தொடக்ககாலத் திருச்சபையில் கிறீஸ்தவ நம்பிக்கையின் மையமாகத்
திகழ்ந்த நிகழ்வுகள் யேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு
என்பன. இந்த நிகழ்வுகளை இன்றும் நாம் நினைவுகூர்ந்து
தவக்காலமாகச் சிறப்பிக்கின்றோம். இத்தவக்காலத்தின் தொடக்கநாளே
சாம்பல்புதன். இத்தவக்காலத்தின் முக்கிமான நாட்களாக உள்ளவை,
சாம்பல்புதன், குருத்தோலை ஞாயிறு, புனித வியாளன், புனித வெள்ளி,
உயிர்ப்பு ஞாயிறு என்பன.
சாம்பல் புதன் என்றால் என்ன ?
தன் பணி வாழ்வின் தொடக்கமாக 40 நாட்களை இயேசு நோன்பிலும்,
செபத்திலும் செலவழித்ததுபோல, நமது வாழ்வின் மனமாற்றத்தின்
தொடக்கமாக, சாம்பல் புதன் தொடங்கி 40 நாட்கள் செபத்திலும்,
தன்மறுப்பிலும், பிறரன்புச் செயல்களிலும் நம்மையே ஈடுபடுத்திக்
கொள்கிறோம். பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து
மனம் கசிந்து, சாம்பலை உடலெங்கும் பூசி, மேனி அழகைக்
குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையைய் உடுத்தி, ஏழ்மைக் கோலம்
பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு
இருப்பார்கள்.
கடந்த ஆண்டின் குருத்தோலை தினத்தன்று பயன்படுத்தப்பட்ட
குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கி, அடுத்த ஆண்டு சாம்பல்
புதனன்று குருவானவர் விசுவாசிகள் நெற்றியில் "மனந்திரும்பி
நற்செய்தியை நம்புங்கள்" என்று சொல்லி புதிய வாழ்விற்கு
அழைப்பு விடுக்கிறார். கடவுளோடும் மனிதர்களோடும் ஒப்புரவாகும்
காலமாகவும் திகழ வேண்டுமென்று திருச்சபை நம்மை அழைக்கின்றது.
கல்லான மனத்தினை கனிந்த மனமாக மாற்றும்
தவக்காலம்
தவக்காலமானது உலகுக்கு எல்லாம் கருணையின் காலமாக, இரக்கத்தின்
காலமாக, மன்னிப்பின் காலமாக, மனம் திரும்பும் காலமாக, நம்மை
நாமே அறிந்து நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை
இறைவனின் வழியில் கொண்டு வரவும், கடவுளோடும் மனிதர்களோடும்
ஒப்புரவாகும் காலமாகவும் திகழ வேண்டுமென்று திருச்சபை நம்மை
அழைக்கின்றது.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம்.
நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும்
காலம்.
அன்றாடம் காலையில் எழுந்து, உண்டு, உழைத்து, களைப்பேறி,
உறங்கும் வரை நாம் பிறரன்போடு வாழ்கின்றோமா அல்லது தன்னலம்
கொண்டவர்களாகத் திகழ்கிறோமா என்பதை; உள்ளத்தின் ஆழத்திலே
சீர்தூக்கிப் பார்க்க நம்மை அழைக்கிறது தவக்காலம்.
திமிர்பிடித்த மனமும், தீராப்பகையும், கொடுமைகள் புரியும்
குணமும், கெடுமதி கொண்ட உறவுகளும், சுயநலப்பேயும், சூதுவாது
நிறைந்த பேராசைகளும், உலகியல் பற்றுக்களும், புலன் இன்பங்களும்,
போலிப் புகழ்தேடும் வாழ்க்கையும், மனித நேயத்திற்கு எதிரான
செயல்கள் அனைத்தையும் கண்டுணரவும் அவற்றைக் களையவும் நம்மைத்
தூண்டுவது தான் தவக்காலம்.
இதனையே தூய பவுல் அடிகளாரும், "கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று
கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகின்றோம். இதுவே தகுந்த
காலம். இதுவே எமது மீட்பின் நாள்" என்று கூறுகின்றார். கடவுள்
நம்மீது கொண்டுள்ள அன்பை, நமது அகத்தின் மாற்றங்களால்
வெளிப்படுத்தவேண்டும். வெளிவேடத்தை இறைவன் என்றுமே
விரும்புவதில்லை. உள்ளங்களைச் சீர்தூக்கி ஆராயும் கடவுள்,
உண்மையான மனமாற்றத்தைத்தான் நம்மில் விரும்புகின்றார்.
இதனாலேயே, "உடைகளைக் கிழிக்காதீர்கள். உங்கள் உள்ளங்களைக்
கிழித்துக் கொள்ளுங்கள்'' என்கிறது இறைவார்த்தை.. எனவே தான், "மக்கள்
பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச்
செய்யாதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித்
தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளி வேடக்காரர் மக்கள் புகழ
வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று
அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை
செய்வது இடக்கைக்குத் தெரியாது இருக்கட்டும்'' என்று
உரைக்கின்றார் இயேசு.
இந்தக் காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், விருந்துபசரிப்புக்கள்,
கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை ஒதுக்கி அதன் மூலம் சேமிக்கும்
பணத்தை அல்லலுறும் எம் உறவுகளுக்கு வழங்கலாம். சிலர்
வெள்ளிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவிடும் வழக்கத்தையும்
கொண்டிருக்கின்றனர்.
தவத்தின் அடையாளமாக ஆடம்பரங்களைக் குறைத்து, உணவிலும்
பிறவற்றிலும் எளிமை, செபதியானத்தோடு இரக்கம் சார்ந்த தான
தர்மம், குடும்ப செபமாலை, திருச்சிலுவைப் பாதை, ஒறுத்தல்
முயற்சிகளின் மூலம் இறைவன் விரும்பும் மனமாற்றத்திலும்
நற்பண்புகளிலும் வளர முயற்சிப்போம்.
நமது உண்மையான நிலையை, வாழ்க்கையை நாம் உணர்வதற்கு இறைவன்
மீண்டும் ஒரு தவக்காலத்தை நமக்கு கொடையாகத் தந்துள்ளார்.
மனிதன் முகத்தைப் பார்க்கிறான், ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்.
வேரோட்டமான மனமாற்றத்தை விரும்புகிறவர்கள் கடவுளுக்கு
விலையேறப் பெற்றவர்கள். அவருக்கு முற்றிலும் சொந்தமானவர்கள்.
இயேசுவின் திருப்பாடுகளிலும் மீட்பு தரும் அவரது மரணத்திலும்
பங்கு பெறுவோம். அவரோடு இறந்தோமானால் அவரோடு உயிர்ப்போம் என்ற
நம்பிக்கையில் தவக் காலத்தை தொடங்கி, அவரது அருள் ஆசியோடு
நிறைவு செய்வோம்.
இறைவனின் அருளைப் பெற விழையும் நாம், நம்மையே தாழ்மை
நிலைக்குத் தள்ளி, சுய நலத்திற்கு இறந்து, இறை விருப்பத்திலே
உயிர்த்து, புனித வாழ்வை அணந்துகொள்வோம். இதையே சாம்பல் புதன்
நமக்கு நினைவூட்டுகிறது
|
|