செபமாலை புதிய மொழி பெயர்ப்பு
சிலுவை அடையாளம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய, பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு,
சதா காலமும், ஆராதனையும் ஸ்துதி, ஸ்தோத்திர நமஸ்காரமும்
உண்டாகக் கடவது
மூவேளை மன்றாட்டு
ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
மரியா தூய ஆவியால் கருவுற்றார். (அருள்நிறைந்த)
இதோ ஆண்டவரின் அடிமை.
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். (அருள்நிறைந்த)
வாக்கு மனிதர் ஆனார்.
நம்மிடையே குடிகொண்டார். (அருள்நிறைந்த)
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி /
இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மன்றாடுவோமாக:
இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர்
வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய
பாடுகளினாலும் சிலுவையினாலும் / நாங்கள் உயிர்ப்பின்
மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.
மூவேளை மன்றாட்டு (புனித வார புதன் முதல் சனி வரை)
முதல் : நம் ஆண்டவராகிய கிறிஸ்து தம்மையே தாழ்த்தினார்.
எல் : சாவை, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்தார்.
முதல் : ஆதலால்தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாக
உயர்த்தினார்.
எல் : எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, / தமது தாழ்ச்சியின்
முன்மாதிரியை / மனித இனம் கண்டு பாவிக்க வேண்டும் என்று /
எங்கள் மீட்பர் மனிதராகிச் / சிலுவைச் சாவுக்கு உள்ளாகச்
செய்தீர்; / அவர் தந்த கீழ்ப்படிதலின் போதனைகளை / நாங்கள்
ஏற்கவும், / அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குபெறவும் /
தயவாக அருள்வீராக. / எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக /
உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.
பாஸ்கா கால மூவேளை மன்றாட்டு
விண்ணக அரசியே! மனம் களிகூரும். அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறுபெற்றீர். அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனை மன்றாடும். அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
மன்றாடுவோமாக:
இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு
கிறிஸ்துவின் உயிர்ப்பினால் / உலகம் மகிழத் திருவுளம்
கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின்
பரிந்துரையால் / நாங்கள் நிலைவாழ்வின் பெருமகிழ்வில் பங்கு
பெற / அருள்புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.
திருச் செபமாலை
சிலுவை அடையாளம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
எல்: எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட
மனிதரும், நன்றி இல்லாத பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது,
அளவில்லாத மாட்சி கொண்டிருக்கிற உம்முடைய
திருச்சந்நிதியிலேயிருந்து செபம் செய்யத் தகுதி
அற்றவர்களாய் இருந்தாலும், உம்முடைய அளவில்லாத இரக்கத்தை
நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின்
புகழ்ச்சிக்காகவும் ஜம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க
ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து,
எவ்வித கவனச் சிதறகளும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை
எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
தூய ஆவியானவருக்குச் செபம்
தூய ஆவியே, எழுந்தருள்வீர் / வானினின்று உமது பேரொளியின் /
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர். / எளியவர் தந்தாய்,
வந்தருள்வீர், / நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், / இதய
ஒளியே, வந்தருள்வீர். / உன்னத ஆறுதலானவரே, / ஆன்ம இனிய
விருந்தினரே, / இனிய தண்மையும் தருபவரே. / உழைப்பில்
களைப்பைத் தீர்ப்பவரே, / வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, /
அழுகையில் ஆறுதலானவரே. / உன்னத பேரின்ப ஒளியே, / உம்மை
விசுவசிப்போருடைய / நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். /
உமதருள் ஆற்றல் இல்லாமல் / உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, /
நல்லது அவனில் ஏதுமில்லை. / மாசு கொண்டதைக் கழுவிடுவீர். /
வறட்சியுற்றதை நனைத்திடுவீர், / காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
/ வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், / குளிரானதைக் குளிர்
போக்கிடுவீர், / தவறிப்போனதை ஆண்டருள்வீர். / இறைவா உம்மை
விசுவசித்து, / உம்மை நம்பும் அடியார்க்குக் / கொடைகள்
ஏழும் ஈந்திடுவீர். / புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், /
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், / அழிவிலா இன்பம்
அருள்வீரே. / ஆமென்.
நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல
தந்தையாகிய / கடவுளை நம்புகின்றேன். / அவருடைய ஒரே மகனாகிய
/ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்./ இவர் தூய
ஆவியால் கருவுற்று / கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். /
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு /
சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
/ பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து
உயிர்த்தெழுந்தார். / விண்ணகத்துக்கு எழுந்தருளி / எல்லாம்
வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில்
வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும்
இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க வருவார். / தூய ஆவியாரை
நம்புகின்றேன். / புனித, கத்தோலிக்கத் திரு அவையை
நம்புகின்றேன். / புனிதர்களின் உறவு ஒன்றிப்பை
நம்புகின்றேன். / பாவ மன்னிப்பை நம்புகின்றேன். / உடலின்
உயிர்ப்பை நம்புகின்றேன். / நிலைவாழ்வை நம்புகின்றேன். /
ஆமென்.
இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, / உமது பெயர் தூயது
எனப் போற்றப்பெறுக! / உமது ஆட்சி வருக! / உமது திருவுளம்
விண்ணுலகில் நிறைவேறுவது போல, / மண்ணுலகிலும் நிறைவேறுக! /
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். /
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை / நாங்கள்
மன்னிப்பது போல, / எங்கள் குற்றங்களை மன்னியும்./ எங்களைச்
சோதனைக்கு உட்படுத்தாதேயும், / தீமையிலிருந்து எங்களை
விடுவித்தருளும். / ஆமென்.
தூதுரை மன்றாட்டு
அருள் நிறைந்த மரியே வாழ்க! / ஆண்டவர் உம்முடனே. /
பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. / உம்முடைய திருவயிற்றின்
கனியாகிய இயேசுவும் / ஆசி பெற்றவரே./
புனித மரியே / இறைவனின் தாயே / பாவிகளாய் இருக்கிற
எங்களுக்காக / இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் /
வேண்டிக்கொள்ளும். / ஆமென்.
மூவொரு இறைவன் புகழ்
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் / மாட்சி
உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல / இப்பொழுதும் எப்பொழுதும் /
என்றென்றும் இருப்பதாக. / ஆமென்.
ஒவ்வொரு பத்து மணியின் முடிவில்
பாத்திமா அன்னை செபம்:
ஓ என் இயேசுவே! / எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். /
எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். / எல்லாரையும்
விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும், / உமது இரக்கம்
யாருக்கு அதிகத் தேவையோ / அவர்களுக்குச் சிறப்பான உதவி
புரியும்.
===================================================================
செபமாலை மறைபொருள்கள்
மகிழ்வின் மறையுண்மைகள் (திருவருகைக்காலம் மற்றும்
கிறிஸ்துப் பிறப்புக் கால ஞாயிறு, பொதுக்காலம் திங்கள்,
சனி)
1. கபிரியேல் தூதர் புனித கன்னி மரியாவுக்குத்
தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 வரம்:தாழ்ச்சி)
2. புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக்
1:41-42 வரம்:பிறரன்பு)
3. இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 வரம்: எளிமை)
4. இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
(லூக் 2:22 வரம்:பணிவு)
5. காணாமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்தது. (லூக்
2:49-50 வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)
ஒளியின் மறையுண்மைகள் (பொதுக்காலம் வியாழன்)
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு
3:16-17 வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக
மாற்றியது. (யோவான் 2:11 வரம்:நம்பிக்கை)
3. இயேசு இறையாட்சியைப் போதித்தது. (மாற்கு 1:14-15
வரம்:மனமாற்றம்)
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு
9:3,7 வரம்:புனிதம்)
5. இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது.
(மத்தேயு 26:26-28 வரம்:ஆராதனை)
துயரின் மறையுண்மைகள் (தவக்கால முதல் ஞாயிறு முதல்
குருத்து ஞாயிறு, பொதுக்காலம் செவ்வாய், வெள்ளி)
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (லூக்கா 22:44
வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்டது. (மாற்கு 15:15
வரம்:புலன்களை அடக்கி வாழ)
3. இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 வரம்:
ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)
4. இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17
வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தது. (யோவான்
19:30 வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை
மன்னிக்கவும்)
மாட்சியின் மறையுண்மைகள் (பொதுக்காலம் மற்றும் பாஸ்கா கால
ஞாயிறு, பொதுக்காலம் புதன்)
1. இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6
வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)
2. இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51
வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)
3. புனித கன்னி மரியாமீதும் திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி
இறங்கி வந்தது. (திருத்தூதர்பணி 2:4 வரம்: ஆவியாரின்
ஒளியையும் அன்பையும் பெற)
4. புனித கன்னி மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது. (திருவெளிப்பாடு 12:1 வரம்:நாமும் விண்ணக
மகிமையில் பங்குபெற)
5. புனித கன்னி மரியா விண்ணக மண்ணக அரசியாக
முடிசூட்டப்பட்டது. (லூக்கா 1:49,52 வரம்:அன்னையின் மீது
ஆழ்ந்த பக்தி கொள்ள)
======================================================================
செபமாலையின் இறுதியில்:
முதன்மை வானதூதரான புனித மிக்கேலே, / வானதூதர்களான புனித
கபிரியேலே, ரபேலே / திருத்தூதர்களான புனித பேதுருவே, /
பவுலே, யோவானே / நாங்கள் எத்துணைப் பாவிகளாயிருந்தாலும், /
நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி
மன்றாட்டையும் / எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, / புனித
கன்னி மரியாவின் திருப்பாதத்திலே / காணிக்கையாக வைக்க
உங்களை மன்றாடுகிறோம். / ஆமென்.
தூய மரியன்னை மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
-எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா
-எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாராகிய இறைவா
-எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மூவொரு கடவுளாயிருக்கிற ஒரே இறைவா
-எங்கள் மேல் இரக்கமாயிரும்.
புனித மரியே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே!
கன்னியருள் சிறந்த கன்னியே!
கிறிஸ்துவின் அன்னையே!
இறையருளின் அன்னையே!
மாசு இல்லாத அன்னையே!
பாவக் கறையில்லா அன்னையே!
படைத்தவரின் அன்னையே!
அன்புக்குரிய அன்னையே!
வியப்புக்குரிய அன்னையே!
நல்ல ஆலோசனை அன்னையே!
மீட்பரின் அன்னையே!
திருச்சபையின் அன்னையே!
பேரறிவுமிகு கன்னியே!
வணக்கத்திற்குரிய கன்னியே!
போற்றுதற்குரிய கன்னியே!
வல்லமையுள்ள அன்னையே!
பரிவுள்ள கன்னியே!
நம்பிக்கைக்குரிய அன்னையே!
நீதியின் கண்ணாடியே!
ஞானத்திற்கு உறைவிடமே!
எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே!
ஞானம் நிறைந்த பாத்திரமே!
மாட்சிக்குரிய பாத்திரமே!
பக்தி நிறை பாத்திரமே!
மறைபொருளின் நறுமலரே!
தாவீது அரசரின் கோபுரமே!
தந்த மயமான கோபுரமே!
பொன் மயமான கோவிலே!
உடன்படிக்கையின் பேழையே!
விண்ணகத்தின் வாயிலே!
விடியற்காலையின் விண்மீனே!
நோயுற்றோரின் ஆரோக்கியமே!
பாவிகளுக்கு அடைக்கலமே!
துயருறுவோருக்கு ஆறுதலே!
கிறிஸ்தவர்களின் துணையே!
வானதூதர்களின் அரசியே!
முதுபெரும் தந்தையரின் அரசியே!
இறைவாக்கினர்களின் அரசியே!
திருத்தூதர்களின் அரசியே!
மறைசாட்சிகளின் அரசியே!
இறையடியார்களின் அரசியே!
கன்னியரின் அரசியே!
அனைத்துப் புனிதர்களின் அரசியே!
அமல உற்பவியான அரசியே!
விண்ணேற்பு அடைந்த அரசியே!
திருச்சபையின் அரசியே!
குருக்களின் அரசியே!
குடும்பங்களின் அரசியே!
அமைதியின் அரசியே!
திருச்செபமாலையின் அன்னையே!
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
இறைவனின் புனித அன்னையே, இதோ உம் அடைக்கலம் நாடி வந்தோம்.
எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும்.
மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே!
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மன்றாடுவோமாக
இறைவா! முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும்
இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான
புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின்
தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய
கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
கிருபை தயாபத்து மந்திரம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே
வாழ்க! / எங்கள் ஜீவியமே, / எங்கள் தஞ்சமே, / எங்கள்
மதுரமே வாழ்க! / பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்
மக்கள். / உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். / இந்தக்
கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, / உம்மையே
நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். / ஆதலால் எங்களுக்காக
வேண்டி மன்றாடுகிற தாயே, / உம்முடைய தயாளமுள்ள
திருக்கண்களை / எங்கள் பேரில் திருப்பியருளும். / இதன்றியே
நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு / உம்முடைய
திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய / பிரத்தியட்சமான
தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். / கிருபாகரியே, /
தயாபரியே, / பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே! /
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி /
இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மன்றாடுவோமாக:
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! /
முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும்
சரீரமும் / தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே / தேவரீருடைய
திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க / ஏற்கெனவே
நியமித்தருளினீரே. / அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற
நாங்கள் / அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே / இவ்வுலகில்
சகலப் பொல்லாப்புக்களிலேயும் / நித்திய மரணத்திலேயும்
நின்று / இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். /
இந்த மன்றாட்டுக்களை யெல்லாம் / எங்கள் ஆண்டவராகிய
இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத்
தந்தருளும். / -ஆமென். /
வாழ்க அரசியே! மன்றாட்டு
எல்: வாழ்க அரசியே! தயை மிகுந்த அன்னையே, எங்கள் வாழ்வே,
இனிமையே, தஞ்சமே வாழ்க! தாயகம் இழந்த ஏவாளின் மக்கள்
நாங்கள், தாயே என்று உம்மைக் கூவி அழைக்கிறோம். கண்ணீரின்
பள்ளத்தாக்கில் இருந்து உம்மை நோக்கிக் கதறி அழுது,
பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காகப்
பரிந்துரைக்கும் தாயே, அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரும்.
உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவை, எங்கள் இம்மை
வாழ்வின் இறுதியில் காணச் செய்யும். கருணையின் உருவே!
தாய்மையின் கனிவே! இனியக் கன்னித் தாயே!
முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி
பெறும் படியாக...
எல்: இறைவனின் தூய அன்னையை, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும.;
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டிய ஜெபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே! / உமது அடைக்கலமாக ஓடிவந்து, /
உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி / மன்றாடிக் கேட்ட
ஒருவராகிலும் /உம்மால் கைவிடப்பட்டதில்லை என்று / உலகில்
ஒருபொழுதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை/ என்று
நினைத்தருளும். / கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! /
தயையுள்ள தாயே! / இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு /
உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். /
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் / உமது
தயாபரத்தில் உமது சமூகத்தில் காத்து நிற்கின்றோம். /
அவதரித்த வார்த்தையின் தாயே! / எங்கள் மன்றாட்டைப்
புறக்கணியாமல் / தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே /
-ஆமென்.
ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, /
பாவிகளுக்கு அடைக்கலமே, / இதோ உம்முடைய அடைக்கலமாக
ஓடிவந்தோம். / எங்கள் பேரில் இரக்கமாயிருந்து /
எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். /
அருள்நிறைந்த (மூன்று முறை)
தூய தேவ தாயாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுவதும் உமக்குப்
பாத காணிக்கையாக ஒப்புக் கொடுக்கின்றேன். உமது பேரில்
அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கத் தக்கதாக இன்று எனது
கண், காதுகளையும், வாய், இருதயத்தையும், என்னை முழுவதும்
உமக்குப் பாத காணிக்கையாக ஒப்புக் கொடுக்கின்றேன். என்
நல்ல தாயாரே! நான் உமக்குச் சொந்தமாயிருக்கிறபடியால் என்னை
உம்முடைய உடமையாகவும், சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக்
காப்பாற்றியருளும் - ஆமென்.
மரியாயே! எங்கள் நல்ல தாயாரே! இந்த நாளிலே (இந்த இரவிலே)
எங்களை சடுதி மரணத்திலும், சாவான பாவத்திலும், சகல
பொல்லாப்புக்களிலும் நின்று காத்துக் கொள்ளும் (3 அருள்)
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து
எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின்
பெயராலே ஆமென்.
|
|