![]() |
![]() |
![]() |
" என்றுமே மரியாத அன்னை மரியா" விற்கு, செபமாலையின் மாதமான அக்டோபர் மாதத்தில் செபமாலை எனப்படும் அருள்மாலையைக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோமா?. " நானே அமல உற்பவம்" என்றுரைத்த அன்னை மரியா எமக்காக தமது திருமகனிடம் அனுதினமும் பரிந்து பேசும் சதாசகாயத் தாயான எமது அடைக்கலத்தாய் என அழைக்கப்படும் மீட்பின் அன்னை, பாவக்கட்டுக்களிலிருந்து எம்மை விடுவிக்க எம்மிடம் வேண்டுவது, பூ மாலையோ அல்லது பாமாலையோ அல்ல; மாறாக செபமாலையைக் கேட்கிறார். ஏதேனில் வாழ்ந்த மனிதன், சந்திரனில் சென்று வாழுமளவிற்கு மாற்றங்கள் ஏற்படலாம் - பருவ காலங்கள் மாறலாம் அரசியல் காரணங்களால் புலம்பெயர் நாட்டில் புதிய குடிமகனாகலாம் ஆயினும், " அமல உற்பவி கன்னி அன்னை மரியாள் என்றுமே மரியாள்" என்பது, எந்த சக்தியாலும் மாற்ற முடியாத உண்மையாகும். ஆண்டவர் இயேசுவின் மீட்பின் திட்டத்தில், அன்னை மரியா " அமல உற்பவியாக" ஆற்றிய அளப்பரிய பங்களிப்பே, நாங்கள் ஒவ்வொருவரும் சதா சகாயத் தாய் - அடைக்கல நாயகி - மீட்பின் அன்னை எனப்படும் தேவ அன்னையை, மருதமடு செபமாலை அன்னை என போற்றிப் புகழக் காரணமாகியது. ஆண்டவர் இயேசு அன்றும் - இன்றும் - என்றும் உயிர் வாழ்கின்றார் என நாம் எவ்வாறு விசுவசிக்றோமோ, அவ்வாறே அன்னை மரியாள் பலகோடிக் கத்தோலிக்கரது உள்ளத்தில் " அமல உற்பவி" என அழைக்கப்படுகின்றாள் என்பது எனது பணிவான கருத்தாகும். இவ்வுலகத் தாயிலும் மேலான " அம்மா" என்று ஒவ்வொருவரும் உரிமையோடும் - அன்போடும் அழைக்கும் " அமல உற்பவி" எனப்படும் விசுவாசக் கருத்து, இன்றோ நேற்றோ ஏற்பட்டதல்ல என்பதனை, நற்செய்தியின் வெளிச்சத்தில் நாம் ஆராயலாம். " இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார் அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்" என்று இறைவாக்கினர் வாயிலாக உரைத்தது நிறைவேறவே (மத்1:22) தூய்மையான அன்புக்கு உதாரணமான " அமல உற்பவி அன்னை மரியா என்றும் மரியாத மரியாவாக" நற்செய்தி ஏடுகள் வழியாக, இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். நசரேத்தூரில் தூதர் கபிரியேல் வழியாக " அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஆண்டவர் உம்மோடிருக்கிறார்" (லூக் 1:28) என அழைக்கப்பட்டு, இவ்வுலகில் " கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக் 1:37) என உறுதி செய்யப்படுவதனையும் அவதானிக்கலாம். கத்தோலிக்க மக்களின் வாழ்க்கையில், அன்னை மரியாள் பெற்றுள்ள சிறப்பிடம் என்றுமே தனித்துவமானதென, எல்லாம் வல்ல இறைவனது உறுதிப்பாட்டை " ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும்" (லூக்கா1:45) என எலிசபெத் தெளிவு படுத்துகிறார். இறைவார்த்தையை தனது உதரத்தில் தாங்கிய அன்னை மரியா " தம் தலைமகனைப் பெற்றெடுத்து .. துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தி (லூக்2:7) மீட்பு வரலாற்றிலே வியப்புமிகு பெண்ணாக" இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம்முள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக்கா 2:19). மனித இனம், இறைவனோடு தமக்கேற்படும் சந்திப்புக்களையும், அனுபவங்களையும் வழிவழிச் செய்திகளாக விட்டுச்செல்வது வரலாறு உனது குழந்தை " இஸராயேல் மக்களுள் பலரது வீழ்ச்சிக்கும் எழுச்சிக் கும் காரணமாக இருக்கும்" (லூக் 2:34) என சிமியோன் முன்னுரைக்க, அன்னையின் உள்ளத்தை வாளொன்று ஊடுருவியது (லூக் 2:35). சமூக வாழ்வில் பெண்கள் இடம்பெறாத யூத கலாச்சாரத்திலே வாழ்ந்த அன்னை மரியா " நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? (லூக் 2:49-50) என்பதனைப் புரியாது " இந் நிகழ்ச்சிகளையெல்லாம் தனது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்" (லூக் 2:51). கானா ஊரில் திராட்சை இரசம் தீர்ந்தபோது " அம்மா என் நேரம் இன்னும் வரவில்லையே (யோவான் 2:4) என்ற போது " அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) எனக்கட்டளையிடும் என்றுமே மரியாத அமல உற்பவியாக இன்றுமிருக்கிறாள். " நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று அனைத்து மக்களுக்கும் மீட்பளிக்க வந்தவரைப் பெற்றெடுத்த அன்னையை " விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் தந்தையும் ஆவார்" (மத்தேயு 12:50) என்றுரைத்து, அன்னை மரியாள் என்றுமே மரியாள் என்பதனை அவரது திருமகனே உறுதிப்படுத்துகிறார். திருவிவிலியத்தில், பழைய ஏற்பாட்டில் அன்னை மரியாவின் பங்களிப்பு நேரடியாக இடம் பெற்றிருக்கவில்லை ஆயினும் ஆண்டவர் இயேசுவின் வாழ்விலும், ஆதித் திருச்சபையின் மீட்பின் வரலாற்றிலும் அன்னை மரியா நேரடியாகத் தலையிட்டு, உன்னத நிலையை வகித்துள்ளாரென இறையியல் வல்லுனர்கள் மற்றும் நற்செய்தி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எல்லாம் வல்ல இறைவனின் " என்றுமே மரியாத அன்னை மரியா" கல்வாரியில், கழுமரத்தினடியில் நம்மனைவருக்கும் தாயாகக் கொடுக்கப்பட்டவள் - அலைபாயும் மனதுக்கு ஆறுதல் தரும் அடைக்கல நாயகியாக அன்றாட வாழ்விற்கு வழிகாட்டும் சதாசகாயத் தாயாக தொல்லைகள் வரும்போது தோள் கொடுத்து, மீட்பின் அன்னையாக நம்மோடு வாழ்பவள். சகல படைப்புக்களிலும் மேலான அருள் நிறைந்தவராக பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவராக தாயின் வயிற்றில் கருவாகி உருவாகு முன்னரே இறை மகனுக்கே தாயாகும் பாக்கியவதியாக, இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவரான " அமல உற்பவி அன்னை மரியா என்றுமே மரியாள்" . அம்மா மரியே! அருள்மிகு தாயே! ஆதரித்தெம்மை அரவணைப்பாயே ஆமென். |