Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 செபமாலை செயமாலை

  பொதுச் செபமாலையின் இலாபம்  
 செபமாலை செயமாலை அக்டோபர் 31

குடும்பச் செபமாலையைப் பற்றியும், கோவிலில் செய்வதைப் பற்றியும் சொன்னோம் . செபமாலையை பற்றிய இரண்டொரு வார்த்தை: பொதுவில் சொல்லும் போது நம் கவனம் அதிகரிக்கிறது. பொதுவில் சொல்லும்போது ஒருவர் கவனக்குறைவாய் இருந்தாலும் மற்றவர்களுடைய பக்தி உருக்கம் அவருக்கு ஈடு செய்வதோடு கூட அவருடைய பக்தியை எழுப்புகிறது. தனித்து ஒருவர் ஒரு செபமாலை சொன்னால் , அவருக்கு ஒரு செபமாலையின் பலன். முப்பது பேரோடு கூடி செபமாலை சொல்லுவாராயாகில் முப்பது செபமாலையின் பலன் அவருக்குக் கிடைக்கிறது என்பதாகும் தனிப்பட்ட செபத்தை விட பொது செபம் இறைவனுடைய கோபத்தை அமர்த்தவும், அவருடைய இரக்கத்தை உலகிற்குக் கொண்டு வரவும் அதிகம் உதவும் . பகைவர்களுக்கு விரோதமாய் ஒருவன் தனித்து நிற்பது எப்படி ? நூறு பேர் சேர்ந்து எதிர்ப்பது எப்படி? அதே போல பொதுவில் செபமாலை செய்யும்போது ஒரு சேனையே சாத்தானைத் தாக்குவது போலாம். பேய் பயந்து அரண்டு அலறிக் கொண்டு ஓடுகிறது

ஆட்சேபனைகள் :

செபமாலை சொல்லுவதில் நிலைத்திருப்பது கஷ்டமான காரியம் . பலர் பலவற்றைச் சொல்லி ஏமாற்றத் தேடுவார்கள் . "இவனுக்கு வேறு வேலை இல்லையா ? ஓயாமல் செபமாலை செய்து கொண்டிருக்கிறானே சோம்பேறி". " உனக்கு என்ன எண்ணம் தம்பி? நாம் செய்ய வேண்டியதெல்லாம் செபமாலை மணியை உருட்டுவது ; மோட்சத்திலிருந்து பெரிய நதி ஆகாய கங்கையைப் போல உன் மடியில் வந்து விழப்போகிறது என்று நினைத்தாயா? தன் கையே தனக்குதவி என்பதை நீ அறியாயோ? வேலை மினக்கிட்டவனே, ஒரு சிறு செபத்தைச் சொல்லிவிட்டு உன் வேலையைப் போய்ப் பார்". " விவிலியத்தில் ஆண்டவர் எந்த இடத்தில் செபமாலை செய்யச் சொல்லி இருக்கிறார்?" " செபமாலை செய்வது நல்ல வழக்கம் தான் . யாருக்கு? வேலையற்ற கிழவிக்கு. ...வசிக்கத் தெரியாத பாட்டிக்கு " என்று ஏளனம் செய்வார்கள். இந்த மதிகெட்டவருக்கு எவ்விதம் பதில் சொல்லுவது என்று இந்நூலை வாசித்தவருக்குத் தெரியும்.
( ஜெபமாலை இரகசியம் புத்தகம்)

சூழ்நிலை :

நம் அகத்துப் பேய் தான் பெரிய பேய். பராக்குகள், நிலையற்ற குணம் , அசதி , இதய அசமந்தம், உடல் களைப்பு முதலியன. ஞான சீவியத்தில் எங்கும் இவைகளோடு போராட வேண்டும். செபமாலை சொல்லும் விஷயத்திலும் இவைகளோடு போராட வேண்டியது தான். நாம் சம்மனசுக்கள் அல்ல. பராக்குகள் வரத்தான் செய்யும் .. சிறிது பிரயாசைப்பட்டு அவைகளை உதறிவிட்டு செபமாலை சொல்வோமேயாகில் தேவதாய்க்கு நம் மேல் அதிக பிரியம் இருக்கும். இரண்டொருவருக்குப் பெரிய சோதனை ஒன்று உள்ளது. " நான் செபமாலை சொல்லத் தொடங்கினால் பராக்கின் மேல் பராக்கு, சோதனையின் மேல் சோதனை. என்னால் செபமாலை சொல்ல முடிவதில்லை" என்று செபமாலை சொல்லுவதை நிறுத்தி விடுகின்றனர் . என்ன பராக்கு வந்தாலும் செபமாலையைச் செய்து முடியுங்கள். தேவ இரகசியங்களின் படங்களைக் கண் முன்னே நிறுத்துவோமேயாகில் பராக்கு குறையும் . 153 மணிச் செபமாலையை ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். மூன்றாய் பிரித்து வெவ்வேறு நேரத்தில் சொல்லி வரலாம் . அவசியமாகில் பத்து பத்து மணியாய்ப் பிரித்து சொல்லி வரலாம்

நம்மாலான கவனத்தோடு சொல்லி வர வேண்டும். அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தடியில்லாத இடத்தில் அமரிக்கையாய் இருந்து சொல்லவேண்டும். அவசியமானால் கண்களை மூடிக் கொள்ளலாம். கூடுமானால் முழந்தாளில் நிற்கலாம். வாயோடு வாய் சொல்லாமல் சில சமயங்களில் வாய் விட்டுச் சொன்னால் கவனத்தை அது அதிகரிக்கும்

சுத்தக் கருத்தோடு சொல்ல வேண்டும். எக்கருத்துக்கென்று திட்டமிட்டு ஏதேனும் ஒரு வரப்பிரசாதத்தையோ, கிருபையையோ கேட்கலாம். நாம் ஒரு கிருபையை அடைய ஆர்வமுற்றோமேயாகில் பராக்கு குறையும் கவனம் அதிகரிக்கும்

பெருங் கிருபை :

இப்பக்தியைப் பரப்ப அதிகமாகப் பிரயாசைப்பட்டவர் கர்த்தூசியர் சபையைச் சேர்ந்த முத். டொமினிக் என்று வாசித்தோம்.1481ம் ஆண்டில் நமதாண்டவள் அவருக்கு தரிசனமாகிச் சொன்னது :" தேவ அருள் நிலையிலுள்ள ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் வாழ்க்கையையும் பாடுகளையும் சிந்தித்துக் கொண்டு செபமாலை செய்வானேயாகில் அவன் கட்டிக் கொண்ட எல்லாப் பாவத்திற்கும் முழு மன்னிப்பு அடைகிறான் "

செபமாலை சொல்வதினால் சாவான பாவம் மன்னிக்கப்படுகிறதென்பது அர்த்தமல்ல. சொல்லுகிறவன் தேவ அருள் நிலையில் இருக்கிறானே, அவன், உத்தரிக்க வேண்டிய அநித்திய ஆக்கினை எல்லாம் முற்றிலும் நீங்கப் போகிறது என்பது சில அர்ச்சிஷ்டவர்களின் அபிப்பிராயம்

இதையே தான் செபமாலை இராக்கினி முத். ஆலன் ரோச்சுக்கு சொல்லிப் போனார் : " முழந்தாளில் இருந்து தேவ அருள் நிலையில் பக்தியாய் 53 மணிச் செபம் சொல்லுகிறவர்களுக்கு அளிக்கப்படிருக்கிற பலன்கள் அநேகம் என்று உனக்குத் தெரியும் அல்லவா? செபமாலைப் பக்தியில் நிலைத்திருக்கிறவர்களுக்கு , தேவ இரகசியங்களைச் சிந்தித்து செபமாலை சொல்லுகிறவர்களுக்கு அவர்களுடைய கடைசி நாளில் அவர்கள் பாவங்களின் தோஷத்தையும் அபராதத்தையும் ஆக்கினையையும் எல்லாவற்றையும் மன்னிக்கும்படி செய்வேன் .அதாவது உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் நேரே மோட்சம். இது அரசரின் தாய் நான் ஆனபடியால் இதைச் செய்வது எனக்கு சுலபம். நான் தேவ அருள் நிறைந்தவளாய் இருக்கிறபடியால் என் நேச மக்களுக்கு அவைகளை வழங்குவது என்னால் இயலும்"

தப்பித் தவறி சாவான பாவ நிலையில் இருந்தாலும் செபமாலை சொல்லத் தவறாதீர்கள். நாம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய , மனதிரும்ப அது உதவும். விசேஷமாய் பாவத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடும் ஆசையோடும் செபமாலை செய்வோமானால் சீக்கிரம் மனந்திரும்புவோம். ஆனால் பாவத்தை விட்டு விட மனம் இல்லாமல் பாவ ஆசையிலும், இச்சையிலும், மகிழ்ச்சியிலும் மிதந்து கொண்டு செபமாலை செய்வது தேவ தாய்க்கு அவசங்கை செய்வதாம். பெரிய பாவாக்கிராமி ஒருவன் பாவ இச்சையில் வேண்டுமென்று நீந்திக் கொண்டிருந்தவன் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லிவந்தான். ஒருநாள் தேவ தாய் அவனுக்குத் தோன்றி ஒரு நேர்த்தியான பழத்தை அழுக்கு நிறைந்த தட்டில் வைத்திருப்பதைக் காட்டினார் . அவனுக்கு அதிசயமும் ஆத்திரமும்." இவ்விதம் தான் நீ எனக்கு மரியாதை செய்கிறாய். அழுக்கு மலிந்த களத்தில் அழகிய ரோஜா மலர்களை எனக்கு அளிக்கிறாய். இத்தகைய கொடைகளை நான் ஏற்றுக் கொள்ளுவேனா " என்கிறார் ஆண்டவள்

உலகம் பாவ பிரமாண்ட நதி, அக்கிரமங்களின் ஆழ்ந்து அகன்ற ஆறு .அதில் எத்தனையோ ஆத்துமங்கள் அகப்பட்டு அழிந்தன. நாம் தப்பிக்க வேண்டும் அல்லவா? அடர்ந்த இருள் மத்தியில் நாம் நிற்கிறோம். எத்தனையோ ஞானிகளை இது குருடாக்கி இருக்கிறது. நாம் குருடாகாமல் இருக்க வேண்டும் அல்லவா? மகா சாமர்த்தியமும் அனுபவமும் உள்ள பேய்க் கணங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன . நம்மைச் சோதிக்கின்றன. உலகம், பேய், உடல் என்ற பகைவர்களின் பிடிக்குத் தப்பிக்க வேண்டுமேயாகில் செபமாலையைத் தினம் சொல்வோம். வணக்கத்தோடு முழங்காலில் இருந்து ஆத்தும சுத்தத்தோடு சொல்லுவோம்

செபம்

ஒ செபமாலை இராக்கினியே, தேவனின் தாயே, மனிதர்களின் மாதாவே , பாவிகளாகிய நாங்கள் உம் பாதம் தேடி வந்தோம். எங்கள் ஆத்துமம் மேலே எலும்பாதபடி எங்கள் உடல் அதை இழுப்பதைப் பாரும். எங்கள் துன்பத்தின் மேலும் எங்கள் துக்கத்தின் மேலும் உமது இரக்கப் பார்வை பாய்வதாக. உமது வதனம் எங்கள் வெற்றியையும் சந்தோசத்தையும் கண்டு மகிழ்வதாக. முன்னொரு நாள் உமது திருமகன் அர்ச்.அருளப்பரைக் காண்பித்து சொன்னது போல இன்று எங்கள் ஒவ்வொருவரையும் காட்டி " இதோ உம் மகன்/மகள் " என்று சொல்வது உமது காதில் ஒலிப்பதாக .

அன்னையே என்று உம்மை அழைக்கும் நாங்கள் உம்மை எங்கள் உலக வாழ்வில் ஆதரவாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்

சூரியனை ஆடையாக அணிந்து விண்மீனை முடியாய்ச் சூடி இயேசுவுக்கு அடுத்தபடியில் சம்மனசுக்களுக்கும் மோட்சவாசிகளுக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் அரசியே, எங்கள் இதய நோயைப் போக்கி எங்களுடையவும் திருச்சபையுடையவும் துன்பங்களைத் துடைத்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தருளும். திருச்சபையைப் பாதுகாத்தருளும் . சாத்தானின் தலையை நசுக்கிய செல்வியே, விசுவாச விரோதிகளின் தலையையும் கொட்டத்தையும் அடக்கி, உலகிற்கு சமாதானத்தையும் பாக்கியத்தையும் கொடுத்தருளும். செபமாலையைக் கொண்டாடும் நாங்கள் சோதனையை வென்று உலகின் மேலும், உடலின் மேலும் அலகையின் மேலும் வெற்றி கண்டு உமது பாக்கியமான சுந்தர சோபனத்தையும் உம் திரு மகனின் முக தரிசனத்தையும் என்றென்றும் கண்டு களிக்க கிருபை கூர்ந்தருளும் ஆமென் 
                                
 

                            
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்