Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அல்ஃபோன்சஸ் மரியலிகோரி ✠(St. Alphonsus Maria de Liguori)
  Limage contient peut-tre : 1 personne, texte  
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 01)
✠ புனிதர் அல்ஃபோன்சஸ் மரியலிகோரி ✠(St. Alphonsus Maria de Liguori)

 உலக இரட்சகர் சபையின் நிறுவனர்/ ஆயர்/ மறைவல்லுநர் :
(Founder of Congregation of the Most Holy Redeemer (The Redemptorists)/ Bishop/ Doctor of the Church)

பிறப்பு : செப்டம்பர் 27, 1696
மரியநெல்லா, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு
(Marianella, Campania, Kingdom of Naples)

இறப்பு : ஆகஸ்ட் 01 , 1787 (அகவை 90)
பாகனி, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு
(Pagani, Campania, Kingdom of Naples)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : செப்டம்பர் 15, 1816
திருத்தந்தை ஏழாம் பயஸ்
(Pope Pius VII)

புனிதர் பட்டம் : மே 26, 1839
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

பாதுகாவல் :
பேகனி நகர் (Pagani), கேன்செலோ நகர் (Cancello), நேபிள்ஸ் - இணை பாதுகாவலர் (Naples (co-patron), கீல்வாதம் (Arthritis), ஒப்புரவாளர்கள், தார்மீகவாதிகள்

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 1

புனிதர் அல்போன்சஸ் மரிய லிகோரி, ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இசையமைப்பாளரும், இசைக்கலைஞரும், கலைஞரும், கவிஞரும், வழக்கறிஞரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். ஒரு வழமையான எழுத்தாளரான இவர், தமது வாழ்நாளில், "தார்மீக இறையியல்" (Moral Theology) எனும் புத்தகத்தின் ஒன்பது பதிப்புகளை வெளியிட்டார். "மரியாளின் மகிமைகள்" (The Glories of Mary) மற்றும் "சிலுவைப்பாதை" (The Way of the Cross ) ஆகியவை இவரது சிறப்பான புகழ்பெற்ற படைப்புகளாகும். இவரது படைப்பான சிலுவைப்பாதைகள், இன்றும் கத்தோலிக்க பங்குகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன.

இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI) 1839ம் ஆண்டு புனிதர் பட்டம் அளித்தார். 1871ம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் (Doctor of the Church) என அறிவித்தார்.

வரலாறு :
இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு அருகிலுள்ள "மரியனெல்லா" (Marianella) என்ற ஊரில் 1696ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி பிறந்தவர் அல்போன்சஸ் மரிய லிகோரி. "டான் ஜோசப் டி லிகோரி" மற்றும் "அன்னா" (Don Joseph de' Liguori and Anna Cavalieri Liguori) தம்பதியரின் எட்டு குழந்தைகளில் மூத்த குழந்தையாக பிறந்த இவருக்கு, இவர் பிறந்த இரண்டு தினங்களின் பின்னர் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. "அல்ஃபோன்சஸ் மரிய அந்தோனி ஜான் கொஸ்மஸ் டமியான் மைக்கேல் கஸ்பார்ட் டி லிகோரி" (Alphonsus Mary Anthony John Cosmas Damian Michael Gaspard de' Liguori) என்பது இவரது திருமுழுக்கு பெயராகும். இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி ஆவார். தாயார் ஒரு ஸ்பேனிஷ் பெண்மணியாவார்.

16 வயதில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். இவர் எடுத்து நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. ஆனால் தமது 27வது வயதில், 1723ம் ஆண்டில் நடந்த ஒரு சொத்து வழக்கில் அல்போன்சஸ், தனது எட்டு வருட வழக்குரைஞர் வாழ்க்கையில், முதல் முறையாக தோல்வியடைந்தார். இந்தத் தோல்வி அவரை பெரிதும் பாதித்தது. தமது எட்டு வருட வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட தீர்க்கமாக முடிவெடுத்தார். நீதிமன்றத்தை விட்டுக் கிளம்பினார். இந்தத் தோல்வி, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார். மேலும், "இவ்வுலகை விட்டுவிட்டு - உன்னை எமக்கு கையளி" என்ற குரல் அசரீரியாக அவருக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

தமது 27 வயதில் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட்டார். மிகவும் வறிய நிலையிலிருந்த ஏழைகளுக்கு மறைப் பணியாற்றிய நேப்பிள்ஸ் பிரச்சாரம் என்ற அருட்பணியாளர்கள் அமைப்பால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவினார். 1726ம் ஆண்டில் அல்போன்சஸ் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். "பிறருடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருப்பதே மிகவும் நேர்த்தியான பிறரன்பு" என்று இவர் சொல்வதுண்டு. தமது எளிய மற்றும் எளிமையான பிரசங்கங்களின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானார். "கூட்டத்திலுள்ள மிக வறி வயோதிக பெண்மணியால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பிரசங்கத்தை நான் ஒரு போதும் பிரசங்கித்ததில்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

அவர், இளைஞர்களால் நிர்வகிக்கக்கூடிய மாலைநேர சிற்றாலயங்களை (Evening Chapels) நிறுவினார். இச்சிற்றாலயங்களில், செபம், பயபக்தி, பிரசங்கம், சமூகம், சமூக நடவடிக்கைகள் மற்றும் கல்வி ஆகியவை மையமாக இருந்தன. அவரது மரணத்தின்போது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை உள்ளடக்கிய 72 சிற்றாலயங்கள் இருந்தன.

அல்ஃபோன்சஸ், கி.பி. 1732ம் ஆண்டு, நவம்பர் மாதம், 9ம் தேதி, "உலக இரட்சகர் சபையைத்" (Congregation of the Most Holy Redeemer) தொடங்கினார். சுமார் 20 வருடங்கள் நேப்பிள்ஸ் மாநிலத்தில் பயணம் செய்து எண்ணற்ற மக்களை மனந்திருப்பினார். கி.பி. 1752ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதுவதில் தன்னை அர்ப்பணித்தார். இவர் படித்தவை, எழுதியவை அனைத்தும் எளிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது என்பர்.

அல்போன்சஸ், கி.பி. 1762ம் ஆண்டு நேப்பிள்ஸ் மாநிலத்தில் "புனித அகத்தா டி கோட்டி" (Sant'Agata dei Goti) என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். இதற்கு இவர் இணங்க மறுத்ததால், திருத்தந்தை இவரை கீழ்ப்படிதல் வாக்குறுதியைக் கொண்டு, கட்டாயப்படுத்தி ஆயராக்கினார். 13 வருடங்கள் பணியாற்றி தமது மறைமாவட்டத்தைச் சீர்படுத்தினார்.

இறப்பு :
இவர் ஆயர் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே கடும் காய்ச்சல் வந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட் மற்றும் அவருக்கு பின்வந்த திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் ஆகியோர் இவரை நோயுற்றிருப்பினும் ஆயர் பதவியில் இருக்க கட்டாயப்படுத்தினர். 1775ல் தனது 79வது வயதில் செவித்திறனை இழந்தார். கண்பார்வையையும் இழந்தார். இவருக்கு குழாய் வழியாகவே உணவு கொடுக்க வேண்டியிருந்தது. ஆதனால் கி.பி. 1775ம் ஆண்டு, மே மாதம், திருத்தந்தை ஆறாம் பயஸ், இவர் ஓய்வு பெற அனுமதியளித்தார். இவரின் இறுதி நாட்களில் இவர் துவங்கிய சபையினில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. இவரின் இறப்புக்குப் பின்னும் அவை நீடித்தன. இவர் கி.பி. 1787ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், முதல் தேதி, "பகானி" (Pagani) என்ற ஊரில் மரித்தார்.

படைப்புகள் :
அறநெறி இறையியல் பற்றி இவர் எழுதியவை, "அறநெறி இறையியலாளர்களின் இளவரசர்" என்ற பட்டத்தை இவருக்கு தேடித் தந்தது. இன்றும் ரோமில் அறநெறி இறையியல் கல்விக்கு இவரது உலக இரட்சகர் சபை நடத்தும் நிறுவனமே புகழ்பெற்றது.

இவர் நற்கருணை மற்றும் அன்னை மரியாள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளின் பெருமை, திவ்யநற்கருணை சந்திப்பு, கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, சிலுவைப்பாதை போன்ற இவரது நூல்கள் புகழ் பெற்றவை. இவர் 111 நூல்களை எழுதியுள்ளார். அவை 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 4000த்துக்கும் மேற்பட்ட பதிப்புக்களும் இடம் பெற்றுள்ளன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா