✠ புனிதர் ஹெலெனா ✠(St. Helena) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug
18) |
✠ புனிதர் ஹெலெனா ✠(St. Helena)
✠ரோமப் பேரரசின் பேரரசி :
(Empress of the Roman Empire)
✠பிறப்பு : கி.பி. 246/50
ட்ரேபனும், பித்தினியா மற்றும் போண்டஸ்
(Drepanum, Bithynia and Pontus)
✠இறப்பு : கி.பி. 327/30 (வயது 80)
ரோம், டுஸ்கனியா எட் உம்ப்ரியா
(Rome, Tuscania et Umbria)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
✠முக்கிய திருத்தலம் :
புனிதர் ஹெலெனா திருத்தலத்திற்கு புனிதர் பேதுரு பேராலயம்
(The shrine to Saint Helena in St. Peter's Basilica)
✠நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 18
புனிதர் ஹெலெனா, ரோமப் பேரரசின் பேரரசியும், பேரரசர் "பெரிய
கான்ஸ்டன்டைண்" (Emperor Constantine the Great) அவர்களின்
தாயாருமாவார். ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணாக பிறந்த இவர்,
கி.பி. 293ம் ஆண்டு முதல், 306ம் ஆண்டு வரை ரோமப் பேரரசை ஆண்ட
பேரரசர் "கான்ஸ்டன்ஷியஸ் க்ளோரஸ்" (Roman Emperor Constantius
Chlorus) என்பவரின் மனைவியானார். பிற்காலத்தில் கி.பி. 306ம்
ஆண்டு முதல், 337ம் ஆண்டு வரை அரசாண்ட பேரரசர் "பெரிய
கான்ஸ்டன்டைண்" (Emperor Constantine the Great) அவர்களின்
தாயாரானார்.
தமது மகன் மீது தாம் கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக, கிறிஸ்தவ
வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் இவர் மிக முக்கிய பிரமுகராக
கருதப்படுகிறார். அவரது இறுதி ஆண்டுகளில், அவர் சிரியா
பாலஸ்தீனம் (Syria Palaestina) மற்றும் ஜெருசலேம் (Jerusalem)
ஆகிய நாடுகளுக்கு புனித ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இப்பயண
காலத்தில், இவர் உண்மையான சிலுவையை கண்டுபிடித்ததாக
கூறப்படுகிறது.
ஹெலெனாவின் பிறந்த இடம் உறுதியாக தெரியவில்லை. 6ம்
நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான "புரோக்கோபியாஸ்" (Procopius)
என்பவரின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ஹெலெனா "பித்தினியா"
(Bithynia) மாகாணத்திலுள்ள "ட்ரேபனும்" (Drepanum) நகரில்
பிறந்தவராவார். கி.பி. சுமார் 330ம் ஆண்டு, ஹெலெனா மரித்ததன்
பின்னர், அவரது மகனும் பேரரசனுமான "பெரிய கான்ஸ்டன்டைண்",
ஹெலெனா பிறந்த நகருக்கு "ஹெலனோபொலிஸ்" (Helenopolis) எனும்
பெயரை மாற்றியமைத்தார். இதுவே ஹெலெனா பிறந்த நகரம் என்பதற்கான
ஆதாரமாகியது. பேரரசர், தமது புதிய தலைநகரான
"கான்ஸ்டன்டினோப்பிலைச்" சுற்றிலும் தொடர்பு வலையமைப்பை
வலுப்படுத்தும் முயற்சியிலிருந்தார் என்றும், நகரின் பெயரை
மாற்றியமைத்ததற்கான காரணம், தமது தாயை கௌரவிப்பதற்காகவேயொழிய,
அவரது பிறந்த நகரை குறிப்பதற்கல்ல என்றும், "பைசான்டைன்
பேரரசின்" (Byzantine Empire) கட்டிடக்கலை (architecture)
வல்லுனரும், கலை மற்றும் வரலாறு ஆகியவற்றின் பிரிட்டன் அறிஞரான
(British scholar) "சிரில் அலெக்சாண்டர் மேங்கோ" (Cyril Mango)
என்பவர் வாதிடுகிறார். அத்துடன், பாலஸ்தீனத்திலுள்ள
"ஹெலனோபொலிஸ்" (Helenopolis in Palestine) மற்றும் "லிடியா"
நாட்டிலுள்ள "ஹெலனோபொலிஸ்" (Helenopolis in Lydia) ஆகிய
நகரங்களும், "போன்டஸ்" மறைமாவட்டத்திலுள்ள (Diocese of Pontus)
"ஹெலெனோபோன்டஸ்" (Helenopontus) மாகாணமும் அநேகமாக
கான்ஸ்டன்டைன் தாயான ஹெலெனாவின் பெயரால் பெயரிடப்பட்டவையாகும்.
பேரரசர் "கான்ஸ்டன்டைண்", தமது தாயாருக்கு ரோம ஏகாதிபத்திய
கௌரவமான (Roman imperial honorific), "அகஸ்டா இம்பெராட்ரிக்ஸ்"
(Augusta Imperatrix) எனும் உயர் கௌரவத்தை அளித்திருந்தார்.
அத்துடன், யூத - கிறிஸ்தவ பாரம்பரியத்தின் (Judeo-Christian
tradition) நினைவுச்சின்னங்களை கண்டுபிடிப்பதற்காக அரச
கருவூலத்திலிருந்து வரம்பற்ற செலவு செய்யும் அதிகாரத்தை
வழங்கியிருந்தார். கி.பி. 326-28ம் ஆண்டு காலத்தில், ஹெலெனா
பாலஸ்தீனத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்கு (Holy Places in
Palestine) புனித பயணம் மேற்கொண்டார்.
கி.பி. 260/265 339/340ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்த
கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரும், பாலஸ்தீனத்துக்கும் மற்ற
கிழக்கு மாகாணங்களுக்கும் ஹெலெனாவின் புனித யாத்திரை விவரங்களை
பதிவு செய்தவருமான "யூசேபிசியஸ்" (Eusebius of Caesarea)
கூற்றின்படி, பெத்தலஹெமிலுள்ள கிறிஸ்துவின் பிறப்பு ஆலயமான,
"நேட்டிவிட்டி ஆலயம்" (Church of the Nativity, Bethlehem)
மற்றும் "ஒலிவ மலையின்" (Mount of Olives) மேலுள்ள
கிறிஸ்துவின் விண்ணேற்பு ஆலயமான "எளியோனா ஆலயம்" (Church of
Eleona) ஆகிய இரண்டினதும் கட்டுமானப் பணிகள் மற்றும் அழகு
படுத்துதல் ஆகிய பணிகளின் பொறுப்புகளை ஹெலெனா ஏற்றிருந்தார்.
சினாயின் (Sinai) எரியும் புதரை (Burning Bush) அடையாளம்
காண்பதற்காக, எகிப்தில் (Egypt) ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்ப
ஹெலெனா கட்டளையிட்டதாக உள்ளூர் நிறுவன புராணக்கதைகள்
கூறுகிறது. கி.பி. 330ம் ஆண்டின் "சினாய்" தீபகற்பத்திலுள்ள
(Sinai Peninsula) "கேதரின் துறவு மடாலயத்திலுள்ள" (Saint
Catherine's Monastery) சிற்றாலயம், "ஹெலெனா சிற்றாலயம்"
(Chapel of Saint Helen) என்றே அழைக்கப்படுகிறது.
உண்மையான சிலுவையும் புனித கல்லறை தேவாலயமும்:
பாரம்பரியங்களின்படி, பல்வேறு புனித பொருட்களையும், அற்புத
பொருட்களின் மிச்சங்களையும் கண்டெடுத்த ஹெலெனா, உண்மையான
சிலுவையையும் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சி
தொடங்க ஒரு தளம் தேர்வு செய்து தோண்டியதில், இங்கே மூன்று
வெவ்வேறு சிலுவைகள் மீட்கப்பட வழிவகுத்தது. இதில் உண்மையான
சிலுவை (True Cross) எது என்பதை கண்டுபிடிக்க செய்த முயற்சிகள்
வீணாயின. பின்னர், ஜெருசலேமின் ஆயர் "மகாரியஸ்" (Bishop
Macarius of Jerusalem) என்பவர் மூலம், நகரின் வெளியே, மரண
தருவாயிலிருந்த பெண் ஒருவரை அழைத்து வந்தார்கள். அந்த பெண்ணை
மூன்று சிலுவைகளையும் ஒவ்வொன்றாக தொடச் செய்தனர். முதல்
சிலுவையையும் இரண்டாம் சிலுவையையும் தொடும்போது ஒன்றும்
நேரவில்லை. ஆனால், மூன்றாம் சிலுவையை தொட்டதும் அற்புதமாக,
அந்த பெண் எழுந்து குணமானார். ஆகவே, சாகும் தருவாயிலிருந்த
பெண் தொட்டதும் குணமான காரணத்தால், அந்த சிலுவையே உண்மையான
சிலுவை என்று ஹெலெனா அறிவித்தார். உண்மையான சிலுவை (True
Cross) கண்டெடுக்கப்பட்ட இடத்தில் "புனித கல்லறை தேவாலயம்"
(Church of the Holy Sepulchre) கட்ட பேரரசன் கான்ஸ்டன்டைன்
உத்தரவிட்டார்.
கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்று ஆசிரியரான "சோஸோமென்"
(Sozomen) மற்றும் "அந்தியோக்கியா பள்ளியின்" (School of
Antioch) செல்வாக்குள்ள இறையியலாளரும், பண்டைய சிரியாவின்
(Ancient Syria) ஆயருமான, "தியோடோரெட்" (Theodoret) ஆகியோரின்
கூற்றின்படி, சிலுவையில் அறையப்பட்ட ஆணிகள் (Nails of the
Crucifixion) ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்டன என்றும்,
அவற்றின் அற்புத சக்தி தமது மகனுக்கு உதவ வேண்டுமென்பதற்காக
அவற்றிலொன்றை தமது மகனின் தலைக் கவசத்திலும், மற்றொன்றை அவரது
குதிரையின் கடிவாலத்திலும் வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆண்டவர் கிறிஸ்து இயேசு, சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று
முன்னர், அவர் அணிந்திருந்த கோடுகளற்ற புனித அங்கியை (Holy
Tunic), எருசலேம் பயணத்தின்போது முயன்று வாங்கிய ஹெலெனா, அதனை
ஜெர்மனியிலுள்ள (Germany) "ட்ரையர்" (Trier) நகருக்கு
அனுப்பினார்.
பிற இடங்களில் கட்டப்பட்டிருந்த தேவாலயங்களும் ஹெலெனாவால்
கண்டுபிடிக்கப்பட்டன.
புனிதர் ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்ட பல நினைவுச் சின்னங்கள்
இப்போது "சைப்ரஸ்" (Cyprus) தீவில் உள்ளன.
கி.பி. 327ம் ஆண்டு, எருசலேம் மற்றும் கிழக்கு பிராந்தியங்களை
விட்டு ரோம் சென்ற ஹெலெனா, தாம் தமது அரண்மனையில், தமது
தனிப்பட்ட சிற்றாலயத்தில் சேமித்து வைத்திருந்த, உண்மையான
சிலுவை மற்றும் புனித பொருட்களின் மிச்சங்களில்
பெரும்பாலானவற்றையும் எடுத்துச் சென்றார். மீதமுள்ளவற்றை
இன்னமும் அவரது அரண்மனையில் காணலாம். அவரது அரண்மனை,
பின்னாளில் எருசலேமிலுள்ள "புனித திருச்சிலுவை பேராலயமாக"
(Basilica of the Holy Cross in Jerusalem)
மாற்றியமைக்கப்பட்டது. இது நூற்றாண்டுகளாக தேவாலயத்துடன்
இணைக்கப்பட்ட மடாலயத்தின் சிஸ்டர்சியன் (Cistercian)
துறவிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஏறத்தாழ கி.பி. 330ம் ஆண்டு மரித்த ஹெலெனா, ரோம் நகரிலுள்ள
"மௌசோலியம்" (Mausoleum of Helena) எனும் கல்லறையில் அடக்கம்
செய்யப்பட்டார். இக்கல்லறை, இவரது மகனும் பேரரசனுமான முதலாம்
கான்ஸ்டண்டைனால் தமக்காக கட்டப்பட்டது. ஆனால், அதில் அவரது
தாயாரான புனிதர் ஹெலெனா அடக்கம் செய்யப்பட்டார். |
|
|