துப்
பேசினார். தமக்கான இறைவனின் திட்டம் வேறு எதோ ஒன்று உள்ளது
என்றும், அது என்னவென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும்
கூறினார்.
ஜுகனுக்கு இருபத்தைந்து வயதாகையில், "புனிதர் ஜான் யூட்ஸ்"
(St. John Eudes) அவர்கள் தொடங்கிய "இயேசு மற்றும் மரியாள்"
(Congregation of Jesus and Mary) சபையில் உதவியாளராக
இணைந்தார். நகரத்திலுள்ள "புனித-செர்வன்" (Saint-Servan)
மருத்துவமனையில் செவிலியராகவும் பணி புரிந்தார். ஓய்வின்றி
கடுமையாக உழைத்த ஜுகன், ஆறு வருடங்களின் பின்னர், தமது சொந்த
உடல் நலமின்மை காரணமாக மருத்துவமனையை விட்டு சென்றார்.
அதன்பின்னர், "யூடிஸ்ட் மூன்றாம் நிலை" (Eudist Third Order)
சபையில் ஒரு பெண்ணின் உதவியாளராக பன்னிரண்டு வருடங்கள்
பணியாற்றினார். இக்காலத்தில், ஜுகனும் அந்த பெண்ணுமாய்,
நகரிலுள்ள சிறுவர்களுக்கு மறைக்கல்வி போதிக்க
தொடங்கியிருந்தனர். அத்துடன் ஏழைகள் மற்றும் நோயுற்றோர்க்கும்
சேவை புரிய தொடங்கியிருந்தனர்.
கி.பி. 1837ம் ஆண்டு ஜுகனும், 72 வயது நிரம்பிய
"ஃபிரான்கோய்ஸ்" (Franoise Aubert) என்ற பெண்மணியும் இணைந்து,
ஒரு குடிலின் பாகத்தை வாடகைக்கு எடுத்தனர். பின்னர்,
"வெர்ஜினி" (Virginie Tredaniel) என்ற பதினேழு வயது அனாதைப்
பெண்ணும் இவர்களுடன் இணைந்தார். இந்த மூன்று பெண்களும்
இணைந்து, மறைக்கல்வி கற்பிப்பதற்காகவும், ஏழைகளுக்கு உதவவும்,
ஒரு செப சமூகத்தை உருவாக்கினார்கள்.
கி.பி. 1839ம் ஆண்டின் குளிர்காலத்தில், "அன்னி" (Anne
Chauvin) எனும் வயதான பார்வையற்ற பெண்ணை சந்தித்து தமது
இல்லத்துக்கு அழைத்துவந்து, அவருக்கு வேண்டிய சேவைகளை
செய்தார். விரைவிலேயே இன்னும் இரண்டு வயோதிக பெண்மணிகள் வந்து
சேர்ந்தனர். ஒரு டஜன் என்றான வயோதிகர்களின் எண்ணிக்கை, 40
என்றானது. பயன்பாட்டிலில்லாத பள்ளிக்கூடமொன்றையும் வாடகைக்கு
எடுத்தார். இந்நிலையில், "எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்"
(Little Sisters of the Poor) எனும் பெண்களுக்கான ரோமன்
கத்தோலிக்க ஆன்மீக சேவை நிறுவனம் நிறுவி, ஆதரவற்ற
முதியோர்களுக்கு சேவை புரிய தொடங்கினார். அவரும் அவரது
உதவியாளர் பெண்களும் தினமும் நகரின் வீடு வீடாக சென்று
உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற முதியோருக்கு
அவசியமானவற்றை தானமாக பெற்று வந்தனர். இவரது சேவையில் இன்னும்
அதிக இளம்பெண்கள் இணைந்தனர். தெருத்தெருவாக, வீடு வீடாக தானம்
வாங்கியே, மேலதிகமாக நான்கு இல்லங்களை ஜீன் வாங்கினார். கி.பி.
1850ம் ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சபையில்
இணைந்தனர்.
உள்ளூர் ஆயரால் இச்சபையின் "உயர் தலைமைப்" (Superior General)
பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட மடாதிபதியும் அருட்பணியாளருமான
"அகஸ்ட் லீ பைல்லூர்" (Auguste Le Pailleur) என்பவர், ஜீன்
ஜுகணை சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றினார். அந்த
குருவானவர், ஜீனின் உண்மையான குணநலன்களை நசுக்குவதற்கான
வெளிப்படையான முயற்சிகளில் இறங்கினார். சபையின் நிறுவனரான
அவருக்கு, தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும்
பணியே அளிக்கப்பட்டது. இதுவே ஜுகனின் வாழ்க்கையாகிப் போனது.
அடுத்த 27 வருடங்கள், இதேபோன்று, முதியோருக்காக, தெருத்தெருவாக
அலைந்தார். அவரது இறுதி வருடங்களில், அவரது உடல் நலம் குன்றி,
கண்பார்வையும் மங்கிப்போனது.
கி.பி. 1879ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி, ஜீன் ஜுகன்
மரித்தபோது, அவர்தாம் இச்சபையின் நிறுவனர் என்ற
பெரும்பாலோருக்கு தெரியாமலேயே போனது. அவர் மரித்து பதினோரு
வருடங்களின் பின்னர், 1890ம் ஆண்டு, நடந்த விசாரணையின்
பின்னர், குரு "அகஸ்ட் லீ பைல்லூர்" (Auguste Le Pailleur) பணி
நீக்கம் செய்யப்பட்டார். இறுதியில், ஜீன் ஜுகன் அவர்களது
நிறுவனராக ஒப்புக்கொள்ளப்பட்டார்.
இவர்களது சபையின் தலைமை இல்லம், ஃபிரான்ஸ் நாட்டின்
"செயின்ட்-பேர்ன்" (Saint-Pern) எனும் இடத்திலுள்ளது.
"எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the
Poor) எனும் இவர்களது சபை, உலக அளவில், 31 நாடுகளில் இன்று
பரவியுள்ளன. 2014ம் ஆண்டு, ஜனவரி மாதம், 1ம் தேதி நிலவரப்படி,
234 இல்லங்களுடனும், 2,372 உறுப்பினர்களுடனும், இச்சபை
கத்தோலிக்க திருச்சபையின் மிகப்பெரும் சபைகளில் ஒன்றாக
கருதப்படுகின்றது. |
|
|