Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பெர்னார்ட் ✠(Bernard of Clairvaux)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 20)
✠ புனிதர் பெர்னார்ட் ✠(St.Bernard of Clairvaux)

 மடாதிபதி, ஒப்புரவாளர், மறைவல்லுநர் :
(French Abbot, Confessor, Doctor of the Church)

பிறப்பு : கி.பி. 1090
ஃபவுன்டைன்-லெஸ்-டிஜோன், ஃபிரான்ஸ்
(Fontaine-lès-Dijon, France)

இறப்பு : ஆகஸ்டு 20, 1153 (வயது 63)
க்ளேர்வாக்ஸ், ஃபிரான்ஸ்
(Clairvaux, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

புனிதர் பட்டம் : ஜனவரி 18, 1174
திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)

முக்கிய திருத்தலங்கள் :
ட்ரோய்ஸ் பேராலயம், வில்லே-சௌஸ்-ல-ஃபெர்ட்,
(Troyes Cathedral, Ville-sous-la-Ferté)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 20

பாதுகாவல் :
சிஸ்டர்சியன் சபையினர் (Cistercians), பர்கண்டி (Burgundy), தேனீ வளர்ப்பவர்கள் (Beekeepers), மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் (Candle makers), ஜிப்ரால்டர் (Gibraltar), அல்ஜீசிராஸ் (Algeciras), குயின்ஸ் கல்லூரி (Queens' College), கேம்பிரிட்ஜ் (Cambridge),
ஸ்பீயர் பேராலயம் (Speyer Cathedral), நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar), பினன்கொனம் (Binangonan), ரிஸால் (Rizal)

புனித பெர்னார்ட், ஒரு ஃபிரெஞ்ச் மடாதிபதியும் (French abbot), சிஸ்டெர்சியன் சபையின் (Cistercian order) பிரதான சீர்திருத்தவாதியும், பெனடிக்டின் துறவறத்தின் (Benedictine monasticism) சீர்திருத்தங்களின் முக்கிய தலைவருமாவார்.

பெர்னார்டின் தந்தை, "டெஸ்செலின்" (Tescelin de Fontaine), "ஃபவுன்டைன்-லெஸ்-டிஜோன்" (Fontaine-lès-Dijon) பிரபு ஆவார். இவரது தாயார், "அலேத்" (Alèthe de Montbard) ஆவார். இவர்கள் இருவமே "பர்கண்டியின்" (Burgundy) பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமது ஒன்பது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த பெர்னார்ட், இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகள், செய்யுள் போன்றவற்றை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்வியில் அவர் கொண்ட வெற்றிகள், அவரது ஆசிரியர்களிடம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. திருவிவிலியத்தை கற்கவும், ஆராய்வதற்காகவும், அவர் இலக்கியத்தில் சிறந்து விளங்க விரும்பினார். அவர், அன்னை கன்னி மரியாளிடம் சிறப்பு பக்தி கொண்டிருந்தார். பிற்காலத்தில், விண்ணரசி அன்னையைப் பற்றி பல்வேறு படைப்புகளை எழுதினர்.

தத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வீக புரிதலுக்கான பகுத்தறிவு அணுகுமுறைக்கு எதிராக, பெர்னார்ட் ஒரு உடனடி விசுவாசத்தைப் பிரசங்கித்தார், அதனை பரிந்துரை செய்தது அன்னை மரியாள் ஆவார்.

பெர்னார்டுக்கு பத்தொன்பது வயதாகையில் அவரது அன்னை மரித்துப்போனார். தமது இளமைக்காலத்தில் அவர் சோதனைகளிலிருந்து தப்பிவிடவில்லை. இச்சமயத்தில், உலக நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டு, தனிமை மற்றும் செப வாழ்வை தேர்ந்தெடுக்க விரும்பினார். தமது 22 வயதில், ஒரு தேவாலயத்தில் அவர் செபித்துகொண்டிருக்கையில், "சிடாக்ஸ்" (Cîteaux) நகரிலுள்ள "சிஸ்டேர்சியன்" (Cistercian Monks) துறவியர் மடத்தில் இணைய கடவுள் அழைப்பதாக உணர்ந்தார். பெர்னார்டின் நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என்று சுமார் முப்பது பேர் இவருடன் சேர்ந்து துறவு மடத்தில் இணைய பெர்னார்டின் சாட்சியம் தவிர்க்க இயலாத முக்கிய காரணியாய் அமைந்தது.

மூன்று ஆண்டுகளின் பிறகு, (Val d'Absinthe) எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஒடுங்கிய பள்ளத்தாக்கில் துறவு மடமொன்றை நிறுவுவதற்காக அனுப்பப்பட்டார். மரபுப்படி, கி.பி. 1115ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் நாளன்று, துறவு மடத்தை நிறுவினார். அதற்கு "கிளேர் வள்ளி" (Claire Vallée) என்று பெயரிட்டார். பின்னர் அது மருவி, "க்ளேர்வாக்ஸ்" (Clairvaux) என்றானது. அங்கே, உடனடியாக விசுவாசத்தை போதித்து பிரசங்கிக்க தொடங்கினார். அதற்கு பரிந்துரையாளராக அன்னை மரியாள் இருந்தார்.

கி.பி. 1130ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 13ம் நாள், திருத்தந்தை "இரண்டாம் ஹானரியல்" (Pope Honorius II) மரித்ததும், திருச்சபையில் ஒரு கலகம் வெடித்தது. ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் "ஆறாம் லூயிஸ்" (King Louis VI of France) "எடம்ப்ஸ்" (étampes) எனுமிடத்தில் ஃபிரெஞ்ச் ஆயர்களின் தேசிய மகாசபையைக் கூட்டினார். திருத்தந்தைப் பதவிக்கான போட்டியாளர்களிடையே தீர்ப்பு வழங்க பெர்னார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். "எடம்ப்ஸ்" (étampes) மகா சபையின் பின்னர், திருத்தந்தை "இரண்டாம் இன்னொசன்டிற்கான" (Pope Innocent II) அரசனின் ஒதுக்கீட்டிற்காக, பெர்னார்ட் இங்கிலாந்தின் அரசன் "முதலாம் ஹென்றியுடன்" (King Henry I of England) பேச்சு நடத்தினார். இங்கிலாந்தின் பெருமளவு ஆயர்கள், எதிர் திருத்தந்தை "இரண்டாம் அனக்லெட்டஸுக்கு" (Antipope Anacletus II) ஆதரவு தெரிவித்ததால், அரசன் நம்பிக்கையற்றிருந்தார். இன்னொசன்டுக்கு ஆதரவு அளிக்குமாறு பெர்னார்ட் அரசனை வற்புறுத்தினார். பெர்னார்டின் நண்பர் "நார்பர்ட்" (Norbert of Xanten) மூலமாக, இன்னொசன்டுக்கு ஆதரவளிக்க ஜெர்மன் முடிவு செய்தது. எனினும், தூய ரோம பேரரசர் "இரண்டாம் லோதைரை" (Lothair II, Holy Roman Emperor) சந்திக்க செல்கையில் பெர்னார்ட் உடன் வரவேண்டுமென இன்னொசன்ட் வலியுறுத்தினார். திருத்தந்தைப் பதவிக்கான மொத்த யுத்தமும் கி.பி. 1138ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாளன்று, "இரண்டாம் அனக்லெட்டஸ்" (Antipope Anacletus II) இறந்ததும் முடிவுக்கு வந்தது.

முன்னர் திருச்சபைக்குள்ளே ஏற்பட்ட பிரிவினைகளுக்கு முடிவுகட்ட உதவிய காரணங்களால், பெர்னார்ட் இப்போது மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கெதிராக (Heresy) போரிட அழைக்கப்பட்டார். ஜூன் 1145ல், பெர்னார்ட் தென்-ஃபிரான்ஸ் பிராந்தியங்களுக்கு பயணித்தார். அங்கே அவரது போதனைகளும் பிரசங்கங்களும் மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கெதிராக ஆதரவை அதிகரித்தது. "எடிஸ்ஸா முற்றுகையின்" (Siege of Edessa) கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, இரண்டாம் சிலுவைப்போரைப் (Second Crusade) பிரசங்கிக்க, திருத்தந்தை அவர்கள், பெர்னார்டை நியமித்தார். சிலுவைப்போரின் தோல்விகள் காரணமாக, பெர்னார்டின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகள் துன்பங்கள் நிறைந்ததாக இருந்தன. தோல்விக்கான முழு பொறுப்பும் அவர் மீதே சுமத்தப்பட்டன.

40 வருடங்கள் ஒரு துறவியாக வாழ்ந்த பெர்னார்ட், தமது 63 வயதில் மரித்தார். புனிதர்களின் நாட்காட்டியில் (Calendar of Saints) இடம் பிடித்த முதல் "சிஸ்டேர்சியன்" (Cistercian) துறவி இவரேயாவார். திருத்தந்தை "மூன்றாம் அலெக்சாண்டரால்" (Pope Alexander III) புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், திருத்தந்தை "எட்டாம் பயசால்" (Pope Pius VIII) கி.பி. 1830ம் ஆண்டு திருச்சபையின் மறைவல்லுனராக (Doctor of the Church) பிரகடணம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா