Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

✠ புனிதர் கிளாரா ✠(St. Clare of Montefalco)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 17)
 ✠ புனிதர் கிளாரா ✠(St. Clare of Montefalco)
 அகஸ்தீனியன் சபை துறவி மற்றும் மடாதிபதி:
(Augustinian Nun and Abbess)

பிறப்பு : கி.பி. 1268
மோன்டேஃபல்கோ, உம்ப்ரியா, இத்தாலி
(Montefalco, Umbria, Italy)

இறப்பு : ஆகஸ்ட் 18, 1308
மோன்டேஃபல்கோ, உம்ப்ரியா, இத்தாலி
(Montefalco, Umbria, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 1, 1828
திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளமென்ட்
(Pope Clement XII)

புனிதர் பட்டம் : டிசம்பர் 8, 1881
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம் :
புனிதர் கிளாரா தேவாலயம், மோன்டேஃபல்கோ
(Church of Saint Clare, Montefalco)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 17

பாதுகாவல் : மோன்டேஃபல்கோ (Montefalco)

"மோன்டேஃபல்கோ" நகரின் புனிதர் கிளாரா (St. Clare of Montefalco) என அழைக்கப்படும் இப்புனிதர், "சிலுவையின் புனிதர் கிளாரா" (Saint Clare of the Cross) என்றும் அழைக்கப்படுவதுண்டு. அகஸ்தீனியன் சபையின் துறவியும் மடாதிபதியுமான (Augustinian Nun and Abbess) இவர், "புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையின்" (Third Order of St. Francis (Secular) உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

இத்தாலியின் "ஊம்ப்ரியா" (Umbria) மாநிலத்தின் "மோன்டேஃபல்கோ" (Montefalco) நகரில் வசதியான ஒரு குடும்பத்தில் 1268ம் ஆண்டு பிறந்த இவரது பெற்றோர் "டமியானோ" மற்றும் "லகோபா" (Damiano and Iacopa Vengente) ஆவர். இவருடைய தந்தை, உள்ளூரிலே துறவியர்க்கான ஒரு ஆசிரமத்தை (Hermitage) கட்டியிருந்தார். கிளாராவின் மூத்த சகோதரி "ஜோனும்" (Joan) அவரது சிநேகிதியான "அன்றேலாவும்" (Andreola) "பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை" (Franciscan tertiaries) உறுப்பினர்களாக அங்கே தங்கியிருந்தனர். 1278ம் ஆண்டு, கிளாராவும் இவர்களுடன் இனைந்தார். அத்துடன், போதுமான அளவு வளர்ச்சியடைந்திருந்த இவர்களது சமூகம், நகரின் வெளியே தமக்காக பெரிய அளவிலான மடம் ஒன்றினை கட்ட வேண்டியிருந்தது.

கி.பி. 1290ம் ஆண்டு, கிளாராவும், அவரது சகோதரி ஜோனும் மற்றும் அவர்களது சிநேகிதிகளும் இன்னும் கடுமையான விதத்தில் துறவு வாழ்க்கை வாழ முயற்சி செய்தனர். "ஸ்பொலேடோ" ஆயரிடம் (Bishop of Spoleto) அதற்கென விண்ணப்பித்தனர். ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை (Third Order of St. Francis (Regular) சபை அதுவரை நிறுவப்பட்டிருக்கவில்லையாதலால், ஏற்கனவே அவர்களிடமிருந்த துறவு மடத்தில் "புனிதர் அகஸ்தீனியர்" (Rule of St. Augustine) சட்ட திட்டங்களை புகுத்தினார். எளிமை, கற்புநிலை, மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றில் உறுதிப்பாடு பிரமாணம் எடுத்துக்கொண்ட கிளாரா, அகஸ்தீனிய (Augustinian Nun) துறவியானார். அவரது மூத்த சகோதரி ஜோன், மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1291ம் ஆண்டு, நவம்பர் மாதம், 22ம் நாளன்று, ஜோன் மரணமடைந்தார். அதன்பின்னர், கிளாரா மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஆரம்பத்தில் கிளாரா இதனை ஏற்கவில்லை. பின்னர், "ஸ்பொலேடோ" ஆயரின் (Bishop of Spoleto) தலையீட்டின் பின்னர் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.

கி.பி. 1294ம் ஆண்டு, கிளாராவின் ஆன்மீக வாழ்வில் ஒரு தீர்க்கமான, உறுதியான முடிவு செய்யும் ஆண்டாக அமைந்தது. ஒருமுறை, கிறிஸ்துவின் வெளிப்படுதல் (Epiphany) கொண்டாட்டங்களின்போது, தமது சக துறவியர் அனைவரினதும் முன்னிலையில் ஒரு போது ஒப்புரவு அருட்சாதனம் பெற்ற இவர், திடீரென ஒரு மெய்மறந்த பரவச நிலையில் வீழ்ந்தார். தொடர்ந்து பல வாரங்களுக்கு அதே நிலையிலேயே இருந்தார். இக்கால கட்டத்தில் ஏதும் உண்ணவும் இயலாத கிளாராவுக்கு அவரது சக துறவியர் சர்க்கரை கரைசல் நீரை புகட்டினர். இந்தக் காலத்தில், கிளாரா கடவுளின் தரிசனத்தைக் கண்டதாகவும், அதில் அவர் கடவுளுக்கு முன் நியாயந்தீர்க்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

பின்னர், கிளாரா மீண்டும் கடவுளின் தரிசனம் கிட்டியதாகவும் அதில் இறைவன் ஒரு ஏழை பயணியாக வந்ததாகவும், அவர் தமது சிலுவையை சுமக்க கஷ்டப்பட்டதாகவும் கூறுகிறார். தமது சிலுவையை வைக்க இவ்வுலகில் தோதுவான இடம் கிடைக்கவில்லை என்று கூறிய கிறிஸ்து இயேசுவிடம், தாம் அவருக்கு உதவுவதாக கூறினாராம். பின்னர் இறைவன், தமது சிலுவையை கிளாராவின் இருதயத்தில் வைத்துவிட்டு சென்றதாக கூறுகின்றனர். இவ்வகையான் தரிசனங்களை கிளாரா தீவிரமாக விசுவசித்தார். தமது மீதியுள்ள வாழ்க்கை முழுவதையும் வலி வேதனைகளிலேயே கழித்தார். இருப்பினும், ஒரு மடாதிபதியாக, ஆசிரியையாக, தாயாக, தமது கன்னியாஸ்திரிகளின் ஆன்மீக வழிகாட்டியாக தமது கடமைகளை மிகவும் சரிவர செய்தார். புனிதத்தன்மை மற்றும் ஞானத்திற்கான கிளாராவின் புகழ், தூய திருச்சிலுவையின் மடாலயத்திற்கு பார்வையாளர்களை ஈர்த்தது.

கி.பி. 1303ம் ஆண்டு, கிளாரா தமது நகரிலே ஒரு தேவாலயத்தைக் கட்டினார். இத்தேவாலயம், தமது கன்னியாஸ்திரிகளுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. ஜூன் மாதம், 24ம் தேதி, "ஸ்பொலேடோ" ஆயரால் (Bishop of Spoleto) முதல் கல் அர்ச்சிக்கப்பட்டது. பின்னர், இத்தேவாலயம் தூய திருச்சிலுவைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பதினாறு வருடங்கள் மடாதிபதியாக பணியாற்றிய கிளாரா, கி.பி. 1308ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நோயில் வீழ்ந்தார். படுத்த படுக்கையானார். பதினைந்தாம் தேதி இறுதி நற்கருணை வாங்கினார். 17ம் தேதி இறுதி ஒப்புரவு அருட்சாதனம் பெற்றார். 18ம் தேதி, மடத்தின் பள்ளியில் மரித்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா