குடும்பம் ஒரு கருவூலம்
ஜார்ஜ் எழுபது வயது நிரம்பிய பெரிய மனிதர். வாழ்நாள் முழுவதும்
திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர்.
உலகிலுள்ள பல்வேறு பெருங்கடல்களில் கப்பல் ஓட்டித் தனது
வாழ்வின் பெரும்பாலான பகுதியைக் கழித்தவர். இவருடைய தம்பி மகன்
பில் என்பவர். இவர் தனது மனைவியுடனும் ஐந்து மக்களுடனும்
வாழ்ந்து வந்தார். பில் பெரியப்பா ஜார்ஜூவைத் தன்னுடனேயே வந்து
தங்கும்படி அன்போடு அழைத்தார். ஜார்ஜூம் பில்லுடைய அழைப்பை
ஏற்று அவருடன் வந்து வாழ ஆரம்பித்தார். இந்த ஏற்பாடானது
இருவருக்குமே பிரியமான ஒன்றாக இருந்தது. காரணம் ஜார்ஜூக்கு
குடியிருக்க இல்லிடம் ஒன்று கிடைத்தது. பில்லினுடைய
குடும்பத்தினருக்கு ஜார்ஜ் உலகம் முழுதும் கடற்பயணம் செய்த
தமது அனுபவத்தைக் கதைகதையாகச் சொன்னதைக் கேட்டபோது தாங்களே
கனவுலகில் உலகைச் சுற்றி வந்ததைப் போன்ற ஒரு மனநிறைவு
ஏற்பட்டது.
சிற்சில சமயங்களிலே தனது இல்லற வாழ்க்கையானது பில்லுக்குச்
சலிப்பை ஏற்படுத்தியது. தனது காலுக்குக் கட்டுப்போடாதபடி
சுதந்திரச்சிட்டுப் பறவையாக உலகங்சுற்றினால் எவ்வளவு
நலமாயிருக்கும் என எண்ணி பில் ஏங்கினான். அத்தோடு தன் எண்ணத்தை
வெளியிடவும் செய்தான்.
ஒரு நாள் மாலை பில்லினுடைய பெரியப்பா தூர தேசமொன்றைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தபோது புதையல் பூமியைப் பற்றிய வரைபடம்
ஒன்றைப்பற்றிக் குறிப்பிட்டார். இச் செய்தியானது பில்லினுடைய
மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர்
ஜார்ஜ் பெரியப்பா காலமானார். ஜார்ஜின் உடைமைகளை பில்
தேடிப்பார்த்தார். அதில் பில்லுனுடைய முகவரி எழுதப்பெற்ற கவர்
ஒன்றைக் கண்டான். அந்தக் கவருக்குள் வரைபடம் ஒன்று இருந்தது.
நடுநடுங்கும் கைகளுடனும் பதைபதைக்கும் உள்ளத்துடனும் வரைபடத்தை
திறந்து புதையல் பூமி எங்கே அமைந்திருக்கிறது என்று தேட
ஆரம்பித்தான். இறுதியாக திட்டவட்டமாக எந்த இடம் என்பதைக்
கண்டுபிடித்தான். பில்லுடைய வீடு இருந்த இடம்தான் புதையல்
புதைக்கப்பட்டிருந்த இடம் என்பதை பில் புரிந்து கொண்டான்.
ஜார்ஜ் பெரியப்பா பில்லிற்கு "உண்மையாகவே குடும்பம் ஒரு
புதையல"; என்பதை உணர்ந்து கொள்ளும்படிச் செய்ததன் வழியாக
ஜார்ஜ் பில்லுக்கு ஒரு சொத்தை விட்டுச் சென்றிருந்தார்.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு கருவூலம் ஆகும். இல்லம் என்பது
புனிதமானது. குடும்பத்தின் புனிதத்தைக் காப்பாற்ற நமக்கு
இயற்கைக்கு மேற்பட்ட அருட்கொடைகள் தேவை. அவைகளைப்
பெற்றுக்கொள்ள திருக்குடும்பத்தின் உறுப்பினர்களான இயேசு,
மரியாள், சூசை ஆகியோரின் வழியாக இறைவனிடம் ஒவ்வொரு நாளும்
மன்றாடுவோம்.
இந்த பொக்கிஷத்துக்குள் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண் ஒரு
பெண்ணுக்குத் துணையாக வாழ திருச்சபை சமூகம் ஏற்படுத்திய
உடன்படிக்கையால் ஆன ஒப்பந்த பிணைப்பே குடும்ப உறவாக உள்ளது.
உறவோடு வாழும் குடும்பம் தெய்வம் தங்கி வாழும் ஆலயம். அந்தக்
குடும்பம் தெய்வத்தின் உடனிருப்பை உணரும், தெய்வத்தின் ஆசியை
அனுபவிக்கும். அவர்கள் உணவு உண்ணுமிடத்தில் ஒலிவக்கன்றுகள் போல
அவர்களுடைய பிள்ளைகள் இருப்பர். என விவிலிய வார்த்தையும்
திருமண உறவுக்கு ஆசி கூறி சிறப்பிக்கிறது.
கணவன் அகல் விளக்காகவும் மனைவி அதிலுள்ள எண்ணெய்யாகவும்
குழந்தைகள் திரியாகவும் இருந்தால் அகல் விளக்கின் ஒளியைப்
போலக் குடும்பமும் பிரகாசிக்கும்.
வீடு தரைமேல் நிற்பதில்லை. ஒரு பெண்ணின் மேல் நிற்கிறது.
பிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் பிரான்ஸிற்கு
நல்ல பிள்ளைகள் கிடைப்பார்கள்-நெப்போலியன்
பிடுங்கிப் பிடுங்கி நட்ட மரமும் பெயர்த்து சென்ற
குடும்பமும் தழைத்து வருவதை நான் கண்டதில்லை. ரிச்சர்டு
சாண்டேர்ஸ்
இன்பமான குடும்பம் முன்கூட்டியே காணும் விண்ணகமாகும்.
பௌரிங்.
சமூகம் போற்ற வாழும் பெற்றோரின் குழந்தைகள், தங்கள் எதிர்கால
வாழ்க்கையை அற்புதமான அடித்தளத்தின் மீது கட்டி எழுப்பி சமூக
செழிப்பின் காரணியாக இருப்பார்கள்.
அவன் ஓர் ஏழை. அருகிலே உள்ள காட்டிற்கு விறகு வெட்டச்
சென்றான். விறகு வெட்டும்போது கோடாரி காட்டிற்குள் தவறி
விழுந்து விட்டது. அதைத் தேடி களைத்துப் போனான். தவித்தும்
போனான். காரணம் அந்தக் கோடாரிதான் அவனுக்கு உலகம். கவலையோடு
தேடிக் கொண்டிருந்த அவனை தேவதை ஒன்று கவனித்துக்
கொண்டிருந்தது. அவனுக்கு உதவவும் முன் வந்தது. அருகில் சென்று
அவனை அன்போடு விசாரித்தது. தொடர்ந்து கோடாரியை தேடிக்
கண்டுபிடித்து தர முன் வந்தது. முதலில் ஒரு வைரக் கோடாரியை
எடுத்துக் காட்டியது. அவன் "இல்லை" என்று தலையசைத்தான்.
மீண்டும் ஒரு தங்கக் கோடாரியை எடுத்துக் காட்டியது அப்போதும்
அவன் "இல்லை" என்று தலையசைத்தான். மீண்டுமாக ஒரு இரும்புக்
கோடாரியை எடுத்துக் காட்டியது. அவனும் "ஆமாம்" என்று
தலையசைத்து வாங்கிக் கொண்டான். அப்போது அந்த தேவதை மூன்று
கோடாரிகளையும்; கொடுத்து " நீயே வைத்துக் கொள்" என்றது.
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.
ஒரு நாள் வீட்டுச் சண்டையில் அவன் மனைவி கோபித்து கொண்டு எங்கோ
சென்று விட்டாள். அப்போது அவளை எங்கு தேடியும் காணாமல்
காட்டிற்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அப்போது அந்த
தேவதை வந்தது. அவன் மிகுந்த ஆhவத்தோடு தன் மனைவியைத் தேடித்
தருமாறு கெஞ்சினான். அப்போது தேவதை அவனை சோதிக்க விரும்பியது.
இந்த உலகிலேயே அழகான பெண்ணைக் காட்டி "இது தான் உன் மனைவியா?"
என்று கேட்டது. "ஆம் இதுதான் என் மனைவி" என்றான். தேவதை
அதிர்ச்சியோடு "ஏன் பொய் சொல்கிறாய்?" என்று கேட்டது.
அப்பொழுது அவன் சொன்னான், "நீங்கள் இன்னொரு பெண்ணைக்
காட்டுவீர்கள். பிறகு, என் மனைவியைக் காட்டுவீர்கள். மூன்று
கோடாரியையும் நீயே வைத்துக் கொள் என்று சொன்னது போல, இறுதியில்
மூன்று பேரையும் வைத்துக் கொள்ள சொல்வீர்கள். ஒரு மனைவியே
எனக்கு தலைவலியாக இருக்கிறாள். மூன்று பேரை என்னால் சமாளிக்க
முடியாது" என்று பதில் சொன்னான்.
ஒரு நிறுவனத்தில் புதிதாக வந்த மேலாளர் எல்லா ஊழியர்களையும்
அழைத்து " இன்று முதல், விபத்துக்காகவும் சாவுக்காகவும் அன்றி,
வேறு எக்காரணத்திற்காகவும் யாரும் எந்த விடுமுறையும் எடுக்கக்
கூடாது." என்றாராம். உடனே ஒரு ஊழியர் திருமணத்திற்குக் கூடவா
விடுமுறை எடுக்கக் கூடாது? என்றாராம். உடனே மேலாளர் திருமணம்
என்பதை வாழ்க்கையில் நடக்கும் பெரிய விபத்துதானே! என்றாராம்.
இன்றைய திருமணங்கள் பல அப்படித்தானே இருக்கிறது.
"நிலம் வாங்குவதற்கு என்றால் வேகமாக நட. ஒரு திருமணம்
செய்வதற்கு என்றால் மெதுவாக நட" -யூதப் பழமொழி
"போருக்குப் போகும் போது ஒருமுறை செபி, கடலுக்குப் போகும்
போது இரு முறை செபி. திருமணம் செய்யப் போகும் போது மும்முறை
செபி" - ஜெர்மன் பழமொழி.
குடும்பம் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும்.
கற்பென்னும் கலங்காத நிலை ஒரு பெண்ணுக்கு அமைந்திருக்குமானால்
அப்பெண்ணைவிட பெருமை உடையவை வேறு எதுவுமில்லை .-யாரோ.
நாணத்தை சுமந்து நிற்கும் போது பெண் அழகு பெறுகிறாள். அறத்தை
சுமந்து நிற்கும் போது ஆண் அழகு பெறுகிறான். யாரோ.
ஆண் பெண் இருவரும் ஒருமனப்பட்டு வாழும் கல்விக்கூடம்
திருமணவாழ்க்கை. இதைவிட சிறந்த கல்வி உலகில் இல்லை. -ஷா
பசி, காமம், அன்பு, அகம்பாவம் என்ற நான்கு தூண்களில்
குடும்பம் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு தூண் ஆடினாலும்
குடும்பம் கலைய ஆரம்பிக்கும். -க.சந்தானம்
குடும்ப வாழ்க்கையை செம்மைப் படுத்துவது அன்பு.
திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து
வைத்துக் கொள். திருமணம் ஆனவுடன் ஒன்றை மூடிக்கொள். அமெரிக்கா
பழமொழி
பெண், ஆணைப் படைத்து வளர்ப்பவள். ஆணை ஆட்கொண்டு வாழ்விப்பவள்
உலக விவகாரங்களில் முழுப்பங்கும் ஏற்று பெண்கள்
உழைக்காவிட்டால் உலகம் ஒரு நாளும் நல்ல நிலைமையை அடைய
முடியாது. - பெர்னாட்ஷா
குழந்தைகளை உண்மையாக உருவாக்கும் சிற்பி தாய் தான். எனவே
தாய்மார்கள் தங்கள் உரிமைகளை மிகக் கவனமாக பயன்படுத்தினால்
பிறரால் மதிக்கப்படும் குழந்தைகள் உருவாகும். -கிரேக்கம்.
பெண்களுள் சிறந்தவர் யார்? எவருடைய பெயர் ஆண்கள் மத்தியில்
அதிகமாக நல்ல விதமாகக் கூட அடிபடுவது இல்லையோ அவரே பெண்களுள்
சிறந்தவர். -பெரிக்லீஸ்
மூவொரு இறைவனின் அன்பு உறவு பூமியில் நமது குடும்ப உறவு.
ஆணும் பெண்ணுமாய் இணைந்து பூமியில் அன்பு இறைவனை பிரதிபலிக்கச்
செய்வோம்.
இல்லறத்தை நல்லறத்தால் வளர்த்தெடுப்போம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை
- அருட்சகோதரி: செல்வராணி
O.S.M.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
உயிர்முதல் ஒன்றே!
'தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும்
உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர்,
சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என்னும் இன்றைய
இரண்டாம் வாசகப் பகுதியை நம் சிந்தனையின் தொடக்கமாக
எடுத்துக்கொள்வோம். இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக
முன்வைக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்
ஆசிரியர், இயேசு வானுலகிலிருந்து வந்தவர் என்றாலும்,
வானதூதர்களை விட மேலான மகன் என்றாலும், அவர்
மனுக்குலத்தோடு தன்னையே ஒன்றிணைத்து, அவர்களைச் சகோதரர்,
சகோதரிகள் என அழைக்கின்றார் என முன்வைக்கின்றார்.
தூய்மையாக்குகிற இயேசுவும், தூய்மையாக்கப்படும் நாமும் ஒரே
உயிர்முதலைக் கொண்டிருக்கின்றோம். அந்த ஒரே உயிர்முதல்
கடவுள்தாம் என்று இன்றைய முதல் மற்றும் நற்செய்தி
வாசகங்கள் குறிப்பிடுகின்றன. நம் உயிர்முதல் ஒன்றே என்ற
முதிர்ச்சியும் அறிவும் நமக்கு வந்துவிட்டால், நம் உறவு
வாழ்வு குடும்பம், பங்கு, சமூகம், திருச்சபை
ஒற்றுமையும், அமைதியும், சமத்துவமும் கொண்டதாக அமையும்.
இன்றைய முதல் வாசகம் (தொநூ 2:18-24), இரண்டாம் படைப்புக்
கதையாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கநூலில் இரண்டு
படைப்புக் கதையாடல்கள் இருக்கின்றன. முதல் கதையாடலின்படி
மனிதர்களைக் கடவுள் ஆணும் பெண்ணுமாகப் படைக்கின்றார்.
இரண்டாம் கதையாடல்படி, முதலில் ஆணையும் இரண்டாவதாக
பெண்ணையும் படைக்கின்றார். முதல் கதையாடல்படி, ஆணும்
பெண்ணும் கடவுளிடமிருந்து வந்த சொல்லால், கடவுளின்
உருவிலும் சாயலிலும் படைக்கப்படுகின்றனர். இரண்டாம்
கதையாடல்படி, ஆணைக் களிமண்ணிலிருந்தும், பெண்ணை ஆணின் விலா
எலும்பிலிருந்தும் உருவாக்குகின்றார். மென்மையான களிமண்
வன்மையான ஆணாகவும், வன்மையான விலா எலும்பு மென்மையான
பெண்ணாகவும் மாறுகின்றது. ஆணில் இருக்கும் பெண்மையையும்,
பெண்மையில் இருக்கும் ஆண்மையையும் இதைவிட வேறு எதுவும்
அழகாகச் சொல்லிவிட முடியாது.
முதல் படைப்புக் கதையாடலில், 'அனைத்தையும் நல்லதெனக்
காண்கின்ற கடவுள்,' இரண்டாம் கதையாடலில் 'மனிதன் தனிமையாக
இருப்பது நல்லதன்று' என்று சொல்லி, மனிதனின் தனிமையை
நல்லதல்ல எனக் காண்கின்றார். இங்கே 'தனிமை' என்பது ஓர்
உணர்வு அல்ல. மாறாக, இருத்தல். எடுத்துக்காட்டாக, 'ஃபோன்
தனியாக, சார்ஜர் தனியாக என்று நான் இரண்டையும் இரு பைகளில்
வைத்தேன்' என்னும் வாக்கியத்தில், 'தனியாக' என்பது 'தனிமை'
என்ற உணர்வைக் குறிப்பதில்லை. மாறாக, ஒற்றையாய் இருக்கின்ற
என்ற இருத்தல் பொருளில்தான் உள்ளது. அதுபோலத்தான் ஆதாம்
'தனியாக' (அதாவது, பிரிக்கப்பட்டவராக, ஒற்றையாக)
இருக்கிறார். ஏனெனில், 'பத்' என்ற எபிரேய வார்த்தை
அப்படித்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, 'துணை'
என்பதற்கு 'ஏசேர்' (உதவியாளர்) என்ற சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. 'துணை' என்பதும், 'இணை' என்பதும்
சரியான பொருள் அன்று. ஏனெனில், எனக்கு அலுவலகத்தில் உதவி
செய்யும் ஒருவரை நான் என் துணைவர் என்றும், என் இணையர்
என்றும் சொல்வதில்லை. 'தனக்குத் தகுந்த துணையை மனிதன்
காணவில்லை' என்ற வாக்கியத்திலும் 'உதவியாளர்' என்ற
வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை வைத்து
நாம் மேல்-கீழ் என்று, ஆண்-பெண்ணை உருவகிக்கத் தேவையில்லை.
மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்கின்றார் ஆண்டவர்.
'அவன் உறங்கினான்' என்ற பொருளைத் தரக்கூடி சொல் 'யஷான்'
என்பது. 'யஷான்' என்ற வினைச்சொல்லுக்கு இறந்து போதல் என்ற
பொருளும், உயிரை உருவாக்கக் கூடிய நீண்ட தூக்கம் என்ற
பொருளும் உண்டு (எம் செபக்குழுவின் 'யெஸ்னி' (YESNI Prays)
என்ற பெயரும், இந்த வினைச்சொல்லையே வேர்ச்சொல்லாகக்
கொண்டுள்ளது). உறங்கும்போது மனிதனுடைய விலா எலும்பு ஒன்றை
எடுத்துக் கடவுள் அதைப் பெண்ணாக மாற்றுகின்றார். கடவுள்
விலா எலும்பை எடுத்து அதைப் பெண்ணாக மாற்றியது வாசகராகிய
நமக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியுமன்றி,
உறங்கிக்கொண்டிருக்கும் ஆணுக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட
பெண்ணுக்கும் தெரியாது. ஆழ்ந்த உறக்கம் தெளிந்து எழுகின்ற
ஆதாம், தன் கண்முன்பாக தன்னைப் போலவே ஒன்று இருந்ததால்,
'பெண்' என்று அழைக்கிறார். ஆனால், 'ஆணிலிருந்து
எடுக்கப்பட்டவள்' என்ற சொல், தன் எலும்பையும் சதையையும்
பெற்றிருந்ததால்தான் என்பதை ஆதாம் எப்படி உணர்ந்தார்
என்பது நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து, 'மனிதன் தன் தாய்
தந்தையை விட்டு ... இருவரும் ஒரே உடலாக இருப்பர்' என்று
எழுதுகிறார் ஆசிரியர். அருட்சாதனங்கள் என்ற ஒன்ற
தொடங்கப்பட்ட காலத்தில் இவ்வாக்கியம் இங்கே
நுழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், இங்கே ஆதாம் தாய்-தந்தை
அற்றவராகத்தான் இருக்கிறார்.
இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் அடங்கியுள்ளன: (அ) ஆணின்
தொடக்கமும் பெண்ணின் தொடக்கமும் களிமண் மற்றும் விலா
எலும்பு என இருந்தாலும், இருவருக்கும் உயிர்தருபவர்
கடவுளே. ஆக, அவரே இருவரின் உயிர்முதல். (ஆ) ஆணும் பெண்ணும்
ஒரே சதை மற்றும் ஒரே உடல் கொண்டிருப்பதால் ஒருவர் மற்றவரை
நிரப்பி, ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியும். (இ)
பெண் உருவாக்கப்படுமுன் ஆணுக்குத் துணையாக இருந்தவர்
கடவுள். பெண் உருவாக்கப்பட்ட பின்னர் ஆண்
உறங்கிக்கொண்டிருந்தபோது பெண்ணுக்குத் துணையாக இருந்தவர்
கடவுள். ஆக, நம் முதல் இணைவர் அல்லது துணைவர் அல்லது தனிமை
போக்கி கடவுள்தான். ஆகையால்தான், நாம் அருட்சாதனங்கள்
அல்லது காதல் அல்லது நட்பு உறவில் ஒருவர் மற்றவரோடு மிக
நெருக்கமாக இருந்தாலும், மற்றவரால் நிரப்ப முடியாத தனிமை
அங்கே ஒளிந்துகொண்டே இருக்கிறது. அத்தனிமையைப் போக்க நம்
உயிர்முதலாகிய இறைவனால்தான் முடியும்.
ஆக, ஆண் மற்றும் பெண்ணின் உயிர்முதல் இறைவன் என மொழிகிறது
முதல் வாசகம்.
இரண்டாம் வாசகம் (எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவைத்
தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்ற ஆசிரியர்,
முதலில் இயேசுவின் தொடக்கம் பற்றி எழுதுகின்றார். இயேசு,
மகன் என்ற முறையில் வானதூதர்களை விட உயர்ந்தவராகவும்,
மனிதர் என்ற முறையில் வானதூதர்களைவிடச் சற்றே
தாழ்ந்தவராகவும் இருக்கின்றார். இந்தத் தாழ்நிலையும்,
தாழ்நிலையின் விளைவால் வந்த இறப்பும் 'கடவுளின் அருளால்
அனைவருடைய நலனுக்காகவும்' நடந்தது என்கிறார் ஆசிரியர்.
மேலும், அனைத்தையும் தமக்கெனப் படைத்த கடவுள் குறைவுற்ற
அனைத்தையும் தன் மகனுடைய துன்பங்கள் வழியாக
நிறைவுசெய்கின்றார். மனிதர்கள் அனைவரும் கடவுளால்
படைக்கப்பட்டவர்கள் என்னும் பொதுநிலையில் இயேசு
அனைவரையும், 'சகோதரர் சகோதரிகள்' என அழைக்கின்றார்.
ஆக, மனிதர் என்ற அடிப்படையில் இயேசுவின் உயிர்முதலும் நம்
உயிர்முதலும் இறைவனாக இருக்கின்றார். இயேசுவின்
தாழ்நிலையும் அவருடைய மாட்சியும் சந்திக்கும் ஒரே புள்ளி
உயிர்முதலே.
நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு
பகுதிகளாகப் பிரிக்கலாம்: (அ) மணவிலக்கு பற்றிய இயேசுவின்
போதனை (10:2-12), (ஆ) இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி
வழங்குதல் (10:13-16). இயேசுவின் காலத்தில்
வழக்கத்திலிருந்து மணமுறிவு பற்றிய போதனை அல்லது விதிமுறை
ஆண்களைக் காப்பாற்றுவதாகவும், பெண்களை
இழிவுபடுத்துவதாகவும் இருந்தது. ஆனால், இயேசுவின் போதனை
முதல் மற்றும் இரண்டாம் படைப்புக் கதையாடல்களின்
பின்புலத்தில் அமைகிறது. இயேசு இரண்டு படைப்புக்
கதையாடல்களையும் ஒன்றாக்குகின்றார். மேலும், மனிதர்கள்
இணைதல் என்பது படைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக
இருப்பதால், மனிதர்கள் பிரியும்போது அது படைப்புத்
திட்டத்தில் குறையை ஏற்படுத்துகிறது என்றும், படைத்தவரின்
நோக்கத்திற்கு எதிராகச் செல்கிறது என்றும்
எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு விபசாரத்திற்கு
வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபசாரத்திலும்
இருவர் ஒரே உடலாக மாறுகின்றனர். ஆனால், அங்கே கணவர் தன்
மனைவியின் இடத்தில் இன்னொரு உடலைத் தழுவிக்கொள்கின்றார்.
மேலும் அந்த உறவு தற்காலிகமானது. அந்த உறவு வெறும் உடல்
சார்ந்தது. அங்கே இருவரும் தங்களின் உயிர்முதல் இறைவனே
என்று அறிந்துகொள்வதில்லை. உடலில் தொடங்கும் உறவு,
உடலிலேயே தொடர்ந்து, உடலிலேயே முடிந்துவிடுகிறது.
தொடர்ந்து, இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும்
மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இதனால்,
திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பது தெளிவாகிறது.
ஏனெனில், 'குழந்தைப் பேறு' என்பது விபசாரத்தின் நோக்கம்
அல்ல. அது திருமண உறவின் நோக்கம் மட்டுமே. மேலும், ஆணும்
பெண்ணும் இணையும் திருமண உறவில், அவர்கள் தாங்கள்
பெற்றிருக்கின்ற உயிர்முதலாகிய இறைவனைத் தங்கள் உறவின்
கனியாகப் பிறக்கும் குழந்தைக்கு வழங்குகின்றனர்.
ஆக, ஆணும் பெண்ணும் திருமண உறவில் இறைவனால்
இணைத்துவைக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரில் விளங்குவதே
ஒரே உடலே. ஏனெனில், இவர்களின் உயிர்முதல் ஒன்றே.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு முன்வைக்கும் பாடங்கள்
எவை?
(அ) உயிர்முதல் இறைவனே
நம் உயிர்முதல் ஒன்றாகவும், அந்த ஒன்று இறைவனாகவும்
இருப்பதால் நாம், ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று
எந்த வேறுபாடும் பார்க்கத் தேவையில்லை. 'பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்' என்கிறது உலகப் பொதுமறை. எல்லா
உயிர்களும் பிறப்பில் ஒன்றே. ஏனெனில், அனைத்து உயிர்களும்
ஒரே உயிர்முதலாகிய இறைவனிடமிருந்தே தோன்றுகின்றன. வேற்றுமை
அல்லது பாகுபாடு பாராட்டும் எண்ணம் நம் உள்ளத்தில்தான்
தோன்றுகிறது. எனக்கு வெளியே இருக்கும் என் மனைவி அல்லது
ஒரு பெண் என்னைவிடத் தாழ்ந்தவர் என நினைப்பதும், நான்
பிறந்த சாதி எனக்கு அடுத்திருப்பவரின் சாதியை விட
உயர்ந்தது என்று நினைப்பதும் நம் மனத்தில் தோன்றுகிற
எண்ணங்களே தவிர, அப்படி ஒரு வேறுபாடு வெளியில் காணக்கூடிய
விதத்தில் ஒருபோதும் இல்லை. அனைவருடைய உயிர்முதலும் ஒன்றே
என்ற அத்வைத மனநிலை நம் அனைவருக்கும் பொதுவான பண்பைப்
பார்ப்பதற்கு நம் கண்களைத் திறக்கும். மேலும், நம்
உயிர்முதல் இறைவனே என்று உணரும் வேளையில் நாம் நம்
அனைத்துப் பிணைப்புகளிலிருந்தும் விடுதலை பெற முடியும்.
நம் எண்ணங்கள் சுதந்திரமாக வெளிப்படும். நம் மனதில்
பதைபதைப்பு குறையும். ஆழ்ந்த அமைதி குடிகொள்ளும்.
(ஆ) தாழ்ந்து போதல்
இயேசு தான் கடவுளாக இருந்தாலும், மனிதர் என்ற நிலைக்குத்
தன்னையே தாழ்த்துகிறார். ஏனெனில், தாழ்ந்த அந்த
நிலையில்தான் மனிதர்களோடு அவர் தன்னை இணைத்துக்கொள்ள
முடியும். மனித மீட்பு பெரிய நோக்கமாக இருந்ததால், அவர்
மனிதர்களுக்காகத் தாழ்ந்து போகின்றார். ஆக, நானும்
அடுத்தவரும் சமம் என்ற நிலை முதலில் வந்தவுடன்,
அடுத்தவருக்காக நான் தாழ்ந்துபோகத் தயாராக இருக்க
வேண்டும். அந்த நிலையில் நான் செயல்படக் காரணம்,
உயிர்முதல் ஒன்றே என்பதை நான் மதிப்பதுதான். ஒரே சாலையில்
இரு வாகனங்கள் எதிரெதிரே வருகின்றன என வைத்துக்கொள்வோம்.
இரு வாகனங்களும் சமமானவைதாம். இருவருக்கும் சாலையில் சமமான
உரிமை உண்டுதான். ஆனால், தங்கள் சமநிலையை மட்டுமே அவர்கள்
உறுதி செய்ய முனைந்தால் இருவரும் அதே இடத்தில்தான்
இருப்பர். அல்லது இருவரும் ஒருவர் மற்றவருடைய வாகனங்களைக்
காயப்படுத்திக்கொள்வர். மாறாக, ஒருவர் மற்றவருக்காகக்
தாழ்ந்து போனால், தன் வாகனத்தைச் சற்றே இறக்கினால்
இருவரும் இனிமையாகக் கடந்துபோக முடியும். இயேசுவின்
தாழ்ச்சி மனிதர்களாகிய நம்மையும் கடவுள் நிலைக்கு
உயர்த்துகிறது.
(இ) உறவைக் கொண்டாடுவோம்
ஒரே பாலினத் திருமணம் , திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு,
தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல்,
ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை
எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு
'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி,
'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது.
மேலும், குழந்தைகள் இன்று தேவையற்ற ஒன்றாகக்
கருதப்படுகிறார்கள். ஒரே உடலாக மட்டும் வாழ்ந்துவிடவும்,
அல்லது இரு உயிர்களாக மட்டும் வாழ்ந்துவிடவும் நாம்
நினைக்கின்றோம். நாம் இவற்றில் எதை ஆதரித்தாலும்
எதிர்த்தாலும் ஒன்று மட்டும் உண்மை. நம் அனைவருடைய
வேர்களும் நம் குடும்பங்களில்தான் பதிந்திருக்கின்றன.
குடும்பத்தின் வழியாகவே நாம் இறைவனின் உயிரிலும்
பங்கேற்கின்றோம். குடும்ப உறவுகளைத் தொடர்ந்து வருகின்ற
திருமண உறவும் கொண்டாடப்பட வேண்டும். இன்று ஊடகங்களில்
வரும் செய்திகளும், நிகழ்ச்சிகளும், மெகாத் தொடர்களும்,
'மனிதர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமில்லை' என்ற பொய்யை
உரக்கச் சொல்கின்றன. பிறழ்வுபட்ட குடும்பங்களை மட்டும்
முன்வைத்து நம்மைப் பயமுறுத்துகின்றன. தாழ்ச்சியிலும்,
விட்டுக்கொடுத்தலிலும், உடனிருப்பிலும் சிறந்து விளங்கும்
குடும்பங்கள் பற்றி அவை பேசுவதில்லை. ஆக, நம் குடும்ப உறவை
நாம் நினைத்தாலன்றி கணவனும் மனைவியும் நினைத்தாலன்றி
வேறு எவரும் உடைத்துவிட முடியாது. இந்தப் புரிதல்
வந்துவிட்டால் மணமுறிவு குறைந்துவிடும். அதே வேளையில்,
மணமுறிவு பெற்ற இணையர்களையும் எண்ணிப் பார்ப்போம். அவர்களை
நாம் தீர்ப்பிட வேண்டாம். தங்கள் இணையர்களைத் தங்களால் ஏதோ
ஒரு வகையில் அவர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை.
அவ்வளவுதான்! அதே வேளையில் அவர்களுடைய இயலாமை மற்றும்
கையறுநிலையை மற்றவர் தன் தேவைக்காகப்
பயன்படுத்திக்கொள்தலும் தவறு என்பதை நாம் அறிய வேண்டும்.
நம் உயிர்முதல் ஒன்று என்றும், அந்த ஒன்று இறைவன் என்றும்
உணர்ந்தால் நாம் உடல்சார் இன்பத்திலிருந்து விடுதலை பெற
முடியும்.
இன்றைய திருப்பாடல் ஆசிரியர் (திபா 128), ஆண்டவருக்கு
அஞ்சி நடக்கும் ஆடவர் பெறும் ஆசிகளாக, 'இல்லத்தில்
கனிதரும் மனைவி,' 'ஒலிவக் கன்றுகளாகப் பிள்ளைகள்,'
'உழைப்பின் பயன்,' 'நற்பேறு,' 'நலம்' என்னும் ஐந்து ஆசிகளை
முன்வைக்கின்றார்.
'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவராக!' என்று நாமும் ஒருவர்
மற்றவரை வாழ்த்துவோம். ஏனெனில், நம் அனைவருடைய
உயிர்முதலும் ஒன்றே!
நிகழ்ச்சி
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தன் வீட்டுக்கு அழைத்து,
ஐயா! திருமணம் முடித்து 10 வருசம் ஆகுது.
குடும்பத்தில் நிம்மதியே இல்லை. ஒரே சண்டை
சச்சரவாகத்தான் இருக்கு. நிம்மதியா வாழ வழி சொல்லுங்கள்
என்று முறையிட்டார். ஞானி பதில் சொல்லவில்லை. சிறிது
நேரம் அமைதி காத்தபின், தன் மனைவியை அழைத்து கொஞ்சம்
இருட்டாக இருக்கிறது. விளக்கை ஏற்றி வை என்றார்.
வெளிச்சமாக இருந்தாலும் அவளும் அப்படியே செய்தாள்.
திரும்பவும் மனைவியை அழைத்து, காப்பி கொண்டு வரச்
சொன்னார். இருவருக்கும் காப்பி வந்தது. காப்பியில்
சக்கரையே இல்லை. ஒரே கசப்பு.
ஞானி, மனைவியைப் பார்த்து, எனக்கு சக்கரை சரியாக
இருக்கிறது. இவருக்குத் தேவைப்படலாம். கொஞ்சம்.
சர்க்கரை கொண்டு வா என்றார். வந்தவனுக்கு எல்லாம்
ஆச்சரியமாக இருந்தது. ' அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
தான் வந்த காரியத்தை திரும்பவும் நினைவுப்படுத்தினான்.
இன்றைய வார்த்தை வழிபாட்டிலே முதல் வாசகமும், மூன்றாம்
வாசகமும், திருமணம், குடும்ப வாழ்வு இறைவனின்
திட்டத்தில் முக்கியமானது. இந்த உலகில் மகிழ்ச்சியான
வாழ்விற்கு குடும்ப வாழ்வே அடிப்படை என்பதைச்
சித்தரிக்கிறது. . கணவனும், மனைவியும் ஒரே உடலாக
இருக்கிறார்கள். அவர்களிடையே சமத்துவம் நிலவ வேண்டும்.
அந்தச் சமத்துவம் அவர்கள் இறைவனின் அன்பின்
சின்னங்கள் என்று ஒருவருக்கொருவர் எடுத்துச் சொல்வதாக
இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கடவுள் இணைத்ததை
மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற இறை வார்த்தையை
கணவனும், மனைவியும் பின்பற்ற சில பண்புகளை விதிமுறைகளை,
அணிகலன்களாகக் கொண்டிருக்க வேண்டும். குறை நம்ரிக்கை:
இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழுங்கள். உலகத்தை, உலக
மனிதர்களை நம்பி ஏமாந்து போகாதீர்கள். ஏனெனில் மனிதன்
இன்று இருந்து நாளை மறையும் புல்லைப் போன்றவன்.
என்னை நம்புவோர் என்றுமே வாழ்வர். நிலை வாழ்வைக்
கொண்டுள்ளனர் (யோவா. 6:47).
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே வாழ்வர்,
சாகமாட்டார்கள் (யோவா. 8:51) என்று இயேசு சொன்னார். கூறை
வேண்ருதல்: ஆண்டவர் இயேசுவின் பிரசன்னம் இல்லாத
குடும்பங்களில், அன்பு, அமைதி இருக்காது. மாறாக
வைராக்கியம், ஆணவம், கோபம், வெறுப்புதான் தலை தூக்கி
நிற்கும். செபமற்ற வீடு செத்த வீடு. குடும்ப செபம்
இல்லாத குடும்பம் கூரை இல்லாத வீடு என்று கூறுவார்கள்.
எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தில்
கூடியிருப்பார்களோ, அங்கே நான் இருப்பேன் (மத். 18:20)
என்கிறார் ஆண்டவர்.
கூறை அணுபவம்: இறை நம்பிக்கையும், இறை வேண்டுதலும் ஒரு
குடும்பத்தில் இருந்தால் இறை அனுபவம் கிடைக்கும்.
இறைவன் நம்மோடு என்ற உணர்வு ஏற்படும். இறைவன் எத்துணை
நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள் (திபா. 34:8)
என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். அன்யு உறவு:
குடும்பம் அன்பு உறவு இன்றி அமையாது. இது களங்கமற்ற,
பிரமாணிக்கமான அன்பாக இருத்தல் தேவை. உலகிலே உள்ள
அனைவரும் நிறைகளும், குறைகளும் உடையவர்கள். நிறைகளைப்
பாராட்டி குறைகளைச் சுட்டிக் காட்டுவது அன்பின்
அடிப்படையிலே அமைய வேண்டும்.
நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரை
அன்பு செய்யுங்கள் (யோவா. 13:34) என்று கூறிய இயேசுவின்
மனநிலை கணவன், மனைவியிடையே தேவை.
தியாகம்: தியாகம் இல்லாத வாழ்வு உப்பு இல்லாத
உணவுக்குச் சமம். மெழுகுதிரி கரைந்தால்தான் வெளிச்சம்
தருகிறது. சந்தனக்கட்டை மாவாக்கப்படும்போதுதான் மணம்
பரவுகிறது. அன்பார்ந்தவர்களே ஒன்றை இழந்தால்தான்
மற்றொன்றைப் பெற முடியும் என்பது தத்துவம். எனவே
சுயநலம், ஆணவம், அதிகாரம், அகங்காரம், தற்பெருமை,
பழிவாங்கும் எண்ணங்களை இழந்தால்தான் வாழ்வு பெற
முடியும்.
கோதுமை மணியானது மண்ணிலே விழுந்து மடிந்தால் ஒழிய, அது
அப்படியே இருக்கும். மடிந்தால்தான் பலன் தரும் (யோவா.
12:24)
பரிசுத்தராக கரங்கள்: வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான திருமண
வாழ்வு இறைவனுக்கு முன்பாக நாம் தூயவராக வாழும்போதுதான்
நிறைவு பெறும். திருமணம் என்பது ஓர் அழைப்பு -
இறைவனின் அழைப்பு. இது ஒருவருக்கொருவர் அன்பை
செலுத்திப் பிரமாணிக்கமாய் வாழும் பரிசுத்த
தனத்தில்தான் அமையும்.
உள்ளத்தால் செவிமரத்தல்: கடவுள் மனிதனிடத்திலிருந்து
பெண்ணை உருவாக்கி, இருவரும் ஒரே உடலாக இருங்கள் (தொ.நூ.
2:24) என்றார். இருவருக்கும் ஏற்றத் தாழ்வு இல்லை.
யார் பெரியவர்? கடவுள்தான் பெரியவர். இருவரும் சமம்.
ஒருவர் ஒருவரை நிறைவு செய்பவர்கள். எனவே நண்பர்களைப்போல
மனம் விட்டுப் பேசி, கலந்துரையாடி, நாம் என்ற
உணர்வுடன், செவிமடுத்தல் மிகத் தேவை. '
தனித்தன்மையை மதித்தல்: வாழ்வில் ஒப்பிட்டுப்
பார்க்காதீர்கள். ஒப்பிட ஆரம்பித்தால் புற்றுநோய்க்கு
ஆளாகி விடுவீர்கள். ஒப்பிட்டு நான் உயர்ந்தவன் என்று
நினைத்தால், ஆணவம், பொறாமை குடிகொள்ளும். அல்லது
தாழ்ந்தவன் என்றால் நிறைவற்ற தன்மை, தாழ்வு மனம்
உண்டாகிவிடும். கடவுள் படைத்த ஒவ்வொருவரும் தனித்தன்மை
வாய்ந்தவர் என்பதை மதிப்போம்.
முடிவுரை
வாழ்க்கை என்பது வாழ்ந்தாக வேண்டும் என்பது நியதி. , தேனை
எடுத்தால் தேனீ கொட்டும் என்பது சுமை. அதேபோல தேனீ
கொட்டினாலும் தேனை எடுப்பேன் என்ற சவாலைப்போல, சுமைகள்
நிறைந்த இந்த இல்லற வாழ்வை வாழ்ந்து காட்டுவேன்
என்பதுதான் இல்லறத்தின் நற்பண்பாகும்.
பெண்ணை திருமணத்தில் விலை பேசுவது பெரிய பாவம். இந்த
இழிநிலை நம்மில், நம் சமூகத்தில் மறைய வேண்டும். ..
அன்புள்ள கணவன், பாசமுள்ள மனைவி, கீழ்ப்படிந்து நடக்கும்
பிள்ளைகள் என்ற நிலையில் நம் குடும்பங்கள் அமைந்தால்
அது வானகத்தில் தெய்வ நிலைக்குச் சமம் (கொலோ.3:18-21).
இன்றைய நற்செய்தியில் இயேசு தொடக்க நூல் 1:26-யும்,
;24-யும் மேற்கோள்காட்டி, பரிசேயரைப் பார்த்து,
இருவரும் (கணவனும், மனைவியும்] ஒரே உடலாய் இருப்பர்.
இனி அவர்கள். இருவர் அல்லர் ஒரே உடல் என்கின்றார்.
கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக இந்த 21-ஆம்
நூற்றாண்டிலே எத்தனையோ குடூம்பங்களிலே. கணவனும்,
மனைவியும் பிரிந்து வாழ ஆசைப்படுவதை நாம்.
காண்கின்றோம். இதோ இறுதிவரை பிரியாது வாழ கணவனும்,
மனவியும் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட
திருக்குடும்பத்தின் தலைவியும், தலைவரும் நம்முன்னே
வந்து, ற்கின்றார்கள். நமது அன்னை கன்னி மரியா கூறுவது
என்ன? மனைவியரே, உங்கள் கணவர்களிடமிருந்து எதையுமே
எதிர்பார்க்காதீர்கள் என்கின்றார். மரியா ஏழுமுறை
பேசியதாக நற்செய்தி கூறுகின்றது.
யோசேப்பின் வாழ்க்கையில் எத்தனையோ குழப்பங்கள்,
ஏமாற்றங்கள், துன்பங்கள், துயரங்கள், ஆபத்துக்கள்,
விபத்துக்கள், சோதனைகள், வேதனைகள்! ஆனால் ஒருமுறைகூட
அவர் யார் மீதும் குறை கூறியது கிடையாது; யாரிடமும்
அவருக்கென்று எதையும் கேட்டது கிடையாது. யோசேப்பு
ஒருபோதும் ஏமாற்றமடைந்ததில்லை! எதிர்பார்த்தால்தானே ஏமாற!
எங்கே ஏமாற்றமில்லையோ அங்கே சண்டை சச்சரவு இருக்காது,
பிரிவினை இருக்காது.
இயேசு இன்றையக் குடும்பங்களுக்குத் தரும் அறிவுரை இதோ:
என் தாய் மரியாவைப் பால வாழுங்கள்! என்னை கண்மணிபால
காத்த யோசேப்பைப் போல வாழுங்கள்! அனைவருடைய
நலனுக்காகவும் உயிர்விட்ட (இரண்டாம் வாசகம்) என்னைப்
போல வாழுங்கள்! அப்போது பிரிவு என்ற எண்ணமே உங்கள்
மனத்தில் எழாது! உங்கள் குடும்பத்திலுள்ள எல்லாரும்,
குறிப்பாக கணவனும், மனைவியும் மலரும் - மணமும் போல,
தேனும் சுவையும் போல, வானும் நிலவும் போல, கடலும்
அலையும்போல இணைந்து வாழ்வீர்கள்! ' மேலும் அறிவோம் :
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்லாழ்க்கை
பண்டும் பயனும் அது (குறள் : 45)
பொருள் : ஒருவர் குடும்ப வாழ்வு அன்பின் இயல்பையும்
அறச்செயலையும் கொண்டிருக்குமானால் அவை முறையே
பண்பாகவும் பயனாகவும் திகழும். கணவனும் மனைவியும்
கருத்து ஒருமித்து வாழ்ந்தால் அன்பே பண்பாகவும் அறமே
பயனாகவும் விளங்கும்.
"கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள
வேறுபாடு என்ன?" என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர்,
"மனைவியே கடவுள் தந்த சோதனை தானோ!" என்றார், திருமண வாழ்வு
ஒரு சிலருக்குச் சோதனையாகவும் வேறு சிலருக்கு வேதனையாகவும்
உள்ளது. இச்சோதனையையும் வேதனையையும் சாதனையாக
மாற்றுவதில்தான் திருமண வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது.
திருமணத்தின் மாண்பையும் அதன் முறிவுபடாத தன்மையையும்
இன்றைய அருள்வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.
அருட்சாதனங்கள் மனிதத் தன்மையை மட்டுமல்ல, தெய்வீகத்
தன்மையையும் உடையது. அது படைப்பின் தொடக்கத்திலிருந்தே
கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான அமைப்பு, கடவுள்
தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்ததைக் கண்டார். ஆனால்
மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று (தொநூ 2:18)
என்பதைக்கண்ட அவர், ஆணுக்குச் சரிநிகராகப் பெண்ணைப்
படைத்தார். மனித இனம் ஆணினமோ பெண்ணினமோ அல்ல; மாறாக
ஆணினமும் பெண்ணினமும் இணைந்த கலப்பினமே மனித இனமாகும்,
ஆறும். பெண்ணும் ஒன்றாக இணைந்தே கடவுளின் சாயலைப்
பிரதிபலிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைச்
சார்ந்தும் தழுவியும் செயல்படுவதே கடவுளின் திட்டமாகும்.
"நட்பு நட்புதான், காதல் காதல்தான்; காதல் மாறலாம், நட்பு
மாறுமா?" என்ற திரைப்படப் பாடலுக்கிணங்க, தம்பதியர்கள்
என்றென்றும் நண்பர்களாகத் திகழ வேண்டும். ஒவ்வொருவரும் தம்
இதயக் கிடக்கையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள
வேண்டும். நண்பர்கள் காதலர்களாக மாறுவதைவிட, காதலர்கள்
நண்பர்களாக மாறுவதே முக்கியம், கணவனுக்கும் மனைவிக்கும்
இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமானது, பிரிக்க இயலாதது.
அதன் தன் காதலனிடம், "எனக்காக இருப்பீர்களா?" என்று
கேட்டதற்கு அவள், "நம் காதல் இறவாக்காதல்" என்றான்,
உண்மையான அன்பு நிரந்தரமானது, சாகாத் தன்மையுடையது
கிறிஸ்து தம்மவரை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 1:3; 1 );
தம்மவருடன் உலகம் முடியும் வரை எந்நாளும் உடனிருக்கிறார்
(மத் 24:30).
மணமுறிவு கடவுளின் திட்டத்திற்கு முரணானது. மணமுறிவை
வெறுப்பதாகக் கடவுள் பழைய உடன் படிக்கையில்
குறிப்பிடுகிறார் {மலா 2:15-16) மணவிலக்குச் சான்றிதழ்
கொடுத்து மனைவியை விலக்கிவிட மோசே அனுமதி வழங்கியது
மக்களின் கடின உள்ளத்தின் பொருட்டேயாகும். மணமுறிவினால்
தடம்புரண்ட திருமண வாழ்வைக் கிறிஸ்து மீண்டும் அதன் தொடக்க
நிலைக்குக் கொண்டுவந்து, "கடவுள் இணைத்ததை மனிதர்
பிரிக்காதிருக்கட்டும்" (மாற் 10:9) என்று கண்டிப்பான
கட்டளையைக கொடுத்தார்.
கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இது படைப்பின்
மறைபொருள், ஆண் கிறிஸ்துவாகவும் பெண் திருச்சபையாகவும்
மாறுகின்றனர், இது மீட்பின் மறைபொருள், கணவனுக்கும்
மனைவிக்கும் இடையே உள்ள உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும்
திருச்சபைக்கும் இடையே உள்ள உடன்படிக்கையில் ஊன்றி,
அதற்குச் சாட்சியம் பகர்கிறது (எபே 5:25-32). இவ்வாறு
படைப்பிலும் மீட்பிலும் திருமண அன்பு கடவுளின் நிலையான
அன்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ளது. மணமுறிவை நாடும்
தம்பதியர் கடவுளின் உடன்படிக்கையை முறித்து கடவுளுக்கே
துரோகம் செய்கின்றனர், திருமண அன்பு கணவன் - மனைவி என்ற
குறுகிய வட்டத்தில் முடிவடையாது. அதன் மூன்றாம்
பரிமாணமாகிய குழந்தைச் செல்வத்தில் முழுமையடைகிறது.
குழந்தையானது மணமக்களின் கூட்டொருமை; அவர்களுடைய அன்பின்
நிலையான நினைவுச் சின்னம். நல்ல மனைவியும் நல்ல மக்களும்
ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு அருளும் பேறு என்று
இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 128:3).
திருமணத்தின் முறிவுபடாத தன்மையைப் பறைசாற்றிய உடனே,
கிறிஸ்து குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு ஆசி வழங்குவது
குறிப்பிடத்தக்கது (மாற் 10:13-18).
ஒரு கணவர் தம் மனைவியை என்னிடம் காட்டி, "சாமி! இவளுடன் 43
வருஷமா நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
அதற்கு அவருடைய மனைவி, "சாமி, நரகத்தில் இருந்து கொண்டே 6
பிள்ளைகளைப் பெத்த இவரு. மோட்சத்தில் இருந்தாருனா எத்தனை
பிள்ளைகளைப் பெற்றிருப்பாரோ?" என்றார். திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில்
வாழப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, அன்பு உள்ள இல்லறம்
சொர்க்கம்; அன்பு இல்லாத இல்லறம் நரகம்.
அன்பிலே இருவகை உண்டு. ஒன்று ஆள விரும்புகின்ற அன்பு,
மற்றொன்று ஆட்பட விரும்புகிற அன்பு, ஆள விரும்புகிற அன்பு
தன்னலமிக்க அன்பு, பிறரைப் பயன்படுத்தும் அன்பு, ஆட்பட
விரும்புகிற அன்பு தியாகமிக்க அன்பு, பிறருக்குப்
பயன்படுகின்ற அன்பு. கிறிஸ்துவின் அன்பு ஆளவிரும்புகிற
அன்பு அல்ல, ஆட்பட விரும்புகின்ற அன்பு, "மானிட மகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொன்பாடு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும்
வந்தார்" (மாற் 10:45), தம்பதியர்களிடையே கிறிஸ்துவின்
தியாகமிக்க அன்பு இருந்தால், நீதிமானின் பொறுமையையும்
கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள்
இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர் காலம் இல்லை
என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் சுடவுள் நீதிமான்களை
எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.
"செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுத்து என் உயிரைப்
பறிக்கப் பார்க்கின்றனர், கடவுள் எனக்குத் துணைவராய்
இருக்கிறார்" (திபா 54:3-4), தீமைக்குத் தீமை
செய்பவர்களுக்கு கிடைப்பது ஒரு நாள் இன்பம், தீமையைப்
பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துரைசாம் புகழ் (குறள் 15)
திருஅவை என்ற கிறிஸ்துவின் மறை உடலில் இன்னும் ஆறாத சில
சரித்திரக்காயங்கள் உண்டு. ஒன்று திருமண முறிவால்
நிகழ்ந்தது.
ஒரு திருமணம் முறிந்ததால் திருஅவையோடு ஒரு நாடு
கொண்டிருந்த உறவே முறிந்த நிகழ்ச்சி இன்னும் அழிந்துவிடாத
ஒரு வரலாற்றுவடு.
இங்கிலாந்து மன்னன் 8ம் ஹென்றி, முறைப்படி மணமுடித்த
மனைவி கத்தரின் இருக்க, அவளை விலக்கிவிட்டு அன்னா என்ற
பெண்ணை மணக்கத் திருத்தந்தை 7ஆம் கிளமென்டிடம் அனுமதி
கேட்டான். "இறைவன் இணைத்ததை மனிதன்
பிரிக்காதிருக்கட்டும்" என்று மறுத்துரைத்தார்
திருத்தந்தை. அந்த மறுப்புக்கு மண்டியிட மறுத்தான்
மன்னன். 17 ஆண்டுகள் கூடி வாழ்ந்த மனைவியை விலக்கிவிட்டு
தன் மனம் விரும்பிய மாதை மணமுடித்துக் கொண்டான். அந்த
மணமுறிவோடு, திருஅவையோடும் தனது உறவை முறித்துக்
கொண்டான். நாட்டுக்கு மட்டுமல்ல, இங்கிலாந்துத்
திருஅவைக்கும் நானே தலைவன் என்று அறிவித்தான்.
எதிர்த்தவர்களையெல்லாம் கொன்று குவித்தான். 20 ஆயர்கள்,
600 குருக்கள் உட்பட 72000 பேர் உயிர் இழந்தனர்.
இவ்வாறு பிறந்தது ஆங்கிலிக்கன் சபை. அதோடு
நின்றுவிடவில்லை அவன். ஆசையோடு மணமுடித்த அன்னாவையும்
கொன்றுவிட்டு ஆறு தடவைகள் மறுமணம் செய்து கொண்டானாம்.
ஒரு திருமணத்தின் முறிவுபடாத தன்மையை எண்பிக்க இத்தனை
இரத்தச் சான்றுகள்!
ஏதேன் தோட்டத்தில் ஒலித்த முதல் காதல் கீதம், மனிதன்
பேசிய முதல் வார்த்தை: "இவளே என் எலும்பின் எலும்பு,
இவளே என் சதையின் சதை": (தொ.நூ. 2:23). இதற்கு இயேசு
எழுதிய விளக்கவுரை: "இனி அவர்கள் இருவர் அல்ல. ஒரே
உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர்
பிரிக்காதிருக்கட்டும்'" (மார்க். 10:8-9). இந்தத்
திருவசனத்தில் "எனவே" என்ற சொல்தான் ஆண்-பெண்
இணைப்புக்கே அர்த்தமூட்டுவது. கடவுளின் சட்டம் என்பதால்
அல்ல திருமண அன்பின் இயல்பு காரணமாக திருமண
உடன்படிக்கையில் மணமுறிவுக்குச் சிறிதும் ஆடமில்லை.
"திருமணத்தின்போது "ஈருடலும் ஒருயிரும் போல் வாழ்க"
என்று பெரியோர் வாழ்த்துவதில் ஒரு பெரிய தத்துவமே
அடங்கியிருக்கிறது. அப்பாவி மணமக்கள் அதை வாழ்த்து என்று
எண்ணிப் பூரித்துப்போகிறார்கள். அது வாழ்த்து அல்ல,
எச்சரிக்கையாக்கும். ஈருடலுக்கு ஓர் உயிர் என்றால்
ஒர் உடலுக்கு அரை உயிர்தானே! இதுவரை உங்களுக்கு முழு
உயிர் இருந்தது. எந்த நேரம் இல்லறத்திற்குள்
நுழைந்தீர்களோ, அந்த நேரமே பாதி உயிர் போய்விட்டது.
எஞ்சிய பாதி உயிரும் எப்படியெல்லாம் போகப்போகிறதோ!
இதுதான் வாழ்த்துக்கான விளக்கம்" என்றார் மணமக்களை
வாழ்த்திய பெரியவர் ஒருவர்.
எங்கே இப்படி நகைச்சுவையாக்கி விடுவார்களோ என்று நினைத்த
இயேசு "ஓர் உடலும் ஒர் உயிரும் போல் வாழ்க" என்று
வாழ்த்தும் வகையில் "நீங்கள் ஓர் உடல்" என்கிறார்.
உயிரால் மட்டுமல்ல, உணர்வானாலும் உடலாலும் மணமக்கள்
ஒருவரே!
அன்பு என்பது தன்னிலேயே காலத்தைக் கடந்தது. "அன்பே, உன்னை
இத்தனை ஆண்டுகள் இத்தனை மாதங்கள், இத்தனை நாள்கள் -
உன்னை அன்பு செய்வேன், பிறகு அம்போ என்று
விட்டுவிடுவேன்" என்று சொன்னால் எவள் கழுத்தை
நீட்டுவாள்? சிரிப்பாய் சிரிக்கும் இந்தப்
பைத்தியக்காரத் தனத்தைத்தான் நீதிமன்றங்கள் நாள்தோறும்
மணமுறிவு என்ற பெயரில் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன.
"மணக்குமுன் இருவராய் இருந்த ஆணும் பெண்ணும் மணந்த
பின் ஒருவராகி விடுகிறார்கள். ஆனால் எந்த ஒருவராவது
என்று அவர்கள் தீர்மாணிக்கமுயலும் போதுதான் தொல்லை
தொடங்குகிறது" என்கிறார் ஒருவர் கிண்டலாக. தன்னைப்
போலத் தனக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்று
இருவரும் - தனித்தனியே எண்ணும்போதுதான் சிக்கல்.
இருபாலரின் சமத்துவத்தை வலியுறுத்தி பழைய ஏற்பாட்டின்
உறவை முறிக்கும் சட்டத்தை (இ.ச. 24:1-4) இயேசு
நிராகரித்தார். "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே..."
(மத். 19:8) என்று சொல்லிச் சமுதாய அவலத்தைச்
சாடினார். ஆழமான, புரட்சியான பதில்! மோசே ஒரு
விதிவிலக்கை அனுமதித்தார் என்பது உண்மைதான். ஆனால் அது
கடவுளின் எண்ணமோ விருப்பமோ அல்ல என்பதுதான் இயேசுவின்
திடமான கருத்து.
ஒரே இறைக்கொள்கைக்கு (Monotheism) எடுத்துக்காட்டாகவே
திருமணத்தை ஒருமை அடையாளமாக (Monogamy) தமதிருத்துவம்
என்னும் தெய்வீக ஒருமைப்பாட்டின் , அடையாளமாகவே கணவன்
மனைவி ஒருவனுக்கு ஒருத்தியாக ஒரே உள்ளம் ஒரே உடலாக இருக்க
விரும்பினார். ஆனால் அங்குதான் எத்தனை பிளவுகள்!
மணமுறிவு இரண்டு வகை... 1. அம்பலத்தில் நடப்பது:
வெளிப்படையாக, உலகறிய விலகி வாழ்பவர்கள். 2. அறைக்குள்
நடப்பது: அந்தரங்க சோகங்கள் ஆயிரம். எனினும்
மதத்துக்காக, கெளரவத்துக்காக, குழந்தைகளுக்காக ஒன்றாக
வாழ்வது போல் காட்டிக் கொள்பவர்கள். பகல் எல்லாம்
பாம்பும் கீரியும் போல. ஆனால் ராத்திரி
நேரத்துப்பூஜைகள் ஒழுங்காக நடக்கும். குழந்தைகள்
இடைவெளியின்றிப் பிறக்கும். உண்மையான அன்பு இல்லாமல்
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் விபச்சாரத்தில்
பிறக்கும் குழந்தையே! வார்த்தைகள் கடுமையானவைகள்,
ஆனால் உண்மையானவைகள்.
எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாம் நடப்பதிலா அன்பு நிறைவு
பெறுகிறது? சேவையிலும் தியாகத்திலுமன்றோ!
ஆனந்துக்குக் திருமணமாகி. 13 ஆண்டுகள்.
தலைப்பிரசவத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறினால் இடுப்புக்குக்
கீழ் செயலற்றுப் போன மனைவி படுத்த படுக்கையில்.
சமைப்பது, துவைப்பது உட்பட அனைத்தையும். ஆனந்துதான்
செய்ய வேண்டும். இப்படி 12 ஆண்டுகள். இதை அறிந்த
பங்குக்குரு பரிவோடு சொன்னார்: "ஆனந்த், நான் உனக்காக
செபம் செய்கிறேன். ஒன்றில் உன் மனைவிக்கு விரைவில்
நல்ல சுகம் கொடுக்கட்டும் அல்லது அவளை இறைவன் தன்னிடம்
அழைத்துக் கொள்ளட்டும்" அதிர்ச்சி அடைந்த ஆனந்த்
சொன்னான்: "சாமி, அவள் செத்துவிட்டால் என்னால்
உயிர்வாழ முடியாது. இப்படியே அவள் எத்தனை ஆண்டுகள்
இருந்தாலும் அவளோடு வாழ்வதே பெறும் பேறு" எதையும்
எதிர்பார்க்காத நிபந்தனையற்ற அன்பு! உடல் அழகிலும்
கவர்ச்சியிலும் மட்டுமே நம்பிக்கை வைக்காத அன்பு!
திருமணத்தின் அடித்தள மூலக்கூறுகள் இரண்டு: 1. ஒருமைப்
பண்பு (unity) 2. முறிவுடாப் பண்பு (indissoluvility).
கிறிஸ்தவரல்லாதவர்களின் "திருமணங்களும்
இவ்விருபண்புகளைக் கொண்டிருந்தாலும்
திருவருள்சாதனத்தால் அர்ச்சிக்கப்பட்ட திருமணங்களுக்கு
இது ஆணி வேராகும்.
குடும்ப வாழ்வில் சமத்துவம் தேடுவது அபத்தம்.
சமத்துவத் தேடலில் உரிமைகளும் கடமைகளும்தாம்
கண்ணுக்குத் தெரியும். ஆனால் தியாக மனப்பான்மையும்,
விட்டுக் கொடுத்து ஏற்று அன்பு செய்வதும் திருமண உறவின்
ஆழத்திற்கு அவசியம். தவறுகளை மன்னிக்க மட்டுமல்ல,
பகிர்ந்து கொள்ளும் மனம் வேண்டும்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
பாங்கான வாழ்வு பெற்று பரமனின் ஆசியுற்று
நீங்காத அன்புகற்று நிலைத்த இல்லறமே முற்ற