அக்டோபர் மாதம் செபமாலை மாதம்
|
|
|
|
|
செபமாலையின் மகிமையைப் பரப்புவோம்.
குடும்பமாய் கூடி செபமாலை செபிப்போம். வேண்டும் வரம் யாவும் பெற்று
மகிழ்வோம் |
=========================================
என்று அகில உலகிலும் கத்தோலிக்கர்களால்
போற்றப்படுவது நாமனைவரும் அறிந்ததே -
சாத்தானின் சதிகாரச் செயலை முறியடிக்க அன்னை மரியாவின் சக்தி
வாய்ந்த ஒரேயொரு ஆயுதமான செபமாலையின் மகிமையை செபமாலை மாதம்
எனப்படும் அக்டோபர் மாதத்தில் பரப்புவது கத்தோலிக்கர்க ளான எமது
பிரதான கடமையாகும்.
பாத்திமா தரிசனத்தின் நூற்றாண்டில் வாழுவது எமக்குக் கிடைத்த
மாபெரும் பாக்கியமாகும். பாத்திமா அன்னையின் ஆறாவது தரிசனம்
1917 அக்டோபர் 13ல் இடம்பெற்றுள்ளது. அன்னை மரியா பாத்திமாவில்
1917 மே முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் தரிசனமானபோது
"அழிந்து கொண்டிருக்கும் இவ்வுலகைக்
காப்பாற்ற அனுதினமும் செபமாலை ஓதுங்கள்"
என்று விண்ணப்பம் செய்துள்ளமைக்கு செவிமடுத்த அன்னையின்
பிள்ளைகளாகச் செபமாலையின் மகிமையை ஆராய்வோம்.
13ம் நூற்றாண்டில் புனித டோமினிக் என்பவருக்கு அன்னை மரியா
காட்சி கொடுத்து இப்பக்தியை பரப்பச் சொன்னதாக திருச்சபையின் பாரம்பரிய
வரலாறு தெரிவிக்கின்றது. 1475ஆம் ஆண்டில் டோமினிக்கன் சபையைச்
சேர்ந்த Alain de la Roche என்பவரும், அவருடன் உடன் உழைத்தவர்களும்
பிரான்சின் வடபகுதியில் செபமாலைப் பக்தியைப் பரப்பினார்கள்.
அதன்பின் ஐரோப்பிய நாடுகளிலும் செபமாலைப் பக்தி பரவியது.
திருத்தந்தை பத்தாம் லியோ 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின்
மாதமாக அறிவித்தார்.
திருச்சபையின் பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம்,
மகிமை எனப்படும் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கத்தை
திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் அதிகார பூர்வமாக அறிவித்தார்
எனவும், 2002ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின்
மறை பொருள்கள் என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை
சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்துள்ளதாகவும் திருச்சபையின்
பாரம்பரியம் தெரிவிக்கின்றது.
இயேசு கற்பித்த பரலோக மந்திரத்தை ஆரம்பத்தில் டொமினிக்கன் துறவிகளால்
ஒவ்வொரு நாளும் பக்தி முயற்சியாக 150 தடவை செபித்ததாகவும் -
பின்னர் 150 அருள் நிறை மரியே என்ற செபத்தைச் செபித்ததாகவும்,
மத்திய காலப்பகுதியில் 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட
மணிகளைப் பாவித்ததாகவும் செபமாலையின் வரலாறு தெரிவிக்கின்றது.
சாத்தானை எதிர்த்து நிற்க அன்னை மரியாவின்
வல்லமையான ஆயுதமாக கருதப்படும் செபமாலையில் உள்ள ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு ரோஜாப் பூவாக தன் மேல் விழுமென
13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாள்
கூறியுள்ளாரென செபமாலையின் வரலாறு மேலும் தெரிவிக்கின்றது.
செபமாலைத் தியானத்தில் நாம் ஒவ்வொரு மறையுண்மைகள் வழியாக இறைமகன்
இயேசுவின் மீட்புச்செயலை தியானிப்ப தோடு, இறைவனின்
மீட்புத்திட்டத்தில் கன்னி மரியாள் எவ்வாறு தன் பங்களிப்பை வழங்குகின்றாள்
என்பதை மட்டுமல்ல - மீட்புச் செயலை முன்னெடுத்துச் செல்லும்
திருச்சபையில் அன்னை மரியாவின் பங்களிப்பை, பரிந்துரையைத்
தியானிக்கிறோம்.
அனுதினமும் செபமாலை செபிக்கும்போது, அன்னை
மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி
பெறுகின்றது: என்று மரியன்னையின் கோடிக்கணக்கான பக்தர்கள்
கருதுவதோடு இந்த வல்லமையான பக்தி முயற்சியை அயராது
முன்னெடுத்து வருகிறார்கள். சிறப்பு மிக்க "செபமாலைப் பக்தி"
உலகிற்கு பல நன்மைகளை செய்துள்ளது.
"பாவத்திலிருந்து விடுதலையும் - உடல்நலத்தையும்
- பரிசுத்த வாழ்வையும் அளித்திடும் ஒரு சிறந்த சாதனம் - இதனைப்
பக்தியோடு மறையுண்மைகளை தியானித்துக்கொண்டே செபித்தல்
வேண்டும்" என்று புனித அல்போன்ஸ் லிகோறியார் (1696
-1787) கூறிச்சென்றுள்ளார்.
செபமாலையில் ஆண்டவர் இயேசுவின் மகிழ்ச்சி
ஒளி - துக்கம் - மகிமை எனப்படும் பேருண்மைகளை தியானிப்பதன்
வழியாக கிறிஸ்து நம்வாழ்வின் மையமாக மாறுகின்றார்
"செபமாலை செபிக்கும் ஓர் வீரர் படையை
எனக்குக் கொடுங்கள். நான் உலகை வென்று காட்டுகிறேன்" என்கிறார்
திருந்தந்தை 9ம் பத்திநாதர்.
"செபமாலையின் மலர்கள் என்றும் அழுகிப்போகாது"
என்கிறார் திருத்தந்தை 12ம் பத்திநாதர்.
திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர்
"கன்னி மரியாவுக்கு மிகவும் பிரியமான செபம் செபமாலை" என்கின்றார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் "மாலை நேரத்தில்
செபமாலை செபிக்கும் குடும்பம் எவ்வளவு அழகானது" என்கிறார்.
செபமாலை செபிக்கும்போது ஆண்டவர் இயேசுவின் மீட்பு வரலாற்றின்
முக்கியமான பொருள் பொதிந்த தருணங்கள் மீண்டும் வாழ்ந்து காட்டப்படுகின்றன
- கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் இறைபணியின் பல்வேறு நிலைகள் கண்டுபிடிக்கப்ப
டுகின்றனவென இறையியல் வல்லுனர்கள் கருதுகின்றார்கள்.
செபமாலை என்றவுடன் சாத்தான்
நடுங்குவதோடு செபமாலை செபிக்கவிடாமல் பலவித சோதனைகளைத் தருவான்
- அற்புத வல்லமை நிறைந்த செபமாலையை நாம் தினமும் செபித்து, தேவ
அன்னைக்கு பூமாலையாகச் சூட்டும்போது, அவரது மகன் இயேசு இன்னும்
அதிகமாக இன்புறுவது மட்டுமல்ல, இறையருளை நிறைவாக அள்ளித்தருவார்:
என்பது எனது வாழ்வில் நான் அனுபவித்த உண்மை என்பதென, எனது பணிவான
சாட்சியமாகப் பதிவு செய்கிறேன்.
சாத்தானை எதிர்த்திட ஒரு சிறந்த போர்க்கருவியாக
செபமாலை கருதப்பட வேண்டும் செபமாலையைக் கழுத்தில்
தொங்கவிடுவதற்குப் பதிலாக தினமும் செபமாலை செபித்து இறைவனுக்கு
ஒப்புக்கொடுத்தால் இறைபக்தியை அதிகரிக்கச் செய்து, இறையருளை அள்ளித்தரும்
சாதனமாகவும் அமையுமென செபமாலைப் பக்தியை நாம் வேறுவிதமாகப்
பொருள்கொள்ள இடமுண்டு.
செபமாலைத் தியானத்தில் நாம் ஒவ்வொரு மறையுண்மைகள் வழியாக இறைமகன்
இயேசுவின் மீட்புச்செயலை தியானிக்கி ன்றோம் - இறைவனின்
மீட்புத்திட்டத்தில் கன்னி மரியாள் எவ்வாறு தன்பங்களிப்பை வழங்குகின்றாள்
என்பதைத் தியானிக்கிறோம் - மீட்புச் செயலை முன்னெடுத்துச்
செல்லும் திருச்சபையில் அன்னை மரியாவின் பங்களிப்பையும் பரிந்துரையையும்
தியானிக்கிறோம்.
பரலோகத்தில் இருந்து ஏணியாகத் தொங்கவிடப்பட்ட
தங்கமாலையாம் செபமாலையால் அன்னை மரியாளை அனுதினமும் அணி
செய்வோம் - உலக சமாதானத்திற்காக மட்டுமல்ல - எமது குடும்பங்களிலும்
- தனிப்பட்ட வாழ்விலும் அமைதி கிடைத்திட பெருமை மிக்க அன்னையின்
ஆயுதத்தை கரங்களில் எடுப்போம் - அனுதினமும் செபமாலை
செபிப்போம். |
|
|