மார்ச் 1: புனித யோசேப்பின் முன்நிழல்
கிறிஸ்துவின் திருச்சபை பழைய சட்டத்தின்
விழாக்கள் மற்றும் சடங்குகளில் முன்கணிக்கப்பட்டிருப்பது போல,
உலக மீட்பில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சுற்றியுள்ள
முக்கிய நபர்களும் பழைய ஏற்பாட்டில் முன்நிழலிடப்பட்டிருக்கிறார்கள்.
நமது அன்னை மரியின் முன் குறித்தலை நாம் எஸ்தர் மற்றும்
யூதித்தின் வாழ்வில் காண்கிறோம்.
அதைப்போலவே, இறைவனின் புதிய அருளாட்சியில் புனித யோசேப்பின்
இடமானது பாராவோனின் அரசவையிலிருந்த நமது முதுபெரும் தந்தை
யோசேப்பில் முன் குறிக்கப்பட்டிருக்கிறது. எனவே, கடவுள் தமது
அன்பினால் தாம் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கான வழியை பல நூறு ஆண்டுகளுக்கு
முன்னதாகவே தயார் செய்கிறார். விண்ணகத்தில் அவர்களுக்கான
வேலையையும் அரியணையையும் அவர்கள் அவருக்கான உழைப்பாலும் துன்பத்தினாலும்
பெற வேண்டும்.
நமது முதுபெரும் தந்தை யோசேப்பின் வாழ்வு முழுவதும் இயேசுவின்
வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பின் வாழ்வோடு நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கிறது. அவருடைய இளம் வயதில் அவர் அடைந்த தொல்லைகளும்
துன்புறுத்தல்களும், அவருடைய நீண்ட நாளைய அடிமைத்தனம் மற்றும்
ஒரு தெளிவற்ற நிலை, அவருடைய வியப்புக்குரிய தூய்மை, அவருடைய
பொறுமையான எதிர்பார்ப்பு, அவருடைய மேன்மைமிகு பதவி உயர்வு,
அரசரிடம் அவருக்கிருந்த எல்லையற்ற செல்வாக்கு, தன்னிடம் வரும்
அனைவரையும் காப்பாற்றும் ஆற்றல், இவையெல்லாம் புனித யோசேப்பின்
வாழ்வில் மீண்டும் நிகழ்ந்தது அல்லது வேறுவிதத்தில் சொல்லவேண்டும்
என்றால் நிறைவுக்கு வந்தது. இவை ஒவ்வொன்றைக் குறித்தும்
தியானித்து புனித யோசேப்பு எந்த விதத்தில் நமக்கு முன்னுதாரணமாக
இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்ப்போம்.
நமது குலமுதுவர் யோசேப்பை எகிப்து அரசன் தனது அரண்மனை முழுவதற்கும்
அதிகாரியாக நியமித்தான் என்று வாசிக்கிறோம். அதைப் போலவே, மண்ணுலகில்
அவர் வாழ்ந்த பூலோக திருவுறைவிடமான அந்த மனித உடல்
முழுமைக்கும் ஆளுநராக புனித யோசேப்பை கடவுள் நியமித்தார். நமது
ஆண்டவரை அவருடைய பரிசுத்த மனிதத்துவத்தில் புனித யோசேப்பு ஆளுகை
செய்தார். அவருடைய பரிசுத்த அன்னையின் உருவத்தில் ஞானம் தனக்கென
அமைத்துக்கொண்ட பரிசுத்த உறைவிடமாகிய இன்னுமொரு வீட்டிற்கும்
அவரை ஆளுநராக நியமித்தார். நமது ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை
மரியாளுக்கும் புனித யோசேப்பு ஆளுநர் என்றால், இன்னும் எதை அவரிடமிருந்து
நாம் எதிர்பார்க்காமல் இருக்கமுடியும்?
புனித யோசேப்பே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். |
|