✠ விண்ணக அரசி அன்னை தூய கன்னி மரியாள் ✠
(Queen of Heaven Blessed Virgin Mary) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug
22) |
✠ விண்ணக அரசி அன்னை
தூய கன்னி மரியாள் ✠(Queen of Heaven Blessed Virgin Mary)
பாதுகாவல் :
பரலோகம், மனிதகுலத்திற்கு நித்திய இரட்சிப்பு, மீட்பு
(Heaven, Eternal Salvation to Humankind, Redemption)
திருநாள் : ஆகஸ்ட் 22
விண்ணக அரசி என்பது, அன்னை தூய கன்னி மரியாளுக்கு கிறிஸ்தவர்களால்
குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஒரு சில ஆங்கிலிக்கம்,
கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் வழங்கப்படும் பட்டமாகும். 5ம்
நூற்றாண்டில் நடந்த "முதலாம் எஃபேசஸ் பொதுச்சங்கத்தில்" (First
Council of Ephesus) மரியாள் கடவுளின் அன்னை (Theotokos) என அறிவிக்கப்பட்டதன்
விளைவாக இப்பட்டம் வழங்கப்படலாயிற்று என நம்பப்படுகின்றது.
இந்த நம்பிக்கை குறித்த கத்தோலிக்க படிப்பினை, திருத்தந்தை "பன்னிரண்டாம்
பயஸின்" (Pope Pius XII) 11-10-1956 தேதியிட்ட (Ad Caeli
Reginam) என்னும் சுற்று மடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
கன்னி மரியாள் விண்ணக அரசி என்று திருச்சபையானது ஆதியிலிருந்தே
விசுவசித்து வந்திருக்கிறது. வேத புத்தகத்திலும், பரம்பரையிலும்,
இந்த விசுவாசத்திற்கு ஆதாரங்கள் உண்டு. என்றும் மரியாள் அரசியாக
இருக்கிறார். ஏனெனில் அவர் பெற்றெடுத்த மகன் அனைத்துக்கும்
அரசர்; அனைத்துக்கும் ஆண்டவர். அவர் நம்மை மீட்ட அரசரும், ஆண்டவரும்
ஆனார். புனித மரியாள் மீட்பின் பணியில் இரட்சகருடன் ஒத்துழைத்தார்.
தனது உதரத்தில் அவர் உருவாக அன்னை அனுமதி அளித்தார். நம் மீட்பராகும்படி
முழு மனதுடன் கையளித்தார். நாம் எல்லோரும் மோட்சத்துக்குப் போக
வேண்டுமென்று அவர் ஆசிக்கிறார். செபிக்கிறார். பல வழிவகைகளைக்
கையாளுகிறார். எனவே அவர் அரசி.
இந்த விழாவன்று, மானிட சந்ததியை மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு
அர்ப்பணிக்க வேண்டும். அவரே மானிட சந்ததியின் நம்பிக்கை.
திருச்சபை வெற்றி பெறவும், கிறிஸ்தவ அமைதி நிலவவும் அவர்
துணைபுரிய வேண்டும். எல்லோரும் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த அன்னையின்
இரக்கத்தின் சிம்மாசனத்தை அணுக வேண்டும். சங்கடங்களில் உதவியையும்,
இருளில் ஒளியையும், துன்ப துயரங்களில் ஆறுதலையும் அன்னையிடம்
தேடி அலைவோம்.
பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுவித்தால் தாங்கள்
கேட்ட காரியங்களை அடைவர். அந்த அன்னை உண்மையாகவே நம் அரசி; அமைதியைப்
பெற்று தருவார். இயேசு நமக்கு நித்திய மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும்
இருப்பார்.
திருச்சபையினால் அதிகாரப்பூவ அனுமதி பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு
முன்பிருந்தே விண்ணக அரசி என்னும் பட்டம் கத்தோலிக்க மரபிலும்,
வேண்டுதல்களிலும், பக்தி முயற்சிகளிலும், கலையிலும் முக்கிய பங்கு
வகித்து வந்தது. |
|
|