Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

செபமாலை

செபமாலையின் அடிப்படையாக, அதில் முதலிடம் வகிக்கும் ஜெபங்கள் கர்த்தர் கற்பித்த ஜெபமும் மங்கள வார்த்தை ஜெபமுமே. இந்த இரண்டு ஜெபங்களும் தான் விசுவாசிகளின் முதல் பக்தி முயற்சியாயிருந்தன. இவைதான் அப்போஸ்தலர்கள் காலம் முதல் இன்று வரை உபயோகத்தில் இருந்தும் வருகின்றன. இவையே விசுவாசிகளின் முதல் ஜெபம் என்று ஐயத்திற்கு இடமின்றி கூறலாம்

ஆயினும் 1214ஆம் ஆண்டில் தான் ஜெபமாலையை இன்று நாம் கொண்டிருக்கும் வடிவத்திலும் முறைப்படியும் தாயாகிய திருச்சபை பெற்றுக் கொண்டது. ஆல்பிஜென்ஸ் என்ற பதிதத்தைப் பின் சென்றவர்களையும், பாவங்களில் உழன்றவர் களையும் மனந்திருப்பும் வல்லமையுள்ள கருவியாக அர்ச்.சுவாமிநாதர் தேவதாயிடமிருந்து இதைப் பெற்று திருச்சபைக்கு அளித்தார்

(ஆல்பிஜென்ஸ் பதிதம்: நன்மைக்கொரு கடவுள் தீமைக்கொரு கடவுள் உண்டு என்றும், இயேசு ஒரு மனிதன் மட்டுமே என்றும் இன்னும் பல தவறுகளைக் கொண்ட பதிதக் கொள்கை )

அர்ச். சாமிநாதர் எவ்வாறு ஜெபமாலையைப் பெற்றுக் கொண்டார் என்பதை முத்திப்பேறு பெற்ற ஆலன் ரோச் என்பவர் எழுதியுள்ள ' செபமாலையின் மகிமை ' என்ற நூலில் காணலாம்  ஆல்பிஜென்சியர் மனந்திரும்புவதர்க்கு இடையூறாக இருந்தது மக்களின் பாவங்களே என்பதை உணர்ந்த அர்ச் சாமிநாதர் , தூலுஸ் என்ற பட்டணத்தினருகில் இருந்த ஒரு காட்டுக்குள் சென்று மூன்று நாள் இரவும் பகலும் இடைவிடாது மன்றாடினார் . அம்மூன்று நாளும் அவர் தேவ கோபத்தை அமர்த்துவதற்காக கடின தவ முயற்சிகளைச் செய்வதும் அழுது மன்றாடுவதுமாகவே இருந்தார் . சாட்டையால் அவர் தம்மையே எவ்வாறு அடித்துக் கொண்டாரென்றால் ,அவருடைய உடல் புண்ணாகி இறுதியில் மயக்கமுற்று விழுந்தார்

அப்போது தேவ அன்னை, மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத் தோன்றினார்கள் ,
"சாமிநாதா! எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகத்தைச் சீர்திருத்த பரிசுத்த தமத்திருத்துவம் விரும்புகிறது என்பதை அறிவாயா?" என்று கேட்டார்கள்

அதற்கு அவர் மறுமொழியாக "ஓ என் அன்னையே ! என்னைவிட இது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும். ஏனென்றால் உம் திருக்குமாரனான இயேசுவுக்குப் பின் எங்கள் இரட்சணிய கருவியாய் நீங்களல்லவா இருக்கின்றீர்கள் " என்று கூறினார்

இதற்குப் பதிலுரையாக தேவ அன்னை
"இந்த வகையான போராட்டத்தில் கபிரியேல் தூதர் கூறிய மங்கள வார்த்தை தான் வெற்றி தரும் கருவியாக உள்ளது . புதிய ஏற்பாட்டின் அடித்தளக் கல் அதுவே. எனவே இந்த கடினபட்ட ஆத்துமாக்களை அணுகி அவர்களைக் கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால், என்னுடைய ஜெபமாலையைப் பிரசங்கி "  என்று கூறினார்கள்

அர்ச் சாமிநாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றி எரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிராசன ஆலயத்துக்குச் சென்றார். உடனே கண்காணா தேவ தூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர். சாமிநாதர் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

அவர் பிரசங்கிக்க ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயற்காற்று எழும்பியது. பூமி குலுங்கியது. கதிரவன் மங்கியது. பெரிய இடி முழக்கமும் மின்னலும் காணப்பட்டன. எல்லாரும் மிகவும் அஞ்சினார்கள். அவ்வாலயத்தின் ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் படத்தைப் பார்த்த அம்மக்கள் முன்னை விட அதிகம் பயந்தார்கள். மாதாவின் அந்தப் படம் மும்முறை வான் நோக்கித் தன் கரத்தை உயர்த்தி, அவர்கள் மனந்திருந்தி வாழ்க்கையைத் திருத்தி அமைத்து தேவ அன்னையின் பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களைத் தண்டிக்குமாறு தேவ நீதியை அழைத்தது

இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சிகளின் மூலமாய் ஜெபமாலை ஜெபமாலை என்னும் புதிய பக்தி முயற்சியைப் பரப்பவும் அதை மிகப் பரவலாக அறியச் செய்யவும் இறைவன் சித்தங்கொண்டார்.

இறுதியில் அர்ச் சாமிநாதரின் வேண்டுதலால் புயல் அமர்ந்தது. அவர் தம் பிரசங்கத்தைத் தொடர்ந்தார். ஜெபமலையின் முக்கியத்துவத்தையும் பலனையும் அவர் எவ்வளவு உருக்கமுடனும் வலிமையுடனும் விவரித்துக் கூறினாரென்றால், ஏறக்குறைய லூயிஸ் நகர வாசிகள் அனைவரும் ஜெபமாலையை ஏற்றுக்கொண்டனர் தங்கள் தவறான கருத்துகளை மாற்றிக் கொண்டனர் வெகு துரிதத்தில் பட்டணத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் காணப்பட்டது . மக்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள் . தங்கள் பழைய துர்பழக்கங்களை விட்டு விட்டார்கள்


"செபமாலையின் ரகசியம்" =அர்ச் லூயிஸ் மரிய மோன்போர்ட்

அன்னை மரியாள் தூய தோமினிக் மற்றும் வாழ்ததப்பட்ட ஆலன் ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள்.

1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.

2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.

3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
 
4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.

5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவன் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான்.

6. செபமாலை செபிப்பவர் தூய வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.

7.செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிங்கிறேன்.

8. செபமாலை நரகத்திற்க்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.

9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன் திருச்சபையின் திருவருட் சாதனங்களை பெறாமல் சாகான்.

10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உதவி பெறுவர்.

11. செபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.

12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில விசேச வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

13. செபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.

14. என் செபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.

15. என் செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்க்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா